மது குடித்ததால் தகராறு -ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை

பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் போராட்டம்
பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் போராட்டம்
Published on

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது கள்ளக்கிணறு என்ற கிராமாம். இந்த கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தவர். நேற்றிரவு அவரது வீட்டின் அருகே மூன்று பேர் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். இதனை செந்தில்குமார் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் செந்தில்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை தட்டிக்கேட்க வந்த அவரது தம்பி மோகன்ராஜ், அவரது அம்மா, புஷ்பவதி, செந்தில்குமாரின் சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த போதை கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளனர். அவர்களது உடல் பாகங்கள் சிதறிக்கிடக்க, அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு அந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து பல்லடம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்த நான்கு பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் என மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் காவல் துறையினர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட காவல்துறை மருத்துவமனை மற்றும் பல்லடம் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட செந்தில்குமாரிடம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பணம் பிரச்சினை தொடர்பாக செந்தில்குமார், வெங்கடேசை வேலையை விட்டு நீக்கியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுவே கொலைக்கான காரணம் என்கின்றனர் காவல் துறையினர்.

இதனால், வெங்கடேசை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் தம்பியான மோகன்ராஜ் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால், பாஜகவினர் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த படுகொலைக்கு அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com