“ஆண்கள் பத்திரிகை ஆரம்பிக்கப்போகிறேன்”

உலகம் உன்னுடையது - Moneyதர்கள்
ஹெப்னர்
ஹெப்னர்
Published on

சிகாகோவில்  ஒரு மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்  அந்த இளைஞர். கனவுகள் மட்டும்தான் அவரிடமிருந்தன. நன்றாக கார்ட்டூன்கள் வரைவார். கல்லூரியில் படிக்கும்போது கல்லூரி மாணவர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அது இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய அமெரிக்கா. அமெரிக்கர்கள் சற்று கட்டுப்பெட்டிகளாக வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் போலித்தனமான வாழ்க்கையை வாழ அந்த இளைஞர் விரும்பவில்லை. இந்நிலையில் அவருக்கு மிகவும் பிடித்தமான எஸ்கொயர் பத்திரிகையில் வேலை கிடைத்தது. கொண்டாட்டத்துடன் சேர்ந்தார். ஆனால் காத்திருந்ததோ ஏமாற்றம்தான். அங்கே சுதந்தரமான கருத்துகளுக்கு இடமே இல்லை. ஐந்து டாலர் சம்பள உயர்வு கேட்டு கிடைக்காததால் வேலையை விட்டார். அப்போது அவருக்கு ஒரு மகள் பிறந்திருந்தாள். குடும்பத்தை நடத்துவதற்காகச் சின்ன பதிப்பக நிறுவனத்தில் வேலைக்குப் போனார். அங்கும் வாழ்க்கை துயரமாக இருந்தது. இப்படியே அது போகக்கூடாது என்று அவர் முடிவு செய்தார். அது 1953 - ஆம் ஆண்டு.

தன் நண்பர் ஒருவரைச் சந்தித்து  ‘‘நான் ஒரு ஆண்கள் பத்திரிகை ஆரம்பிக்கப்போகிறேன். அது எதுமாதிரியும் இருக்காது. எஸ்கொயரில் பெண்களின் நிர்வாண ஓவியங்கள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் வண்ணத் தில் புகைப்படங்கள் போடப்போகிறேன். இப்போதிருக்கும் ஆண்கள் பத்திரிகைகள் கிளப்பிங், மீன் பிடித்தல், வேட்டை ஆடுதல் போன்றவற்றையே முன்வைக்கின்றன. என் பத்திரிகை சுரீர் என்று எந்தப் போலித்தனமும் இன்றி இருக்கும். அமெரிக்கர்களின் செக்ஸ் பற்றிய சிந்தனையை மாற்றி அமைக்கப்போகிறேன். நீ முதலீடு செய்கிறாயா?'' என்றார். நண்பர்  சற்று தயக்கத்துக்குப் பின்னால் 2000 டாலர்கள் தருவதாக ஒப்புக்கொண்டார். டைம் பத்திரிகை 1923 - ல் தொடங்கப்பட்டபோது 86000 டாலர்கள் முதலீட்டுடன் தொடங்கப்பட்டது. ஆனால் அந்த இளைஞர் தன் பத்திரிகையைத் தொடங்க, 6000 டாலர்கள் இருந்தால் போதும் என்று தீர்மானித்தார். சிகாகோவில் மேலும் சில முதலீட்டாளர்களை சந்தித்துத் தன் திட்டத்தை விவரித்தார். சிலர் ஒப்புக்கொண்டனர். பலர் முடியாது என்றனர். அவரது தாயார் மகனுக்காக 1000 டாலர் கொடுத்தார். கடைசியில் மேலும் 600 டாலர்கள் தேவைப்பட்டன. வீட்டில் இருந்த அழகான மேசை நாற்காலிகளை விற்று அந்தப் பணத்தைத் திரட்டினார்.

ஒரு மிகச்சிறந்த டிசைனர் ஒருவரைச் சந்தித்து வேலைக்கு வர சம்மதிக்கவைத்தார். இலக்கியம், ஜோக்ஸ், கார்ட்டூன்கள் உள்ளிட்ட பல அம்சங்கள். நிர்வாணப்படத்துக்கு அந்த காலத்தில் காலண்டர் நிறுவனங்களையே அணுக வேண்டும்! அவர்களிடம் வாங்கி வந்த படங்கள் எல்லாவற்றையும் அவர் நிராகரித்தார். ‘அட்டையில் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தவுடன் யாரும் நகராமல் பார்க்கக்கூடிய முகமாக இருக்கவேண்டும்' என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். என்ன செய்தென்று புரியவில்லை. ஒருநாள் பழைய செய்தித்தாளில் வந்த செய்தி கண்ணில்பட்டது. அக்காலகட்டத்தில் அமெரிக்க ஆண்களின் கனவுக்கன்னியான மர்லின் மன்றோ நடிகை ஆவதற்கு முன்பு காலண்டர் நிறுவனம் ஒன்றுக்குக் கொடுத்த நிர்வாண படங்கள் சிகாகோவிலேயே உள்ள ஒரு நிறுவனத்தில் இருப்பதாக அச்செய்தி சொன்னது. மர்லினின் நிர்வாணப்படங்கள் இருக்கின்றன என எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாரும் அவற்றைப் பார்த்தது இல்லை!  அந்த இளைஞர் யோசித்தார். கையில் பணமோ 1000 டாலர்தான் இருந்தது. எப்படியும் அந்த படங்களை வாங்கவேண்டுமென்றால் ஏகப்பட்ட விலை சொல்வார்களே.. ஆனால் மர்லினின் படம் கிடைத்தால் இந்த இதழ் பட்டையைக் கிளப்பும்! நேராகக் கிளம்பிப்போனார்.

‘‘என்ன வேண்டும்'' என்றார் அந்த காலண்டர் கம்பனி நிர்வாகி.

‘‘ எங்கள் பத்திரிகையில் பிரசுரிக்க  மர்லின் மன்றோவின்  ஒரு நிர்வாணப்படம் வேண்டும்''

‘‘விலை அதிகமாகுமே..''

‘‘எவ்வளவு?''

‘‘600 டாலர்கள்!''

இளைஞரின் உள்ளம் சந்தோஷத்தில் குதியாட்டம் போட்டது! ஆனாலும் அதை மறைத்துக்கொண்டார்.

‘‘அதிகமாக இருக்கிறதே?'' என்றவாறு கிளம்பி வெளியே சென்றவர் உள்ளே வந்து கேட்டார்: ‘‘500 டாலருக்குத் தரமுடியுமா?''

 ‘‘ தருகிறேன். ஆனால் பணமாகத் தரவேண்டும்,''

‘‘இந்தாருங்கள்'' என்ற அந்த இளைஞர் பாக்கெட்டிலிருந்து பணத்தைக் கொடுத்து படத்தை வாங்கிக்கொண்டார்.

அலுவலகம் என்று எதுவும் இல்லை. அவர் வீடுதான். அங்கே மேலும் சில படங்களை வைத்துக் கொண்டு கவலையுடன் வடிவமைப்பாளர் காத்திருந்தார். அவர் காட்ட முனைந்த படங்களை ஒதுக்கிவிட்டு, ‘‘இதோ பார் '' என்று மர்லின் மன்றோவின் படத்தைக் காண்பித்தார். அங்கிருந்த இருவரும் ஆடிப்போய் வாயைப் பிளந்தார்கள்!

அந்தப் பத்திரிகைக்கு ஸ்டாக் பார்ட்டி என்று பெயர் வைத்திருந்தனர். அச்சுக்கு அனுப்பும்போது ஒரு நோட்டீஸ் வந்தது. அந்த பெயர் தங்களுக்குச் சொந்தமானது என்றும் அதைப் பயன்படுத்தக்கூடாது என்றும்!

வேறு என்ன பெயர் வைக்கலாம் என்று மண்டையை உடைத்தபோது ஒருவர் தன் அம்மா வேலைபார்த்த கார் நிறுவனத்தின் பெயரைச் சொன்னார். அனைவருக்கும் பிடித்துப்போய் அதை வைத்தார்கள்! முதல் இதழ் 70,000 பிரதிகள் அச்சிட்டார்கள்! தெருக்களில் நடந்து கடைகடையாகப் போய் தன் பத்திரிகையை யாராவது வாங்குகிறார்களா என்று பார்த்தார். யாராவது வாங்கினால் அவர் பெரும் சந்தோஷம் அடைந்தார். அந்தப் பத்திரிகையில் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று தன் பெயரையோ, இது எத்தனையாவது இதழ் என்ற தகவலையோ அவர் குறிப்பிடவே இல்லை! மொத்தம் எண்பது சதவீத பத்திரிகைகள் விற்றுத்தீர்ந்தன! மிகச்சிறந்த ஆண்கள் பத்திரிகை என்று கடிதங்கள் குவிந்தன! புதிய அலுவலகம், புதிய கார் என வாங்கக் காசு குவிந்தது. இரண்டாவது இதழை அச்சிட்டார். அது போன இதழை விட 2000 பிரதிகள் அதிகம் அச்சானது! அதில்தான்  தன் பெயரைப் போட்டுக்கொண்டார்! அந்த இளைஞர் பெயர் ஹ்யூ ஹெப்னர்! பத்திரிகை ப்ளே பாய்!

சில மாதங்களுக்கு முன்னர் ஹெஃப்னர் மரணமடைந்தார். அமெரிக்கா மட்டுமல்ல உலகின் அத்தனை ஆண்களும் பொறாமைப்படும் அளவுக்கு கார்கள், மாளிகைகள், விருந்துகள், அழகான பெண்கள் என்று ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த ஹ்யூ ஹெப்னரின் வாழ்க்கையும் மிகச் சாதாரணமாகத் தொடங்கியதுதான்! ‘‘என்னுடைய மிகக் கொண்டாட்டமான கனவில்கூட இதுபோன்ற இனிமையான வாழ்க்கையை நான் வாழ்ந்துவிட வில்லை'' - இது ஹெப்னர் சொன்னது!

பிப்ரவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com