கீழடியில் கண்டெடுத்த மந்திரச் சிமிழ்! - இலக்கிய மாமணி கோணங்கி

கீழடியில் கண்டெடுத்த மந்திரச் சிமிழ்! -
இலக்கிய மாமணி கோணங்கி
தங்கச்சிமடம் மனோஜ்
Published on

கோணங்கியும் கல்குதிரையும் வெவ்வேறு தோற்றம் கொண்ட இரட்டைப்பிறவிகள். கடந்த 40 வருடங்களாக மதினிமார்கதை, உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை, கொல்லனின் ஆறுபெண்மக்கள், பாழி, பிதிரா, த, நீர்வளரி என குதிரின் இருட்டிலிருந்து தானியவிதைச் சொற்களை

சிறுகதைகளாக, புதினங்களாக தமிழ் சமூகத்திற்கு கைமாற்றியிருக்கிறார் கோணங்கி. சமீபத்தில் இவருக்கு தமிழக அரசு சார்பில் 2021-இல் புதியதாக அறிவிக்கப்பட்ட இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. அவரை கோவில்பட்டி மணல்மகுடி நாடகநிலத்தில் அந்திமழை இதழுக்காக சந்தித்தேன். அவர் பேசியதிலிருந்து:

‘நான் ஒன்பதாம் வகுப்பு படித்த காலத்தில் பொதுவுடமைவாதியான என் சித்தப்பா பிச்சையா  வும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அழகிரி சாமிக்குச் செயலாளராக இருந்த எட்டையபுரத்தைச்  சேர்ந்த எஸ்.எஸ்.தியாகராஜனும் (எஸ்.எஸ்.டி) நெருங்கிய நண்பர்கள். அவர் லட்சுமி மில் ஏஐடியூசி சங்கத்தில் தோழர்களுக்கு அடிக்கடி மார்க்சிய வகுப்பெடுப்பார்.  எஸ்.எஸ்.டி அறைக்கு

சென்றபோது, அங்கே பரந்தாமனின் ‘அஃக்'  சிற்றிதழ்  மேஜையின் மேல் கிடந்தது. அவர் குளிக்கச்  சென்ற நேரம் பார்த்து முதன் முதலாகச் சிற்றிதழைத் திருடி  பையில் வைத்துக் கொண்டேன். திருடிய என் கைவிரலை  உடும்பாய்க் கவ்விப் பிடித்துக் கொண்ட இன்னொரு சிற்றிதழ் நீலக்குயில். அது கோவில்பட்டியில் இருந்து  பறந்து பறந்து என் தலையைக் கொத்திக் கொத்தி சாத்தனார் ஆக்கிவிட்டது. அந்த அஃக்  இதழில் ந. முத்துச்சாமியின் ‘வண்டி' சிறுகதை என்னை நோக்கி இன்று வரை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அதன் விசித்திர அதீதப் புனைவோட்டம் கம்பனின் அதீதக் கவித்துவம் கொண்டது. அந்த அன்று பூட்டிய வண்டியிலேயே இன்றுவரை பயணித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு மூலம் ந.முத்துசாமியும் கம்பனும் தான். பின்னே நகுலனும் ப. சிங்காரமும் என் நவீனங்களுக்கு மரபணு நிழல்களாக உள்ளார்கள். ஒவ்வொரு முறையும் ‘கண்ணதாசன்' இதழ்களை எஸ்.எஸ்.டி அறையில் இருந்து திருடிச்செல்வது என் வழக்கம் என்றாலும் எஸ். எஸ். டி எனக்கு‘கண்தெரியாத இசைஞன்'  நாவலையும் கொடுத்தார். கார்க்கி, தாஸ்தாயேவஸ்கி ஆகியோரின் படைப்புகளையும் கொடுத்தார். பாசு அலீயேவாவின் ‘மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது' நாவலின் அத்தியாயம் அமைப்பில் ஒவ்வொரு பழமொழியுடனும் முதுமொழியுடனும் தொடங்கியது. இன்றைக்கு கருத்தடையானின் ‘கோட்டி' நாவல், நாட்டார் மண் குரல்வளைகளில் இருந்து தேர்ந்தெடுத்துத் துவங்குகிற இயற்கையைக் கண்டு வியக்கிறேன். அதற்கு  எஸ். எஸ் .டி கொடுத்த மண்கட்டியைக் காற்று அடித்துப் போகாது நாவல்தான் காரணியாக இருக்கலாம்.

ஆதர்ஷா பிலிம் சொசைட்டியில் தேவதச்சன், கௌரி சங்கர், பால்வண்ணம், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் இருந்தனர். அங்குதான் ரித்விக்கட்டக்கின் பர்ண ரேகா, மேகதாகதாரா, மேலும் மிருணாள்  சென்னின் திரைப்படங்களையும் பார்த்தபின் நடக்கும் உரையாடல்களில் இடதுசாரிகளும் படைப்பாளிகளும் கலந்து கொண்டதில் நடந்த விவாதங்களை ஆர்வத்தோடு கேட்பேன்.  இடது கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரப் படைப்பாளியான இன்னொருவர் பால்வண்ணம். அவரிடம் எல்லா சிற்றிதழ்களும் இருந்தன. எனக்கும் உதயசங்கருக்கும் சாரதிக்கும்  அப்பணசாமிக்கும் புத்தகங்களை வாரிக் கொடுத்தவர். பால்வண்ணம்,தேவப் பிரகாஷ், ‘தோழர்'நாவலாசிரியர் தனுஷ்கோடி ராமசாமி, ‘தேடல்' சிற்றிதழின் ஆசிரியர் சா.ஜோதி விநாயகம்,ஓவியர் மாரீஸ்  எல்லோரும் கூட்டமாய்ச் சேர்ந்து கொண்டு கி. ராஜநாராயணனைப் பார்க்க   உற்சாகமாக இடைசெவலுக்குப் போனோம். ஒருகாலத்தில். ‘தோழன் ரெங்கசாமி'  சிறுகதையை எழுதிய கி.ரா இடதுசாரியாகத்தான் இருந்தார். அன்றுவரை. சுற்றிலும் கருஞ்சை நிலங்கள் இருக்க நடுவில் உள்ள கோவில்பட்டி எரிசெவல்  நிலமாக இருக்கிறது. விவசாயிகள்  போராட்டத்துக்கு ஊரூராய் ஆயிரம் மாட்டு வண்டிகளோடு பருத்திப்பெண்டிரும் குலவையிட்டு ஊர்வலமாய் வருவதையும் பார்த்தோம். அன்று துப்பாக்கி சூட்டில் இறந்த விவசாயிகளின் நினைவுத் தூண்கள் அசைந்து கொண்டிருக்கின்றன.

 பிறகு,  வெக்கை, அஞ்ஞாடி நாவலாசிரியர் பூமணி இடதுசாரியாகத்தான் இருந்தார். கையெழுத்துப் பத்திரிகைகள் கிழக்கு, ராவணம், மானசரோவர், பட்டகம் இன்னும் பல பெயர்களில் வந்தன.  சென்னையிலிருந்து கவிஞர் ஆனந்த் வருவார், தேவதச்சனைப் பார்க்க.  அவர் எழுதிய பவளமல்லி குறுநாவல் கல்குதிரை இரண்டாம் இதழில் வந்தது. ஞானக்கூத்தன் வந்திருக்கிறார். என் நண்பன் சமயவேல் கோவில்பட்டிக்கே மாறுதலாகி வந்துவிட்டான். அப்போது கவிஞர் சமயவேலும் எஸ்.வி.ராஜதுரை, மேலும் சில தோழர்களுடன் இயக்கங்களோடும் தொடர்பு கொண்டிருந்தான். நண்பன் முருகேசபாண்டியனும் சமயவேலைப் பார்க்க வந்து போவார்.

நான் கிராமக்கூட்டுறவுச் சங்கத்தின் காரியதரிசியாக எட்டையபுரத்தில்  வேலை பார்த்தேன். பாரதி இருந்த வீதியில் தான் அடிக்கடி பாரதி விழா நடக்கும். புதுமைப்பித்தனைப் பற்றி அவரது நண்பர் ரகுநாதன் எழுதிய வரலாற்றுக் கட்டுரைநூல் என்னை பாதித்தது. டால்ஸ்டாய் கதைகளை மொழி பெயர்த்த எட்டையபுரம் ஸ்ரீரங்கன் எனக்கு புத்தகங்கள் தருவார். பாரதி மண்டபத்தில் ஒரு நூலகமே இருந்தது. இடதுசாரித் தலைவர்கள் பாரதி விழாவிற்கு வருவது இயல்பானது. கே.முத்தையா,

டி. செல்வராஜ், கந்தர்வன் போன்றவர்கள்... எங்களை உருவாக்கிய ஆசான் எஸ்.ஏ. பெருமாள். அவர் பாரதி பற்றி எட்டயபுரத்தில் பேசிய பேச்சு அந்த கருநிலத்தைச் சூழ்ந்திருந்தது. நான்பார்த்த வேலையை விட்டுவிட்டேன். சென்னையில் மயிலாப்பூரில் தென் சென்னை, இடது கம்யூனிஸ்ட் மாவட்ட அலுவலகம் என பல இடங்களில் பேனர் விரித்துத் தூங்கினேன். அங்கேயேதான் சிஎஸ் பாலச்சந்தர், செல்வசிங், இவர்களெல்லாம் என்னை எழுத வைத்தனர்.

அங்கிருந்து சாரித் தெருவுக்குச் சென்று விட்டேன். வைகறை, வீ. அரசு, வெ.பத்மா( அ.மங்கை) ஒரே அறையில் தங்கி இருந்தோம். ஒவ்வொருவரும் நாடோடிகளாய் இருந்தோம். அங்கே திருவையாறைச் சேர்ந்த தோழர் வைகறையின் நூலகத்தில் மணிக்கொடி, சரஸ்வதி எழுத்து தொகுப்புகளோடு  தேநீரும் வரிக்கியும் வாசிப்புமாகத் தொடர்ந்தது. செந்தில்நாதனின் சிகரம் சிற்றிதழில் என் ‘விளக்குச் சரம்'முதல் கதையாக அச்சானபோது திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பக்கம் ஒரு  ரோட்டில் வியந்து நின்று கொண்டிருந்தது ஞாபகத்தில் ஊர்ந்து வருகிறது. ஒரு வேளை உணவும் பிற வேளை வரிக்கியும்தான்.   டீ கடைகளில் எல்லா வேளையும் கடனுக்கு தேநீரும் உப்புரொட்டியும் கொடுத்தார்கள். பிறகு நானும் முக்கியமான நாடகக்காரன் பிரளயனும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். இருவருக்கும் வாக்குவாதம் தொடரும். மந்தைவெளியில் அரசும் மங்கையும் இருந்தனர். ஓராள் தங்கும் குடியிருப்புகள். அந்த அறைகள் ஒளி இல்லாதவை. அரிக்கேன் விளக்கில் தான் இருட்டு சிறுகதையை எழுதினேன் அங்கு. கருப்பு ரயில் சிறுகதையும் மந்தைவெளியில் எழுதியதுதான். சிகரம் துணையாசிரியர் பெ.நா. சிவம் மீண்டும் தொடங்கியிருந்த சிகரம் இதழுக்கு ஒரு முன்னோட்டம் எழுதிக் கொடுத்தேன். அது எல்லோரையும் வெகுவாகப் பாதித்தது. வீ. அரசும், மங்கையும் என்னைப் பத்திரமாகப் பாதுகாத்தனர். இன்றும் கூட அவர்கள் வீட்டில்தான் எத்தனை காலம் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ள நான்கு பக்கமும் திறந்திருக்கிறது அத்தனை நவீனச்சுவடிகளோடும் சித்தர்களின் திரட்டுகளோடும் வீ. அரசு உருவாக்கிய கல்மரம் நூலகம். சிற்றிதழ்கள் அனைத்துமே பைண்ட் செய்யப்பட்டு கல்மரத்தில் கூட்டமாய் வாக்குவாதம் செய்தபடி விசும்பை நோக்கி றெக்கைகளைக் கோதியபடி கால்களால் கற்கிளைகளைத் தொட்டுக்கொண்டுள்ளன.

எத்தனையோ நாடகக் காரர்களும் ஓவியர்களும் அன்றை இடதுசாரிக் கலைஞர்களோடு உறவுகளோடு இருந்தனர். மயன்கலைமரபின் செழுமையான மரபைத் தன் பென்சில் கண்களில் வைத்திருக்கும் கலை யோகியும் என் மாமனுமான சந்ருவை இன்னும் நான் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். வேலூரில் சீனு பப்லு கமலாலயன் அறிவொளி இயக்கத்தில் கூட்டமாக இருந்தநாட்களில் ‘விந்தை' புத்தகக் கடையை தோற்றுவித்தார்கள். கல்குதிரை ஒவ்வொரு இதழையும் பாரதி புத்தகாலயம் தான் கொண்டு வந்திருக்கிறது.  எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பார்கள். பாரதி புத்தகாலயத்தின் புத்தக ரேக்குகளிடையே பாய்விரித்துத் தூங்கியிருக்கிறேன். ஒவ்வொரு கல்குதிரை முடியும் போதும் எனக்கு உடல்நிலை மோசமடைந்து விடும்.  வங்கி யூனியன் அலுவலகத்தில் நூற்றி எட்டாம் எண் அறையில் படுத்த படுக்கையாகி விடுவேன். காய்ச்சல் வேகம் கூடக்கூட உலகத்தில் தனித்து விடப்பட்ட நகுலனின்  உரையாடலாகிவிடுவேன். என் டைபாய்டு காய்ச்சலின் மஞ்சள் ஆரஞ்சு நாட்கள் மங்கலாக என்னை ஆக்கிரமித்து விடும். பால்ய வயதில் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மூன்றாம் வகுப்பு நாட்களில் ஆண்டாள் என்கூடப் படித்ததுவரை தோற்றமாகி விடும். அவ்வூரோடு ஆண்டாள் எழுதியதை கவிதாயினிகள் இசைத் தனர்.  நான் அந்த ஊரின் மஞ்சப்பூத் தெருவில்தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  எனக்கு முதல் டைபாய்டு வந்தது ஸ்ரீ வில்லிபுத்தூரில் தான். காய்ச்சலுக்குள் என் அம்மா நினைவு வந்து அழுவேன். என்னோடு ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கிராமத்திலும்கூட இருந்த தமிழ்ச்செல்வன் மஞ்சப்பூத் தெருவின் சூலகம் பிரியாத பண்பு கொண்டவன். அந்தத் தெரு வழியே தான் செல்வண்ணன் சைக்கிள் பழகினான் அவன் நண்பன் சேஷாத்திரியோடு. செல்வண்ணன் என்கிட்ட இருந்தாலே சீக்கிரத்தில் என் உடல்நிலை சரியாகிவிடும்.  ஆனால் அருகில் இருப்பது எந்த ஊரிலிருந்தோ வந்த தோழர்களாக இருந்தார்கள்.  என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து குளுகோஸ் ஏற்றித் தலைமாட்டில் அமர்ந்திருந்த எஸ்.எப்.ஐ வெங்கட் என்னைக் காப்பாற்றி எனக்கான பிரட்டையும் தேநீரையும் வைத்திருந்தான்.

அனாதைத்தனத்தின் பிணியுற்ற சென்னை நாட்களில்.   விடிய விடிய மெய்ப்பு நோக்கிப் பிரதிகளைச் செம்மைப்படுத்தித் தர தோழர்கள் தங்ஸ்,சிரா‌ஜ், த.ராஜன், ஆகாசமுத்து இருந்தனர். கவிஞர் ஸ்ரீஷங்கர் கூடவே இருந்து இரண்டாம் கட்ட மெய்ப்பு நோக்கியவர். அதற்கெல்லாம் விலையில்லை. தூத்துக்குடி தோழர் கென்னடி, தோழர்நாகராஜன்  சொல்லி பல இதழ்கள் வடிவமைத்துக் கொடுத்தார். என் நண்பன் ஜீவமணி அதற்கு முந்தைய எட்டு இதழ்களை வடிவமைத்து தந்தார். எந்தப் பணமும் வாங்கிக் கொண்டதில்லை,' என சடசடவென அடைமழைபோல் தன் நினைவுகளைப் பொழிகிறார் கோணங்கி.

அவரிடம் தமிழக அரசின் விருதினைப் பற்றி கேட்டோம். சிரித்தவர், ‘யுகங்களுக்கிடையே அலைந்து கொண்டிருக்கும் சாத்தூர் வெள்ளரி நாடோடிக் கதைச்சொல்லியைக் கூட்டாக  வாசித்து உற்றுணர்ந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்று உணரத் தோன்றுகிறது. இது விருதல்ல; தமிழி லிபிகள் வரைந்த கீழடியில் கண்டெடுத்த மந்திரச் சிமிழாகப் பார்க்கிறேன்!' என்றார்.

செப்டம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com