ரத்தன் டாட்டா மறைவையொட்டி, டாட்டா அறக்கட்டளைத் தலைவராக நோயல் டாடா (வயது 67) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரபல தொழிலதிபரும், டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாட்டா (வயது -86), உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது மறைவிற்குப் பிறகு ரூ.30 லட்சம் கோடி மதிப்புள்ள டாட்டா குழுமத்தை நிர்வகிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இன்று டாட்டா அறக்கட்டளை புதிய தலைவராக, நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த நோயல் டாட்டா ?
நோயல் டாடா ரத்தன் டாட்டாவின் ஒன்றுவிட்ட தம்பி ஆவார். இவருக்கு வயது 67.
நோயல் டாட்டா முதன்முதலாக டாட்டா சர்வதேச நிறுவனத்தில் தான் தன் பணியை தொடங்கினார். 1999ஆம் ஆண்டில் டிரண்ட் (Trent) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். ஆடை விற்பனை கடைகளில் இப்போது பெரிய அளவில் இருக்கும் வெஸ்ட்சைடை லாபகரமானதாக மாற்றியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
2003ஆம் ஆண்டு இவர் டைட்டன் மற்றும் வோல்டாஸின் இயக்குனர் ஆனார்.
இந்த நிலையில், 2011ஆம் ஆண்டு 'தனக்கு பிறகு சைரஸ் மிஸ்ரா' என்று ரத்தன் டாடா அறிவித்தார். ஆனால், 2016-ஆம் ஆண்டில் சைரஸ் மிஸ்ரா டாட்டா சன்ஸின் தலைவராக நீக்கப்பட்டு, மீண்டும் ரத்தன் டாட்டாவே தலைவரானார்.
2017ஆம் ஆண்டு இவர் தான் டாட்டா சன்ஸின் அடுத்த தலைவர் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இவருக்கு போதுமான அனுபவம் இல்லாததால் சந்திரசேகரன் தலைவர் ஆனார்.
நோயலுக்கு மாயா மற்றும் லியா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.