அமெரிக்காவுக்கே கடன் கொடுத்தவர்

அமெரிக்காவுக்கே கடன் கொடுத்தவர்
Published on

பில்லியன் டாலர் கம்பெனி என்று சொல்வார்களே கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அப்படி ஒரு கம்பெனியை முதல் முதலில்  உருவாக்கியவர் ஜே.பி. மார்கன். வரலாற்றின் மிக முக்கியமான பைனான்சியர் என்று அறியப்படுகிற மார்கன் அமெரிக்காவைச் சேர்ந் தவர். ஒரு  கட்டத்தில் அமெரிக்க அரசுக்கே நிதி அளித்து அதன் மதிப்பு நழுவாமல் காப்பாற்றியவர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்!

அவர் ஒன்றும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் அல்ல.  அவரது தந்தை ஒரு நிதி நிறுவனம் நடத்தி வந்தார். படிப்பை முடித்தபின்னர் மார்கன் ஒரு தனியார் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தந்தை நடத்திய நிறுவனம் இவர் கைக்கு வந்தது. அந்நிறுவனத்துக்கு முக்கியமான ஐரோப்பிய தொடர்புகளும் அந்நியச்செலாவணி தொழிலும் இருந்தது. மார்கன் அதை விஸ்தரித்தார். உள்நாட்டுப் போருக்குப் பின்னர் நஷ்டத்தில் இருந்த ஏராளமான ரயில்பாதைக் கம்பெனிகளை வாங்கினார். ஏராளமான பேருக்கு அவர் கடன் கொடுத்தார். அதைத் திரும்ப வசூலிக்க கடினமான நடைமுறைகளைக் கையாண்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க காங்கிரஸ் விசாரித்து அவரை விடுவித்தது. டாலர்கள் மட்டுமல்ல; மார்கனுக்கு கலைப்படைப்புகளை வாங்குவதிலும் ஆர்வம் இருந்தது!

அமெரிக்க ஸ்டீல் கார்ப்பரேஷன் என்ற கம்பெனியை அவர் உருவாக்கியதுதான் அப்போதைக்கு  முதல் பில்லியன் டாலர் கம்பெனி. 1913-ல் அவர் இறக்கும்போது அவருக்கு 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள

எஸ்டேட்டுகள் இருந்தன. அவரது சமகாலத்து பணக்காரரான ராக்பெல்லருடன் ஒப்பிடுகையில் இது சின்ன சொத்துதான். ராக்பெல்லர்கூட, “ மார்கன் ஒன்றும் பெரிய பணக்காரர் அல்ல” என்று சொன்னாராம்! இருக்கலாம்! ஆனால் மார்கனின் செல்வாக்கு என்பது அவர் வைத்திருந்த பணத்தைப் பொருத்தது அல்ல. அது அவர் கட்டுப்பாட்டில் இருந்த அளப்பரிய நிதியைப் பொறுத்தது! அவர் இன்றும் அமெரிக்காவை செதுக்கிய சிற்பிகளில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.

உலகின் மிகப்பெரிய பணக்கார..

ஆறாம் குந்தர் இன்று உலகின் பெரும் பணக்காரர்.  அவரது சொத்து மதிப்பு 2500 கோடி ரூபாய்! இவரது தந்தை மூன்றாம் குந்தர் மூலமாக இவ்வளவு சொத்து இவருக்கு வந்து சேர்ந்துள்ளது. இவ்வளவு பணம் இருந்தும் இவருக்குப் பேசவராது. குரைக்க மட்டுமே செய்வார்! ஏனெனில் இவர் ஒரு நாய்! ஆமாங்க அல்சேஷன் வகை நாய்! ஜெர்மனியில் பணக்கார சீமாட்டியான கர்லொட்டா லீபென்ஸ்டீன் என்பவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிரியம்.  அவர் தன் சொத்துக்கள் அனைத்தையும் மூன்றாம் குந்தர் என்ற தன் நாய்க்கு எழுதி வைத்துவிட்டு 1991-ல் போய் சேர்ந்தார்.

ஆனால் இந்த நாய், அதாவது மூன்றாம் குந்தர் செத்துவிட (நாய் என்று எழுதலாமா? பயமாக இருக்கிறதே?) அதன் குட்டியான ஆறாம் குந்தருக்கு எல்லா சொத்தும் வந்திருக்கிறது! செத்துக் கொடுத் தாள் சீமாட்டி என்ற கதையாக அந்த பெண்மணி செய்துவைத்த முதலீடுகள் மூலம் சொத்து பல்மடங்கு அதிகமாகிவிட்டது. பல ஆடம்பர மாளிகைகள் இப்போது ஆறாம் குந்தருக்குச் சொந்தம்!

அவர் சாதாரண நாய்கள் போல் பொறை, பிஸ்கட் எல்லாம் சாப்பிட மாட்டாராம்! விலை மதிப்புள்ள மாட்டுக் கறி, மீன் போன்றவைதான் இவர் உணவு. லிமோசின் காரில்தான் நண்பர்களான பிற நாய்களைச் சந்திக்கப் பயணம். மியாமியில் முன்பு பாப் பாடகி மடோனா  வைத்திருந்த பங்களாவை இவர்தான் வைத்துள்ளாராம்! அடிக்கடி வீட்டில் உள்ள நீச்சல் குளம் அருகே இவர் ஓய்வெடுப்பார் என தகவல்கள் கூறுகின்றன. இவரது சொத்து மதிப்பு ஆண்டுதோறும் ஏறிக் கொண்டேபோகிறதாம்!

( Moneyதர்கள் பகுதியில் நாய் இடம் பெற்றிருப்பது காலத்தின் கட்டாயம் வாசகர்களே!).

மணக்கும் காசு

ஒரு செண்ட் பாட்டில் என்ன பெறும்? ரெண்டு லட்சத்து சொச்சம் டாலருக்கு ஒரு செண்ட் பாட்டில் விற்பனைக்கு உள்ளது. இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்! தங்கத்தில் வைரம் பதித்து இந்த பாட்டிலை உருவாக்கி உள்ளனராம்! பிரிட்டனின் கிளைவ் கிறிஸ்டியன் நிறுவனத் தயாரிப்பு இது! பெண்களுக்கான சிறப்புத் தயாரிப்பு இது! வேண்டுமெனில் ஆர்டர் கொடுங்க. செஞ்சி தருவாங்க. வீட்டுக்கு பெண்ட்லி காரில் அல்லது ரோல்ஸ் ராய்ஸ் காரில் செண்ட் வந்து சேரும்!

பணமொழி

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமானால் அதைக் கடன் வாங்க முயற்சி செய்துபாருங்கள்

 -  பெஞ்சமின் பிராங்க்ளின்

ஜூலை, 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com