ஹாங்காங்கில் போய் சூப்பர்மேன் யார் என்று கேட்டால் கா ஷிங் லீ என்கிற மிகப்பெரிய பணக்காரரைச் சுட்டிக் காட்டுவார்கள். ஆசியாவிலேயே பெரிய பணக்காரர் இவர். இவரது சொத்து மதிப்பு இரண்டு லட்சத்து முப்பத்தி நாலாயிரம் கோடி. ஹட்சிசன் வாம்போவா, சியூங் காங் ஹோல்டிங்ஸ் போன்றவை இவரது நிறுவனங்கள். அதாவது ஹட்ச் என்ற பெயரில் ஒரு செல்போன் சேவை நிறுவனம் இருந்தது இல்லையா அதன் தலைவர் என்றால் நாம் கொஞ்சம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய கண்டெயினர் தொழிலதிபராகவும் உடல்நலம், அழகுசாதனப் பொருட்கள் விற்பனையாளராகவும் இருக்கிறார்.
ஹாங்காங்கில் உள்ள பங்குச்சந்தையில் 15 சதவீத மதிப்பு இவரது நிறுவனங்களுக்கே உரியது என்பது மிகப்பெரிய சாதனை. இவ்வளவு பணக்காரராக இருப்பினும் ஆள் மிகமிக எளிமையானவர். ஆடை முதல் கட்டும் கடிகாரம் வரை எல்லாம் மிக எளிமையானவை. ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீக்கோ கடிகாரம்தான் கட்டுவார். இரண்டு அடுக்கு வீட்டில் மகனுடன் வசிக்கும் இவரது இளமைக்காலம் மிக வறுமையானது.
1928-ல் சீனாவில் உள்ள சாவோஷூ நகரில் பிறந்தவர். தந்தையின் மரணத்தை அடுத்து 15 வயதிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தினார். ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். தினமும் 16 மணி நேரம் வேலை. 1950-ல் அவரே சொந்தமாக ஒரு பிளாஸ்டிக் வர்த்தக நிறுவனம் தொடங்கினார். அப்படியே ரியல் எஸ்டேட் துறையிலும் கவனம் செலுத்தினார். ஹாங்காங்கில் முதன்மையான ரியல் எஸ்டேட் நிறுவனமாக வளர்ந்தார்.
1979-ல் ஹெச்எஸ்பிசி வங்கி ஹாங்காங்கில் இயங்கிய ஹட்சிசன் வாம்போவா நிறுவனத்தில் தனக்கு இருந்த 22 சதவீத பங்குகளை விற்க விரும்பியது. அதை வாங்க ஒருவர் முன்வந்தார். அவர் லீ!
ஆங்கில நிறுவனமான ஹட்சிசன் வாம்போவாவை வாங்கியது ஹாங்காங்கில் இருந்த சீனர்களின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சி. ஆங்கில நிறுவனம் ஒன்றை வாங்கிய முதல் சீனர் லீ. அதன்பின்னர் இந்நிறுவனம் பல்வேறு துறைகளில் கால்பதித்து வளர்ச்சி பெற்றது.
“கடுமையாக உழையுங்கள்; சொன்ன சொல்லைக் காப்பாற்றுங்கள்; அடுத்தவர்களிடம் நல்லமாதிரி நடந்துகொள்ளுங்கள்; உங்கள் தொழில் விருத்தியாகும்” என்பதுதான் லீயின் தாரக மந்திரம். இது வெறும் வாய்ப்பேச்சு அல்ல. கடுமையான உழைப்பாளி லீ என்பது ஹாங்காங் வாசிகள் அனைவரும் அறிந்த ஒன்று. “கடுமையாக உழைப்பதும் அதிகமாக லாபம் சம்பாதிப்பதும்தான் எனது பொழுதுபோக்கு” என்கிறார் லீ.
கடையில் ஹாங்காங் மக்கள் என்ன வாங்கினாலும் அதில் ஒரு சின்ன சதவீதமாவது லீயின் பாக்கெட்டுக்குப் போகும் அளவுக்கு அவர் வர்த்தக சாம்ராஜ்யம் விரிந்துள்ளது.
உலகின் மிகமிக விலை உயர்ந்த பொருட்கள்
ஆண்டிமேட்டர்
பெயர் கொஞ்சம் வில்லங்கமாகத் தான் உள்ளது. ஆனால் பொருளின் விலை ஒரு கிராம்: நூறு லட்சம் கோடி ரூபாய்!( இதுக்கு எத்தனை பூஜ்யம் போடுவது?). இதைத் தயாரிப்பது சிரமமான வேலை. எதிர்காலத்தில் விண்கலன்களை இயக்க அனுப்ப உதவக்கூடிய எரிபொருள் இது.
கலிபோர்னியம் 252
இதன் விலை: ஒரு கிராம்- சுமார் 100 கோடி ரூபாய்!
இது ஓர் ஓரகத் தனிமம்(ஐசோடோப்). எண்ணெய்க் கிணறுகளில் எண்ணெய், நீர் ஆகியவற்றின் அடுக்குகளைக் கண்டறியும் கருவிகளில் பயன்படுத்தப் படுகிறது.
டாஃபீட்
இது ஒரு காரட்(0.2 கிராம்) விலை ஒன்றரை லட்சம் முதல் 1.2 கோடிவரை. ஊதா நிறத்தில் இருக்கும் இந்த கல் வைரக் கற்களை விட மிக அரிதாகக் கிடைக்கக்கூடியது. நகைகளில் பயன்படுத்துவார்கள்.
பணமொழி : பணம் என்று வந்துவிட்டால் எல்லோரும் ஒரே மதம்தான் - வேல்டேர்
செப்டெம்பர், 2014.