நாங்குநேரி சம்பவம் நடுங்கச் செய்துவிட்டது: முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் ட்வீட்
மு.க.ஸ்டாலின் ட்வீட்
Published on

நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சின்னத்துரை என்கிற பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை, சக மாணவர்களே நேற்று வீடு புகுந்து கொலைவெறியோடு கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவு இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்தைப் பதிந்துள்ளார்.

அதில், “ இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.” என வேதனை தெரிவித்துள்ளார்.

” சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.” என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதனிடையே, இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதையும் முதலமைச்சர் தன் ட்விட்டர் தகவலில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.” என்றும் முதலமைச்சர் கறாராகக் கூறியுள்ளார்.

”அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும்.” என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

”வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.” என்றும் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ள முதலமைச்சர் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com