நான் கி.ரா.வை கேள்விப்படுவது 1984இல். கி.ராவினுடைய 60 ஆண்டு கொண்டாட்டங்களை ஒட்டி வாசிக்கப் பட்ட கட்டுரைகளை ஒரு தொகுதியாக அன்னம் வெளியிடுகிறது. ராஜநாராயணியம் என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். 1982இல் அந்த 60வது ஆண்டு விழா நடக்கிறது. ஈராண்டுகளுக்கு பிறகு அது நூல் வடிவில் வருகிறது. அந்த புத்தகம் தான் கி.ரா.வினுடைய நான் வாசித்த முதல் புத்தகம்.
சில நாட்கள் கழிந்து இரண்டு ஆண்டுகளுக்குள் கி.ராவின் ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்ற தொகுதியை அன்னம் வெளியிடுகிறது. அதைபற்றி கதை ஒன்று மீரா சொல்லுவார்.
அன்றைக்கு அன்னத்தின் அலுவலகம் மதுரை மேலமாசிவீதியில் இருந்தது. அங்கு அறிஞர்கள், வளரும் எழுத்தாளர்கள், வளர்ந்த எழுத்தாளர்கள் அறிஞர் அல்லாதவர்கள் எல்லாரும் அங்கு தங்குவோம். அங்கு அந்த புத்தகத்தை வாங்க ஒருவன் வருகிறான். தோராயமாக இந்த புத்தகத்தை எடுத்துட்டுப்போய் படித்துவிட்டான். படித்த மூணாம் நாளைக்கு அவன் திரும்பி வர்றான், வந்து கி.ராஜநாராயணன் எழுதிய புத்தங்களை மட்டும் கொடுங்கள் என்கிறான். கதவு, கொத்தை பருத்தி போன்ற எல்லா புத்தகத்தையும் எடுத்துக் கொண்டான்.
மீண்டும் ஐந்து நாள் கழித்து வருகிறான், வந்து இதெல்லாம் வயதுவந்தவர்களுக்கான புத்தகம் இல்லையே! இதெல்லாம் ஒண்ணும் அந்த மாதிரி சுரத்து இல்லையேன்னு சொன்னதா, மீரா சொல்லுவார்.
இதன் ஒவ்வொரு தலைப்பும் அவன் கற்பனையை கிளறிவிட்டு இருக்கு. அவர் வயதுவந்தவருக்காக எழுதக்கூடிய எழுத்தாளர் என்று அவன் நினைத்து இருக்கிறான். அதான் நான் சொன்னேன்: கி.ரா புத்தகங்கள் விற்கப்பட்டால் வாபஸ் வாங்கப்படமாட்டாது என்று போர்டு வையுங்கள்! என.
தமிழுடைய நீண்ட வரலாற்றை எடுத்துப் பார்த் தாலே ஒரு ஊஞ்சலை நீங்க பார்க்க முடியும்.
சங்க இலக்கியத்துக்கு முன்னால் இங்கொரு நாட்டார் மரபு பிரமாண்டமாக இருந்திருக்கும். அந்த நாட்டார் மரபிலிருந்துதான் சங்க இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன என்று சங்க இலக்கியங்களைப் பார்த்தால் தெரியும். அதன்பிறகு அந்த செவ்வியல் தன்மை ஒரு மாதிரி இறுகுகிறது.
கம்பராமாயணம் வரும்போது முழுக்க முழுக்க கற்பனையிலிருந்து ஞானத்திலிருந்து மட்டுமே பிறக்கக் கூடியதாக இருக்கிறது. உடனடியாக ஒரு கடிகாரம் ரீவைண்ட் ஆகுது, பக்தி இலக்கியத்திற்கு வரும்போது அந்த செவ்விலக்கியத்துடைய இலக்கிய வடிவங்கள் மாறுகிறது. Folklore உள்ளே வருகிறது. சிலப்பதிகாரத்திலேயே அது வர ஆரம்பித்து விடுகிறது.
பக்தி இலக்கியம் பெரும்பகுதி மிக நெருக்கமாக Folklore ஐ ஒட்டி இருக்கிறது அதனுடைய கொடைகள் எல்லாமே நாட்டுப்புறவியலில் இருந்து தான் எடுக்கப்பட்டிருக்கின்றது.
இது மறுபடியும் ஒரு இடத்துல கெட்டியாகுது. மறுபடியும் கடிகாரம் சுழன்று குற்றாலக் குறவஞ்சி மாதிரி நாட்டுபுறவியல் கதை உள்ளே வருகிறது. சிந்து உள்ளே வருகிறது. சிந்து என்பது முழுக்க முழுக்க நாட்டுபுறவியலிலிருந்து வருகிறது. தொடர்ந்து இந்த ஊஞ்சல் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
எப்பொழுது க்ளாஸிசத்திற்கு சரக்கு தீர்கிறதோ வடிவம் மட்டுமே எஞ்சுகிறதோ அப்பொழுது அது வாசலை திறந்து Folkloreக்கு போகும். எப்போது Folklore ஒரு தத்துவத்தை அடையுதோ அல்லது தத்துவ தரிசனம் தொடுகிறதோ அப்போதது க்ளாஸிசத்திற்குள் வரும். இந்த ஊஞ்சலை தமிழ் இலக்கியத்திலே இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் தொடர்ந்து பார்க்கலாம்.
சுரா எனக்கு மிகவும் நெருக்கமானவர். சுராவுடைய வீட்டிற்கு நேர் முன்னால் ஓர் அம்மன் கோவில் உள்ளது. அங்கு ஆண்டிற்கு 16 நாட்கள் நாட்டுப்புற பாடல்கள் பாடப்படும். முத்தாரம்மன் பாடல் பாடப்படும். அந்த 16 நாட்களும் வீட்டை காலி செய்து, கன்னியாகுமரியில் தங்கியிருப்பார். அது காதில் விழுந்தால் அவருக்கு அது இடையூறாக உள்ளது என்றார். நான் அவர் வீட்டிற்கு 85 இல் போகிறேன். நான் அந்த மொத்த பாடல்களையும் கேட்டேன். அவரிடம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லுகிறேன். இந்த பாடலையா சொல்லுறீங்க இத நீங்க உட்கார்ந்து கேட்பீர்களா? என்றார். ஆம் நான் கேட்டேன்! நல்லாதானே இருக்குனு அவரிடம் நான் கூறினேன்.
30 வருடங்களுக்கு மேல் பாடுறாங்க நான் இதுவரைக்கும் கேட்டதில்லை என்றார். அது என்ன பாடல் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஒன்றையே திரும்ப திரும்ப பாடுறாங்க. அப்புறம் ஒருத்தர் சொல்லுறத இன்னொருவர் ஆமா, ஆமா என்று சொல்லுறாங்க. அப்புறம் வந்து வருணணையாக போய்க்கொண்டு இருக்கிறது. நீண்டு நீண்டுபோய்க்கொண்டு இருக்கிறது என்று சொல்கிறார்
ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நாட்டுப்புறவியலின் மறுமலர்ச்சியே அப்படிப்பட்ட சுந்தரராமசாமியின் வீட்டின் கூடத்தில் தான் ஆரம்பிக்கிறது.
ஏனென்றால் பிற்காலத்தில் நாட்டுப்புறவியலில் பெரிய அலைகளை உருவாக்கிய எல்லோருமே சுரா வீட்டில் கூடித்தான் அதைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். அவர் அங்கே உட்கார்ந்திருக்கிறார், ஆனால் அவர் காது கொடுக்கமாட்டார். அங்கே உட்கார்ந்து தான் நான் குறைந்தது 30 நாட்டுப்புற புத்தகங்களை பிழைத்திருத்தம் செய்திருக்கிறேன். அதில் ஒன்று கூட சுரா படித்துப்பார்த்தது கிடையாது. ஏனென்றால் அது வேற ஒரு உலகம்; அவருடைய உலகம் அல்ல அது.
சுந்தர ராமசாமி கி.ரா.வைப் பற்றி என்னிடம் கூறியது எனக்கு நல்லா நினைவிருக்கின்றது. அப்போது டி.கே.சிதம்பர முதலியார் அவர்கள் தென்காசியிலிருந்து வீட்டை காலி செய்து திருநெல்வேலியில் குடியிருந்தார். திருநெல்வேலியில் வட்டத்தொட்டி என்ற அமைப்பை நடத்தி வந்தார். அதில் மீ.ப.சோமு, தொ.மு.சி.ரகுநாதன், ஜஸ்டிஸ் மகாராஜன், ஆ. சீனிவாச ராகவன் உள்ளிட்டோர் இருப்பார்கள். ராஜாஜியே பலமுறை வந்து கலந்து கொண்டுள்ளார், கல்கி வந்துள்ளார். அந்த மாதிரி ஆட்கள் வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.
அங்கே இளைஞர்களான சுந்தர ராமசாமி, கிருஷ்ண நம்பி மாதிரி ஆட்கள் அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது ஒருவர் தூரத்து கிராமத்திலிருந்து சட்டைபோடாமல் வந்து அந்த அரங்கில் உட்கார்ந்திருப்பார். சுந்தரராமசாமிக்கு தொடர்ந்து ஒரு சந்தேகம். சட்டைபோடாமல் வந்து இங்கு ஒரு விவசாயி இந்த அரங்கில் உட்கார்ந்திருக்கிறார். இங்கு பேசப்படுவது கம்பராமாயணம். இவர் ஏன் இங்க வந்து உட்கார்ந்திருக்கிறார். இவருக்கு ஏதாவது ஏறுதா? அப்படியென்ற சந்தேகம் அவருக்கு இருக்கு.
நீண்ட காலத்திற்கு பிறகு அவரிடம் கேட்கிறார்: உங்களுக்கு ஏதாவது ஆர்வம் இருக்கிறதா? இல்லை என் கிராமத்தில் அழகிரிசாமி என்கிற ஒருத்தன் இருக்கான்; அவன் கம்பராமாயணத்தில பெரிய ரசனை உள்ளவன். அவன்தான் இங்க நல்லாயிருக்குமென்று சொன்னான் என சொல்கிறார். அதற்குபின் இவர் அவரிடம் பேசிப்பார்த்தால் வார்த்தைகளுக்கு சரியான பொருள் தெரியாமலேயே (ஏனென்றால் அவர் தெலுங்கு பின்னணி கொண்டவர்) மனப்பாடமாகவே அவருக்கு அவ்வளவு கம்பராமாயணப்பாடல்கள் தெரியும். அவருடைய ஊரிலே கம்பராமாயணம் உரைப்பதற்கான மேடை ஒன்று இருந்தது.
நாயக்கர் ஆட்சியிலே ஒவ்வொரு கிராமத்திலும் இராமாயண மண்டபம் கட்டியிருந்தார்கள். அதில் இராமாயணம் படிப்பார்கள்.
மழைபெய்யவில்லை என்றால் விராடபருவம் படிப்பார்கள்; அதன் விளைவாக அவருக்கு அதுவும் மனப்பாடமாக தெரிந்திருந்தது.
சட்டைபோடாத அந்த உள்ளுர் விவசாயி தான் கி.ராஜநாராயணன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு கதவு என்ற சிறுகதை தாமரை பத்திரிகையில் வெளியாகிறது. சுந்தர ராமசாமி அதனை வாசிக்கிறார். யார் எழுதியது என்று பார்த்தால் கி.ராஜநாராயணன் என்று இருக்கிறது. இந்தக்கதையை எழுதும்போது கிராவுக்கு 41 வயது. அதுவரை அவர் எதுவுமே எழுதியதில்லை.
தி.க.சிவசங்கரனுக்கு சுந்தரராமசாமி போன் செய்து கேட்கிறார். யார் இந்த கி.ராஜநாராயணன் என. அந்த சட்டை போடாத விவசாயிதான் அவர் என்று சொன்னதும். கிராவுக்கு தந்தி அடிக்கிறார்.
‘உங்கள் கதவு கதை ஒரு க்ளாசிக்‘
இப்படி தான் கி.ரா. இலக்கியத்திற்குள் நுழைகிறார்.
அந்த வருகை என்பது தமிழுடைய அறிவார்ந்த ஒரு சூழலுக்கு நாட்டுப்புறவியலில் இருந்து வந்த ஒரு கொடை. நாட்டுப்புறவியலின் அழகுகளையும், நளினங்களையும் இந்த இலக்கியத்திற்குள் கொண்டு வந்து அவர் சேர்க்கிறார்.
முதலில் இது இவர்களுக்கு புரியவில்லை கோபல்லகிராமம் நாவல் வெளிவருகிறது. தமிழகம் முழுக்க இரசிக்கிறார்கள் நவீன இலக்கிய வட்டத்தில் சிற்றிதழ் வட்டத்தில் இது நாவல் தானா? என்ற சந்தேகம் வருகிறது. சுந்தரராமசாமி என்னிடம் சொல்லுகிறார் நாவல் என்று கொள்ள முடியாது என்கிறார். அப்போது நான் அவரிடம் சில நாவல்களை உதாரணம் சொல்றேன். இலத்தின் அமெரிக்க நாவல். அப்போது தான் அது பேசப்படுகிறது. அவற்றை உதாரணம் காட்டி இது நாவல்தான் என்றேன்; நீங்கள் எழுதினது நவீனத்துவ நாவல் வடிவம். இது ஞூணிடூடுடூணிணூஞு நாவல் வடிவம்.
அதற்குள் இங்க அ.கா.பெருமாள் ஆய்வுகள், நா.வானவாமலை ஆய்வுகள் புத்தகமாக வந்து நாட்டுப்புறவியல் ஒரு துறையாக ஏற்கப்பட்டபின்தான் இவருடைய கதை உலகம் நவீன இலக்கியம் தான் என்ற ஏற்புக்கு வந்து சேருகிறது. அதுவரைக்கு அவர் சுவாரசியமானவர். ஆனா நவீன இலக்கியத்திற்கு நாம் வைத்த விஷயங்கள் அவரிடம் இல்லையே அவர் இறுக்கமா கதை சொல்லவில்லையே அவர் தளர்வாகச் சொல்லுகிறார். எல்லாத்தையுமே ஆசிரியரே சொல்லுறமாதிரி இருக்குது. ஆசிரியரே நடுவில் வந்து கதை சொல்லுகிறார். கதை முடியும் முன் ஆசிரியர் தன் கருத்தை சொல்லுகிறார் இப்படி நிறைய புகாரிருந்தது. இதெல்லாம் தாண்டி கோபல்லகிராமம் இன்று ஒரு க்ளாஸிக்.
கிரா நாட்டுப்புறவியலில் முன்பு இல்லாதிருந்த எதை சேர்த்தார் என்றுபார்த்தால், இதற்கு முன்னால் கதை எழுதியவர் மண் பற்றி விவசாயம் பற்றி கதை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விவசாயி கிடையாது. வெளியிலிருந்து பார்க்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர் விவசாயி. அந்த மண்ணைச் சேர்ந்தவர்.
கி.ராவை கரிசல் எழுத்தாளர் என்று சொல்லுவது குறுக்குவது அல்ல ஒரு எழுத்தாளன் ஒரு படைப்புடன் வரும்போது அவனைச் சுற்றி மொத்த மண்ணே வருவது என்பது குறுக்குவது அல்ல. கி.ரா வரும்போது மொத்த கரிசல் மண்ணும் வருகின்றது. அதனுடைய எல்லா பண்பாட்டு கூறும் உள்ளே வருகிறது. அப்படிதான் இலக்கியத்திற்குள்
நாஞ்சில் நாடன் வருகிறார். அப்படிதான் சு.வேணுகோபால் வருகிறார். அதுதான் தமிழ் இலக்கியத்தின் ஒரு தொடக்கம்.
இப்போது திரும்பி பார்க்கும்போது இவருடைய கதைகளில் சுவாரஸ்யமாக இருக்கக்கூடிய இரண்டு விஷயங்கள் என்ன?
ஒன்று மனித இயல்பு. நீங்கள் யோசித்து பாருங்கள் எவ்வளவு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள்.
கி.ரா ஒரு முறை என்னிடம் பேசும்போது சொல்லுகிறார், எவ்வளவுதான் எழுதினாலும் கட்டக்கடைசியிலே அது பேச்சுக்கு மாறவில்லையென்றால் அது நிற்காது. எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.
எழுதப்பட்ட எதுவுமே திருப்பி பேச்சுக்கு வரவேண்டும் ஏனென்றால் பேச்சிலிருந்து தான் எழுதப்பட்டிருக்கிறது என்கிறார். அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது, வாய்மொழிதான் வாழும் வரலாறு; மற்றெல்லாம் மாறும். நாட்டுப்புறவியலில் ஒரு அற்புதமான கருத்தியல் உண்டு. புத்தகங்களில் எழுதப்பட்டிருப்பவைகளுக்கு பாடபேதங்கள் இருக்கும், நாட்டுப்புற வாய்மொழி மரபுக்கு பாடபேதங்கள் இருக்காது.
கி.ரா அதைத் திருப்பித் திருப்பி கூறுகிறார். அங்கிருந்து தான் அதை எடுக்கிறோம். திருப்பி அது அங்கு பின்னோக்கிப்போக வேண்டுமென்று சொல்கிறார். ஆக இந்த வாய்மொழிமரபு கதை சொல்லக்கூடிய ஒரு குரலாக அவர் கதையில் இருந்துகொண்டேயிருக்கிறது. அதனுடைய முக்கியத்துவத்தை தமிழில் மிக ஆணித்தரமாக அவர் நிறுவினார். ஆனால் ஒரு போதும் கூட தான் எழுதின எழுத்து முறைக்காக வாதிட்டு எதுவுமே பேசினது கிடையாது. அப்படி பேசியிருந்தால் ரொம்ப சுருக்கமாகச் சொல்லியிருப்பார். நையாண்டியாகச் சொல்லியிருப்பார் அது சரியாகவும் இருக்கும்.
தினசரி யாராவது இடைச்செவலுக்கு வந்து கொண்டேயிருக்கிறார்கள். கி.ரா. ஒரு கட்டுரையில் எழுதுகிறார். ஒரு தெரு, 50 வீடு கொண்ட ஒரு சின்ன கிராமத்தை நோக்கி தமிழகம் முழுவதிலிருந்தும் ஆட்கள் வந்துகொண்டே இருக்கின்றார்கள், ஏனென்றால் அது ஒரு கலைஞனுடைய கைபட்ட மண். ஒரு கலைஞனால் எழுதப்பட்ட மண். மண் என்பது ஒரு பருப்பொருள் தான். அதற்குமேல் ஒரு கலைஞன் அதை உருவாக்கி எடுக்கிறான். அதனால் தான் நாம் அவரை கரிசல் கலைஞன் என்கிறோம்.
மண்ணுடைய கலைஞனாக அவர் நிற்கிறார்; அது சாதாரண விஷயம் கிடையாது, எழுத்தாளனுடைய கடைசிப் பொறுப்பு மண்ணுடைய குரலாக, பிரதிநிதியாக அவன் நிற்பதுதான். கி.ரா நிற்கிறார்!
(கோவையில் கடந்த பிப்ரவரியில் நடந்த கி.ராவின் மிச்சக்கதைகள் நூல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் ஆற்றிய உரையில் ஒரு பகுதி. தொகுப்பு: புனிதா கஜேந்திரன்)
ஜூன், 2021