தடைகளைத் தகர்த்து எறிந்தவர்

உலகம் உன்னுடையது
தடைகளைத் தகர்த்து எறிந்தவர்
Published on

லியர்ஸ் ஷூ ஷைன் என்பது தென் ஆப்ரிக்காவில் உள்ள பிரபலமான ஷூக்களை பாலிஷ் செய்யும் நிறுவனம்.

ஷூக்களை பாலிஷ் போடுவதற்கு ஒரு நிறுவனமா என்று திகைக்க வேண்டாம். வேலைக்காக பறந்து கொண்டிருப்பவர்கள் விமான நிலையங்களில் வந்திறங்கி அடுத்த மீட்டிங்கிற்கு செல்லும் போது காலணிகள் புதிது போல பளபளக்க வேண்டுமல்லவா? தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பெர்க், டர்பன் மற்றும் கேப் டவுன் விமான நிலையங்களில் உள்ள இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் இந்திய மதிப்பில் ஏறக்குறைய ஒன்றரை கோடி ரூபாய். இந்த இடத்தை அடைவதற்கு இந்நிறுவன தலைவர் லியர் மகாயயா சந்தித்த இடர்களும், தடைகளும் சாதரணமானதல்ல.

தென் ஆப்ரிகா ஏர்லைன்ஸ் விமானசேவை மையத்தில் போர்டிங் பாஸ் விநியோகிப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் மகாயயா. ஐந்து வருட வேலைக்குப் பிறகு காரணமின்றி வீட்டிற்கு அனுப்பப்படுகிறார். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றவர் தன்னுடைய மாமாவுடன் குடும்பத் தொழிலான கோழிகளை கொண்டு செல்லும் வாகனங்களை தரும் நிறுவனத்துடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். வியாபாரத்தை விரிவுபடுத்த கொஞ்சம் லோன் எடுத்து வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தலாம் என்ற யோசனையை மகாயயா மாமாவுடன் பகிர்ந்து கொள்ள மீண்டும் சிக்கல் ஆரம்பிக்கிறது. நீ சரிப்பட மாட்டே என்று மாமா இவரை வேலையை விட்டு அனுப்பிவிட்டார்.

வேலையை இழந்த மகயாயா கோழிப்பண்ணை தொடர்புகளைக் கொண்டு முட்டைகளை தென் ஆப்ரிக்காவின் நாடாளுமன்ற உணவகத்திற்கு விநியோகிக்கும் வியாபாரத்தை தொடங்கினார்.

சொற்ப லாபத்தில் வியாபாரத்தை தொடங்கியவர் சரியான நேரத்தில் பண்ணையாளர்களுக்கு பணம் தர முடியாமல் தடுமாறினார். சில நேரத்தில் வண்டிகளுக்கு பெட்ரோல் போட கூட பணமில்லாத நிலை. வேறு வழியில்லாமல் தொழிலை இழுத்து மூட வேண்டியதாகி விட்டது.

பிரச்னைகளில் துவண்டிருந்த சமயத்தில் தொழில் முனைவோருக்கான ஐடியாக்களை வழங்கும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் மகயயா. அதில் அவருடைய ஐடியாக்கள் வெல்ல இரண்டு நாட்களில் இரண்டு லட்ச ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை அடுத்து அவர் வேலை செய்த மரம் நடும் கம்பெனியில் முதலீடு செய்தார். பிரச்னை விடாமல் அவரை துரத்தியது. இந்த முறை ஆறு மாத காலத்தில் மகாயயா முதலீடு செய்த அத்தனை பணத்தையும் இழந்து மீண்டும் சாப்பாட்டிற்கே சிக்கலான நிலைக்கு வந்துவிட்டார்.

அடுத்து வேறு எதாவது செய்தாக வேண்டிய கட்டாயம். ஆரம்ப காலத்தில் ஏர் வேயில் வேலை செய்த போது கொண்டிருந்த தொடர்புகளைக் கொண்டு விமான நிலையத்தில்  ஷூ பாலிஸ் போடும் நிறுவனத்தை தொடங்க அனுமதி கேட்டிருந்தார். 2002 நவம்பரில் விண்ணப்பம் கொடுத்து 2003 செப்டம்பரில் அனுமதி கிடைத்தது. இதற்கிடையில் தன்னுடைய காரை விற்றுவிட்டார். சில சின்ன சின்ன வேலைகளில் சேர்ந்தும் தாக்கு பிடிக்க முடியவில்லை. அனுமதி கிடைத்ததும் பிரிட்ஜை அடமானம் வைத்து கால் வைக்கும் ஸ்டேண்டிற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் குறித்த நேரத்தில் அவர்கள் ஸ்டேண்டை தரவில்லை. சளைக்கவில்லை மகாயயா. தன்னுடைய தொடையின் மேல் கால்களை வைத்து ஷூ பாலிஷ் போட தொடங்கி விட்டார். பெரும்பாலும் காலை ஐந்து மணிக்கு வேலையை தொடங்கி இரவு 9 மணிவரை வேலை செய்வார். வருமானம் வரத் தொடங்கியவுடன் ஒன்று,இரண்டு என தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினார்.

இன்று ஏறக்குறைய 40 தொழிலாளர்களுடன் இயங்கும் இவரின் நிறுவனத்திற்கு தினமும் 700 வாடிக்கையாளர்கள்!

தென்னாபிரிக்கா மட்டுமில்லாமல் ஆப்பிரிக்கா முழுவதும் நிறுவனத்தை விரிவாக்க திட்டமிட்டிருக்கும் மகயாயவின் அடுத்த இலக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் விமான நிலையங்கள்.

தென்னாப்பிரிக்காவில் தொழில் தொடங்க ஒருவருக்கு கடும் மன உறுதியும், தன்னம்பிக்கையும் வேண்டும். யோசித்துக் கொண்டே இருந்தால் கடைசி வரை தொடங்க முடியாது என்கிறார் மகாயயா.

இவரின் மன உறுதியுடன் செயல்பட்டால் உலகில் எந்த மூலையிலும் தொழில் தொடங்கி வெற்றி பெறலாம் என்பது உண்மை!

பணமொழி: வெற்றிகரமான மனிதன் என்பவன் மற்றவர்கள் தன் மீது எறியும் கற்களைக் கொண்டு சிறந்த அடித்தளம் அமைப்பவன்.

- டேவிட் பிரின்க்லே

டிசம்பர், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com