விமான எரிபொருளின் விலை இன்று 8.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால், விமான கட்டணமும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், வணிகரீதியான சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைத்து வருகின்றன. இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், ஷெல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களே விமான நிறுவனங்களுக்கு எரிபொருளை வழங்கி வருகின்றன.
அதேசமயம் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளான ஏடிஎப் விலை ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியும் 16ஆம் தேதியும் மாற்றியமைக்கப்படுகிறது.
அந்தவகையில், இன்று விமான எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.7, 728.38 அதிகரித்துள்ளது. அல்லது விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு 8.5 சதவீதம், அதாவது ரூ. 98,508.26 உயா்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு அறிவிப்பின் மூலம், ஒரே மாதத்தில் இரண்டு முறை விமான எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஜூலை 1ஆம் தேதி விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு 1.65 சதவீதம் உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து விமான எரிபொருளின் விலை அதிகரித்து வருவதால், விமான டிக்கெட்டின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டிருப்பதன் காரணமாக, சா்வதேச அளவில் எரிபொருள்கள் விலை உயா்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.