மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரியை குறைத்ததற்கு காரணம் சமீபத்தில் அதிகரித்த தங்கக் கடத்தல் தான் காரணம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நேற்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு பொருட்களின் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக தங்கம், வெள்ளி மீதான சுங்க வரிகள் 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன. பிளாட்டினம் மீதான சுங்கவரி 15.4 சதவீதத்திலிருந்து இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பொருட்களின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
நேற்று காலை சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.6,810க்கு விற்பனையான நிலையில் பிற்பகலில் ரூ.260 குறைந்து ரூ.6,550க்கு விற்பனையானது.
இன்றும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.51,920க்கு விற்பனையாகிறது.
மேலும், 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.60 சரிந்து 6,490 ஆக விற்பனையாகிறது.
இந்த இரண்டு நாளிகளில் மட்டும் ஒரு கிராமிற்கு 320ரூபாயும் ஒரு சவரனுக்கு ரூ. 2,560 வரை தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
ஆனந்த சீனிவாசன் என்ன சொல்லுகிறார்?
தங்கம் விலை குறைவது குறித்து பிரபல பொருளாதார ஆய்வாளரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி ஊடகப் பிரிவு தலைவருமான ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் சேனலில், ‘இறக்குமதி வரியைக் கணிசமாகக் குறைத்துள்ளனர். இதனால் மொபைல் விலை பெரியளவில் குறையும். அதேபோல தங்கத்திற்கான இறக்குமதி வரியையும் குறைத்துள்ளனர். இதனால் ஒரு கிராம் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.400 வரை குறைந்துள்ளது.
நீங்கள் தங்கம் விலை அதிகரிக்கும் என்றீர்களே… இப்போது குறைந்துள்ளதே என ஷாக் ஆக வேண்டாம். இது வரி குறைத்ததால் ஏற்பட்ட சரிவு மட்டுமே. இதனால் தங்கம் ஒரு கிராம் ரூ.10,000-த்துக்கு விற்பனை செய்யப்படுவது மட்டுமே கொஞ்ச நாள் தள்ளிப் போகிறது. தங்கம் விலை ரூ.10,000 போவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது. ரூபாய் மதிப்பும் சரிந்து வருவதால் தங்கம் விலை வேகமாக அதிகரிக்கவே செய்யும்." என்று கூறிய ஆனந்த சீனிவாசன், மற்றொரு யூடியூப் பேட்டியில், தங்கக் கடத்தல் தொடர்பான புகார்கள் சமீபமாக அதிகரித்து வந்தன. குறிப்பாக சென்னையில். அதேபோல், குஜராத்திலும் டன் கணக்கில் வெள்ளியையும் கடத்தினார்கள். இதைக் கட்டுப்படுத்ததான், ஏற்கெனவே உயர்த்திய வரியை தற்போது குறைத்திருக்கிறார்கள் என்றார்.