8 வயது சிறுமியின் பகீர் பொய்: உயிர்தப்பிய டெலிவரி ஏஜெண்ட்; வாயைப் பிளந்த போலீஸ்!

8 வயது சிறுமியின் பகீர் பொய்: உயிர்தப்பிய டெலிவரி ஏஜெண்ட்; வாயைப் பிளந்த போலீஸ்!
Published on

மழலையின் பொய் அழகு என கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ‘அம்மா, அவன் என்னை கிள்ளிட்டான்’; ‘அவ என் பென்சிலை எடுத்துட்டா...’; ‘சாக்லேட்ட காக்கா தூக்கிட்டு போயிடுச்சி’ என மழலை மொழியில் குழந்தைகள் பொய் சொல்வதை ரசித்து கேட்டிருப்போம். ஆனால், 8 வயது குழந்தை ஒன்று சொன்ன பொய், வயிற்றில் புளியை கரைக்கும் ‘பகீர்’ரகமாக உள்ளது.

கடந்த வாரம் பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 30 வயதான ஒரு டெலிவரி ஏஜெண்ட், குடியிருப்பு வாசிகளால் கடுமையாக தாக்கப்பட்டார். குறித்த நேரத்துக்கு போலீஸ் வராமல் போயிருந்தால், அவர் உயிருக்கே கூட அந்த கும்பல் தாக்குதல் ஆபத்தை விளைவித்திருக்கலாம். ஏன் அந்த டெலிவரி ஏஜெண்டை அவர்கள் தாக்கினார்கள் தெரியுமா? அதே அபார்ட்மெண்டில் குடியிருக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி சொன்ன பொய்யால்!

ஜூன் 12 அன்று, காலை 9.40 மணியளவில், அந்த பெற்றோர் தங்கள் ஐந்து வயது மகனைப் பள்ளிக்கு விட்டுவிட்டு வீடு திரும்பியபோது, அவர்களது ஏழாவது மாடியில் இருந்து எட்டு வயது மகளைக் காணவில்லை. பிரதான கதவு வெளியில் பூட்டப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

பெற்றோர் தங்கள் மகளைத் தேடத் தொடங்கியபோது, அக்கம் பக்கத்தினரும் இணைந்துகொண்டனர். அரை மணி நேர தேடலுக்குப் பின், அந்தச் சிறுமி மொட்டை மாடியில் இருப்பதை ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

மொட்டைமாடிக்கு ஏன் வந்தாய் என பெற்றோர், சிறுமியிடம் கேட்டபோது, “உணவு டெலிவரிக்கு வந்த ஏஜெண்ட் அழைப்பு மணி அடித்தார். நான் திறந்தபோது என்னை மொட்டைமாடிக்கு இழுத்துவந்தார். நான் அவர் கையை கடித்து தப்பித்தேன்” எனக் கூறியுள்ளார்.

அங்கொன்றும் இங்கொன்றும் நடந்த குற்றச்சம்பவங்களை மனதில் ஓடவிட்டு, திகிலடைந்த அவர்கள், செக்யூரிட்டி நபர்களிடம் சொல்லி யாரெல்லாம் வந்தார்கள், போனார்கள் என விவரங்களை கேட்டிருக்கிறார்கள்.

“அந்தச் சிறுமி இவர்தான் தன்னை வலுக்கட்டாயமாக மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றவர் என ஒருவரை அடையாளம் காட்ட, அந்த நபரை சிறுமியின் பெற்றோரும் மற்றவர்களும் அடித்து துவைத்து, செக்யூரிட்டி அறையில் அடைத்து வைத்திருந்தனர். இதைக் கேள்விப்பட்ட மற்ற டெலிவரி ஏஜெண்ட்டுகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் அங்கு போனோம். அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தோம்” என்கிறது போலீஸ் தரப்பு.

அதன்பிறகு நடந்த போலீஸ் விசாரணையில்தான் இந்த சம்பவத்தின் ட்விஸ்டே வெளிவந்தது.

மறுநாள், போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று ஏழாவது மாடியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர். துரதிர்ஷ்டவசமாக, மொட்டை மாடிக்கு செல்லும் படிகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா எதுவும் நிறுவப்படவில்லை. தேடலில் அடுக்குமாடி குடியிருப்பை அடுத்துள்ள பெண்கள் தங்கும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீஸார் கண்டுபிடித்தனர்.

“நாங்கள் காட்சிகளை ஸ்கேன் செய்தபோது, சிறுமி தனியாக மொட்டை மாடிக்கு நடந்து சென்று சிறிது நேரம் விளையாடுவதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். காட்சிகளை நாங்கள் அவர்களிடம் காட்டியபோது அவரது பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்" என்று விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார்.

சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், பொய் கூறியதை ஒப்புக்கொண்டார். “வகுப்பு நேரத்தில் விளையாடியதற்காக என் பெற்றோர் என்னை அடிப்பார்கள் என்று நான் பயந்தேன்,” என்று அவர் கூறினார்.

அந்தப் பெண்ணின் பெற்றோர் டெலிவரி ஏஜெண்டிடம் மன்னிப்புக் கேட்டபோது, அந்தக் காட்சிகள் அவருக்கும் காட்டப்பட்டன. கண்ணீரோடு அந்த டெலிவரி ஏஜெண்ட், "என் மகளுக்கு ஐந்து வயதாகிறது, உங்கள் மன உளைச்சலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் என்னிடம் பகை எதுவும் இல்லை. ஆனால் திரும்பதிரும்ப நான் குற்றமற்றவன் என சொன்னபோதும், அந்தப் பெண் பொய் சொல்கிறாள் என்று சொன்ன போதும் மக்கள் என்னை நம்பாமல் அடித்தனர்...”என்றிருக்கிறார்.

ஆனால், அவர் தன்னை அடித்தவர்கள் மீது புகார் ஏதும் அளிக்கவில்லை. "விரைவில், நான் எனது மனைவி மற்றும் மகளுடன் நிரந்தரமாக எனது சொந்த மாநிலமான அஸ்ஸாமுக்குச் சென்றுவிடுவேன். இங்கு புகார் கொடுப்பது என்பது கூடுதல் சட்ட நடவடிக்கைகளுக்காக இங்கு வந்து செல்ல வேண்டியிருக்கும். நீதிமன்ற விசாரணைகளுக்கு என்னால் செலவழிக்க முடியாது” என போலீசிடம் அந்த இளைஞர் கூறியிருக்கிறார்.

எப்படியோ அப்பாவி இளைஞர் உயிர்தப்பினார், சட்ட நடவடிக்கைகளிடம் இருந்தும் தப்பினார். ஆனால், எப்படி ஒரு எட்டு வயது சிறுமியால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் பொய்யைச் சொல்ல முடிந்தது? அவர் வளரும் சமூகச் சூழலா? பெற்றோரின் வளர்ப்பா? சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கமா? இவை எல்லாமும்கூட காரணமாக இருக்கலாம். ஆனால் அனைத்துக்குமான ஒழுங்குபடுத்தும் பொறுப்பு பெற்றோரிடம் மட்டுமே உள்ளது. சில சமயம் நமது குழந்தைகளிடமிருந்தும் சமூகத்தை காக்க வேண்டியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com