திருட்டு மாங்காய்

திருட்டு மாங்காய்
Published on

அப்பா ரமேஷ் டெண்டுல்கர் ஒரு பேராசிரியர், கவிஞர். அம்மா எல்.ஐ. சி. யில்  வேலைபார்த்தார். நான்கு குழந்தைகள். கடைசிக் குழந்தை படுமோசமான சுட்டிக் குழந்தை. எப்போது பார்த்தாலும் ஓடி ஆடிக்கொண்டே இருக்கும்.

விடுமுறை நாளில் வீட்டை விட்டு வெளியே வந்தால் மாலைவரைக்கும் வெயிலில் நண்பர்களுடன் விளையாடுவான். கொஞ்சம் வயது ஆனதும் சைக்கிள் வாங்கவேண்டும் என்று ஆசை. அப்பாவிடம் கேட்டால் அவருக்கு கொஞ்ச பொருளாதாரப் பிரச்னை.

மும்பையில் நான்கு குழந்தைகளை வளர்ப்பது சற்று கடினமே. கொஞ்ச நாள் ஆகட்டும் என்றார். பையனோ பிடிவாதமாக இருந்தான். ஒருவாரம் வீட்டை விட்டு வெளியே விளையாடப் போகவில்லை. பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்தவன், ஒருமுறை தலையை சற்று வெளியே நீட்டினான். திரும்பவும் தலையை உள்ளே இழுக்க முடியவில்லை. அரைமணிநேரம் போராட்டம். நன்றாக எண்ணெயைத் தடவி, குடும்பமே கூடி அவனை மீட்டது. அப்பா ஆடிப்போனார். உடனே எப்படியோ பணம் திரட்டி சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். அதன் பின்னர்தான் அவன் வெளியே விளையாடப் போனான். முதல்நாளே ஒரு காய்கறி வண்டியில் சைக்கிளை மோதி கண்ணுக்குக் கீழ் கம்பி குத்திவிட்டது.

கோடை விடுமுறையில் ஒருநாள் மாலை குடியிருப்பில் அனைவரும் அவரவர் வீட்டில் தொலைக்காட்சியில்  தேவ் ஆனந்த் நடித்த கைடு படம் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தப் பையனும் இன்னும் இரண்டு நண்பர்களும் நைசாக நழுவி திருட்டு மாங்காய் பறிக்க மாமரம் ஒன்றில் ஏறினர். அதில் ஒரு பையன் குண்டு. அவனும் இந்தப் பையனும் ஒரே கிளையில் ஏற மரம் முறிந்துவிட்டது. தொப்பென இருவரும் கீழே விழுந்தனர். தப்பி ஓடமுயன்று பிடிபட்டனர். இந்தப் பையனை என்ன செய்வது என்று குடும்பம் யோசித்தது.

அப்போது மும்பையில் புகழ்பெற்ற கிரிக்கெட் பயிற்சியாளரான ராம்காந்த் அச்ரேக்கரின் கிரிக்கெட் கோடை முகாமில் சேர்த்தால் அவனுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அவனது சக்தி பயனுள்ள வகையில் செலவிடப்படும் என்றார் அஜித். பதினோரு வயதில் கிரிக்கெட் விளையாட்டுக்குள் சச்சின் டெண்டுல்கர் நுழைந்தது இப்படித்தான் நிகழ்ந்தது.

அச்ரேக்கரின் முகாமில் யார் வேண்டுமானாலும் இடம்பிடிக்க விரும்பலாம். ஆனால் அவர் வருகிறவர்களை வலைக்குள் நின்று மட்டை பிடிக்கச் சொல்வார். அவர் பார்வையில் தேறினால்தான் முகாமில் சேர்த்துக்கொள்வார். இந்த பரிசோதனையில் சச்சின் முதல்முறை தோற்றார். ஏனெனில் வலைக்குள் நின்று அவர் மட்டை பிடித்தது இல்லை. அத்துடன் அச்ரேக்கரைப் பார்த்து அச்சமும் நடுக்கமும் தடுமாற வைத்தது. இன்னும் கொஞ்சம் வயசு ஆனதும் கூட்டிவாருங்கள் என்று சொல்லிவிட்டார் அச்ரேக்கர். ஆனால் அஜித் விடவில்லை. நன்றாக மட்டை பிடிப்பான். நீங்கள் அவன் கண்ணில் படாமல் சற்று விலகியிருந்து அவன் விளையாடுவதைப் பாருங்கள் என்று வேண்டிக் கொள்ள இன்னொரு வாய்ப்பு தரப்பட்டது. அச்ரேக்கர் விலகிச் சென்று கவனித்தார். சச்சின் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

அப்போது சச்சினிடம் இருந்தது ஒரேயொரு கிரிக்கெட் ஆடைதான். காலையில் அவர் வீட்டில் இருந்து முகாம் நடந்த சிவாஜி பூங்காவுக்கு வர 40 நிமிடங்கள் பேருந்து பயணம். காலை 7.30லிருந்து 10.30 வரை பயிற்சி. பின் வீட்டுக்கு வந்துசேர்ந்து ஆடையைக் கழற்றித் துவைத்து காயவைப்பார். மதியம் சாப்பிடுவதற்குள் அது காய்ந்துவிடும். அதைப் போட்டுக்கொண்டு சிவாஜி பூங்கா சென்று இருட்டும் வரை பயிற்சி. இரவு வீட்டுக்கு வந்ததும் மீண்டும் ஆடையைத் துவைத்து காய வைத்து காலையில் போட்டுக்கொள்வார். அந்த பயிற்சி முகாம் முழுக்க இதேதான். ஒரே பிரச்னை, துவைத்துக் காயப்போடும்போது பாண்ட் பாக்கெட் காயாது. ஈர பாக்கெட்டுடன்தான் அத்தனை நாட்களும் விளையாடினார்!

கோடை முகாம் முடிந்ததும் சச்சின் அச்ரேக்கர் பயிற்சியாளராக இருந்த சாரதா வித்யாஸ்ரம் பள்ளியில் சேர்ந்தார். அச்ரேக்கரின் கிளப் சார்பாக நடந்த முதல் போட்டியில் சச்சின் டக் அவுட். அடுத்த போட்டியிலும் டக் அவுட். மூன்றாவது போட்டியில்தான் ரன் எடுத்தார். 12வயதில் புனேவில் நடந்த 15 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் மும்பை அணியில் ஆடச் சென்றார். கையில் 95 ரூபாய் இருந்தது. ஆடிய ஒரே போட்டியில் மூன்றாவது ரன் எடுக்க சக ஆட்டக்காரர் வற்புறுத்தியதில் ஓடி ரன் அவுட் ஆகினார். கண்ணீருடன் பெவிலியன் திரும்பினார். மழையினால் வேறு எந்த ஆட்டமும் நடக்கவில்லை. இதையடுத்து 15 வயதுக்குக் கீழான மேற்குமண்டல அணியில் சச்சினுக்கு இடம் இல்லை. தாதர் ரயில் நிலையம் திரும்பியபோது வீட்டுக்குப் போவதற்கு பேருந்து பிடிக்க கையில் காசு இல்லை. கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய இரண்டு கனமான பைகளைத் தூக்கிக்கொண்டு நடந்தே போனார். வழியெல்லாம் அழுகை.

இதற்கு அடுத்த ஆண்டு டான்பாஸ்கோ பள்ளிக்கு எதிரான ஆட்டத்தில் தன் முதல் சதத்தை அடித்தார் சச்சின். முதல்நாள் மாலை 94 ரன்களுடன் வீடு திரும்பியவருக்குத் தூக்கமே வரவில்லை. ஒரே படபடப்பு.. பதற்றம். மறுநாள் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளைச் சாத்தி தன் முதல் சதத்தை நிறைவு செய்தார்.

அதன் பின்னர் சச்சின் டெண்டுல்கர் 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடியிருக்கிறார். கிரிக்கெட்டின் கடவுளாக 100 கோடி மக்களால் வழிபடப்பட்டார்.  கிரிக்கெட் வரலாற்றில் அதிகப்படியான ரன்களைக் குவித்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். மிகப்பெரிய பணக்காரரும் ஆனார்.

தன் கிரிக்கெட் வாழ்க்கை முழுக்க பணிவானவராக, முழு அர்ப்பணிப்புடன் வாழ்ந்த ஒரு  மனிதராக சச்சின் இருந்தார். அவரது வெற்றியின் ரகசியம் இதுவே. சமீபத்தில் வெளியாகி இருக்கும் அவரது சுயசரிதையான Playing it my way என்ற நூல் இதைத்தான் சொல்கிறது. சச்சினின் வெற்றி இந்திய நடுத்தர வர்க்கத்தின் வெற்றி என்பதை காலங்காலத்துக்கு வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கும்.

அறிவாளிகள் பணத்தை தலையில் வைத்திருப்பார்கள்.

இதயத்தில் அல்ல!

- _ ஜோனாதன் ஸ்விஃப்ட்

logo
Andhimazhai
www.andhimazhai.com