2025ஆம் நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் சுமார் 6 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனமான ஆப்பிள், தங்கள் நிறுவனப் பொருள்களின் தயாரிப்புப் பணியை சீனாவுக்கு வெளியே பரவலாக்கவேண்டும் என்ற முடிவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்தது.
அதன்படி, ஆப்பிள் நிறுவனம் மெல்ல மெல்ல இந்தியாவில் தனது உற்பத்தியை தொடங்கியது. தற்போது தமிழ்நாடு, பெங்களூர், ஆந்திரா, தெலுங்கானா உட்ப பல மாநிலங்களில் புதிய தொழிற்சாலைகளை அமைத்தும், விரிவாக்க பணிகளையும் செய்து வருகிறது.
இதன் மூலம் 2025 ஆம் நிதியாண்டின் முடிவிற்குள் இந்தியாவில் ஆப்பிள் மற்றும் அதன் உற்பத்தி பார்ட்னர்கள் இணைந்து சுமார் 6 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 50 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில், ஆப்பிள் மற்றும் அதன் உற்பத்தி பார்ட்னர்கள் 2025 ஆம் நிதியாண்டின் முடிவிற்குள் நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 70% பெண்கள் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்போது ஃபாக்ஸ்கான், டாடா, பெகாட்ரான், ஃபாக்ஸ்லின்க், சால்ப்காம் மற்றும் மதர்சன் உள்ளிட்ட ஐபோன் அசம்பிளி மற்றும் சப்ளையர்கள், 2020 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தி இணைப்பு ஊக்கத்தொகை (PLI) திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவில் 1.65 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்து, மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 6 லட்சமாக உயர்த்தும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் இந்தியா தற்போது சுமார் 14 % பங்களிப்பதாக சமீபத்திய பொருளாதார ஆய்வுகள் கூறுகின்றன.