இந்திய தேர்தல் ஆணையத்தின் தூதரானார் சச்சின்!

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்
Published on

இந்திய தேர்தல் ஆணையத்தின் தூதராக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான ஆவணங்களில் சச்சின் டெண்டுல்கர் இன்று கையெழுத்திட்டார்.

அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு, மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல்களில் மக்களின் வாக்கு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சச்சின் பங்கேற்கவுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள நகா்ப்புற மக்கள் மற்றும் இளைஞர்கள் வாக்களிப்பதில் காட்டும் அக்கறையின்மையைக் களையும் நோக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சச்சின் டெண்டுல்கரை தூதராக நியமித்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையத்தின் தூதராக நியமிக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில், ஒப்பந்தத்தில் சச்சின் டெண்டுல்கர் கையெழுத்திட்டார். இதன்மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தூதராக சச்சின் டெண்டுல்கர் செயல்படவுள்ளார்.

கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதி இந்திய தேர்தல் ஆணைய தூதராக நியமிக்கப்பட்டிருந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com