என் தோட்டத்தில் ஒவ்வொரு மரத்திலும் ஒரு முனி இருக்கு!

என் தோட்டத்தில் ஒவ்வொரு மரத்திலும் ஒரு முனி இருக்கு!
ஆர். கணேசன்   
Published on

திடீரென்று என்னை குப்புறப்பிடித்து தள்ளிவுட்டாங்க. நான் எதிர் பார்க்கவேயில்லை.. ஒருமாதிரி உருண்டு பெரண்டு எந்திரிச்சிட்டேன்.. இது ஒரு வகையான வித்தை.. ஒரு தடவை விழுந்து எழுந்திருச்சேன். இப்ப 60 தடவை விழுந்து எழுந்திருப்பேன். இது புதுவகையான வித்தை பார்க்கிறாயா?''  பூடகமாகப் பேசுகிறார் ஓவியர் சந்ரு. மாணவர்களால்  மாஸ்டர் என்றும் வாத்தியார் என்றும் அழைக்கப்படுகிற மூத்த கலைஞர்.

தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சின்ன சங்கரன்கோவிலில் தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் அவரது  ‘‘குருவனம்'' தோட்டம் பரந்து விரிந்திருக்கிறது. தோட்டத்தில் அடிப்படை வேலைகள் ஓரமாக நடந்துகொண்டிருந்தன. அங்கு சந்ருவை சந்தித்தபோது அவரது பேச்சில் உற்சாகமும் கம்பீரமும் ததும்பின.

‘‘என் தோட்டத்தின் ஒவ்வொரு மரத்திலும் ஒரு முனி இருக்கு.. தினம் காலையில் எழுந்திருச்சி போய்  ஏய் முனி யாரப்பா நீ என கேட்பேன். என் பெயர் ஆபிரகாம் பண்டிதர். அப்படியா! நீ என்ன சோலி பார்க்கிற? இசை ஆராய்ச்சி செய்திருக்கேன். மாநாடு நடத்தியிருக்கிறேன். சரி, இன்னைக்கு ராத்திரி உனக்குதான் படையல். மறுநாள் காலையில் ஆபிரகாம் பண்டிதருக்கு சிலை தயாராகிவிடும். இப்படி 600 முனிக்கும் சிலை செய்யணும். அதற்கு மேலேயும் போகும். இந்த குருவனத்தை திறந்தவெளி அருங்காட்சியகமா மாற்றணும்,'' என தனது திட்டத்தை விவரித்தார்.

‘‘பெரிய ஆளுமைகளை எளிதாக மறந்துவிடுகிறோம். அவர்களை கௌரவப்படுத்தவேண்டும். இந்த தலைமுறைக்கு அறிமுகம் செய்யவேண்டும் அதனால்தான் ஆளுமைகளை சிலையாக செய்வதில் தொடர்ந்து ஈடுபடுகிறேன்.

ஏற்கெனவே சென்னையில்  பண்பாட்டு ஆளுமைகளான களரி, தெருக்கூத்து கலைஞர்களை சிலைகளாகப் பண்ணினேன். தஞ்சாவூர் கோயில்தான் கம்பீரமாக நிற்கிறதே. திரும்ப அதற்கு ஏன் மினியேச்சர் பண்ணனும்? இதை தப்பாகச் சொல்லுவதாக நினைக்கக்கூடாது  ஐப்பானில் 20 அடி உயரத்தில் கலைஞர்களுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். நம்ம தேவராட்ட கலைஞர் கைலாசமூர்த்தி வாழ்க்கையை அந்த கலைக்காக ஒப்படைத்தார் அப்ப அவருக்கு நாம என்ன செய்துவிட்டோம்? இவற்றையெல்லாம் மனதில் வைத்துதான் சென்னையில் சிலைகள் வைத்தோம். அதேபோல சமூக ஏற்ற தாழ்வுகளுக்கு இடையே ஒடுக்கப்பட்டோர்களுக்காக யாரெல்லாம் துணையாக இருந்து வேலை செய்தார்களோ அவர்களுக்குச் சிலை செய்யலாம் என்று ஒரு நிகழ்ச்சிக்காக அழைக்கும்போது திரைப்பட இயக்குநர் ரஞ்சித்திடம் பேசினேன். தமிழ்நாட்டில் இருந்து 300 பெயர்களை ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தொகுத்து கொடுத்தார். அவர்களுக்கு சிலைகள் செய்து நூலகத்தில் வைத்தோம்,'' என்று சிலைகள் உருவான கதைகளை பேசிய ஓவியர் சந்ருவிடம் நடப்பு கதையை கேட்டேன்.

‘‘போன ஆண்டு திருநெல்வேலியில் நடந்த புத்தகக்காட்சியில் அரசு அதிகாரிகளுக்கு மத்தியில் பேசும்போது, உலகமயமாக்கம் நமக்கு ஒரு பண்பாட்டு நெருக்கடியை அளித்துள்ளது. நம்முடைய பழக்க வழக்கமான நடைஉடை பாவனையை மாற்றுகிறது. நாம் எந்த சூழலில் பிறந்தோமோ அந்த சூழலுக்கான உடல் அமைப்புடன்தான் இருக்கிறோம். வெயில் காலத்தில்தான் வெள்ளரிக்கா காய்க்கும்.. இயற்கையே அப்படித்தான் இருக்கு. நாம் பண்பாட்டை ஆடம்பரமாகப் பார்த்துவிடக்கூடாது. அருகம்புல் என்ற பெயர் ஓரேநாளில் சூட்டவில்லை. இந்த பெயர் வருவதற்கு ஒரு காலம் பிடித்திருக்கிறது. நம்ம பண்பாட்டை இயற்கையோடு இயைந்து வாழ்ற வாழ்க்கையாகத்தான் பார்க்கவேண்டியிருக்கு. அதுதான் கலையோட இன்னோரு நிகழ்வாகவும் வரவேண்டியிருக்கு என்று பேசிமுடித்தவுடன் அதிகாரிகள் என்னிடம், ‘ஓவியர் என்றால் பொம்மை படம் போடுறவங்க அப்படியின்னு நாங்க உங்களை தப்பாக நினைத்துவிட்டோம் நீங்க ரொம்ப நல்லா பேசுனீங்க' என்று கைகுலுக்கினார்கள்.

அதேபோல ஒருநாள் கிருஷி மற்றும் தஞ்சைகணேசராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது திருநெல்வேலியில் ஆளுமைகளுக்கு சிலை செய்யலாம், அவற்றை நெல்லை நகரில் ஏதாவது ஒரு பூங்காவில் வைக்கலாம் என்றேன். அரசு அதிகாரிகளுடன் புத்தகக்காட்சியில் பழகிய பழக்கம் இருந்ததால் உடனே பார்த்து பேசினோம். அவர்களும் சம்மதித்தார்கள். பிறகு யாரையெல்லாம் சிலையாகச் செய்யலாம் என்று பெயர்களை தொகுக்க ஒரு குழு அமைத்தோம். அந்த குழுவினரான தொ.ப., கிருஷி, வெள்உவன், முத்துசெல்வி, இலக்குவன் ஆகியோர் திருநெல்வேலி ஆளுமைகளின் பெயர்களை தொகுத்தார்கள். அதில் இருந்து முதல் கட்டமாக 60 பெயர்களை தேர்ந்தேடுத்து அவர்கள் பற்றிய சிறுகுறிப்புகள் புகைப்படங்கள் போன்றவற்றை தயாரித்தோம். சிலை செய்வதற்கு மாணவர்கள் 60 பேரை தேர்ந்தெடுத்தோம். அருங்காட்சியத்தில் சிலைகளை வைக்கலாம் என்று முடிவு செய்து, மீண்டும் அரசு அதிகாரிகளைப் பார்த்தோம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது வெளியில் நின்ற நண்பர்கள் ‘என்னாச்சி உள்ளே என்ன நடந்தது?' என்று கேட்டார்கள். வடிவேலு ஒரு படத்தில் வேட்டியை தூக்கி டவுசரில் கையைவிட்டு பையில் ஒன்றுமில்லை என்று காட்டுவாரே அந்தமாதிரி செய்யவேண்டியதாயிற்று. என்ன நடந்ததென்றால்  தொகுத்த 58 பெயர்களில் குறிப்பிட்ட சாதியை சார்ந்த பெயர்கள்தான் அதிகமாக இருந்தது என்ற விவாதம் வந்ததால் அந்த திட்டமே சிலையாகிவிட்டது..

மறைந்த அறிஞர் தொ.பரமசிவனை சிலையாக வடித்தால் யாரும் பிரச்னையாக பார்க்கமாட்டார்கள், எல்லோரும் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்பதால் முதலில் தொப. சிலையை மட்டும் செய்தேன்.

இந்த நிகழ்வு இயற்கை நமக்கு கொடுத்த சந்தர்ப்பம். 60 சிலைகள் பொது இடத்தில் வைப்பதற்குத்தானே இவர்கள் யோசித்தார்கள்? நான் இங்கே 600 பனைமரம் நட்டு வைத்திருக்கிறேன். தை மாதத்தில் பெய்த மழையில் குருத்து விட்டிருக்கு ஒவ்வொரு பனைமரமும் என்னைப் பொறுத்தவரை முனிதான். ஒவ்வொரு முனிக்கும் ஒரு சிலை. ஏற்கனவே சிலைக்காக எல்லோரும் மூன்றுமாதம் உழைத்தோம். இப்போது 600 சிலை செய்யப்போறேன். யாரும் ஏன் பிராமண சிலையை வைத்தாய், செட்டியார் சிலையை வைக்கவில்லை என்று என்னை கேட்கமுடியாது. சமூக மேம்பாட்டுக்கான போராளிகள், பல்வேறு துறை வல்லுனர்களைதான்  சிலையாகச் செய்யப்போகிறேன்.  சிலைகள் செய்யும் திட்டத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளேன். 21 ஆம் நூற்றாண்டில் இருந்து 17ஆம்  நூற்றாண்டு வரையும், 17ஆம் நூற்றாண்டில் இருந்து சங்க காலம் வரை, பிறகு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தமிழர்கள், வெளிநாட்டுக்காரர்களான ஜான்மார்ஷல், வீரமாமுனிவர், கால்டுவெல், அலெக்ஸாண்டர் ரியா, ஆனந்த குமார சுவாமி...இப்படியாக இந்த பட்டியல் நீளும்.

இதில் நான் மதிக்கிற பெரிய ஓவிய ஆளுமை ஆனந்தகுமார சுவாமி. நடராஜர் சிலையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர். ஓவியர் ஒரு சிலையை எந்த கோணத்தில் பண்ணியிருப்பார் எந்த சூழலில் அந்த தூண்டல் கிடைத்திருக்கும், அப்படியெல்லாம் யோசிக்கக்கூடியவர். இவர் தமிழர்தான். இலங்கையில் பிறந்தார். நம்முடைய ஓவியப்பாணியை உலகம் முழுவதும் கொண்டு சென்றார்.

என்னுடைய மாணவர்களிடம் இந்த திட்டத்தை சொன்னதுதான் தாமதம், 70 பேர் என் இடத்திற்கு எப்ப கூப்பிட்டாலும் வர தயாராகிவிட்டனர். இதுவரை மாணவர்கள் என்னிடம் எதுவுமே எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நான் அவர்களுக்கு ஏதாவது செய்வேன். அழைத்தால்போதும் டீ மட்டும் குடித்துவிட்டாவது வேலை செய்ய கிளம்பி வருவார்கள். என்னை ஏன் கூப்பிடவில்லை என்று நிறைய மாணவர்கள் கோபப்பட்டு விட்டார்கள். அவர்களிடம்  ‘யாரை வேண்டுமானாலும் கூட்டிட்டு வா சோறு கொடுத்துவிடுறேன், தோட்டத்து பக்கத்தில தாமிரபரணி ஆறு ஓடுகிறது குளித்துக்கொள்ளலாம், அருகில் உள்ள பாறையில் தூங்கலாம்' என சொல்லிவிட்டேன். இப்படி சொன்னவுடன்  அவர்கள் உற்சாகமாகிவிட்டார்கள்.

மாணவர்கள் இந்த (மார்ச்) மாதம் மூன்றுநாட்கள் தங்கியிருந்து சிலைகள் செய்கிறார்கள். தொ.ப, நம்மாழ்வார், ஐராவதம் ஆகியோரின் சிலைகள் தயாராக உள்ளன. அதே மாதம் இருபதாம் தேதி  குருவனத்தில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை நல்லகண்ணு துவக்கி வைக்கிறார்.

ஒவ்வொரு சிலைக்கும் புரவலர்கள் கிடைத்தது தனி கதை. நான் ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை செய்வதற்கு பாலசந்திரன் ஐ.ஏ.ஏஸ்  நன்கொடை வழங்கினார். தேனி மாவட்டத்துக்காரர். ஒருமுறை அவருக்கு போன் செய்து இந்த சிலைகள் செய்கிற விசயத்தை சொல்லி நீங்கள் ஆலோசகராக இருங்கள் என்றேன். அவர் உடனே  வெறும் வாய்சொல் போதுமா? என்றார். வேறு என்ன?.. புரியாமல் கேட்டேன். என்னை பார்த்தால் ஒரு புரவலராக தெரியவில்லையா? ஒரு சிலைக்கு எவ்வளவு? என்றார். 30,000 சொன்னேன். பாண்டித்துரை தேவர் சிலைக்கு ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு மிச்சத்தை நீங்கள் விரும்பிய ஆளுமைக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றார்.  ஆனந்த குமாரசுவாமிக்கும் நகுலனுக்கும் யோகம் அடித்தது. இப்படியாக ஒவ்வொரு சிலைக்கும் புரவலர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு ஓய்வூதியம் வருது, சோறு சாப்பிடுகிறேன். செரிப்பதற்குதான் இந்த வேலைகள் செய்கிறேன். என்னைச்சுற்றி மாணவர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த சிலைகளின் எண்ணிகை  ஆயிரமாக மாறலாம். அதற்குள் நான் இறந்தும் போகலாம். எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டே போகும் உலகத்திலே எந்தவொரு ஒவியரும் இவ்வளவு சிலைகளை வைத்திருப்பார்களா என்றால் சந்தேகம்தான். ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது பயன்படுத்தப்போகிறேன்,'' திருப்தியுடன் சொல்லி முடிக்கிறார் மாஸ்டர் சந்ரு!

புகைப்படங்கள்  : ஆர்.  கணேசன்   

மார்ச் 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com