கிண்டி பன்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வராததால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினே மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் – இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலைஞரின் நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் ரூ.240 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து அழைப்பு விடுத்தார். குடியரசு தலைவரும் வருவதாக ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் குடியரசு தலைவர் ஜூன் 4 ஆம் தேதி செர்பிய நாட்டிற்கு சென்றதால் ஜூன் 5 ஆம் தேதி கிண்டி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து குடியரசுத் தலைவரின் தேதியைப் பெற்று ஜூன் 15-ஆம் தேதி மருத்துவமனையைத் திறக்க தமிழக அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது குடியரசுத் தலைவரின் வருகை ரத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வரும் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டி பல்நோக்கு மருத்துவமனையைத் திறந்து வைப்பார் என கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசோடு முரண்படுவதாலேயே குடியரசு தலைவர் இந்த நிகழ்விற்கு வரவில்லை என பலரும் கருதுகிறார்கள்.