முதலில் குடும்பத்தைக் கவனியுங்கள்

உலகம் உன்னுடைய
முதலில் குடும்பத்தைக் கவனியுங்கள்
Published on

கலைப்பொருட்கள் விற்கும் கடையான ஹாபி லாபி ஓர் அமெரிக்க நிறுவனம். 500க்கும் மேற்பட்ட கிளைகளை உடையது. இதன் நிறுவனர் டேவிட் க்ரீன் இன்றைக்கு மிகப்பெரிய கோடீஸ்வரர். ஆனால் அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து முன்னேறியவர். அவரது தந்தை ஒரு கிறிஸ்துவ பிரச்சாரகர். ஹாபி லாபியை டேவிட் கிரீன் 600 டாலர் கடன் வாங்கித்தான் ஆரம்பித்து இன்று மிகப்பெரிய நிலையை எட்டியுள்ளார். 71 வயதான அவரது கதையை அவர் சொல்லக் கேட்போம்.

“ நான் சரியாகப் படிக்கவில்லை. பள்ளிப்படிப்போடு படிப்பை விட்டுவிட்டு ஒரு சில்லறை விற்பனைக் கடையில் வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக அக்கடையில் உதவி நிர்வாகியாக உயர்ந்தேன். பின்னர் இன்னொரு விற்பனை நிறுவனத்தில் வேலை பார்த்தேன். சொந்தமாகத் தொழில் தொடங்கும் ஆசையால் 1970-ல் ஒரு கடையை ஆரம்பித்தேன். வீட்டு கேரேஜில் மினியேச்சர் ப்ரேம்கள் செய்து கடையில் விற்றோம். எனக்கு சில்லறை விற்பனைத் தொழில்தான் பிடித்திருந்தது. இந்த கடையில் விற்பனையில் கிடைத்த வருமானத்தை வைத்து கடையைப் பெரிதாக்கினேன். என் மனைவி இதில் ஐந்து ஆண்டுகள் சம்பளம் எடுத்துக் கொள்ளாமல் வேலை செய்தார். இப்படித்தான் வளர்ந்து பல இடங்களில் கடை ஆரம்பிதேன். 1980களில் வியாபாரம் பெருகும் என்று நினைத்து அகலக்கால் வைத்ததில் பெரும் நஷ்டம். கடன்கொடுத்தவர்கள் நெருக்கினார்கள். எங்கள் பொருட்களை ட்ரான்ஸ்போர்ட் கம்பெனிகள் ஏற்றிசெல்ல மறுத்தன. எல்லோரிடமும் கடன் வைத்திருந்தோம். ஒருவழியாக கடவுள் அருளால் மீண்டோம். அப்போது கடனில் இருந்து மீள்வது எப்படி என்று நான் கற்றுக்கொண்டேன். இப்போது எங்கள் நிறுவனத்துக்கு ஒரு பைசாகூட கடன் இல்லை. கடன் வைப்பது எங்கள் பாலிசி இல்லை.

வெற்றி என்றால் என்று என்னை பலர் கேட்பார்கள். எனது பதில். வெற்றி என்பது லாபம் பெறுவது. நம்மைச் சேர்ந்தவர்களுக்கு பலன் அளிப்பது. எங்கள் கம்பெனியில் ஒருமணி நேரத்துக்கு 13 டாலர் குறைந்த பட்ச ஊதியம் அளிக்கிறோம். பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல வெற்றி. அந்த பணத்தை வைத்து என்ன செய்கிறோம் என்பதுமே. இன்று நீங்கள் செய்வது 500 ஆண்டுகளுக்குப் பிறகும் முக்கியமானதாக இருக்கவேண்டும். இல்லையெனில் நீங்கள் செய்வது எதுவும் மகத்தான ஒன்றல்ல. எங்கள் நிறுவனத்தில் வரும் லாபத்தில் பாதியை பல்வேறு அரசுத் துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கிவிடுகிறேன். இந்த நிறுவனம் என் குடும்பத்தினர் பெயரில் உள்ளது. ஆனால் எங்களுக்கு நாங்கள் பார்க்கும் வேலைக்கு மட்டுமே சம்பளம் எடுத்துக் கொள்கிறோம். எங்களுக்குப் பின்னால் வரும் வாரிசுகளும் அப்படியே செய்யமுடியும். நிறுவனத்தை எங்கும் விற்றுவிட முடியாது. நான் என் ஊழியர்களுக்குச் சொல்வதெல்லாம் முதலில் குடும்பத்தைக் கவனியுங்கள். பின்னர் இறைவனுக்கு ஊழியம் செய்யுங்கள்.மூன்றாவதாக தொழிலைக் கவனியுங்கள் என்பதே.”

ஹாபி லாபி இறைவனுக்கு உரியது என்று இவர் தன் அலுவலகத்தில் எழுதி வைத்துள்ளார். பல்வேறு கிறிஸ்துவ மத நிறுவனங்களுக்கு தாராளமாக நிதி உதவி அளிக்கிறார் இந்த வித்தியாசமான கோடீஸ்வரர்!.

பணமோழி

தன் கடந்த காலத்தை திரும்ப வாங்கும் அளவுக்கு யாரும் பணக்காரர் இல்லை

-ஆஸ்கர் வைல்டு

விலை உயர்ந்த தேநீர்!

ஹாங்காங்கில் உள்ள ரிட்ஸ் கார்ட்ல்டன் ஹோட்டலில் கடந்த புத்தாண்டுக்கு ஒரு தேநீர் விருந்தை அறிவித்தார்கள்.  தேநீர் அருந்த கட்டணம் 84,180 ரூபாய்! இந்த ஓட்டல் உலகின் மிக உயரத்தில் இருப்பது என்று தன்னைச் சொல்லிக்கொள்கிறது. கிராஃப் டைமண்ட்ஸ் என்ற வைர நிறுவனத்துடன் இணைந்து இந்த தேநீர் விருந்தை அறிவித்தார்கள். விருந்தில் தேநீருடன் அருமையான விலை உயர்ந்த உணவு வகைகள் பரிமாறப்படும். அடிக்க சரக்கும் உண்டு. விசேஷம் என்னவென்றால் தேநீர் அளிக்க கொண்டுவரும் பெட்டியில் கிராப் நிறுவனத்தின் வைர நகைகளும் கடிகாரங்களும் இருக்கும். ப்ளாட்டினத்தால் இணைக்கப்பட்டவை அவை. விருந்தினர்கள் அவற்றை பொறுமையாகப் போட்டுப் பார்த்து மகிழ்ந்துகொள்ளலாம்! வூட்டுக்கு  சுட்டுக்கொண்டு போகமுடியாது!

மார்ச், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com