தமிழ்ப் பத்திரிகையிலிருந்தா என்னைப் பேட்டி எடுக்க வந்துள்ளீர்கள்? ஆச்சரியப்படுகிறார் வினித். நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது ரெக்கார்ட்ஸ் குரு அலுவலக அறையில் ஏசியின் குளிரில் வினித் தன் வெற்றியின் கதையைச் சொன்னார்:
இங்கிலாந்தில் மேல் படிப்பை முடித்து சென்னை திரும்பியவுடன் தன்னுடைய குடும்பத் தொழிலான நிதி நிறுவனத்தின் வெவ்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றினார் வினித். அப்போது அவர் எதிர்கொண்ட
சவால் ஏராளமான ஆவணங்களைப் பாதுகாப்பதும் பராமரித்தலுமே.
எல்லா நிறுவனங்களுக்குமே இது சிக்கல்தான். சில சமயம் இதுவே பெரிய வேலையாகி தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போனாலும் போகும். புதுமை விரும்பியாக இருந்த வினித் பாரம்பரிய முறையிலான ஆவணங்களை பாதுகாப்பதில் உள்ள சிக்கல்களை புரிந்துகொண்டு,இதை புதிய தொழில் நுட்பத்துடன் டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாத்தால் என்ன
என்று யோசித்தார். இதை தனக்கு மட்டுமல்ல பிற நிறுவனங்களுக்கும் சரியாக செய்து கொடுக்கலாமே? பொறி தட்டியது அவருக்கு. ரெக்கார்ட்ஸ் குரு என்ற ஒரு புதிய நிறுவனம் சென்னையில் பிறந்தது. பல நிறுவனங்கள் ஆண்டுதோறும் பெருகும் ஆவணங்களைப் பாதுகாப்பதற்கு கிடங்குகளில் சேமிக்கும் முறையை மட்டும் பயன்படுத்தி வந்த நேரத்தில் டிஜிட்டல் மற்றும் கிடங்குமுறையை முதன்முறையாக இணைத்துள்ளார் இவர்.
‘‘யோசனை தோன்றியதும் முதல் வேலையாக ஒரு மென்பொருள் வடிவமைப்பாளரை வேலைக்கு அமர்த்தினேன். இதற்கு முன் மாதிரிகள் எதுவும் கிடையாது. சுமார் மூன்று முறை மொத்த மென்பொருள் வடிவத்தையும் திருத்தி எழுத வேண்டி வந்தது’’
ஒருவழியாக தங்களுடைய நிறுவனத்திற்குத் தேவையான மென்பொருள் சரியாக இயங்கத் தொடங்கியதும், முதலில் தன்னுடைய நண்பர்களுக்கு அவர்களுடைய வியாபாரத்திற்கு பயன்படுத்திப் பார்க்கும்படி இலவசமாக கொடுத்தார். ‘நன்றாக இருக்கிறது’ என்ற வார்த்தைக்குப் பிறகு நம்பிக்கையுடன் களத்தில் இறங்கி இருக்கிறார்.
இப்போது பல நிறுவனங்களின் 30 லட்சம் ஆவணங்களை எலக்ட்ரானிக் வடிவத்திலும்,15 கிலோ எடையுள்ள 2500 பெட்டிகளாகவும் பராமரித்து வருகிறது ரெக்கார்ட்ஸ்குரு நிறுவனம். ‘‘ஆனால் நாங்கள் முதன் முதலில் சந்தித்தது ஏராளமான கேள்விகளையும் அவ நம்பிக்கைகளையும்தான். எங்களுடைய முக்கியமான ஆவணங்களை எப்படி அடுத்தவர் கையில் கொடுப்பது? இது பாதுகாப்பானதுதானா,இதுவரை இப்படி எதுவும் கேள்விப்பட்டது இல்லையே இப்படி ஏராளம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் எல்லா சவால்களையும் முறியடித்து சென்னையில் வெற்றிகரமாக இயங்கி வருகிறோம். அடுத்த உடனடி இலக்கு பெங்களூர் மற்றும் கோவை.மற்றபடி இந்தியாவிலுள்ள அனைத்து முக்கியமான நகரங்களிலும் விரிவுபடுத்தும் எண்ணமும் உண்டு’’.
ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து அதற்கு தனியாக உபயோகிப்பாளர் பெயர்,கடவுச்சொல் கொடுக்கப்படும்.உலகின் எந்த மூலையிலிருந்தும் அவர்கள் இதை தேடிக்கொள்ளலாம். கிடங்கில்
பாதுகாக்கப்படும் ஆவணங்களுக்கு குறியீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. வாடகை முறையில் டிஜிட்டல் ஆவணங்களுக்கு ஒரு ஜிபிக்கு இவ்வளவு
என்றும்,கிடங்கில் பாதுகாக்கப்படும் ஆவணங்களுக்கு 15 கிலோ எடையுள்ள பெட்டி ஒன்றிற்கு மாதம் ஒரு தொகை என்றும் கட்டணம்.‘‘இத்தொழிலில் வானமே எல்லை’’ நம்பிக்கையோடு சொல்கிறார் வினித்.
பட்டியல்
உலக பணக்காரர்களின் பட்டியலை ஆண்டுக்கு ஒரு முறை வெளியிட்டுக்கொண்டிருந்தது பழங்கதையாகிவிட்டது. தற்போது தினமும் மாலை 5.30 மணிக்கு (நியூயார்க்கின் நேரப்படி) ப்ளூம்பெர்க் நிறுவனம் உலகின் பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுகிறது. ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி நிலவரப்படி நமது முகேஷ் அம்பானி 18 வது இடத்திலும் , லெஷ்மி மித்தல் 38 வது இடத்திலும் உள்ளனர். ’ இன்றைய நிலவரத்தைப் பார்க்க http:/topics.bloomberg.com/bloombergbillionairesdindex/ என்ற முகவரிக்குச் செல்லவும். இதைப்போல் நமது இந்திய அரசியல்வாதிகளின் ஏற்ற இறக்கங்களை யாராவது வெளியிட்டால் என்ன?
---
302 முறை நோ
என்றென்றும் நம்மை குஷிப்படுத்திக்கொண்டிருக்கும் மிக்கிமவுஸ் புகழ் வால்ட் டிஸ்னிக்கு கற்பனா சக்தி போதாதென்று அவர் வேலை பார்த்த பத்திரிகையின் ஆசிரியரால் டிஸ்மிஸ்
செய்யப்பட்டார். 1921 வது வருடம் வால்ட் டிஸ்னி ஆரம்பித்த அனிமேஷ௸ன் கம்பெனி, வாடகைகூட கொடுக்க முடியாத சூழலுக்கு ஆளாகி மூடப்பட்டது. உலகின் பிரசித்தி பெற்ற தீம் பார்க்கான ’ டிஸ்னி லேண்ட்’ ஆரம்பிப்பதற்காக நிதிஉதவி கேட்டு பல்வேறு வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் அணுகியபோது வால்ட் டிஸ்னி 302 முறை ’நோ’ வை சந்தித்தார். 303 வது முறைதான் ‘யெஸ்’ஐ சந்தித்தார்.
கடன் கிடைத்தது; டிஸ்னி லேண்ட்டின் வெற்றி சரித்திரமானது.
---
அடுத்தது
அடுத்தது பில்கேட்ஸ் பல நலத்திட்டங்களுக்கு நிதியுதவி செய்கிறார் என்பது தெரியும். அடுத்ததாக அவர் என்ன செய்யப்போகிறார் தெரியுமா? உலகில் மூன்றில் இரண்டு பங்குபேரை அவர் குறிவைத்துள்ளார். ஆம் இவ்வளவு பேருக்கு கழிப்பறை இல்லை. அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் டாய்லெட் ஒன்றைத் தயாரித்து வழங்க இருக்கிறார். இதற்காக குறைந்த செலவில், நீர் தேவைப்படாத மூன்றுவிதமான டாய்லெட்டுகளைக் கண்டுபிடித்த நிறுவனங்களுக்கு சமீபத்தில் அவர் பரிசும் வழங்கியுள்ளார்! இந்த மூன்றில் எது எல்லோருக்கும் பயன்படுத்த எளிதோ அது அவரது
அறக்கட்டளையால் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்!
---
பணமொழி
நிறைய பணம் வைத்திருக்கும் ஏழையாக வாழ விரும்புகிறேன்
பாப்லோ பிக்காஸோ
செப்டெம்பர், 2012.