வெண்டிஸ் துரித உணவுக் கடைகள் அமெரிக்காவில் பிரபலம். அதை விடப் பிரபலம் அதன் நிறுவனர் டேவ் தாமஸ். தன்னுடைய நிறுவன விளம்பரத்திற்காக டிவிக்களில் இது நாள் வரை அதிக அளவில் தலைகாட்டியவர் அவரே. பரம்பரை பணக்காரர் அல்ல. தன்னுடைய முயற்சியாலும்,தேர்ந்த நிர்வாக திறமையினாலும் மட்டுமே இதை சாதித்திருக்கிறார்.
1932-ல் அமெரிக்காவின் அட்லாண்டிக் சிட்டியில் பிறந்த ஆறே மாதத்தில் அம்மா இறந்துவிட வேறொரு தம்பதியரால் தத்தெடுக்கப்பட்டார். தத்தெடுத்த குடும்பங்களின் வளர்ப்பு தாய்கள் அடுத்தடுத்து இறந்துவிட 10 வயதிற்குள் இரண்டு குடும்பங்கள் மாறி விட்டார். அதற்கடுத்து டேவ் தாமஸை எடுத்து வளர்த்தது அவரது உறவுப்பாட்டி. 10 ஆம் வகுப்பு தேர்வாகவில்லை.
1950 ல் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டார். ஏறக்குறைய 2000 ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்கும் பணி அங்கே. அங்கு நிறைய அனுபவம் கிடைத்தது. பிறகு இராணுவத்திலிருந்து திரும்பியவுடன் போர்ட் வைனியில் கேஎப்சிஉண்வகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.கேஎப்சி என்ற பிராண்ட் மக்கள் மனதில் பதிவதற்கும் அதன் விற்பனை பெருகியதற்கும் டேவ் தாமஸ் ஒரு முக்கிய காரணம்.
35 வயதில் தேவைக்கு அதிகமாகவே அனுபவத்தை பெற்றுவிட்ட தாமசுக்கு கொலம்பஸ்ஸில் தரமான ஹாம் பர்கர் கிடைப்பதில்லை என்ற வருத்தம் இருந்தது. பிறகென்ன? 1969 ல் தன்னுடைய மகள் பெயரில் வெண்டிஸ் உணவக நிறுவனத்தை தொடங்கிவிட்டார்.10 வருடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான கிளைகளைக் கொண்டு நிறுவனம் வேகமாக வளர்ந்தது.
1990 களிலேயே அமெரிக்கர்களில் குடும்ப உறுப்பினர் போல் ஆனார் டேவ். 6000 கிளைகளுடன் வெண்டிஸ் வளர்ந்துவிட 800 க்கும் அதிகமான விளம்பங்களில் நடித்து அமெரிக்காவில் அவருடைய முகம் தெரியாத நபரே இல்லை என்ற அளவிற்கானார்.
வியாபாரத்தில் பெரிதாக வளர்ந்தாலும் தன்னுடைய இளமை காலத்தை மறக்காத டேவ்,டேவ் தாமஸ் பவுண்டேசன் தொடங்கி அனாதை குழந்தைகளை தத்தெடுத்ததை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்!
பணக்கார எம்.பிக்கள்
நம்முடைய நாடாளுமன்றத்திற்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 எம்பிக்களில் 315 பேர் கோடீஸ்வரர்கள்.அறிவிக்கப்பட்ட சொத்து விவரங்களின்படி எம்பிக்களின் சராசரி சொத்து மதிப்பு 5.33 கோடி. அறிவித்ததே இவ்வளவு என்றால் நிஜமாக எவ்வளவு இருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கே
1. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஜெயதேவ் காலா 683 கோடி
2. ஆந்திராவின் டி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த விஸ்வேஷ்வர் ரெட்டி 528 கோடி
3. ஆந்திர பிஜேபி எம்பி கோகராஜூ கங்க ராஜூ லைலா குரூப் கம்பெனிகளின் நிறுவனர். கம்பெனி சொத்து மதிப்பு 1000 கோடி.
4.242 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திராவின் கர்னூல் எம்பி ரேணுகா.
5.மத்தியபிரதேச காங்கிரஸ் எம்பி கமல்நாத். 206 கோடி.
பணமொழி
அறிவில் முதலீடு செய்வது அதிக வட்டியை ஈட்டித்தரும்
- பெஞ்சமின் பிராங்ளின்
ஜூன், 2014.