அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சை நிறைவு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சை நிறைவு!
Published on

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்த இருதய அறுவை சிகிச்சை நிறைவடைந்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற மோசடியில் கடந்த 13ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில், அவருக்கு 3 ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் இருதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது. தொடர்ந்து சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை காலை 10.15 மணியளவில் நிறைவடைந்தது.

மருத்துவர் ரகுராமன் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு 4 இடங்களில் அடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அதேபோல், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, மூன்று நாட்களுக்கு ஐசியூ-வில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார். பின்னர், 10 நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல், செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com