நான் நேரத்தை நோக்கி ஓடுவதில்லை. நேரத்தை என்னை நோக்கி ஓடிவரச் செய்கிறேன்”
-எவ்வளவு தன்னம்பிக்கை மிகுந்த வரிகள் பார்த்தீர்களா? இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் டாக்டர் டாடி பல்சாரா.
யார் இவர்?
வட இந்தியாவில் புகழ்பெற்ற ஹிமாலயன் மினரல் வாட்டர் நிறுவனத்தின் உரிமையாளர். ஆசியாவின் வாசனைத் திரவியங்களின் அரசர் என்று தன்னுடைய வாசனை திரவியங்கள் பிராண்ட் விற்பனைக்காகக் கருதப்படுபவர். அமெரிக்காவில் நகைகளும், சுவிட்சர்லாந்தில் கடிகாரங்களும், தைவானில் ஜீன்ஸும் விற்பவர். இவருக்கு 63 நாடுகளில் வர்த்தகம் உள்ளது.
2001-ல் இவரது ஹிமாலயன் மினரல் வாட்டர் கம்பெனியை டாடா நிறுவனத்துக்கு விற்றார்.
இவரது சொத்துமதிப்பு 1.8 பில்லியன் டாலர்கள். அதாவது சுமார் 9000 கோடி ரூபாய். இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர்.
இவர் தன் வாழ்க்கையை வெறும் 600 ரூபாய் மாத சம்பளத்தில் எல்.ஐ.சி ஆபீசராக நாக்பூரில் தொடங்கியவர் என்றால் நம்பமுடிகிறதா?
பின்னர் வேறு சில வேலைகள் செய்துபார்த்துவிட்டு அமெரிக்காவுக்கு மனநலப் படிப்பு படிக்க உதவித் தொகைபெற்றுச் சென்றார். அங்கே டாக்டரேட் படிப்பு முடிந்ததும் மனநல ஆலோசனை க்ளினிக் தொடங்கினார். யாரும் ஆலோசனை பெற வரவே இல்லை.
பின்னர் அவருக்கு தொலைக்காட்சியில் மன நலம் பற்றிப் பேசும் நிகழ்ச்சி ஒன்று நடத்த வாய்ப்பு கிடைத்தது. அது அவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. அதிலிருந்து அவர் திரும்பிப்பார்க்கவே இல்லை. எந்த துறையைத் தொட்டாலும் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டார். வளர்ச்சி அடைந்தார். 1991-ல் இந்தியாவில் இவர் தொடங்கியதுதான் பெரும் வளர்ச்சி பெற்ற மினரல் வாட்டர் நிறுவனமான ஹிமாலயன் மினரல் வாட்டர்.
ஆன்மீகம், ஜோதிடம், கைரேகை, மனநலம், கராத்தே, யோகா என பலவற்றில் இவர் விற்பன்னர்.
டாக்டர் பல்சாரா எதைச் செய்தாலும் அதில் முழுமையாக ஈடுபடுபவர். கராத்தேவில் ப்ளாக் பெல்ட்! தன்னுடைய சொந்த ஜெட் விமானத்தை அவரே ஓட்டுவதும் உண்டாம். பல்சாரா தன் 81 வது வயதில் கடந்த ஜூன் 19, 2014 அன்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். 600 ரூபாயில் இருந்து 63 நாடுகளில் தொழில் தொடங்கி நடத்திய பல்சாராவின் வெற்றிக்கதை பிரமிக்க வைக்கிறது அல்லவா?
உலகின் விலை உயர்ந்த ஷாம்பு
ஒரு ஷாம்பூ என்ன விலை பெறும்? படத்தில் உள்ள ஷாம்பு சுமார் 350 மில்லி 140 டாலர் விலையாம்! இந்த ரஷ்யன் ஆம்பர் இம்பீரியம் ஷாம்பூ சிறந்தவற்றுள் சிறந்தது என்று வோக் பத்திரிகையால் தெரிவு செய்யபட்டுள்ளது. உடைந்த தலை முடிக்கு உயிரூட்டுகிறதாம் இது. இதில் ரோஸ்மேரி, திராட்சை விதை, சீமை சாமந்தி, மூலிகைகள் உள்ளனவாம்!
பணமொழி
இளைஞனாக இருக்கும்போது பணமில்லாமல் இருக்கலாம். ஆனால் பணமில்லாத வயதானவனாக இருக்கக்கூடாது
- டென்னஸி வில்லியம்ஸ்