ஷைத்தான்

ஓவியம்
ஓவியம்ஜீவா
Published on

தூக்கத்தை விட தொழுகையே மேலானது. தொழுகைக்கு விரைந்து வாரீர்!' அதிகாலை பாங்கு சப்தம் அதிகாலை நிசப்தத்தை கலைத்தாலும் ஒரு புத்துணர்ச்சியாக இருந்தது ரகுமானுக்கு.இந்த சப்தத்தை கேட்டு எத்தனை நாட்களாகி விட்டது. எழுந்து முகம் கழுவி வாசலுக்கு வந்தான். வீட்டில் அம்மாவும் தொழுகைக்கு ஆயத்தமானாள்.

 ‘அஞ்சு வருசம் உழச்சுட்டு நேத்துதான் வந்துருக்க. கண்ணு கருப்படிச்சு நெஞ்சுக்கூடு தெரிய்து பாரு. பேசாமா படுக்கலாம்லய்யா. ஒருவேள தொழுகாட்டி அல்லா ஒண்ணும் அடிக்கமாட்டா!' என்று அம்மா டீயை நீட்டினாள். அம்மா தூங்குவதும் எழுவதையும் ரகுமான் பார்த்ததே இல்லை. இது அனேக அம்மாக்களுக்கும் பொருந்தும்.

 ‘ரொம்பநாள் ஆச்சுலம்மா, பள்ளி வேற புதுசா இழுத்து கட்டிருக்காங்கன்னு சம்சு போன்ல சொன்னான். அதான் பள்ளிய பாத்து தொழுதுட்டு அப்புடியே பசங்கள பாத்துட்டு வந்துறேம்மா!' என்றபடி செருப்பை மாட்டினான்.

அதிகாலை ஏகாந்தம் வெயில் காலத்திலும் இருக்கும் குளிர் இன்னும் அவனுக்கு உற்சாகத்தை கூட்டியது. செருப்பை தேடியபோது இவன் ஊரிலிருந்து ஷூவோடு வந்தது ஞாபகம் வந்தது. அத்தாவின் செருப்பை மாட்டினான். அத்தாவுக்கு இது நள்ளிரவு.

வீட்டிலிருந்து சரியாக நூற்றைம்பது அடி நடந்தால் பள்ளிவாசல் வந்துவிடலாம். ரகுமான் மனதில் இருக்கும் உற்சாகம் ரெண்டாயிரம் அடி கூட நடக்கலாம் போலிருந்தது. அதிகாலை செருப்பு எழுப்பிய வெடுக் வெடுக் சப்தம் சொந்த ஊரில் இருப்பதை தெரிவித்தது. சட்டென்றே ஒரு ஈனஸ்வரம். எலியா? அல்லது பூனையின் சப்தமாக இருக்க வாய்ப்புள்ளது. சட்டை செய்யாமல் மீண்டும் நடந்தான். செந்தி மாமா பெட்டிகடை நெருங்க நெருங்க சப்தம் அதிகமானது. லேசான கவன ஈர்ப்புடன் கடையை பார்த்தான். பிறந்து இரண்டு வாரமே ஆன வெளிர் நிற நாய்க்குட்டி இவனை நோக்கி ஓடிவந்தது. கும்மிருட்டிலும் அதன் கண்கள் பிரகாசமாக இருந்தது. காதுகள் பெரிதாக இருந்திருந்தால் அது முயல் என்றே நம்புவார்கள் போலிருந்தது.

விரட்ட மனமில்லாமல் நடந்தான். காலுக்கு அருகிலேயே ஓடி வந்தது. லேசாக உரசவும் செய்தது. கூடவே வாலையும் ஆட்டிக்கொண்டு உற்சாகமாக வந்தது. அந்த இருட்டிலும் குட்டியின் வெளிர்நிறம் பார்ப்பதற்கே அழகாக இருந்தது. பிறந்து சில நாட்கள் ஆன எல்லா நாயும் அழகாகத்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டான்.

பள்ளிவரை அந்த குட்டி அவனை விடவில்லை. கிட்டத்தட்ட பள்ளிவாசல் வாயில் வரை வந்துவிட்டது. செருப்பைக் கழற்றும் போது தாவுத் பாய் பார்த்துவிட்டார். அவர் ரகுமானுடைய அத்தாவின் நண்பர்.

‘ஸ்ஸலாமு அலேய்க்கும்' நூறு பேர் இருந்தாலும் தாவுத் பாயின் ஸலாம் தனித்துவமாக இருக்கும்.  ‘வ அலைக்கும் ஸலாம்' என்று ஆரத்தழுவினான். அப்போது இருவரின் கால்களுக்கு நடுவில் நின்று எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த குட்டி நாய் தாவுத் பாயின் கால்களை சுரண்டி பார்த்துவிட்டு நக்கியது.

ஷைத்தானே என்று கால்களால் குட்டியைத்  தூக்கி எறிந்தார். வீச்சென்று கத்திக்கொண்டு கால்வாய்க்கு அருகில் போய் விழுந்தது.ரகுமானுக்கு என்னவோ போலாகிவிட்டது.

 ‘பாவம் மாமா, குட்டி நாயி!'

‘என்னது குட்டி நாயா, ஷைத்தான் புடிச்சது கால நக்கிப்புடுச்சு! சரி சனியன வுடு. எத்தனை வருசமாச்சு உன்ன பாத்து' என்றபடி பாசமாக ரகுமானின் கன்னங்களை தடவிக்கொடுத்தார். அந்த தடவலில் வாக்களித்தபடி செல்போன் வாங்கினானோ இல்லையோ என்ற பரிதவிப்பும் அடங்கியிருந்தது.

‘மாமா, உங்களுக்கு போன் வாங்கிட்டு வந்துருக்கேன். சாயங்காலம் வீட்டுக்கு வந்து தரேன்'

‘அட மாப்ள, அதயா கேட்டேன். நீ நல்லபடியா வந்ததே போதும். ஏ மச்சுனன் தாய்ளிட்ட நாலு பயணமா சொல்லிட்டு வர்றேன். மசிரு போச்சுன்னு  எதாவது ஒரு சாக்கு சொல்லி ஆட்டிட்டு ஓடிற்ரான். நீ தான் மாப்ள சொன்னபடியே ஒ அப்பனை மாதிரி நூல் புடிச்ச மாரி இருக்க'

தொழுகை முடிந்து வரும்போது கும்மிருட்டு, பூச்சி சப்தம் குறைந்து பகல் பொழுது ஆரம்பமாகிக்கொண்டிருந்தது.கோடி கொடுத்தாலும் உள்ளூரில் தொழுவது போல வராது. ஆனால் சொந்தமற்ற தேசத்தில் அழுது துவா கேட்கும் பிராத்தனை வீரியம் சொந்த ஊர் தொழுகையில் இருக்காது. தொழுது முடித்து, செருப்பைக் காப்பாற்றிகொள்ளும் அற்ப மனப்போராட்டம் கூட பிரார்த்தனையை பாதித்துவிடும்.

தொழுகை முடிந்து கடைசி ஆளாக வந்தான். செருப்புகளை கண்டெடுக்கும் போராட்டத்தின் விளைவாக ஜோடி பிரிந்திருந்தது. செருப்பை சாவகாசமாகத் தேடிக்கொண்டிருக்கும் போது செடி ஓரம் பதுங்கியிருந்த குட்டி மீண்டும் இவனை நோக்கி ஓடி வந்தது. இவன் கீழே குனிந்து பார்க்கும் போது அதுவும் அவனை பார்த்தது. சிறிய வாலை நாலாபுறமும் ஆட்டியது. தொழுகை முடிந்து இத்தனை பேர் போனாலும் இவனுக்காக பிரத்யோகமாக காத்திருந்தது இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கூடவே தாவூத் மாமா காலால் எத்திவிட்டது இவனுக்கு உடன்பாடே இல்லை. முப்பது நொடி நகராமல் அப்படியே நின்றிருந்தான். அதுவும் அப்படியே நின்றபடி வேறுபக்கம் பார்த்து வாலாட்டியது.

நடந்தான், அதுவும் நடந்தது. சிறுவயதில் ரகுமான் வீட்டில் நாய் வளர்த்திருக்கிறார்கள். அப்போது இன்று போல இஸ்லாமியர் வாழ்வியல் நெறி காட்டும் இயக்கங்கள் இல்லை. கடமைக்கு நான்கு நாகூர் அனிபா பாடல்கள் கேட்பதோடு சரி. வீட்டில் முனி ஓட்டம் இருப்பதாக நம்பப்பட்டு ஊருக்கு வெளியே உக்கிரமாக இருக்கும் முனியய்யா கோவிலுக்கு வெள்ளிக்கிழமை தோறும் ரகுமானின் அம்மா அர்ச்சனை கூட செய்திருக்கிறார்.

குட்டி இவனை விடுவதாக இல்லை. இவனுக்கு குட்டியை அழைத்துச் செல்வதில் பிரச்னை இல்லை. சிறுவயது கொண்டு நாய்கள் மீது இவனுக்கு தனிப்பரிவு உண்டு. இவர்கள் வளர்த்த நாய் மினிலாரியில் நசுங்கிச் செத்தது இவன் கண் முன்னால்தான். அந்த பரிவோடு இப்படியே இதை கூட்டிச்சென்றால்பிரச்சனை நிச்சயம். குட்டியை மீண்டும் விரட்டிப் பார்த்தான். அது இன்னும் பாசமாக கால்களை உரசிக்கொண்டு வந்தது. அவனும் அதைதான் எதிர்பார்த்தான். மனதை கல்லாக்கி லேசாக கால்களால் தள்ளிவிட்டான். விழுந்த வேகத்தில் வந்து மீண்டும் இவன் கால்களை சுற்றிக்கொண்டு வந்து நின்றது.

வீட்டுக்கு கூட்டிச்சென்றால் அத்தா கடும் கோபம் கொள்வார். அம்மா இருக்கும் கவலையில் இது இன்னொன்றாக சேரும். மச்சானுடன் கோபித்துக் கொண்டு அக்கா வீட்டில் இருக்கிறாள். மச்சான் வேறு யாருமில்லை அவனின் குப்பி மகன். அதாவது அத்தாவின் சகோதரி மகன்.

நீயும் என்னைக் கைவிட்டு விடுவாயா? என்பது போல பார்த்த குட்டியை முதன் முறையாக உதடுகளைக் குவித்து வைத்து சப்தம் எழுப்பினான். அது மகிழ்ச்சியில் முன்கால்களை அவன் கால்களை லேசாக வருடிக்கொடுத்தது. பொழுதும் விடிந்துவிட்டது.

கேட்டை திறந்ததும் இவனுக்கு முன்னால் ஓடியது. நடப்பது நடக்கட்டும் என்பது போல அதன் பின்னால் நடந்தான். அத்தா சீக்கிரமாகவே எழுந்து பல் துலக்கி முடித்துவிட்டு வாசலில் போட்டிருந்த டீப்பாய் அருகே ஸ்டூல் போட்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். நாய்க்குட்டி முதன்முதலாக இவர் கண்ணிலா படவேண்டும் என்பது போல தேங்கிநின்றான். குட்டி நேராக பேப்பர் படித்துக்கொண்டிருந்த அவரை சாவகாசமாக பார்த்தது. பேப்பரை சமமாக உள்ளிழுத்து சரிபாதியாக மடித்த அவரை நாய்க்குட்டி இன்னும் உற்சாகமாக பார்த்தது இவனுக்கு கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது.

வெற்றுடம்புடன் பேப்பர் படித்து முடித்துவிட்டு நீர் கோத்திருந்த மூக்கை ஒரு பக்கமாக அடைத்து ஒட்டுமொத்த மூச்சையும் ஒரு துவாரத்தில் செலுத்தினார். அப்போது எழுந்த சிறுபுயல் சப்தத்தில் பயந்த குட்டி இவனை நோக்கி ஓடிவந்தது. வினோதம் கொண்ட சிறு வெள்ளை உருவம் தனக்கு எதிரே ஓடுவதை பார்த்த மாத்திரத்தில் அத்தா, ‘கேட்ட யார்ற தெறந்து போட்டது? சனியனைவெளிய பத்திவிடு!' என்றார்.

அம்மா மசாலா ஒட்டிய கரண்டியுடன் வெளியே ஓடி வந்தாள். வந்தவள் ரகுமானின் முகத்தையும் கணவனின் முகக்சுளிப்பையும் ஒரே நொடியில் படித்து முடித்து இயல்பானாள்.

 ‘ஏ கத்துற?,' - அம்மா.

ரகுமானின் அம்மா, அத்தா இருவரும் பரஸ்பரம் ஒருமையில் விளித்துக்கொள்வதே அவர்களது நாற்பது வருட தாம்பத்திய விதிமுறையாக இருந்தது.

‘ஏண்டி நாய வீட்டுக்குள்ள வந்துருக்குன்னு வெரட்டுனா ஏ கத்துறன்னு கேக்குற. கண்ணு தெரிதா இல்லயாடி' என்றவாறே நாளிதழை சற்று ஓங்கி டீப்பாயில் அடித்தார்.

‘எல்லாந்தெரியும். நீ பேசானு இரு. ரகுமானுதான் கூட்டிட்டு வந்துருப்பா!'

‘ஊர்ல இருந்து வந்தும் வராததுமா ஏண்டா உனக்கு இந்த ஷைத்தான் புடிச்ச வேல' என்று அவனின் அத்தா அதட்டினாலும் அதைசற்று தாழ்வான குரலில் கேட்டார்.

மலேசியாவில் சுமார் ஐந்து வருடங்கள் கொத்தடிமை வாழ்க்கை. இத்தனைக்கும் அது அவனது மாமா கடை.தெரியாத மனிதர்களிடம் வெளிப்படும் தன்மானம் தெரிந்த மனிதர்களிடம் கொஞ்ச காலம் தூங்கும். ரகுமானுக்கும் அப்படித்தான், சொந்த மாமா அப்படியா ஏமாற்றப்போகிறார் என்ற நம்பிக்கையிலேயே நாட்களையும் ஓட்டிவிட்டான். அன்று ஒரு வாக்குவாதத்தில் மாமா, உன் பாஸ்போர்ட் என்னிடம் தான் இருக்கு, மறந்து விடாதே என்ற வார்த்தையை அழுத்தி சொன்ன போதுதான் அவனுக்கு உரைத்தது. அக்கம் பக்கத்து ரத்த உறவுகள் கடல் கடந்துவிட்டால் அதன் நோக்கம் பணமே தவிர வேறு எதுவும் இருக்காது. மாமனை சகித்துக் கொள்ள மற்றொரு காரணம் இவனது அம்மா. தம்பியை உயர்வாக நினைக்கும் அம்மாவுக்கு மாமனின் கோரைப்பற்கள் தெரியவேண்டாம் என்பதில் இறுதிவரை ரகுமான் உறுதியாக இருந்தான். அவனுக்கு கோபம் வரும்தான் அப்போதெல்லாம் புரோட்டாவுக்கு மாவு பிசைவான். வலிமையான பிசைவில் புரோட்டா மிருதுவாக இருப்பதாக மாமா பாராட்டுவார்.

பெரும் பாறையை சிறுபூச்சி உருட்டியது போல எப்படியோ ஐந்து வருடத்தை ஓட்டிய ரகுமான் நேற்று மாலைதான் திருச்சியில் வந்திறங்கினான். அவன் அப்படி ஒன்றும் மண்ணை நேசிப்பவன் அல்ல, இருந்தாலும் ஏர்போர்ட் ரன்வே என்று பாராமல் மண்டியிட்டு மண்ணை முத்தமிட்டான்.

ரகுமானின் கொத்தடிமை வாழ்க்கை ஒருகட்டத்தில் அத்தாவுக்கு தெரியவர அதுகுறித்து  மச்சினன் மீது நேரடியாக கோபத்தை காட்ட முடியாவிட்டாலும் மனைவி மீது காட்ட தவறுவதில்லை. அது வெவ்வேறு தருணங்களில் வெளிப்படும்.

‘ஓ மயிராண்டி தம்பி நம்ம புள்ளைய போட்டு பாடாப்படுத்துனான். ஒரு வார்த்த கேட்டியாடி. தாய்லி மவே வீட்டுக்கு வரட்டும். வச்சுக்கிறே' ‘ஏ தம்பி செஞ்சா அது நல்லதுக்கு தான். ஓ தங்கச்சிமகனுக்கு ஏ மகள குடுத்து நிம்மதியே இல்லாம போச்சு. அதுக்கு என்ன பண்றதாம். பொண்ண குடுத்ததால பொறுமையா போறேன். இல்ல ஆஞ்சுவிட்ருவேன் ஆஞ்சு!'

 ரகுமானின் அம்மாவுக்கும், அத்தாவுக்கும் அவரவர் வீட்டு சொந்தம் மீது அப்படி ஒரு நம்பிக்கை.

அத்தா எதிர்த்த ஒரே காரணத்தால் குட்டிக்கு ஒதுங்க இடம் கிடைத்தது. மாடிப்படிக்கு கீழே கொஞ்சம் இடம் இருந்தாலும் அதில் பழைய பொருட்கள் இறைந்து கிடந்தது. ரகுமான் அதை வேறு இடத்திற்கு மாற்றினான். சிறிய வேலை போல இருந்தாலும் நேரம் இழுத்தது. அவனுக்கு உதவி செய்வது போல அவன் பின்னாலே திரிந்தது குட்டி. காலில் மிதிபடுமே என்ற பயத்தில் கவனமாக அடியெடுத்து பொருட்களை இடம் மாற்றினான்.

‘இருக்குற தரித்திரம் பாத்தாதுன்னு இது வேறையாடா!' என்று முனங்கியவாறே எட்டிப்பார்த்துவிட்டு வீட்டுக்குள் சென்றார் அவனின் அத்தா.

குட்டிக்கு ஒரு தங்கும் இடம் போன்று அமைத்தான். அது பார்ப்பதற்குத் தங்கும் இடம்போல இல்லாவிட்டாலும் பாதுகாப்பானதாக இருந்தது. அதுகுறித்து இவனுக்கு திருப்தி. வேலைதான் இரண்டு மணிநேரம் இழுத்துவிட்டது.

‘ரெம்ப பேசுவானுதான் நா சத்தம் போட்டு அந்தாளு வாய அடக்குனேன். துலுக்கப்பயலுக நாய் வளக்கக்கூடாது ரகுமானு. ஆசைக்கு கொஞ்ச நாள் வச்சிட்டு வேற எங்கயாவது போய் உட்டுட்டு வந்துரு. நாய் இருக்குற வீட்டுக்கு மலக்குமார்க வரமாட்டாகனு ஓதிபடிச்ச ஒனக்கே தெரியாதது ஒண்ணுமில்ல,' என்ற அம்மாவின் குரலில் கொஞ்சம் கவலை. ரகுமானுக்கு விளைவுகள் புரியாமலில்லை.

இப்போது வரைக்கும் குட்டியை எப்படி தைரியமாக கொண்டு வந்தான் என்பது அவனுக்கே புதிராகத்தான் இருக்கிறது.

 ‘சரிமா, ரெண்டு மூணு நாளெல எங்கயாவது கொண்டு போய் உட்றேன். இல்லேன்னா ராஜேஷ்ட சொன்னா ஏதாவது வழிபண்ணுவான்,' என்றபடியே குட்டி குடிப்பதற்கு பாலை ஒரு மூடியில் ஊற்றினான். ஆர்வமாக வந்த குட்டி பாலில் சூடு காரணமாக பின்வாங்குவதும் நெருங்குவதுமாக இருந்தது.

‘அது என்ன மனுசனா சுட சுட குடிக்க? பச்சகுட்டிய்யா, கொஞ்ச ஆத்தி வைக்கணும்' என்ற யோசனையுடன் அவனின் அம்மா உள்ளே சென்றாள்.

ரகுமானின் அக்காவுக்கு திருமணமாகி நான்கு வருடமாகிறது. குழந்தை இல்லை. வாரம் பிறந்தால் இரண்டு சண்டை நிச்சயம். எப்போதும் இரண்டு நாளில் முடிவுக்கு வரும் ஊடல் இப்போது இரண்டு வாரமாகியும் நீடிக்கிறது. அவளும் குட்டியின்  சப்தம் கேட்டு வெளியே வந்தாள். குட்டி எப்படி வந்தது, யார் தூக்கி வந்தது என்ற உணர்வுக்கே இடம் கொடுக்காமல் வெறித்துப் பார்த்தபடி அவளது அறைக்கு போய் கதவை சாத்திக்கொண்டாள்.

ரகுமான் ஒன்றும் ஐந்து நேர தொழுகையாளி அல்ல. ஆனால் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு விடுமுறைக்கு வருபவர்கள் ஐந்து நேரம் தொழுவார்கள் என்பதால் அவனும் மதிய தொழுகைக்காக பள்ளிக்கு செல்ல ஆயத்தமானான். செருப்பை மாட்டும் போது கவனித்த குட்டியை இவனும் கவனித்தான். பின்னாடியே வரத்தான் கவனிக்கிறது என்பது அவனுக்கு தெரியும். சொல்லி வைத்தாற்போல பின்னாடியே வந்தது. இப்போது பின்னால் வர அனுமதித்தால் இதே பழக்கமாகிவிடும். இது நம்மோடு இருக்கப்போவது கொஞ்ச நாட்களுக்குதான். எதார்த்தம் புரியாத குட்டியை போல நாமும் பிணைப்பு காட்டினால் இருக்கும் வலியோடு இதுவும் சேர்ந்துவிடும் என்ற யோசனையில் ஓடிச்சென்று கதவை சாத்திக்கொண்டான். குட்டி கேட்டின் மீது இரு கால்களை தூக்கிகொண்டு வெளியே வர முயற்சித்தது.

மதிய வெயில் உச்சாந்தலையில் அறைந்தது. வெயில், நிழலை உள்ளிழுத்துக் கொண்டது போல இருந்தது.  பள்ளிக்கு செல்லும் வழியில் இரண்டு நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தது. அதில் ஒன்றுக்கு நம் வீட்டில் இருக்கும் குட்டி பிறந்திருக்கலாம் என்ற யோசனையோடு பள்ளிக்குள் நுழைந்தான். நுழைந்ததும் தாவுத் மாமாதான் நின்று கொண்டிருந்தார்.

‘என்ன மாப்ள வீட்ட விட்டு வெளியவே வரமாட்ற போல' என்று சிரித்தார்.

 ‘வெயிலு வர்ற மாதிரியா இருக்கு?' என்ற ரகுமான் பேச்சை முழுமனதுடன் தலையசைத்து ஆமோதித்தார். ஆமோதிப்பு கண்டிப்பாக மாலை வீட்டுக்கு வந்து போனை கொடுத்துவிடவும் என்றிருந்தது.

ரகுமானுக்கு தொழுகும்போது யாரோ கேட்டை திறந்து போட்டது போலவும் வெளியே ஓடிய குட்டி ஆட்டோவின் பின்சக்கரத்தில் உடல் பிதுங்கி கிடப்பதுவும் போன்ற காட்சி மின்னலாக வந்து போனதும் அனிச்சையாக ‘யா அல்லாஹ்' என்றுலேசாக கத்திவிட்டான். ரகுமானுக்கு இப்படிதான். தன்னியல்பாகவே எதிர்மறையாக சிந்தனை வந்து போகும். சில நேரங்களில் அது நடந்துவிடுவதும் உண்டு.

தொழுகை முடிந்ததும் ஸலாம் கொடுக்கவும் மாலை வந்து போன் கொடுத்துவிட்டு போகவும் என்று நினைவுப்படுத்த தயாராக இருந்த தாவூத் மாமாவை கவனிக்காமலே செருப்பை மாட்டிவிட்டு வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக போனான். கடந்து சென்ற ஆட்டோக்கள் வழக்கத்துக்கு மாறாக வேகமாக  செல்வது போல இவனுக்கு தோன்றியது. ஆட்டோகாரர்கள் மோசமானவர்கள் என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்தான். வீட்டுக்கு வெளியே குட்டி தென்படுகிறதா என்ற எண்ணத்துடன் கேட்டின் அருகே வந்தான்.  இவனது எண்ணப்படி குட்டி இவனுக்காக கேட் அருகே காத்திருக்க வேண்டும். அது இல்லை என்றதும் ஏமாற்றமாக இருந்தது.

வீட்டுக்கும் கேட்டுக்கும் இருபது அடி. ஆனால் பதினைந்து அடியிலேயே வந்துவிட்டான். இவன் செருப்பை விசிறி அடிக்கும் சப்தம் கேட்டு அம்மா உள்ளிருந்து ஸலாம் சொன்னாள். பதிலுக்கு ஸலாம் சொல்லாமல் குட்டியின் இருப்பிடமான மாடிப்படிக்கு போனான். அவனது அத்தா சிறிய பாக்கெட்டில் இருந்த ரொட்டியை துண்டாக்கி அதை சாப்பிட உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். இதுவரை தன்னை புரிந்து கொள்ளாத தந்தை தன்னை இந்த கணத்திலிருந்து சுவிகரித்து கொண்டது போல இருந்தது. அத்தா ஏதாவது செய்து கொண்டிருக்கும்போது யாராவது தன்னை கவனிப்பது போல இருந்தால் உடனே செய்து கொண்டிருக்கும் செயலுக்கு அப்படியே எதிர்வினை புரிவார். ஆகவே பார்க்காதது போல வீட்டுக்குள் சென்றான்.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அத்தா மீதி பிஸ்கட் பாக்கெட்டை பாதுகாப்பாக ஒரு இடத்தில் வைத்ததை இவன் கவனித்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.சாப்பிட்டு முடித்து கை கழுவச் செல்லும்போது அம்மா சோறை ஆறவைத்து அதில் பால் ஊற்றிக்கொண்டிருந்தாள்.

மதியம் கொஞ்சம் தூங்கலாம் போலிருந்தது இவனுக்கு. அதற்கு முன் குட்டியை எட்டிபார்த்துவிட்டு வந்தான்.  அது அதன் வீட்டை உணர்ந்துகொள்ளாரம்பித்தது போல இருந்தது. அம்மா வைத்த பால் சோற்றை கொஞ்சம் சாப்பிட்டது போலதான் இருந்தது. அறைக்கு சென்று படுத்தான். பயணத்தூக்கம் அசத்தினாலும் நினைவுகள் அவனை அசரவிடவில்லை. சொந்தங்கள் ஏன் இப்படி இருக்கிறது என்று விசனப்பட்டுக்கொண்டான். உறவுகளுக்குள் இன்னொரு உறவைத் திணிக்கும் போதும் கல்லாபெட்டியை எட்டிப்பார்க்கும் அளவுக்கு வந்துவிட்ட உறவை எப்படிக் கையாளுவது என்ற திறமை எல்லோருக்கும் வாய்த்துவிடாது என்று நினைத்துக் கொண்டான். இந்த விடுமுறையில் அக்காவுக்கும்  மச்சானுக்கும் சமாதானம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற அடுத்தடுத்த எண்ணத்தில் தூங்கிப்போனான்.

மாலை தாவூத் மாமா வீட்டுக்கு செல்ல வேண்டும் இல்லையேல் அவ்வளவுதான் பள்ளிவாசலுக்குள் நுழைய விட மாட்டார் என்று அவனுக்கு தெரியும். எனிலும் லேசான தலைவலியால்  தொழுகைக்கு போகும்போது கொடுத்துவிடலாம் என்றெண்ணி, போகாமல் இருந்துவிட்டான்.

இரவு தூங்குவதற்கு முன்பு ரகுமான் அதன் குடிலை எட்டிப்பார்த்தான். தலையை முன்பின் கால்களுக்கு மத்தியில் புதைத்தவாறு படுத்திருந்தது. அது பார்ப்பதற்கு தன்னைதானே அரவணைத்து கொள்ளுவது போலிருந்தது.ரகுமானுக்கும் மலேசியாவில் இருந்த போது இரவுகள் இப்படிதான் இருந்துருக்கிறது. அதீத உழைப்பு காரணமாக தூக்கத்தைதவிர அரவணைக்க ஏதுமில்லாமல் இருந்திருக்கிறான். குட்டியின் அருகே  சென்று தடவிக்கொடுத்தால்  என்ன என்று தோன்றியது. இன்னும் சில நாட்களில் நம்மைவிட்டு எங்கோ செல்லப்போகும் ஒரு நாய்க்குட்டி மீது இவ்வளவு ஆதரவுகாட்ட தேவையில்லை என்பதால் விளக்கை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டான். இரவு குரைத்தால் நிலைமை  சிரமமாகிவிடும் என்பது குறித்து கொஞ்சம் கவலையாக இருந்தது.

நினைவுகளில் மூழ்கி இரண்டு நாய் குட்டி கனவுகளோடு காலை எழுந்தான். அதிகாலை  தொழுகைக்கு கூட எழ முடியாத ஆழ்ந்த தூக்கமாக இருந்தது.வெளிச்சம் முகத்தில் அறையவே பதறியடித்து எழுந்தான்.தேடல் அந்த குட்டி நாய் குறித்தே இருந்தது. ஊரிலிருந்து வந்து எங்கெங்கோ செல்ல வேண்டும் என்ற திட்டத்தோடு வந்தவனுக்கு குட்டி நாயே குறிக்கோளாய் போனது குறித்து கொஞ்சம் சிரிப்பு கூட வந்தது அவனுக்கு. குட்டி அதன் இருப்பிடத்தில் இல்லை. குட்டி அக்காவோடு மாடியில் விளையாடிக் கொண்டிருப்பதாக அவனது அம்மா கூறினாள்.

மாடியில் அக்காவின் பின்னாலேயே திரிந்து கொண்டிருந்தது குட்டி. காலை நிழலில் தன் உருவத்தை பிரமாண்டமாக பார்ப்பதில் கூடுதல் உற்சாகம் கொண்டு வாலை ஆட்டிக்கொண்டிருந்தது. வீட்டில் எல்லோரும் பாசமாக இருக்கிறார்கள். ஆனால் வீட்டில் தொடர்ந்து வளர்வதற்கான சாத்தியம் மிகக்குறைவு.

ஒரு கம்பௌன்ட் சுவர் தடுப்பில் அடுத்த வீட்டில் இருக்கும் ஆசிரியர் குடும்பத்தில் உள்ள ஒரு பெரியம்மா அம்மாவிடம் பேசியது இவன் காதுகளில் விழுந்தது. ‘ஏதோ நாய் வளக்கிறீங்கன்னு சொன்னாங்க' என்று  சொல்லி முடிப்பதற்குள் அம்மா வழிமறித்து முந்தினாள், ‘இல்லம்மா பாவமாருக்குன்னு ஏ மகன்தான் கூட்டிட்டு வந்தான். அவனோட கூட்டாளிகிட்ட சொல்லியாச்சு. ரெண்டு நாளேல அங்க போயிரும்' அம்மாவுக்கு இதில் மானப்பிரச்னை போல பதறியது ரகுமானுக்கும் புரிந்தது.

‘அதான பாத்தே, நாய் வளக்குறது ஹராம்ன்னு உங்களுக்கு தெரியாம இருக்குமா! அதுவுமில்லாம நைட்டு ஊளவுடுது' என்றார் பக்கத்துவீட்டு அம்மா. குட்டிநாய் எப்படி ஊளையிடும் என்று எதிர்க்கேள்வி கேட்குமளவிற்கு அம்மாவிற்கு தேவை ஏற்படவில்லை.

மதப்பண்பாடுகளை பின்பற்றுவதென்பது இறையச்சம் தாண்டிய கௌரவம் சார்ந்தது. அல்லாஹ்வின் தண்டனையை காட்டிலும் சுற்றத்தாரின் சுட்டுதல் இன்னும் கொடியது எனும் எண்ண அலைகளை தாண்டி ராஜேசுக்கு  அழைத்தான் ரகுமான்.ராஜேஷின் அப்பாவின் உடல்நிலை சரியில்லாததால் மதுரையில் இருப்பதாகவும் குட்டியை தன் சகோதரியிடம் ஒப்படைக்குமாறும் ரகுமானிடம் சொன்னான்.

ஆட்டோ வெளியே நின்றது. ரகுமான் நாய்க்குட்டியின் கண்ணில்படுமாறு போய் ஆட்டோவில் ஏறிக்கொண்டான். குட்டியும் அவனைத்தொடர்ந்து வந்து ஏறிக்கொள்ளும் என்பது அவனதுஎண்ணம். எண்ணத்தை புரிந்து கொண்டது போல குட்டி வேறு பக்கம் திரும்பிக்கொண்டிருந்தது. ஆட்டோவில் ஏறியவன் இறங்கி ஆட்டோவில் குட்டியை ஏறிக்கொண்டான். அக்கா மொட்டை மாடியிலிருந்து வேடிக்கை பார்த்தாள். அநேகமாக பிரிவு தாளாமல் நாளையே தன் கணவனோடு போய்விடுவாள் என்பது போல பார்த்துக்கொண்டிருந்தாள். அத்தாவுக்கும் குட்டியை பிரிவது கொஞ்சம் வருத்தம் என்று முகம் சொன்னாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் குட்டியை வீடு கடத்துவதில் குறியாக இருந்தது போல நடந்துகொண்டார். பத்திரமாக வைத்த அந்த பாதி ரொட்டியை என்ன செய்வது என்று ரகுமானின் அத்தா எண்ணிப்பார்த்திருக்க வேண்டும். அம்மா வாசல்வரை வழியனுப்பி வைத்தார்.

கீழே இருந்த குட்டியை ரகுமான் மடியில் வைத்துத் தடவிக் கொடுத்தான். எந்த வெறுப்பும் இல்லாமல் அந்தப் பிரிவு நிகழ்ந்தது.

கா.ரபீக்ராஜா, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 1986இல் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் தனது இளங்கலை படிப்பை முடித்தார். வளர்ந்து வரும் எழுத்தாளர், இவரது எழுத்துகள் பல மின்னிதழ்களில் கட்டுரைகளாகவும் கதைகளாகவும் வெளியாகி உள்ளன. சமீபத்தில் இவர் எழுதிய நூல் 'ஒரு எனியவனின் குறிப்புகள்.' தற்போது "ஏதேனும் வரிசையில் நின்றவனின் கதைகள்" எனும் தன் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஜனவரி, 2023.

logo
Andhimazhai
www.andhimazhai.com