நல்லா படிக்கிற பையன்கள் மோசமா மார்க் வாங்கற பயங்கிட்ட வேலை பார்ப்பாங்க..

நல்லா படிக்கிற பையன்கள் மோசமா மார்க் வாங்கற பயங்கிட்ட வேலை பார்ப்பாங்க..

உலகம் உன்னுடையது
Published on

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம். இங்கிருக்கும் எக்சல் என்ற தொலைதொடர்பு நிறுவனத்தை 1998-ல் டெலிகுளோப் என்ற நிறுவனம் 3.8 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. எக்சல் நிறுவனத்தில் உரிமையாளர் கென்னி ஏ ட்ரவுட் ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆனார்!

கென்னியின் கதை மிக சுவாரசியமானது. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது சகமாணவர்கள் மருத்துவர் ஆகவேண்டும்; பொறியாளர் ஆகவேண்டும் என்று சொன்னபோது நான் பணக்காரன் ஆகவேண்டும் என்று சொன்னவர். அவரது இளமைக்கால கனவை அவர் நிறைவேற்றி விட்டார்.

கென்னியின் அப்பா குடிகாரர். கென்னி ஒரு பைசாவுக்குக்கூட தேறமாட்டான் என்று திட்டுவார். அவரை விவாகரத்து செய்துவிட்டு கென்னியுடன் சேர்த்து மூன்று பையன்களுடன் அவரது அம்மா பெரும் கஷ்டத்தை எதிர்கொண்டார்.

கென்னிக்கு சின்ன வயதிலேயே எதையும் விற்று காசு சம்பாதிக்கும் திறன் இருந்தது.

கால்பந்து விளையாடும் திறன் இருந்ததால் அதன்மூலம் உதவித்தொகை பெற்று பல்கலைக் கழகத்தில் படிக்க சேர்ந்தார். ஆனால் பாதியிலேயே ஓடிவந்துவிட்டார். ஆத்திரமடைந்த அவரது அம்மா கென்னியை சட்டையைப் பிடித்து இழுத்து கண்ணாடி முன்னால் நிறுத்தி... என் கஷ்டத்துக்கெல்லாம் காரணம் இதோ கண்ணாடியில் தெரிகிறானே அவன் தான் என்று மூக்கை சிந்தினார். பிறகு வேறு இடத்தில் சேர்ந்து படித்தார். வாங்கியது சி கிரேட்தான்.

மோசமான மார்க் எடுத்தாலும் அவர் சொல்வார்: கொஞ்சமான மார்க் எடுக்கும் பையன்களிடம்தான் பின்னாளில் அதிக மார்க் எடுக்கும் மாணவர்கள் வேலை பார்ப்பார்கள்.

நல்ல சேல்ஸ்மேன் என்பதால் அப்போதே இன்ஸூரன்ஸ் கம்பெனி ஒன்றில் பகுதி நேர வேலை பார்த்து கணிசமாக சம்பாதித்தார். பின்னர் வீடுகளுக்கு தண்ணீர் ஒழுகாமல் செய்துகொடுக்கும் நிறுவனத்தை ஆரம்பித்து நிறைய சம்பாதித்தார்.

பின்னர் ஒரு கட்டுமான நிறுவனம். நிறைய சம்பாதித்த இவருக்கு குதிரைகள் மீது ஆர்வம். எனவே சம்பாதித்ததையும் தாண்டி நிறைய கடன்வாங்கி ஒரு குதிரைப்பண்ணை ஆரம்பித்தார். அதில் பெரும் கடன்காரர் ஆகிவிட்டார். கட்டுமான நிறுவனமும் போனது. முதல் மனைவியும் விலகிவிட்டார்.  அதன்பின்னர் டெக்சாஸ் எண்ணெய்  துரப்பனத் தொழிலில் சேல்ஸ்மேனாக வேலையைத் தொடங்கினார். அப்போது அவரிடம் இருந்தது 148 டாலர்கள் மட்டுமே. அதில் கொஞ்ச ஆண்டுகள் மட்டுமே ஈடுபட முடிந்தது. ஏனெனில் எண்ணெய் வயல்கள் காலியாகிவிட்டன. ஆனால் அதற்குள் 2 லட்சம் டாலர்கள் அவரால் சம்பாதிக்க முடிந்தது.

அவரது அடுத்த ஆட்டம் தொலைதூர தொலைபேசி அழைப்புகளைத் தருவது. அதற்காக எக்ஸல் நிறுவனத்தை ஆரம்பித்தார். அதற்காக எண்ணைத் தொழிலில் இருந்த அறிமுகங்களை அணுகினார். அவர்களும் முதலீடு செய்தனர். கென்னியின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது.

மிகக் குறைந்த ஆட்களையே அவர்  பயன்படுத்தி இந்த தொழிலில் இறங்கினார். பெரும்பாலானோர் பகுதி நேர முகவர்களாக வேலை பார்த்தனர். விளம்பரத்துக்காக செய்யவேண்டிய செலவு குறைந்தது. தொலைபேசிச் சேவை மற்ற கம்பெனிகள் வழியாக நடந்ததால் அதற்கான செலவும் இல்லை.

ஜிவ்வென்று நிறுவனம் வளர்ந்தது. கென்னி கிட்டத்தட்ட ஒரு ராக்ஸ்டார் போல புகழ்பெற்றார். எங்கு சென்றாலும் அவரைக் கூட்டம் மொய்த்தது. ஆட்டோகிராப் போட்டே அவர் விரல்கள் தேய்ந்தன. எக்செலுக்கு மட்டும் நான்கு லட்சம் முகவர்கள் இருந்தனர். எல்லோருக்கும் நல்ல கமிஷன் கிடைத்தது. அனைவரும் கென்னியை தங்கள் ரோல்மாடலாகக் கருத ஆரம்பித்தனர்.

கென்னி இன்று அமெரிக்காவின் வெற்றிகரமான பிசினஸ் ஸ்டார்!

ஒரு ஃபுல்லு வெல ஒரு கோடியே 35 லட்சம்.. மக்கழே

மெக்சிகோ நாட்டில் இருக்கிற ஊரு பேரு டக்கிலா. அங்க செய்ற சரக்குக்கும் பேரு அதான். கத்தாழை மாதிரி நீல வண்ணத்தில் இருக்கும் ஒரு செடியிலிருந்து செய்றாங்க. அதுல ஒரு பாட்டில் டக்கிலாவை ஒரு கோடியே 35 லட்சரூவாய்க்கு ஒரு குடிமவன் வாங்கியிருக்காராம்! அப்புடி அதில என்னதான் இருக்காம்? விஷம்... சாரி விசயம் சரக்குல இல்லையாம். பாட்டில்ல இருக்காம். பாட்டிலில் ஒரு பாதி ப்ளாட்டினத்தாலயும் இன்னொரு பாதி சுத்த தங்கத்தாலயும் செஞ்சுருக்கானுவலாம்... தக்காளி! இதைச் செஞ்ச சரக்குக் கம்பெனிக்காரய்ங்க அடுத்ததா இன்னொரு பாட்டில ப்ளாட்டினம், தங்கம் வைரம் எல்லாம் கலந்து செய்யப்போறாய்ங்களாம்! அதை ஏலத்துல விடுவாய்ங்களாம்! மக்கழே... இந்த பாட்டில வாங்கிட்டுப்போனவங்களுக்கு அதுல இருக்கிற சரக்க குடிச்ச எதானாச்சும் கிக் ஏறும்கிறீங்க... சும்மா வெச்சி பாத்துகினே, மட்டையாயிடுவானுவோ.. சரியா?

பணமொழி

நாள் என்பது நமது வங்கிக்கணக்கு. நேரம் என்பது நமது பணம். யாரும் பணக்காரர் இல்லை; ஏழையும் இல்லை. எல்லோருக்கும் 24 மணி நேரம்தான்

- கிறிஸ்டோபர் ரைஸ்.

ஆகஸ்ட், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com