ராஜேஷ் மேத்தா உலகின் மிகப்பெரிய தங்க ஆபரணங்கள் செய்யும் நிறுவனத்தின் அதிபர் என்றால் நம்புவது சிரமமாகத்தான் இருக்கும். அவரது பாணி அப்படி. சாதாரண காரில் பயணம். சாதாரண நோக்கியா பட்டன் போன் என்று மிகவும் அடக்கி வாசிக்கும் இவர் இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களில் ஒருவர் என்று போர்ப்ஸ் பத்திரிகை தேர்ந்தெடுத்துள்ளது. சுமார் 6000 கோடிக்கு சொத்து வைத்திருக்கிறார்.
சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இவர் முன்னுக்கு வந்த கதையைக் கேட்டால் எல்லாருக்கும் உத்வேகம் பிறக்கும். இவரது அப்பா குஜராத்தில் இருந்து பெங்களூரு வந்து தங்க நகைகளுக்கான உபபொருட்களை விற்கும் தொழிலில் இருந்தார். ராஜேஷ் கல்லூரியில் படிக்கும்போதிலிருந்தே அப்பாவின் தொழிலில் ஆர்வம் காட்டினார். 1982-ல் தன்னுடைய சகோதரரிடம் 2000 ரூபாய், ஒரு வங்கியில் 8000 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு தன் முதல் வணிக முயற்சியைத் தொடக்கினார். பெங்களூரில் இருந்து சென்னைக்கு வருவார்.இங்கே வெள்ளிப் பொருட்களை வாங்கிக்கொண்டு குஜராத் போவார். அங்கே அவற்றை விற்றுவிட்டு தங்க நகைகளை வாங்கிவந்து பெங்களூரில் விற்பார். ஒருமுறை பயணம் சென்று வந்தால் 3000 ரூபாய் மிச்சமாகும். அப்போது அது பெரிய லாபம்.
இப்படி நகைகளை வாங்க ஒவ்வொரு இடமாக ஏன் போகவேண்டும்? ஏன் ஒரே இடத்தில் எல்லாவற்றையும் செய்யக்கூடாது என்று ராஜேஷுக்குத் தோன்றியது. ஆனால் அப்போதைய தங்கக் கட்டுப்பாட்டு சட்டம் அப்படி. ஒரு அளவுக்குமேல் ஓரிடத்தில் செய்யமுடியாது. ஆனால் அதைப் படித்தபோது ஏற்றுமதிக்கு அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதை ராஜேஷ் உணர்ந்தார்.
உடனே லண்டன் பயணம் ஆனார். அங்கே தெரிந்தவர் வீடுகளில் தங்கிக்கொண்டு தங்க நகை விற்கும் கடைகளில் நல்ல டிசைன்களை குறித்த நேரத்தில் அனுப்புவதாக ஆர்டர் பிடித்தார். முதலில் பலரும் ஆர்டர் தரத் தயங்கினார்கள். சிலர் கொடுத்தார்கள். இந்த ஆர்டர்களை வைத்துகொண்டு பெங்களூரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். இப்படி ஆரம்பித்து உலகின் மிகப்பெரிய தங்கநகை ஏற்றுமதியாளர் ஆகிவிட்டார். 1995-ல் பங்குகள் வெளியிட்டு திரட்டிய பணத்தில் நகைதயாரிப்பு ஆலைகளையும் விரிவுபடுத்தி பெரிதாக்கினார். உலக அளவில் தங்க நகைக்கான சந்தை விரிவடைந்ததும் உதவி செய்தது. சமீபத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வால்காம்பி நகை நிறுவனத்தையும் வாங்கியிருக்கிறார்.
நூற்றுகணக்கான டன்கள் கணக்கில் தங்க நகைகளை இவரது தொழிற்சாலைகள் உருவாக்குகின்றன. உலக அளவில் தங்கநகை செய்யும்போது சேதாரம் என்பதன் சராசரி மூன்று சதவீதம் ஆகும். ஆனால் இவரது தொழிற்சாலைகளில் சேதாரம் 0.25 சதவீதம். எனவே விலை குறைவாக விற்கமுடிகிறது.
வெறும் ஏற்றுமதியாளராகவே இருந்துவிட ராஜேஷ் விரும்பவில்லை. உள்நாட்டு சந்தையும் மிகவும் பெரிது. எனவே அதிலும் இப்போது கால் பதிக்க விரும்புகிறார். ஜாய் ஆலுக்காஸ் போன்ற நிறுவனங்கள் மிகப்பெரிய கடைகளைக் கட்டுகின்றன. ஆனால் அதற்கு நேர்மாறாக சின்னச்சின்ன கடைகளைக் கொண்ட சங்கிலி அமைப்பை உருவாக்க ராஜேஷ்மேத்தா செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
‘பெரிய திறமைவாய்ந்த ஆட்களை வேலைக்கு எடுப்பது என்பது அல்ல என்னுடைய பாணி. வேலையை சிறப்பாக திட்டமிட்டுச் செய்வது என்பதே என்னுடைய வழிமுறை. இயற்கையைப் பாருங்கள். ஒரு மரம் விழுந்தால் அதனுடன் ஒரு மலையும் விழுவதில்லை. நம் உடலில் ஒரு விரல் வெட்டுப்பட்டால் கண் பார்ப்பதை நிறுத்திவிடுவதில்லை. இதுபோன்ற ஒரு நிர்வாக அமைப்பையே நான் உருவாக்குகிறேன். எனக்கு ஐஐஎம் எம்பிஏ போன்ற பெரிய தகுதி படைத்தவர்கள் தேவை இல்லை” என்கிறார் அவர்.
இப்போது ராஜேஷ் மேத்தாவின் மகன் சித்தார்த்தும் தந்தையுடன் தொழிலைக் கவனித்துக்கொள்கிறார். அவருக்கு 24 வயது ஆகிறது. இதற்குள் ஆறாண்டு அனுபவம் பெற்று உள்ளார். அப்பாவைப்போல் இவர் பட்டன் போன் தான் பயன்படுத்துவேன் என்று பிடிவாதம் பிடிப்பதில்லை. ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்!
***
பணமொழி:
மன உறுதியுடன் வேட்கையும் இணைந்தால் கூர்மையான கவனம் உருவாகும்!
- அர்னால்ட் பால்மர்
அக்டோபர், 2016.