மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யுமாறு மேயரிடம் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார். கையோடு, ஒரு பள்ளிக்கு ஆகும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்தார்.
தமிழகத்தின் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மதுரை முத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தகவல் தொழில்நுட்பம்- டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து அமைச்சர் பி.டி.ஆர். உணவருந்தினார்.
அப்போது, உயர்நிலை வகுப்பு மாணவர் ஒருவர் தலைவலியுடன் அவதிப்பட்டுக் கொண்டு இருக்க, அந்த மாணவருக்கு உணவுக் கொடுக்குமாறு கூறினார். “ தலைவலியோடு இருக்கிறான் என்றால், அவனுக்கு நீர்ச்சத்து குறைபாடு இருக்கப்போகிறது. முதலில் தண்ணீர் கொடுங்கள்.” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், தனியாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த அந்த சிறுவனின் அருகில் சென்ற பி.டி.ஆர்., அவனுடைய தட்டில் இனிப்பு இல்லாமல் இருக்க, ”ஸ்வீட் வைங்க” என்று சொன்னார்.
வாஞ்சையோடு அந்த மாணவரின் அருகிலேயே உட்கார்ந்து, ”ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கே? உங்களை மாதிரி குழந்தைகள்தான் சமூகத்தின் எதிர்காலம். ஒழுங்கா சாப்பிட்டு முன்னேறாமல் இருந்தால், வயதான நாங்கள் என்ன செய்றது?” என்றவர், மாணவரின் பெயர், வகுப்பு பற்றிக் கேட்டார். அந்த மாணவர் பெயர் விஷ்வா என்பதும் அவர் ஏழாம் வகுப்பு படிப்பதாகவும் தெரிவித்தார்.
அந்த மாணவர் மிகவும் ஒல்லியாக இருப்பதைப் பார்த்து, பள்ளியில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.
“ஒரே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இருக்கும் போது, 5ஆம் வகுப்பு வரை மட்டும் காலை உணவு போடுவது சரியல்ல. காலை உணவு போடும் பள்ளிகளில் மேல்வகுப்பு மாணவர்கள் எவ்வளவு பேர் சாப்பிடாமல் வருகிறார்கள் எனக் கணக்கெடுங்கள். மாநகராட்சியில் தீர்மானம் போட்டு சமூக ஆர்வலர்கள் மூலம் நிதி வசூல் செய்யுங்கள். நான் இந்தப் பள்ளிக்கு ஸ்பான்சர் செய்கிறேன். இதே விலையில், இதே அளவில், சாப்பிடாமல் வரும் மேல் வகுப்பு மாணவர்களுக்கும் சாப்பாடு போடுங்கள்.” என மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த்துக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர்., "ஒரு மாணவருக்கு 12 ரூபாய் 40 பைசாவில் சிறந்த உணவு வழங்கப்படுவது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதைவிடச் சிறந்த செலவு செய்ய முடியாது. இதனுடைய பலன், 10, 20 வருடத்திற்குப் பிறகு கிடைக்கக்கூடிய விளைவு மிகச் சிறப்பானதாக இருக்கும். சிறந்த கல்வி, ஊட்டச்சத்து பெற்ற இளைஞர்கள்தான் பெரிய சொத்து. இந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த அரசாங்கம் பல நன்மை செய்திருந்தாலும். இது ஒரு சிறப்பான திட்டம்." என்று பெருமிதப்பட்டார்.