புத்துணர்ச்சியை தயாரித்து விற்பவர்

உலகம் உன்னுடையது
Published on

வாரக்கடைசி இரவில் ஏதோவொரு விருந்துக்குப்போய்விட்டு அங்கே அடித்த சரக்கு காலையில் எழுந்திருக்கும்போது தலை வலிக்கும். இது குடிப்பழக்கம் இருப்பவர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பிரச்னை. இதை சரிசெய்ய மார்னிங் ப்ரெஷ் என்றொரு திரவத்தை உருவாக்கி பரபரப்பாக விற்பனை செய்துகொண்டிருக்கிறார் மிதாலி டாண்டன் என்கிற 24 வயது பெண். இவரது அப்பா பரத் டாண்டன் பிரபல தொழிலதிபர்.

மிதாலியிடம் தொழில் தொடங்க முன்வந்தது பற்றியும் மார்னிங் ப்ரெஷ் பற்றியும் அந்திமழைக்காகப் பேசினோம்.

‘’என் தாய் தந்தை  இருவருமே தொழில்துறையில் வெற்றிபெற்றவர்கள். பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கையில் எனக்கு சுதந்தரமாகச் செயல்படவாய்ப்பு கிடைத்தது. பள்ளி மாணவியாக இருந்தபோதே சர்வதேச இளம் தொழிலதிபர்கள் என்கிற தொழில்துறை யோசனைகளை உருவாக்கும் குழுவில் சேர்ந்தது எனக்கு உதவியாக இருந்தது. அதிலிருந்து நாம் உருவாக்கும் யோசனைகள் செயல்வடிவம் பெறுவதைக் காண்பதில் கிடைக்கும் இன்பம் எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது.

சமூகத்துக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கும் முயற்சிகளில் ஈடுபட விரும்பினேன். திஹார் சிறையில் ஒரு கல்வித்திட்டம் தொடங்க பங்களித்தேன். பொருட்களை மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவரும் திட்டம் போன்ற ஏழைகளுக்கு உதவும் செயல்பாடுகளிலும் ஈடுபட்டேன்.  லண்டனில் படிப்பு முடிந்ததும் கர்நாடகா திரும்பி இந்த மார்னிங் ப்ரெஷ் விற்கும் நிறுவனத்தை தந்தையின் உதவியுடன் தொடங்கினேன். தந்தையின் தொழில் அனுபவம் எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.” என்றவரிடம்  மார்னிங் ப்ரெஷ் உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் எவ்வளவு பேரை சந்தித்துள்ளீர்கள் என்றோம்.

“களத்தில் நேரடியாக இறங்கி அறிந்துகொள்வதே நம்முடைய பொருள் எப்படியான வரவேற்பைப் பெறுகிறது என்றி அறிந்துகொள்வதற்கான சிறந்தவழி. விற்பனைப் பிரதிநிதியாக வாடிக்கையாளர்களிடம் நேரடியாகப் பேசுவதை தனிப்பட்ட முறையில் நான் ரசிக்கிறேன். நிறைய பேர் எமக்கு எழுதுகிறார்கள். பல நம்பிக்கையான வாடிக்கையாளர்கள் பட்டியலை உருவாக்க இது உதவிகரமாக உள்ளது.  முதன்முதலாக இந்தப் பொருளை ஒரு மதுபானக் கடையில் விற்பனைக்கு வைத்துவிட்டு நானே சென்று அங்குவரும் வாடிக்கையாளர்களிடம் இது பற்றி விளக்கி விற்பனை செய்தேன். அங்கு வேலை செய்த எல்லோருமே ஆண்கள். உணவு மற்றும் பானங்கள் துறையில் பெண் தொழிலதிபராக இருப்பது எளிதல்ல.  இப்படி சில நாட்கள் வேலை பார்த்தபின்னர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெருகியது. அதன் பின்னரே என்னை ஒரு தொழில் முனைவோராக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.

சந்தையில் இதுபோல் மேலும் சிலமூலிகைப்பொருட்கள் உள்ளன. ஆனால் மார்னிங் ப்ரஷ் வேறுமாதிரி செயல்படுகிறது. இந்தியாவில் மது அருந்தியபின்னர் கடைசியாக அருந்தக்கூடிய பானமாக அறிமுகப்படுத்தப் பட்டிருப்பது  இதுமட்டுமே. உடலில் மதுவை இயற்கையான வழியில் அகற்ற உதவுகிறது இது. இரவில் மது விருந்துக்குப் பின் இதை அருந்திவிட்டுப் படுத்தால் காலையில் உற்சாகமாக எழமுடியும்.

இதில் வைட்டமின் சி, பட்டுப்புரதம், மல்பரி இலைச்சாறு ஆகியவை உள்ளன. கொழுப்பு, கார்போஹைட்ரேட்கள் இல்லை. மதுவை அபாயமற்ற பொருளாக செரிக்க உதவும் கல்லீரலில் உற்பத்தியாகும் என்சைம் ஒன்றை சுரக்கச் செய்ய இதிலிருக்கும் பட்டுப்புரதம் உதவுகிறது. இதன்மூலம் இயற்கையான முறையில் மது உடலில் இருந்து வெளியேற்றம் அடைகிறது. இது எங்கள் ஆய்வகத்தில்  உருவான பொருள். இதற்கு காப்புரிமையும் கோரி இருக்கிறோம்.

60 மிலி சின்ன பாட்டிலில் திரவ வடிவில் இது இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று அருந்தலாம் என்பது கூடுதல் வசதி.

“குடிப்பது தவறென்று இன்னமும் கருதுகின்ற நம் சமூகத்தில் இந்தபொருளை அறிமுகப்படுத்துவதில் பிரச்னை உண்டா?”

“நாங்கள் உடல் நலத்தைப் பேணவிரும்புகிற இளம் பணியாளர்களை நோக்கி இந்த பொருளை கொண்டுவந்துள்ளோம். மது அருந்துவது நகர்ப்புறத்தில் கலாச்சாரமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு இயற்கையான வழியில் ஒரு தீர்வாக இந்தப் பொருள் இருக்கும். எலுமிச்சை சாறு போன்ற ஏற்கெனவே இருக்கும் பாரம்பரிய ஹேங் ஓவர் தீர்க்கும் வழிமுறைகளை விட மார்னிங் ப்ரெஷ் சிறந்தது” என்கிறார்.

மிதாலி தந்தையிடமிருந்து தொழில்துறைக்கு ஊக்கத்தைப் பெற்றிருந்தாலும் பொதுவாக பெண் தொழிலதிபர்களின் பண்புகள்தான் தன்னை வியக்க வைப்பதாகத் தெரிவிக்கிறார். “ பல பெண் தொழிலதிபர்களைப் பார்க்கிறேன். தனிப்பட்ட, குடும்ப, தொழில் உறவுகளைப் பேணுவதை மிகச்சிறப்பாக செய்கிறார்கள். அவர்களின் இந்த திறமை வியக்க வைக்கிறது”

எதிர்காலத் திட்டம் பற்றிக் கேட்டோம்.

“இப்போதைக்கு பொறுப்புடன் மது அருந்துவது என்றாலே அதை மார்னிங் ப்ரெஷ்ஷுடன் சேர்த்துப் பார்ப்பது என்ற நிலைக்கு இந்தப் பொருளை உயர்த்துவதுதான்”என்கிறார் மிதாலி மிகவும் பொறுப்பாக.

ஆகஸ்ட், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com