வாங்கோ ஜெயிக்கலாம்

உலகம் உன்னுடையது
வாங்கோ ஜெயிக்கலாம்
Published on

இந்த தொழிலதிபருக்கு தண்ணீருக்கு அருகிலிருக்க மிகப் பிடிக்கும். ராஜஸ்தான்காரருக்கு தண்ணீரின் மீது ஆர்வமிருப்பது ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால்,டெல்லியில் அமர்ந்து கொண்டு கடலையும்,அருவியையும் கனவு கண்டால் எப்படி? விடுவார்களா? அலுவலகத்தின் மாடியில் இவரது அறைக்கு அருகில் செயற்கை அருவியை உருவாக்கி விட்டார்கள்.

அவர் ரவி ஜெய்ப்பூர்யா. இந்தியாவின் வடக்கு மற்றும் வட கிழக்கிலுள்ள அனைத்து பெப்சி கோ பேக்டரிகளும் இவரின் கையில்தான் உள்ளது. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் பெப்சி நிறுவன குளிர்பானங்களில் மூன்றில் ஒரு பகுதி ரவி ஜெய்ப்பூர்யாவின் வருண் பெவரேஜிலிருந்துதான் வருகிறது. வருண் ரவியின் மகன். வருண் பெவரேஜிசை கவனித்து வருபவர்.

பாரம்பரிய தொழில் குடும்பம். ஜவுளி தொழிலில் பிரபலமானவர்கள். பேங்க் ஆப் ராஜஸ்தானை உருவாக்கியவர்களில் இவரது தந்தை சன்னி லால் ஜெய்ப்பூர்யாவும் ஒருவர். 1960 ல் பெப்சி இந்தியாவிற்குள் வந்த போதே அதனுடன் கூட்டாக வியாபாரத்தில் ஈடுபட்டார். 1977 ல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் பெப்சி இந்தியாவை விட்டு வெளியேறியது. அதை அடுத்து தாங்கள் செய்துவந்த குளிர்பான தொழிலை அப்படியே தம்ஸ் அப் என்ற இந்திய குளிர்பான தயாரிப்பு நிறுவனமாக மாற்றினார்கள்.

அமெரிக்காவிற்கு பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிக்கப்போன ரவி, படிப்பு முடித்த பிறகு கனடாவில் ஜவுளி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி விட்டார். பதினைந்து வருடங்கள் கனடா வியாபாரத்தில் நிலையான இடம். அங்கேயே இருந்திருக்க வேண்டியவர் இந்தியாவிற்கு வந்ததற்கு முக்கியமான காரணம் ரவியின் மனைவி விமான விபத்தில் காலமானது.

சொத்து பங்கீட்டில் மூன்று சகோதரர்களில் ரவியின் கைக்கு வந்தது குளிர்பான நிறுவனம்.1991 ல் பெப்சி மீண்டும் இந்தியாவிற்கு வந்த போது மீண்டும் பெப்சியுடன் கைகோர்த்துக் கொண்டார். ஆனால் 2006 ல் குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக பிரச்னை வந்தபோது வியாபாரம் தடுமாறிப் போனது. ஏறக்குறைய 30 சதவீத வியாபாரம் குறைந்து விட்டது. தன்னுடைய வியாபாரக் காலத்தில் மிகவும் கடினமான காலமாக ரவி அதைத்தான் குறிப்பிடுகிறார்.

இந்த சமயத்தில் வியாபாரத்தை விரிவாக்க ஆப்பிரிக்க நாடுகள் சரியான இடம் என்று கணித்த ரவி,எண்ணத்தை செயலாக்க முனைந்தார். 2003 ல் தன்னுடைய வியாபார நண்பருடன் அங்கோலா சென்ற ரவி ஜெய்ப்பூர்யாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய நண்பர் ஹோட்டல் அறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்திய தூதரக அலுவல அதிகாரி ஒருவர் ரவி ஜெய்ப்பூர்யாவை பாதுகாப்பாக மறைத்து வைத்து இந்தியா அனுப்பி வைத்தார்.

 சனி, ஞாயிறுகளில் வெளியே ஹோட்டல்களுக்கு சாப்பிடப் போனால் தெரியும்... இரண்டு நாட்களுக்கு யாரும் வீட்டில் சமைப்பதே இல்லையா என்ற சந்தேகம் தோன்றும். ஆனால் 2000- லேயே இதை சரியாக மோப்பம் பிடித்துவிட்டார் ரவி. பீட்சா ஹட் மற்றும் கேஎப்சி நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் உரிமை பெற்று உணவகங்களைத் தொடங்கி விட்டார். இத்தனைக்கும் தீவிர சைவப் பிரியரான ரவியின் அப்பா இதனை கடுமையாக எதிர்த்தார். ஆனால் ரவி கவலைப்படவில்லை. இந்தியாவின் தொழில் எதிர்காலம் அவருக்கு தெரிந்திருந்தது. இந்த தொடர் துரித உணவு நிறுவனங்கள் ரவியின் மகளான தேவயானியின் பெயரிலேயே இயங்குகிறது.

‘வாங்கோ’ என்ற பெயரில் தென் இந்தியாவில் ஹோட்டல்களைப் பார்த்தால் நம்ம சென்னைக்காரர்கள் தொடங்கியிருப்பார்கள் என்று நினைத்து விட வேண்டாம். இதுவும் தற்போது ரவி ஜெய்ப்பூர்யா தொடங்கியிருக்கும் தொடர் உணவு நிறுவனம். முதலில் 50 ஹோட்டல்களை தொடங்கி இருக்கிறார்கள். இது இன்னும் விரிவடையும்.

1988-89 ல் கிரீம் பெல் என்ற ஐஸ்கிரீம் நிறுவனத்தை வாங்கினார். 1996 ல் பெப்சி கோவின் பீட்சா ஹட்டையும்,கேஎப்சியையும் வாங்கினார். 2001 ல் டெல்லி பப்ளிக் பள்ளியின் சில கிளைகள். 2002-03 ல் குரூப் ஹவுசிங் என்ற ரியல் எஸ்டேட் கம்பெனி.

2005 ல் கோஸ்டா காபி நிறுவனம். இது அத்தனையும் ரவி ஜெப்பூரியாவின் வியாபார வளர்ச்சியின் சில துளிகள். மிக விரைவில் பால் பொருட்களிலான பொருட்களின் விற்பனையை துவங்க இருக்கிறார்.

ஏறக்குறைய  இருபதாயிரம் கோடி அளவு வர்த்தகத்தை எட்ட இருக்கும் இந்த நிறுவனங்களின் தலைவர் கையில் வைத்திருப்பது ஒரு சாதாரண செல்போன். அதில் மெயில், பேஸ்புக், வாட்ஸ் அப் என்று எதுவும் கிடையாது. அதி நவீன தகவல் தொடர்புகள் எதையும் பயன்படுத்துவதில்லை. அவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தினமும் வியாபார நிலவரம் பேக்ஸில் வரும். அதில் எதாவது பிரச்னை என்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட துறையில் அழைத்து பேசுவார்.

போர்ப்ஸ் வெளியிடும் உலக பணக்காரர் பட்டியலில் 50 வது இடத்திலிருக்கிறார் ரவி ஜெய்ப்பூர்யா.

பணமொழி : வெற்றி பெற வேண்டுமானால் வெற்றியை குறிக்கோளாகக் கொள்ளாதே. செய்யும் வேலையை மனப்பூர்வமாகவும் நம்பிக்கையுடனும் செய். வெற்றி தன்னால் வரும்.

- டேவிட் ப்ரோஸ்ட்

ஜூன், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com