16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரபேல் என்கிற இத்தாலிய ஓவியர் டாவின்ஸி மற்றும் மைக்கேல் ஆஞ்சலோ வரிசையில் வைத்துப் புகழப்படும் தலைசிறந்த ஓவியர். 1520 ல் தன்னுடைய 37வது வயதிலேயே மரணத்தை தழுவிய இவரின் ‘அப்போஸ்தலரின் தலை’ என்ற புகழ்பெற்ற ஓவியம் ரோம் நகரத்தின் வாட்டிகன் மியூசியத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.இந்த ஓவியம் சுமார் 250 கோடி ரூபாய்க்கு விலைபோய் உலகின் விலையுயர்ந்த ஓவியம் என்ற புகழை பெற்றுள்ளது!
சவால்களைச் சாதகமாக்கிக் கொள்ளுங்கள்
வாடிக்கையாளர்கள் புத்திசாலிகள். அவர்கள் பொருளின் தரத்தையும் விலையையும் சந்தையிலுள்ள மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டுக்கொண்டெ இருப்பவர்கள்.இதில் எங்கு தவறு செய்தாலும் நம்மை திரும்பிகூட பார்க்கமாட்டார்கள் இது, கேண்டாபில் என்கிற பேஷன் ஆடை பிராண்டை வெற்றிகரமாக உருவாக்கியவரான விஜய் பன்சாலின் தாரக மந்திரம். இப்போது இந்தியாவில் நுழைந்திருக்கும் பன்னாட்டு பேஷன் ஆடை பிராண்டுகளுக்கு ஜிந்த் என்கிற ஹரியானா மாநிலத்தின் சிறு நகரத்திலிருந்து சரியான போட்டியை அளிப்பவர் இவர். இந்தியாவின் நவீன வடிவமைக்கப்பட்ட ஆடைகளின் துறையில் சூறாவளியை ஏற்படுத்தியிருக்கும் ‘கேண்டாபில்’ பிராண்டுக்காக இப்போது 400க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் இருக்கின்றன.
அவரது கதை முன்னேறத்துடிக்கும் தொழிலதிபர்களுக்கு ஒரு அட்டகாசமான பாடம். பி.காம் படித்துவிட்டு குடும்ப தொழிலான நுகர்பொருட்கள் வினியோகத்தில் 1979-ல் ஈடுபட தொடங்கியவர் பன்சால். 10 ஆண்டுகாலம் விநியோக துறையில் வெற்றிகரமாக காலூன்றிவிட்டு 1989ல் துணித் தயாரிப்பிற்கான உபபொருட்கள் வியாபாரத்தில் 10 ஆண்டுகாலம். பிறகு 2000- ல் கேண்டாபில் நிறுவனத்தை தொடங்குகிறார். இத்தனை ஆண்டுகால வியாபார அனுபவத்திற்கு பிறகும் நவீன ஆடை வடிவமைப்பு துறை தனக்கு புதிய துறை என்பதால் அதை புரிந்துகொள்ளவே மூன்றாண்டு காலம் பிடித்தது என்கிறார். சில நேரங்களில் சரியான வியாபாரத்தைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோமா என்ற சந்தேகம் கூட வந்ததுண்டு என்பவர் எப்பொழுதும் தனக்கு முன்மாதிரியாக கொண்டது நிர்மா, டி சீரிஸ் போன்ற குறுகிய காலங்களில் வியாபாரத்தில் பெரிய பேரைப்பெற்ற பிராண்டுகளைத்தான். இந்த இந்திய பிராண்டுகள் பூஜ்யத்தில் இருந்து தொடங்கி பெரும் உச்சத்தை எட்டியவை. அவர்களால் இதை செய்ய முடிந்தபோது தன்னால் ஏன் முடியாது என்று இவர் நினைத்ததுதான் இன்று இந்தியாவெங்கும் ஏறக்குறைய 400 விற்பனை மையங்களை நடத்தும் இடத்தில் நிறுத்தியிருக்கிறது.
மற்ற தொழில்களுக்கும் நவீன ஆடை வடிவமைப்பு துறைக்கும் உள்ள வித்தியாசங்களை பற்றி சொல்லும்போது, உலக அளவிலான நவ நாகரிக ஆடை வடிவமைப்புகளில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து அதனை உள்வாங்கி மேம்படுத்துவதும் புதிய யோசனைகளை உட்புகுத்துவதும் இதில் முக்கியம் என்கிறார். மேலை நாடுகளில் ஐரோப்பிய பாணியை முக்கியமாக இத்தாலி வடிவமைப்புகளை இவர்கள் முக்கியமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
இவர் கொடுக்கும் ஆச்சர்யமேற்படுத்தும் செய்தி இன்று உலகமெங்கும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார தேக்க நிலையால் இவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதே. அதைவிட தேக்க நிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள மாதாந்திர விற்பனையை ஒவ்வொரு மையத்திலும் துல்லியமாக ஆராய்தல், தேவைக்கு ஏற்ற எண்ணிக்கையிலான ஆட்களை மட்டுமே வைப்பது, லாபமில்லாத மையத்தை மூடுவது போன்ற துல்லியமான காய் நகர்த்தல்கள் மூலம் சாதித்திருக்கிறார்.
எந்த மாதிரியான வியாபாரத்தை புதியவர்கள் முயற்சிக்கலாம் என்ற கேள்விக்கு இவர் அளித்த பதில் முக்கியமானது: “வியாபாரத்தில் நல்ல வியாபாரம், மோசமான வியாபாரம் என்று எதுவும் கிடையாது. அது உங்களுடைய விருப்பத்தை சார்ந்தது. ஆனால் எடுத்துக்கொண்ட வியாபாரத்தில் அறிவு, அனுபவத்துடன் முழு முயற்சி செய்தால் உங்களுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது”. என்ன சரியா?
ஒண்ணேகால் கோடிக்கு ஒரு சட்டை!
புனேயிலுள்ள பிம்ரி பகுதியைச் சார்ந்த தொழிலதிபர் தத்தா புகேக்கு தங்கம் என்றால் உயிர். கை, கால், காது என்று எல்லா இடமும் தங்கத்தால் இழைத்துப்பார்த்த இவர் இப்போது தங்கத்தால் சட்டையே செய்து போட்டுக் கொண்டிருக்கிறார். உலகின் மிக விலை உயர்வான சட்டை இதுதான்! ஒண்ணேகால் கோடி ரூபாய்! இந்த கோடீஸ்வரரின் வயது 32 தான். 14,000 தங்க பூக்களாலும்,1,00,000 வெள்ளை வெல்வெட் ஜரிகைகளாலும் இழைக்கப்பட்ட இந்த
சட்டை 3.5 கிலோ தங்கத்தினால் செய்யப்-பட்டுள்ளது. 2013 புத்தாண்டு கொண்டாட்டத்-தில் இந்த சட்டையை அணிந்த தத்தா புகே இதனுடன் 5 கிலோ எடையுள்ள செயின், பிரேஸ்லெட் மற்றும் மோதிர வகைகளை அணிந்து சும்மா தகதகவென மின்னியுள்ளார். ஏறக்குறைய 10 கிலோ வரை நகையாக வைத்துள்ள அவர் அதை பாதுகாக்க தனியாக செக்யூரிட்டி பிரிவையும் பாதுகாவலர்-களையும் வைத்துள்ளார். அடுத்தது தங்கத்தாலான செல்போன் செய்ய ஆர்டர் கொடுக்கப் போகிறாராம்!
பணமொழி:
“ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கு பணத்தால் எந்த பிரயோசனமும் இல்லை”
- பில்கேட்ஸ், இங்கிலாந்து பத்திரிகை ஒன்றின் நேர்காணலில்
பிப்ரவரி, 2013.