அமெரிக்காவில் 90,000 கோடி சொத்து! அசத்தும் இந்திய விவசாயி மகன்!  

 ஜெய் சவுத்ரி
ஜெய் சவுத்ரி
Published on

இமாசல பிரதேசத்தில்  உள்ளா உனா மாவட்டத்தில் ஒரு சிற்றூர். மின்சாரம் இல்லாத அந்த ஊரில் ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்தான் அந்த சிறுவன். நான்கு கிமீ தூரம் தினமும் நடந்து சென்று படித்தான். மின்சாரம் இல்லாத நிலையில் மரத்தடியில் தான் தினமும் படிப்பு. பனாராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மின்னணுப் பொறியலில் இளநிலை படிப்பு முடித்தான். மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றதுதான் அவனது  முதல் விமானப்பயணம்.  அந்த இளைஞன் பெயர் ஜெய் சவுதிரி. இன்று  67 வயதாகும் அவர்தான் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் மிகப்பெரிய பணக்காரர்.  10.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இவரது சொத்து மதிப்பு என போர்ப்ஸ் பத்திரிகை சொல்கிறது. கிட்டத்தட்ட இந்திய  மதிப்பில் 90,000 கோடி ரூபாய்.

எப்புடிய்யா? என்னதான் செய்துவிட்டார் நமது கட்சிக்காரர் இவ்வளவு பணம் சம்பாதிக்க?

என் குடும்பத்திலேயே யாரும் தொழில் துறையில் தெரியாது. நான் சிறிய விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன். சிறுவயதில் நான் தொழில் தொடங்கவேண்டும் என நினைத்ததே இல்லை” என்கிறார் ஜெய்.

1980களில் அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்று அங்கே ஐபிஎம், யுனிசிஸ் போன்ற நிறுவனங்களில் வேலை பார்த்து வசதியாக இருந்தவர் இவர். 1996-க்குப் பிறகுதான் தொழில் தொடங்கலாமே என்று யோசனை வந்துள்ளது. இவரும் இவரது  மனைவி ஜோதியும் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு, கையில் இருந்த சேமிப்பான 5 லட்சம் டாலர்களைப் போட்டு சைபர் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினர். 18 மாதத்துக்குள் அமெரிக்காவின் பெரிய நிறுவனங்களில் 50%க்கு மேல் இவர்களின் சைபர் செக்யூரிட்டி சேவையைப் பயன்படுத்தி இருந்தன. உடனே இந்த நிறுவனத்தை சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலையில் இன்னொரு நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டார்.

அடுத்த பத்தாண்டுகளில் இரு நிறுவனங்களைத் தொடங்கி, அவற்றையும் நல்ல விலைக்குக் கொடுத்துவிட்டார்.

2007-இல் இன்னொரு நிறுவனம் தொடங்கினார். அதன் பெயர் Zscaler. 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில்  ஆரம்பித்தார். அது கிளவுட் அடிப்படையிலான பாதுகாப்பைத்தரும் நிறுவனம். இன்று அது ஆண்டுக்கு 1.6 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் நிறுவனமாகவும் 30 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்டதாகவும் திகழ்கிறது.

”என் வெற்றிக்குக் காரணம் எனக்கு பணத்தின் மீது ஈடுபாடு மிகக் குறைவு” என்கிற ஜெய் சௌத்ரி,’ இணையத்திலும் கிளவுடிலும் (cloud) அனைவரும் பாதுகாப்பாக தொழில் செய்யவேண்டும் என்பதில் தான் எனக்கு முழு ஈடுபாடே” என்று சொல்கிறார்.

ஒரு கட்டத்துக்கு மேல் பணம் முக்கியமாகப் படாது. வெற்றிதான் முக்கியமாகப் படும்! என்னங்கறீங்க…

logo
Andhimazhai
www.andhimazhai.com