இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டி, உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறிவருகிறது என ரிசர்வ வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய சக்திகாந்த தாஸ், “நாட்டின் பொருளாதாரம் நிலையான வேகத்தில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக மாறி, உலக வளர்ச்சிக்கு 15 சதவீதம் பங்களிக்கிறது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் செயல்பாடும் ஆரோக்கியமானதாக உள்ளது. அசையா சொத்துகளின் அளவு குறைவதால் லாபம் அதிகரிக்கும்.
புவிசார் அரசியல், தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகளால் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களினால் இந்தியா பயன்பெறும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் பொருளாதாரம் வலுவான அடித்தளத்தை கொண்டிருக்கிறது.
நாட்டில் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளதால் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றவில்லை. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமுமின்றி 6.5 சதவீதமாகத் தொடரும். வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமில்லை.” என்றார்.