விரும்பியதைச் செய்தவர்!

விரும்பியதைச் செய்தவர்!
Published on

என்னுடைய அப்பாவும் அம்மாவும் உனக்கு எதை பிடிக்கிறதோ அதை செய் என்றார்கள். அதனால்தான் என்னால் இந்த துறையில் வெற்றிபெற முடிந்தது என்கிற அஜய் இந்தியாவெங்கும் பிரபலமாக அறியப்படும் பி.வி.ஆர் மல்டிபிளக்ஸ்சை தொடங்கியவர்.

குடும்பத்தொழில் டிரான்ஸ்போர்ட் வியாபாரம்.ஆனால் அஜயின் மனசு முழுக்க சினிமாவே இருந்தது.அதற்கு ஏதுவாக அவருடைய அப்பாவும் ஒரு சினிமா தியேட்டரை விலைக்கு வாங்கியிருந்தார்.

1990 ல் ‘பிரியா’என்ற அந்த திரையரங்கில் உட்கார்ந்துகொண்டு அஜய் கண்ட கனவுதான் இன்றைய தரமான பி.விஆர் மல்டிபிளக்ஸ் அரங்குகளில் நிஜமாகியிருக்கிறது. ஆனால் அதனுடன் அஜய் திருப்தி அடைந்துவிடவில்லை.2007 ல் அமீர் கானுடன் சேர்ந்து ‘தாரே ஜமீன் பர்’ என்ற படத்தை தயாரித்ததன் மூலம் பட தயாரிப்பிலும் இறங்கினார்.

அவருடைய வெற்றியைப்பற்றி  சொல்லும் போது பி.வி.ஆர் சினிமா இன்னும் பல பெரிய சாதனைகளை செய்யவல்லது,இதுவரை செய்தது எல்லாம் சிறு முயற்சிகளே என்று அடக்கத்துடன் கூறுகிறார்.

வியாபாரத்தில் அஜயின் வேதவாக்கு அவருடைய அம்மா சொன்னது.‘ஒரு விஷயத்தை முழுமனதுடன் விரும்பி செய்யும்போது கண்டிப்பாக உலகம் உன்னை ஏற்றுக்கொள்ளும்.’ உண்மைதானே..?

முடியாதது எதுவுமில்லை!

வருடங்கள் இரசாயன அழகு பொருள் பற்றியும் அதன் வேதியியல் பற்றியும் படித்துவிட்டு அதற்கு நேர் எதிராக ஆயுர்வேத அழகு பொருட்களில் ஒருவர் இன்று கொடிகட்டி பறக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் ஷானாஸ் ஹூசைனின் கதை.

லண்டனில் படித்து பயிற்சியில் இருக்கும்போது நாளிதழில் லண்டனின் ஒரு பிரபல மாடல்

ரசாயன அழகு சாதன பொருளான மஸ்கரா பயன்படுத்தியதால் கண்பார்வை இழந்த செய்தி வருகிறது.பிறகு அவர் தற்கொலையும் செய்து கொள்கிறார். இந்த பிரச்சனைக்கு சரியான மாற்று இயற்கையான ஆயுர்வேத பொருட்கள்தான் என்ற முடிவுக்கு வந்தவர் 1971 ல் தன்னுடைய முதல் இயற்கை அழகு நிலையத்தை தொடங்கி உலகளாவிய வெற்றிபெற்றார்.  

  ஆனால் இந்த வெற்றி சுலபமாக கிடைக்கவில்லை.   கடுமையான உழைப்பும் குறையாத நம்பிக்கையுமே இவரது பலம்!

குப்பையிலிருந்து ஆரம்பிக்கலாம்!

வயதான ஹஜி காமுருதீனின் குடும்ப தொழில் நெசவு நெய்வது.இவரும் அதையேதான் செய்கிறார்.இதிலென்ன இருக்கிறது என்கிறீர்களா? இவர் நெய்வதற்காக பயன்படுத்தும்  நூல் தேவையற்றது என்று ஒதுக்கப்பட்டது.டெக்ஸ்டைல் மில்களில் வேஸ்ட் என்று வெளியே கொட்டும் நூல்களை குறைவான விலைக்கு வாங்கி அதிலிருந்து  சீட் கவர்,மிதியடி,திரைச்சீலை,மெத்தை விரிப்பான் என்று விதவிதமான பொருட்களை தயாரிக்கிறார்.டெல்லியில் 12 வருடங்களாக ‘காலிப் ஹேண்ட்லூம்’ நடத்திவரும் காமுருதீனிடம் 25 பேர் வேலை செய்கிறார்கள். மற்ற ஹேண்ட்லூம் பொருட்களைவிட மிருதுவாக இருக்கும் இவரின் தயாரிப்புகளுக்கு வெளி நாட்டு வாடிக்கையாளர்களும் உண்டு. ஆனால் பெரும்பாலும் மொத்த விலைக்கே விற்றுவிடும் இவரின் பொருட்கள் டெல்லி சாந் தினி சௌக் போன்ற இடங்களில் விற்கப்படுகிறது.

தொழிலை விரிவுபடுத்த திட்டங்களை வைத்திருக்கும் காமுருதீன் அதற்கு அரசின் உதவியை எதிர்பார்த்திருக்கிறார். சிறு தொழில் முனைவோருக்கு அரசாங்கத்தின் சலுகைகள் சரியாக கிடைப்பதில்லை என்பதுடன் பல திட்டங்கள் இவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது என்கிறார்.

பணமொழி:  செய்யும் வேலையை விரும்பிச்செய்யாமல் பணத்திற்காக மட்டும் உழைப்பவர்கள் பணத்தையும் அடையமாட்டார்கள்; மகிழ்ச்சியையும் பெறமாட்டார்கள். - சார்லஸ் எம்.ஷ்வாப்.

ஏப்ரல், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com