ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் 275க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயர சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலையில், அங்கு மற்றொரு ரயில் விபத்து நடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று ரயில் விபத்துகள் ஏற்பட்டிருப்பது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா
ஒடிசாவின் ஜஜ்புர் ரயில் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள், புயல் மழை காரணமாக ரயில் பெட்டியின் கீழே ஒதுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று சரக்கு ரயில் ஏறியதில் 6 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காற்றின் வேகத்தால், சரக்கு பெட்டிகள் உருண்டு விபத்து ஏற்பட்டதாக கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து உயர் மட்ட குழு விசாரணை நடைபெறும் என்று கிழக்கு கடற்கரை ரயில்வே உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
ஜார்கண்ட்
ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் அருகிலுள்ள சந்தால்டி ரயில்வே கேட்டிற்குள் டிராக்டர் சிக்கிக்கொண்டது. ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக பிரேக் போட்டதால் ரயில் நின்றது. இதன் காரணமாக பெரும் விபத்து ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
மத்தியபிரதேசம்
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிகிறது.