‘ஊரில் இருந்தா விருது தருவோம்' - நாசர் கலகல!

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா
Published on

மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் அறக்கட்டளையின் மூலம் எழுத்தாளர் ஜெயந்தனின் மகன் சீராளன் ஜெயந்தனின் முன்னெடுப்பில் 'ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்' வழங்கும் விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

நாடகத்துக்கு கோமதி சங்கர் எழுதிய 'நீலகண்ட பிரம்மசாரி' நாடக நூலுக்கும்,

சிறுகதைக்கு ரா. செந்தில்குமார் எழுதிய 'பதிமூன்று மோதிரங்கள்' நூலுக்கும் ,

நாவலுக்கு முஹம்மது யூசுப் எழுதிய 'கொத்தாளி' நாவலுக்கும் கவிதைக்கு கார்த்திக் திலகன் எழுதிய எழுதிய 'அல்லியம்' நூலுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த இலக்கியப் போட்டியின் நடுவர்களாக நாவலுக்கு நாஞ்சில் நாடன், நாடகத்திற்கு பேராசிரியர் அ. ராமசாமி, சிறுகதைக்கு சு. வேணுகோபால். கவிதைக்குக் கவிஞர் கரிகாலன் ஆகியோர் பொறுப்பேற்றுப் படைப்புகளைத் தெரிவு செய்திருந்தனர்.

விழாவுக்கு நாஞ்சில் நாடன் வர இயலாததால் அவரது உரை வாசிக்கப்பட்டது. பேராசிரியர் அ.ராமசாமி, எழுத்தாளர் சு. வேணுகோபால், கவிஞர் கரிகாலன் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சித் தொகுப்பு அமிர்தம் சூர்யா.

விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் நாசர் கலந்து கொண்டார். அவர் பேசும்போது,

"இந்த மேடையில் நான் எழுத்தாளர்களுடன் கலந்து கொள்வது பெருமையாக இருக்கிறது. ஜெயந்தன் அவர்களின் நினைவாக வழங்கப்படும் இந்த விருதுகள் மிகவும் மேன்மையானவை.

ஒவ்வொரு விருதும் வழங்கப்படுவதற்கு முன்பு அது விவாதம் ஆகும். ஆனால் இங்கே இந்த விருதுக்கான தேர்வு எப்படி நடந்தது என்று ஒரு எழுத்தாளர் பேசும் போது, அந்த பரிசு நியாயப்படுத்தும் வகையில் இருந்தது.

அவர் பேசிய பேச்சு எனக்கு ஒரு பாடமாக இருந்தது ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும்? ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும்? ஒரு நாடகம் எப்படி இருக்க வேண்டும்? என்று ஒரு பாடமாக இருந்தது. இங்கே பரிசு பெறும் செந்தில் குமார் குறித்து எனக்கு கூடுதல் மகிழ்ச்சி உண்டு. உலகில் எங்கு சென்றாலும் தமிழர்கள் இருப்பார்கள். ஜப்பானில் ஒரு விழாவிற்குச் சென்றபோது அவரைச் சந்தித்தேன். அப்போது அவரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம் இலக்கியத்தைப் பற்றி, நாடகங்களைப் பற்றி சினிமாவைப் பற்றி ஏராளம் பேசினோம். இந்த விருதைப் பெற அவர் கடல் கடந்து வந்திருப்பது என் மனதிற்கு நெருக்கமான விஷயம்.

இங்கே படைப்புகள் விருதுக்குத் தேர்வான விதம் குறித்து எழுத்தாளர் வேணுகோபால் அவர்கள் விளக்கமாகக் கூறினார். எவ்வளவு கவனமாகத் தகுதியைக் கவனித்து தேர்வு செய்துள்ளார் என்பதை அறிய முடிந்தது. உண்மையான தேர்வு என்பது ஆளைப் பார்த்து தேர்வு செய்வதல்ல படைப்பைப் பார்த்து தேர்வு செய்வது என்று புரிந்தது.

எங்களுக்கெல்லாம் போன் செய்வார்கள். நீங்கள் அடுத்த மாதம் 21ஆம் தேதி ஊரில் இருக்கிறீர்களா? என்பார்கள். இல்லை சார் அன்னைக்கு ஹைதராபாத்தில் இருப்போம் என்போம். ஏன் என்று கேட்டால், ஊரில் இருந்தால் உங்களுக்கு ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் விருது கொடுக்கலாம் என்று நினைத்தோம், பரவாயில்லை சார் இந்த வருஷம் வேற ஒருத்தருக்குக் கொடுத்து விடுகிறோம். அடுத்ததாகப் பார்க்கலாம் என்பார்கள்.

இங்கே இலக்கியப் போட்டியில் பரிசு பெற்றவர்களில் வெற்றி பெற்ற இருவர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் .அவர்கள் வருவார்களா வரமாட்டார்களா என்பதைப் பார்க்காமல் தேர்வு செய்துள்ளார்கள். அப்படிக் கடுமையான நிபந்தனையோடு தேர்வு செய்துள்ளதால்தான் இந்த விருதின் மீது எனக்கு மேலும் மதிப்பு கூடுகிறது.

விருது வழங்கும் நாசர்
விருது வழங்கும் நாசர்

எனக்கு நாடகங்களின் நடிப்பதற்கு ஆசை. இங்கே மேடையில் இருக்கும் எனது நண்பரும் ஆசிரியருமான அ. ராமசாமி அவர்கள் ஜெயந்தனின் 'தெய்வம்' நாடகத்தைப் பற்றிப் பேசினார் .ஜெயந்தனின் அந்த 'ஒரு ரூபாய் 'நாடகத்தை நான் மேடையேற்றுகிறேன். அந்த ஒரு நபர் நாடகத்தில் நான் நடிக்கிறேன்.

நான் ஒருபோதும் என்னைச் சிறந்த நடிகன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் நான் மற்ற நடிகர்களை விட மாறுபட்ட நடிகன் என்பதை உணர்கிறேன். அப்படி நான் மாறுபட்ட நடிகனாக இருப்பதற்குக் காரணம் எனது வாசிப்புதான். எங்கோ மதுரையில் இருப்பவரை, திருநெல்வேலியில் இருப்பவரை நான் ஒரு கதாபாத்திரமாக வெளிப்படுத்துவதற்குக் காரணம் எங்கோ நான் படித்த பாத்திரங்களும் அதை உருவாக்கிய எழுத்தாளர்களும் தான் காரணம். எனது வாசிப்பின் மூலம் நான் எங்கோ சிறுகதைகளில் நாவல்களில் படித்த குணச்சித்திரங்கள் எல்லாம் என் நடிப்பின் மூலம் என்னையும் அறியாமல் வெளிப்படுகிறார்கள். இந்த நேரத்தில் அந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் நான் நன்றி கூறுகிறேன்' இவ்வாறு நடிகர் நாசர் பேசினார்.

விழாவில் ஜெயந்தனின் 'வாழ்க்கை ஓடும்' சிறுகதை முத்துசுந்தரன் இயக்கத்தில் குறும்படமாகக் காட்டப்பட்டது. ஜெயந்தன் எழுதிய 'மனுஷா மனுஷா' என்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டது. இதை ' பரீக்ஷா' குழுவினர் மேடையேற்றினார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com