ஹாலி பெரி 46 வயது ஹாலிவுட் நடிகை. டை அனதர் டேயில் ஜேம்ஸ் பாண்டுடன் கலக்கிய இவருக்கு அறிமுகம் தேவையில்லை. 1985- “மிஸ் டீன் ஆல் அமெரிக்கன்”, 1986- “மிஸ் ஓஹியோ”, 2003- “உலகின் அழகிய 50 மனிதர்கள்” பட்டியலில் முதல் இடம், அதே வருடத்தில் ஊஏM பத்திரிகையின் உலகின் 100 செக்ஸியான பெண்கள் பட்டியலில் முதல் இடம். 1989 முதல் இன்று வரை ஹாலிவுட் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர். மாடலிங் துறையில் நுழைந்து, தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளை வாங்கியவர், 2002ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை “மான்ஸ்டர்ஸ் பால்” படத்திற்காக வாங்கியுள்ளார். ஹாலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை மற்றும் தான் நடித்த சில படங்களுக்கு தானே தயாரிப்பாளராகவும் இருந்தவர். இப்படி நீண்டுகொண்டிருக்கும் சாதனை பட்டியலுக்கு பின்னுள்ள போராட்டம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது.
முதல் தலைமுறை சாதனையாளர்களின் பொதுச் சொத்தான ஆரம்பகால சோதனைகள் இவருக்கும் உண்டு. நடிப்பு ஆசையால் வீட்டைவிட்டு வெளியேறியவர், ஒரு கட்டத்தில் கையிலிருந்த பணம் தீர்ந்ததும் தன் அம்மாவிடம் தொலைபேசியில் அழைத்து தன்னிடம் சாப்பிடக்கூட பணம் இல்லாததை சொல்ல, அவரோ, வீட்டிற்கு திரும்பி வா அல்லது உனக்கான பணத்தை நீயே சம்பாதித்துக்கொள் என்று சொல்லிவிட்டார். அந்த நாட்களில் தங்கும் இடத்திற்கும் உணவுக்குமே பணம் இல்லாமல் மனதில் லட்சியத்தை மட்டும் கொண்டு சமாளித்துள்ளார். இதனால் ஒரு வருடத்திற்கு மேல் தன் அம்மாவிடம் பேசாமல் இருந்தவர், பின்னர் தன் அம்மாவின் செயல் சரியென்று ஒப்புக்கொண்டார்.
“என் அம்மாவின் அந்த முடிவால் மிகுந்த கோபமுற்றேன். ஆனால் அந்த நாட்கள், மிக குறைவான தேவைகளுக்குள் வாழவும், எந்த சூழ்நிலையையும் என்னால் சமாளிக்க முடியும் என்ற தைரியத்தையும் வளர்த்தன. அதற்காக நான் என் அம்மாவிற்கு நன்றி கூறினேன்.” என்கிறார்.
புதிதாக யோசியுங்கள்
நாள்தோறும் நாம் அருந்தும் காபியில் சாதித்தவர் பிராங்க் ஓ டியா. கனடிய தொழில் அதிபரான இவரது ‘செகண்ட் கப்’ காபி செயின் மிகப் பிரசித்தம். வென்றவன் சொல்லே வேதம், அவன் வகுப்பதே விதி இது ப்ராங்க் வாழ்வுக்கு பொருந்தும். இன்று இவர் உலகின் பல முன்னணி நிறுவனங்களில் தொழில் வெற்றி குறித்து உரையாற்றுகிறார். புகழ் பெற்ற ஆலோசகர்.
தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு பிராங்க் கூறும் அறிவுரை, “ஏற்கனவே சிறப்பாக நடக்கும் ஒரு தொழிலில் இறங்கி போட்டியிட்டு அவர்களுடன் போராடுவதை விட, இதுவரை எவரும் செய்யாத ஒரு தொழிலைத் தொடங்கி உங்களுக்கான சந்தையை நீங்களே உருவாக்கினால் லாபம் உங்கள் எதிர்பார்ப்பை விட பல மடங்கு இருக்கும்”.
சுத்தமான குடிநீர்
கெண்ட் ஆர் ஓ- தண்ணீர் சுத்திகரிக்கும் வடிகட்டி. இந்த பெயரைக் கேள்விப்படாத நகர வாசிகள் இருக்கமுடியாது. மகேஷ் குப்தா, ஒரு தொழிலாளியாக தன் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இந்த நிறுவனத்தின் தலைவர். எப்படி வந்தது இந்த சாதனை?
ஐ.ஐ.டி கான்பூரில் இளநிலைப் பட்டமும், டெராடூன் ஐ.ஐ.பி-ல் பெட்ரோலியம் துறையில் முதுநிலை பட்டமும் பெற்றவர். அதன் பிறகு இந்தியன் ஆயில் கம்பெனியில் டெக்னிக்கல் துறையில் நிர்வாக அதிகாரியாக பத்தாண்டுகள் பணிபுரிந்தார். பெரிய நிறுவனம், நல்ல வேலை, கைநிறைய சம்பளத்தில் உள்ள யாரும் செய்ய துணியாத ஒரு காரியத்தை செய்ய துணிந்தார். தன் வேலையை உதறித்தள்ளியவர் தனக்கான நிறுவனத்தை வெறும், ரூ 20,000 முதலீட்டில் தொடங்கினார். தனது வீட்டில் கார் நிறுத்துமிடத்தையே தனது முதல் தொழிற்சாலை யாக்கி வேலையை தொடங்கினார். அந்த தொழிற்சாலையில் முதலாளியும் இவரே, தொழிலாளியும் இவரே...
எஸ்.எஸ். இன்ஜினியரிங் இண்டஸ்டிரீஸ் என்ற பெயரில் பெட்ரோலியத் துறையில் உபயோகிக்கும் சில பொருட்களை தயாரிக்கும் இந் நிறுவனத்தை இன்றும் லாபகரமாக நடத்திவருகிறார். ஆனால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து வேலையை விடும் முடிவை நண்பர்கள் உறவினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறியே இவர் எடுக்க வேண்டி இருந்தது.
பெட்ரோலிய உபகரணங்கள் தயாரிப்புத் துறையில் இருந்தவர் தண்ணீர் சுத்திகரிப்பில் இறங்கியது சற்று வித்தியாசமான கதை. 1999-ல் தன் குழந்தைகள் இருவருக்கும் சுகாதாரமற்ற நீரினால் வரும் நோய் தாக்க, தன் வீட்டில் தண்ணீரை சுத்திகரிக்கும் பொருள் தேவை என்பதை உணர்ந்தார். அப்போது இந்தியச் சந்தைகளில் விற்ற எந்த சுத்திகரிக்கும் சாதனமும் தன்னை திருப்திப்படுத்தாததால், வெளிநாடுகளிலிருந்து சில உபகரணங்களை வாங்கி தன் வீட்டிற்கு தேவையான சாதனத்தை தானே தயாரித்தார். அதன் பயன்பாட்டில் மிகுந்த திருப்தியடைந்தவர், இதுபோல் தரமான ஒன்று நிச்சயம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் என்று நம்பி இந்த தொழிலில் இறங்கினார். இன்று இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு 25 கோடி.
இவருடைய திறமைக்கு ஓர் உதாரணமாக கெண்ட் விளம்பரத்தையே சொல்லலாம். அதிக விளம்பரங்களில் நடிக்காத, நாடு முழுவதும் நன்றாக தெரிந்த, இல்லத்தரசி பாத்திரத்திற்கு பொருத்தமான நடிகையான ஹேமமாலினியைத் தெரிவு செய்தார். இவர் எதிர்பார்த்தது போலவே ஹேமமாலினி விளம்பரம் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கெண்ட்டை கொண்டு சேர்த்தது.
பணமொழி:
வாழ்க்கையில் வெற்றி என்பதை அ என்று சொன்னால், வெற்றிக்கான ஃபார்மூலா X + Y + Z = A.
X என்பது வேலை, Y என்பது விளையாட்டு,
Z என்பது வாயை மூடிக்கொள்வது.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
ஜூன், 2013.