கோடீஸ்வரனான ஆபிஸ் பாய்

கோடீஸ்வரனான ஆபிஸ் பாய்
Published on

எழுபதுகளின் இறுதியில் தில்லியில் உள்ள பாரடைஸ் டூர்ஸ்  என்று சிறு நிறுவனத்திற்கு செல்லும் யாரும் அனில் சர்மாவின் துறுதுறுப்பை கண்டு வியக்காமல் இருக்க முடியாது. அனில் சர்மா அப்படியொன்றும் முக்கியமான பொறுப்பில் இல்லை. பாரடைஸ் டூர்ஸின் தரையை பெருக்குவது, எல்லாருக்கும் காபி டீ கூல்டிரிங்ஸ் வாங்கி வருவது, வாடிக்கையாளர்களின் நிறுவனத்திற்கு போய் பயணச்சீட்டையோ அல்லது பாஸ்போர்ட்டையோ கொடுப்பது, விடிய விடிய கையில் பெயர்ப் பலகையுடன் விமான நிலையத்தில் காத்திருந்து பயணிகளை அழைத்துச் சென்று அவர்களது விடுதியில் விடுவது போன்ற வேலைகளையே செய்து வந்தார்.

முகம் சுளிக்காமல் ஈகோ பார்க்காமல் கொடுத்த வேலையை உற்சாகமாக செய்யும் அனில் சர்மாவை பாரடைஸ் டூர்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் பிடித்து போனது. கொஞ்சம் கொஞ்சமாக கூடுதல் பொறுப்புகளைக் கொடுத்தனர். அதீத அக்கறையும் கடுமையான உழைப்பும் சர்மாவை மெல்ல மெல்ல உயர்த்தி நிறுவனத்தின் முதன்மை இடத்தில் அமர்த்தியது.

ஒரு டிராவல் ஏஜென்ஸியின் சகல நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள சர்மாவிற்கு பத்து வருடங்கள் பிடித்தது. பதினாறு வயதில் ஆபீஸ் பாயாக வாழ்க்கையைத் தொடங்கிய சர்மாவிற்கு சொந்தமாக ஏதாவது செய்தால் என்ன என்று தோன்றியது.

வருடம் 1989.

தனது ஆசையை அரசு ஊழியரான அப்பாவிடம் கூறினார்.

அவசரப்பட்டு இருப்பதையும் கெடுத்துக் கொள்ளாதே என்று ஆரம்பித்து தொழில் ஆரம்பிப்பதில் உள்ள பல சிக்கல்களைக் கூறி அனில் சர்மாவின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்தார் அவரது அப்பா.

அப்பாவின் அறிவுரைகளை கேட்கும் மனோநிலையில் அனில் சர்மா இல்லை. தனது புதிய அலுவலகத்திற்கான இடம் தேடி தில்லியின் பல பகுதிகளில் அலைந்த சர்மாவிற்கு அவரது நண்பர்  டெல்லி கன்னாட் பிளாசா விலிருந்த தனது இடத்தை வாடகைக்குக் கொடுத்தார்.

அனில் சர்மாவின் முயற்சியையும் ஆரம்பகால சிக்கல்களையும் புரிந்து கொண்ட அந்த நண்பர் பிஸினஸ் செட்டாகும் வரை வாடகை வேண்டாம் என்று கூற அனில் சர்மாவிற்கு இன்ப அதிர்ச்சி. உள்ளம் குளிர்ந்து போன அனில் சர்மா தனது நண்பனின் மனைவியை நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டார்.

பல இடங்களுக்கு சுற்றி பகலிரவு பார்க்காமல் வியாபாரத்தை ஸ்திரப்படுத்துவதில் கவனம் செலுத்திய அனில் சர்மா எதிர்பாராத இன்னொரு பிரச்னையைச் சந்தித்தார். வியாபார விவகாரங்களில் அனில் சர்மாவிற்கும் அவரது பங்குதாரரான நண்பனின் மனைவிக்கும் சில கருத்து வேறுபாடுகளிருந்தது. வேறுபட்ட கருத்துக்கள் வழக்கமானதுதானே என்றிருந்த அனில் சர்மா, அது நிறுவனத்தை மூடும் நிலைக்கு துரத்துமென்று நினைக்கவில்லை. எதிர்பாராத அந்த நிலை வந்த போது தடுமாறிய அனில் சர்மா, சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் ஒரு நிறுவனத்தை தொடங்கும் முயற்சியில் இறங்கினார்.

முதல் நிறுவனத்தின் மூடுவிழா அனில் சர்மாவின் கையிருப்பை காலிசெய்துவிட்டிருந்தது.

அனில் சர்மாவின் நிலையைப் பார்த்து அவரது மனைவி தனது பெற்றோரிடமிருந்து முதலீட்டைக் கடனாக பெற்றுக் கொடுத்தார்.

திரும்பவும் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்த அனில்சர்மா ஆறு மாதத்தில் நூறு வாடிக்கையாளர்களை சேர்க்க முடிந்தது. இன்று அவரது புதிய நிறுவனமான ஜெட் சேவ் இந்தியா பதினைந்து வருடங்களுக்கு பின் தில்லியை தவிர பல இடங்களில் கிளை பரப்பி பரந்து நிற்கிறது.

கோடீஸ்வரனாக மாறிய பின்னும் தனது ஆபீஸ் பாய் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதில் அனில் சர்மாவிற்கு எந்த கூச்சமும் இல்லை.

பணமோழி

போராட்டங்களுக்கு பரிசை எதிர்பார்ப்பது தவறு. பரிசு என்பது போராட்டச் செயல்பாடுதான், அதில் கிடைக்கும் வெற்றி அல்ல.

-பில் ஓக்ஸ்

நவம்பர், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com