எங்கள் ஊருக்கு சைக்கிள் ஓட்டுபவர்கள் வந்திருந்தார்கள். திருவிழாக் கூட்டம் போல அலையடித்துக் கிடந்தது கோயில் மைதானம். ஒலிபெருக்கி சைக்கிள் ஓட்டுபவரின் சாதனை-களை முழக்கிக் கொண்டிருக்க, மக்கள் திரள் ஒவ்வொரு பொழுதிலும் கூடிக்கொண்டேயிருந்தது. சுற்றுப்புற ஊர்களி-லிருந்தெல்லாம் திரண்டிருந்தார்கள் என்பதை ஊர்நாய்கள் குரைத்துச் சொல்லின. இவ்வளவு பரபரப்பிற்கான அதிசயம் இதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள நானும் நிகழ்வுக்குப் போயிருந்தேன்.
அது முற்றிலும் வித்தியாசமான சைக்கிளோட்டம். நான்கைந்து நாட்கள் சைக்கிளை விட்டுக் கீழே இறங்காமல் தொடர்ந்து ஓட்டிக்கொண்டே இருப்பது என்கிற பாணிதான், பொதுவான சைக்கிளோட்டத்தின் முக்கியமான மையம். கூடவே சைக்கிள் ஓட்டிக் கொண்டு குழல்விளக்குகள் உடைப்பது, தீப்பந்தம் சுற்றுவது போன்றவையும் நடக்கும்.
ஆனால் இந்த சைக்கிளோட்டம் அப்படியானதல்ல; கோயில் மைதானத்தின் சுற்றுப்புறப்பாதையில், அவரும், அவரது துணைவியாரும் எதிரும் புதிருமாக மிக வேகமாக சைக்-கிளை ஓட்டுவார்கள். முழு வேகத்தையும் கூட்டிக் கொண்டு சைக்கிள்கள் சுற்றும் கிறுகிறுப்பிலும், அதில் ஒருவர்மீது ஒருவர் இடித்துக் கொள்ளாமலும், ஒரேவிதமான நேர்க்கோட்டில் இருவரும் சந்தித்துக் கொள்ளும் விறுவிறுப்-பிலும், அந்த சைக்கிளோட்டம் பதட்டம் கலந்த பீதியை உருவாக்கிவிட்டிருக்கும்.
எனக்கு அந்தக் காட்சி மிகவும் பிடித்துப் போயிற்று. மிகப் பெரிய மைதானத்தைச் சுற்றிலும் மக்கள் ஆரவாரமாய் அமர்ந்-திருந்தார்கள். மையத்தில் கம்பம் ஒன்று நடப்பட்டு அதன் முனையிலிருந்து நாலாபுறமும் வர்ணக்காகிதங்களின் தோரணம் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு வளைகோடாக மாற்றப்-பட்ட மைதானத்தின் சுழல் வட்டப் பாதையில் இருவரது சைக்கிள்களும் எதிரும் புதிருமாகச் சுழன்றோடிக் கொண்டிருந்தன.
ஒரேமுனையில் சீறிப்பாய்ந்து வரும் அழகு. அதன் பாய்ச்-சல் நேர்முகமாய் எதிர் கொண்டு மோதிக்கொள்கின்ற கண்ணி-மைக்கும் தருணத்தில், கச்சிதமாக வடிவமைத்து வைத்திருக்கும் செயல்திட்டம் போல இரு வண்டிகளும் லாவக-மாய் சரேலென்று விலகி, சடுதியில் மீண்டும் அதே வட்டப்பாதையில் பாய்ந்து போகின்றன. இந்த அபாரமான விறுவிறுப்பில் மக்களின் உற்சாகம் மைதானத்தில் புரண்டோடியது. எனக்குள் பதுங்கிக் கிடந்த உணர்வோட்டங்கள் உடலெங்கும் வெட்டிவெட்டி எழுந்தன. அவர்களது இந்த ஆட்டம் ஒரு கலாபூர்வமான நிகழ்-வாக மாறிக் கொண்டிருந்தது.
இந்த சைக்கிளோட்டத்தில் ஆழ்ந்து போய் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த போது, அதில் ஏதோ ஒரு விஷயம் பிடிபடாமல் நெருடுவதை உணர முடிந்தது. உந்து விசையை வேகத்துடன் மிதிக்கும் கால்கள், பொருந்திப் போகும் மன ஓட்டத்திலும் கைப்பிடியை வாகாக வளைத்துச் செல்லும் கைகள்... லாவகமாக விலக்கியோட்டும் மனவிலகலிலும், பொருந்தியும் விலகியும் ஆடும் ஆட்டத்தை ஒரு இனம் புரியாத சூட்சுமம் செயல்படுத்துவதாக யூகித்தேன்.
சைக்கிளோட்டம் முடிந்த அன்று இரவு, அவர்களிடம் உரை-யாட வாய்ப்புக் கிடைத்தது.
சென்னிமலையின்
சிறுகிராமத்தில் பிறந்தவர்-தான் அந்தப் பெண் அருக்காணி. அப்பா மில் வேலைக்குப் போகிறவர். அம்மா-வுக்கு வீட்டில் ராகிமாவு அரைக்கும் வேலை, அரைபடும் ராகிமாவைச் சிறுசிறு பொட்டலங்-களாகப் போட்டு கடைகளில் விற்பனை செய்து வருபவர் அண்ணன். அளவான குடும்பம்.
குடும்பத்திலேயே அருக்காணிதான் படுசுட்டி. பிறக்கும்-போதே பாதச்சக்கரத்தோடு பிறந்தவள். அவளது கால்கள் ஓரிடத்-தில் நில்லாமல் துருதுருவென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே-யிருக்கும். அவள் படிக்கும் பள்ளிக்கூடம் ஊரிலிருந்து தொலை-தூரத்திலிருப்பதால், நேரமே புறப்பட்டு விடுவாள். பேருந்து வசதியில்லாததால் நடந்தே செல்ல வேண்டும்.
கூடப்படிக்கும் பையனான தங்கராசு சைக்கிளில் வருவான். அவளைப் பார்த்து மணியடித்தவாறு கேலி செய்து கொண்டே சைக்கிளை ஓட்டுவான். ஆனால் அவளை ஏற்றிக் கொள்ளாமல் கடந்து போவான். ஒருநாள், அம்மா
சாப்பாடு போடுவதற்கு தாமதமாகியதால், பள்ளிக்கு நேரமாகி-விட்டது. வாத்தியாரின் பிரம்பு சுளீரென்று இழுக்கும் வலி அவளுக்குள் இறங்கியது. ஓட்டமும் நடையுமாகப் போய்க் கொண்டிருந்தபோது பின்னாலிருந்து மணியடிக்கும் சத்தம் கேட்டது. திரும்பினால், தங்கராசு.
நேரமாகி விட்டதால் தன்னையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போகுமாறு வேண்டினாள். அவன் ஏதும் பேசாமல் சரேலென்று சைக்கிளை வேகமாக ஓட்டிப் பத்தடி-தூரம் கொண்டு போய் நிறுத்திக் காலை ஊன்றி அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் ஆசையுடன் ஒரே ஓட்டமாக ஓடி சைக்கிளில் ஏறிக் கொள்ள வந்தாள். அவள் அருகில் வரு-வதற்-குள், அவன் சட்டென சைக்கிளை ஓட்டிக் கொண்டு முன்னால் போனான். இச்செய்கையில் அவள் திகைத்துப் போய் நின்று விட்டாள். சைக்கிள் பத்தடிதூரம் முன்னால் போய் நின்று விட்டது. அவளைத் திரும்பிப் பார்த்தான். வா வந்து ஏறிக் கொள் என்பது போலிருந்தது அப்பார்வை. அவள் முழித்துக் கொண்டே சைக்கிளை நோக்கி ஓடி-னாள். அருகில் வருவதற்குள் மீண்டும் பத்தடி தூரம் பாய்ந்து போய் நின்றது. அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இந்த வேடிக்கையான விளை-யாட்டுப் பெரும் வாதையாக இருந்தது. அவளுக்கு அழுகையே வந்து விட்டது. மீண்டும் மீண்டும் சைக்கிளை நோக்கி ஓடி-வந்தால், சைக்கிள் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது. கோபமும் எரிச்சலும் அவளுக்குள் மண்ட ஒருவழியாக பள்ளியை அடைந்தாள்.
அன்று இரவு அவளுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. உடல் முழுக்கக் காந்த-லாய் எரிந்தது. படுக்கை கொள்ளாமல் புரண்டு புரண்டு படுத்தும் கண்ணுக்குள் அவனது கேலிச்சிரிப்பு கொக்கணை கட்டு-கிறது. அவன் சைக்கிளை நிறுத்தி நிறுத்தி ஏமாற்றும் காட்சி--கள் தலை முழுதும் ஓடு-கின்றன. அந்த வாதையிலேயே
சற்றைக்-கெல்லாம் தூக்கம் வந்து-விடுகிறது. அதில் அழகான கனவு ஒன்று எழும்புகிறது. மிக நீண்ட சாலையில் தங்கராசு சைக்கிளை மிதித்துக் கொண்டு வருகிறான், அவள் சைக்கிளை முந்திக்கொண்டு ஓடுகிறாள். கடைசிவரை அவனது சைக்கிளால், அவளது வேகத்தைப் பிடிக்க முடியாம-லேயே போய்விடுகிறது.
அடுத்த நாள் காலையில் பள்ளிக்குப் போகும்போது, பின்னால் மணியடிக்கும் சத்தம் கேட்கிறது. திரும்பிப் பார்த்தால் எகத்தாளச்சிரிப்புடன் அவன் நின்றிருக்கிறான். அவள் அவனையே வெறித்துப் பார்க்கிறாள். அந்தப் பார்வையின் உக்கிரம் தாங்க-முடியாமல் சைக்கிள் அவளைத் தாண்டிச் செல்கிறது. அருக்காணியின் கால்களில் குறுகுறுவென்று வேகம் ஏறியடிக்கிறது.
அப்போதுதான் அது நடந்தது. சரேலென்று அவளது கால்கள் ஓட ஆரம்பித்தன. ஓட்டம் கண்ணிமைக்கும் வேகமாக மாறி அவனது சைக்கிளைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தாள். தங்கராசுக்கு அந்தச் செய்கை பெரும் சவாலாக இருந்தது. உடனே தனது சைக்கிளின் உந்து விசையில் கால்களைப் பலமாக மிதித்தான். சக்கரங்கள் வேகமாகச் சுழல ஆரம்பித்தன. ஆனால், அதைவிட வேகத்தில் அருக்காணியின் கால்கள் ஓடிக் கொண்டிருந்ததை உணர்ந்தபோது திகைத்துப் போனான். அதிர்ச்சி-யுடனும் அவமானத்துடனும் பல்லைக் கடித்துக் கொண்டு வண்டியை வேகம் கூட்டினான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவளைக் காணவில்லை. வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், ஒருவேளை பின்தங்கி விட்டாளோ... வெகுதொலைவில் சாலையின் ஓரமாய் உயர்ந்திருந்த புளிய மர நிழலில் ஒதுங்கி இளைப்பாறிக் கொண்டிருப்பவள்... சந்தேகமில்லாமல் அவள்தான்!
அவனுக்கு முன்னால் பழிப்புக் காட்டுபவள் பெண்ணாக இல்லாமல், மருள் வந்த மாரியாகத் தென்பட்டாள். பயத்-தாலும், அவமானத்தாலும் குன்றிப் போனான் அவன். இந்த ஆட்டத்தின் போக்கிலேயே பள்ளியை வந்தடைந்தார்கள். உடல் முழுதும் துலுக்கு கூடியது போல நடுக்கத்துடன் வேகமெடுக்கும் அவளது கால்களை, அவனால் தொடமுடியாமலேயே போய்விட்டது.
அவள் அன்று புதிதாய்ப் பிறந்தது போல உணர்ந்தாள்.
அடுத்தநாள், நேரமே எழுந்து, புறப்பட்டு, சாலையில் வந்து நின்று கொண்டு அவன் வருவதற்காகக் காத்திருந்தாள். அவன் வரவில்லை. வெகுநேரம் வரை எதிர்பார்த்து வெறுத்துப் போய் பள்ளிக்கூடம் வந்து பார்த்தால், பம்மிக் கொண்டு நிற்கிறான் அவன். அப்போது தான் தெரிந்தது, தங்களது ஊருக்கு வேறு ஒரு சுற்று வழியும் இருக்கிறதென்று.
பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் இருக்கும் பெருமாளா
சாரியின் கொல்லுப்பட்டறை அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அங்கு நிறுவப்பட்டிருக்கும் ஆளுயர துருத்திச் சக்கரம் சுழலும் அழகையே பார்த்துக் கொண்டு நிற்பாள். வீட்டில் தனது அம்மா, ராகிமாவு அரைக்கையில், வெடுக் வெடுக்கென்று கைமாற்றி மாற்றி ஆரியக்கல்லைச் சுற்றும்-போது, அதன் கல்லோட்டம் மறைந்து, நிகழும் அதன்
சக்கர வட்டம் அவளுக்குள் ஒரு வேகத்தைக் கிளர்த்தும். ஆனால், ஆசாரியின் துருத்திச்சக்கரத்தில் பொருதி-யுள்ள ஆரக்கால்கள், அவரது மனைவியின் தூங்கு-மூஞ்சிக்
கைகளில் சோம்பல் முறித்துக் கொண்டு ஒவ்வொன்றாக நகரும் காட்சி பாவமாக இருக்கும் ஒருமுறையாவது அந்த ஆரக்கால்களை மறைந்து போகச் செய்து ஒரு பிரம்மாண்டமான சக்கரவட்டமாக மாற்றிக் காட்டவேண்டும் என்ற தவிப்புடன் அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள் அவள்.
ஒருநாள் இதைக் கண்ணுற்ற ஆசாரி, ‘ஏ கண்ணு சக்கரம் சுத்தறியா?’ என்று அழைக்க வெகு மகிழ்ச்சியோடு, குதூகல-மாய் ஓடிவந்து சக்கரத்தின் உந்து மிதியைப் பற்றினாள்.
ஆசாரி துருத்தி உலையின் முன் அமர்ந்து, ஒரு சிறு உலோகத்தை எடுத்துப் போட்டு ஒரு கை நெல்உமியை அதன்-மேலே பரப்பினார். துருத்திச் சக்கரம் சுழலச் சுழல உமி தீப்பந்தமாக மாறுகிறது. அவளது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், துருத்திச் சக்கரத்தின் ஆரக்கால்கள் மறைந்து வடிவான சக்கரமாக மாற்றம் பெறுகிறது.
தீயின் உக்கிரம் கூடியதில் ஆசாரி திக்குமுக்காடிப் போனார். அவரது மனைவியின் துருத்தித்தீ உள்ளோடிக் கங்குகள்-தான் கனன்று கொண்டிருக்குமேயொழிய, இதுபோல அக்கினிப்பிழம்பாய் சீறியதில்லை.
ஆசாரி பதட்டத்துடன் எழுந்துபோய் கரித்துண்டுகளைக் கை-நிறைய அள்ளிவந்து உலோகத்தின் மேற்பரப்பில் குமித்தார். துருத்திச்சக்கரத்தின் ஆரக்கால்கள் ஒரேயடியாய் மறைந்து போகவும், உலைக் கோலில் பொங்கி எழும்பும் ஊழித்தீயில் ஆசாரி பரபரப்புடன் தீக்கங்குகளைத் தீண்டி விடுவதும், அடைகல்லில் உலோகத்தை வைத்துத் தட்டி எடுப்பதுமாக, இப்படி ஒரு வேகத்துடன் கூடிய ஒரு அழகான அருவாளை ஆசாரி ஒருபோதும் எதிர் கொண்டதில்லை.
அருவாளின் பதத்தை காய்ப்பேறிய தனது உள்ளங்கையில் வைத்து சுளுவு பார்த்தவர், கொண்டு போய் நீரில் நனைத்-தார். கொதித்தடங்கியது நீர்மை.
துருத்திச்சக்கரத்தின் வேகம் மட்டுப்பட்டு அவள் எழுந்து நிற்க, பூரித்த உணர்ச்சிப் பெருக்கோடு, வீட்டிற்குள் ஓடிப் போய், வறுத்த நிலக்கடலையை கை நிறைய அள்ளிக் கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்தார். கூடவே வெல்லக்-கட்டிகளையும் கொடுத்தபோது, அவரது கை நடுக்கம் இன்னமும் தீராமலிருந்தது.
தினமும் வறுத்த கடலையும் வெல்லக்கட்டியும் அவள்
நாவில் இனிப்புக் கூட்டினாலும், அவளது தொண்டைக்-குழிக்குள் இறங்குவதென்னவோ, ஆரக்கால்கள் மறையும் சக்கரவேகம்தான்.
இப்படியாக வேகத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்த போது-தான் அவளது ஊருக்கு சைக்கிளோட்ட வருகிறான் மாரிமுத்து. கிராமத்தின் சுற்றுப்புறப்பகுதிகள் முழுக்க பரபரப்பான விளம்பரம் செய்து இரண்டு நாள் சைக்கி-ளோட்டத்தை ஆரம்பிக்கிறான். இரண்டு நாளும் சைக்கிளை விட்டிறங்காமல் சுற்றிக் கொண்டேயிருப்பது என்பது, தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லாத அக்காலகட்டத்தில் ஒரு பெரும் பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது.
அவளுக்கு அந்த நிகழ்வு அடியோடு பிடிக்கவில்லை. சைக்-கி-ளின் ஆரக்கம்பிகள் சோம்பலாகச் சுழலும் மனத்-தொய்வில், எரிச்சலுற்றாள் அவள். நிகழ்வது சைக்-கிளோட்டம் அல்ல, அதை முன்வைத்து நிகழ்த்தப்படும் கோமாளிக்-கூத்து என்பதை உணர்ந்து கொண்ட அவள், அதனை வெறுப்புடன் நோக்கினாள். அது அவனுக்கு நேரும் அவமானம் அல்ல, வேகம் என்னும் அற்புதத் தன்மைக்கு நேரும் அவ-மானம் என்றும், அதை ஆராதிக்கும் தனக்குநேரும் அவமானம் என்றும் கருதி-னாள். இந்தப் போக்கிலிருந்து அவனை திசைமாற்றி விட்டு அவனிட-மிருந்து வேகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் பதட்டமடைந்தாள். இந்த உணர்-வோட்டங்களை எப்படி அவனிடம் கொண்டு போய்ச் சேர்ப்-பது என்பது புரிபடாமல் முழித்துக் கொண்டிருந்த தருணத்தில்தான் ஒலி-பெருக்கி ஒலித்தது. ‘மக்கள் தங்களது விருப்பங்களை காகிதத்-தில் எழுதிக் கொடுக்-க-லாமென்றும், அதை அவன் நிறைவேற்றுவான் என்றும்’ சொன்னது.
மக்கள் பலத்த ஆரவாரத்துடன் எழுதி அவனிடம் அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொன்றாய்ப் படித்து அதன்படியே நிறைவேற்றினான்.
சைக்கிளை ஓட்டிக் கொண்டே சட்டையை மாற்றிப் போடச்- சொல்லிய ஒருவரின் விருப்பத்தை பலத்த கைதட்டல்-களினூடே செய்தான், கண்களை கறுப்புத்துணியால் இறுகக் கட்டிக் கொண்டு சைக்கிளை ஓட்டும்போது, ‘விருப்பம் சொன்ன நேயர்’ நெஞ்சை நிமிர்த்தி விட்டுக் கொண்டார், பலூனை ஊதி உடைப்பது, தொப்பியை வீசியெறிந்து கீழே-விழாமல் பிடிப்பது என்றெல்லாம் கலக்கலாய்ப் போய்க் கொண்டிருந்த நிகழ்வு, ஒரு காகிதத்தைப் படிக்கும்போது உடைந்தது.
‘எனக்கு நீங்கள் செய்யும் கோமாளிக்கூத்து எதுவும் பிடிக்க-வில்லை. எனக்கு வேகம்தான் பிடிக்கும்’ என்ற வரிகளை அவன் கண்கள் படித்ததும் பலத்த அதிர்ச்சிக்குள்ளானான். நல்ல வேளையாக, அதுவரை சத்தம் போட்டுப் படித்து வந்தவன் இந்த வரிகளை மனதிற்குள்ளேயே எழுத்துக் கூட்டிவிட்டான். ஓரிரு நிமிடங்கள் என்ன செய்வதென்று விளங்காமல் மைதானத்தில் கண்களை ஓட்டினான். பின் அடுத்த நேயர்விருப்பத்திற்குத் தாவினான். அவள் கடுங்கோபம் அடைந்தாள். உடனே அடுத்த காகிதத்தை எழுதிக் கொடுத்தாள். ‘வேகம் என்பது என்ன தெரியுமா?
நீங்கள் அதை உதாசீனம் செய்கிறீர்கள்’
அதைப்படித்தவுடன் மேற்கொண்டு இதை மறுக்கக்கூடாது என்பது போல அவனது கால்கள் மிதிவிசையை உந்தித்-தள்ளின. சைக்கிள் வேகமெடுத்தது. அவளுக்குள் அவன் மீது கொண்டிருந்த குமைச்சல் சற்றே இறங்கியது. அந்த இடத்-தைக் கவ்விக் கொண்டிருந்த புழுக்கம் மறைந்து இத-மான காற்று வீசியது. மீண்டும் காகிதத்தில் வேகத்தின் ஈர்ப்புத் தன்மையை எழுதிக் கொடுத்தாள். அவன் அதைப் படிக்கப்படிக்க கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெறு-கிறான் என்பதை வண்டியின் பாய்ச்சல் காட்டிக் கொடுத்தது. வேகம் பற்றிய பல்வேறு பார்வைகளை, கொஞ்சம் கொஞ்ச-மாக தனது உள்ளக்கிடக்கையைக் கொட்டி அனுப்பினாள்.
அவன் பல்வேறு ஊர்களில் சைக்கிளோட்டியிருக்கிறான். விதவிதமான நேயர்விருப்பங்களைக் கேட்டிருக்கிறான். ஆனால் இது கற்பனையே செய்யமுடியாத அளவுக்கு முற்றிலும் புதியது. தனது வாழ்வை மாற்றவல்ல புதிர்த்தன்மை கொண்டது அது என்பதை அவன் உணர்ந்த போது, அவளது உலகத்-திற்குள் வெகுதூரம் பாய்ந்து போக ஆரம்பித்திருந்தான். இப்-போது
சோம்-ப-லாக வேடிக்கை பார்த்த கூட்டம் அவனது விறுவிறுப்பூட்டும் வேக-மான சைக்கிளோட்டத்தில் இரண்டறக்-கலந்து பெரும் ஆதரவை அளித்தது.
ஆனால் இரண்டாம் நாள் மதியத்திற்-குள் தனது கால்கள் சோர்ந்து கொண்டே யிருந்ததை உணர்ந்தான். இன்னும் ஒருஇரவும் பாதிப்பகலும் கழிய வேண்டும். தாகத்தில் நாக்கு வெளி-வாங்கிக் கொண்டிருந்தது. உடம்பின் எல்லாப் பகுதிகளும் விண் விண்ணென்று தெறித்தன. பாதங்கள் வீங்கிப் பெருத்து விட்டன. மைதானம் கிறுகிறுவென்று சுற்றுகிறது. பல்வேறு இடங்களில் ஐந்து நாட்களெல்லாம் சைக்கிளோட்டியிருக்கிறான். இங்கு இரண்டு நாட்களுக்கே கணுக்கால்கள் குடைந்து தள்ளு-கின்றனவே. காரணம், அந்த பாழாய்ப்போன வேகம்!
பேசாமல் இந்த வேக விளையாட்டை இத்தோடு விட்டுத் தொலைத்து விட்டால் தப்பித்துக் கொள்ளலாம் இல்லையெனில் நாக்குத் தள்ளியே சாகவேண்டியதுதான் என்று உணர்ந்தான். ஆனால், இந்த ஆட்டத்துக்குள் கட்டமைந்திருக்கும் அந்தப்புதிர்தான் வாழ்வின் அர்த்தமே என்பதாகவும், தனது வாழ்வில் இதுவரை கிட்டாத ஒரு அபூர்வத் தருணம் என்றும், அதை இழந்தால் தனது வாழ்க்கை சூன்யமாகிவிடும் என்பதாகவும் ஏதேதோ யோசித்த-வனாய் வண்டியை வேகம் மாறாமல் மிதித்துக் கொண்டிருந்தான்.
ஒருவழியாய் மாலை மங்கும் பொழுதுடன் மக்கள் கூட்டமும் திரண்டது.இன்னும் முழுமையாக ஒரு இரவு மீதியிருக்கிறது.
சட்டென்று அவனுக்கு இன்னொரு யோசனை ஓடியது. அந்த வேகத்தைத் தனக்குள் பாய்ச்சிய அந்த மனிதர், அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில், தனது இணையாக வந்து சுற்றினால் இந்தச் சோர்வு பறந்துபோய்விடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த நினைப்பே தீராத தாகத்தை-யாற்றும் சுனையாக நாவுக்குள் ஈரம் பாய்ச்சியது. அதே வேகத்-துடன் ஒலிபெருக்கியில், தானே நேயராக மாறி-னான். இந்த ஆட்டத்தில் தன்னை மாற்றி விட்ட அந்த மனி-தருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, இந்த விளை-யாட்டு தனக்கு மிகமிகப் பிடித்திருக்கிறதென்றும், இது, இனி தனது ரத்த அணுக்களோடு கலந்து போய்விட்ட அம்சம் என்றும், இதைத் தன்னால் விட்டுவிட முடியாது என்றும் உணர்ச்சி வயமாகத் தெரிவித்தான். ஆனால், இதே வேகத்தில், தான் நாளைக் காலை வரை தாக்குப்பிடிக்க முடியாது என்றும் தன்னோடு அவரும் கூட வந்து சுற்றி-னால், அது ஒரு தோழமையாக இருக்கும் என்றும், ஒரு மான--சீக-மான பேச்சுத்துணையாக மிக எளிதில் இரவைக் கழித்துவிடலாமென்றும் தெரிவித்தான்.
ஆனால், கூட்டத்திலிருந்து எந்த பதிலும் இல்லை.
மறுபடியும் நா வறட்சி கொள்கிறது. ஓரிருவர், ‘மிகவும் கஷ்டமாக இருந்தால் நீங்கள் முன்பு போலவே சாதாரணமாக ஓட்டுங்கள்’ என்று எழுதியனுப்பினர். அவனுக்கு வந்து சேர்ந்த காகிதங்களில் ஒன்று மட்டும் உயிரோட்டமாக மின்னி-யது. ‘கவலை வேண்டாம், எக்காரணம் கொண்டும் வேகத்தைக் குறைக்க வேண்-டாம், உங்களோடு சேர்ந்து நானும் விடிய-விடியச் சுற்றுகிறேன்.’
அன்று இரவு. அருக்காணி வீட்டில் தனியாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். அப்பா மில்லில் இரவு வேலை. அண்ணன் ராகி மாவுப் பொட்டலங்களைக் கட்டிக் கொண்டு வெளியூர் போய்-விட்டார். அம்மா காலையிலிருந்து ராகி-மாவு அரைத்து களைப்-பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்-தாள். இருண்-மை-யான ஒருவெறுமை அந்தச் சூழலை இறுக்கிக் கொண்டிருந்தது. அந்தக் கனத்த மௌனத்தினூடே தூரத்-தில் வேகமாய்ச் சுற்றும் சைக்-கிளின் ஓட்டத்தை அவளது செவிகள் உள்வாங்கிக் கொண்டிருந்தன.
அவளது வீடு மைதானத்திலிருந்து சற்றே தள்ளியிருந்தது. வீட்டிலிருந்து பார்த்தால் மைதானத்தின் பாதிப்பகுதி மட்டும் தெரியும்படியான காட்சிப்பரப்புக் கொண்டது. ஒரு கண்சிமிட்டலில், அந்தக் காட்சியின் வேகம் மெது-வாகக் குறைந்து கொண்டே வருவதை உணர்கிறாள். செய்வ-தறியாமல் வெறித்த அவளது பார்வை மைதானத்திலும், தூரத்து வானிலும், இருட்டிலும், நட்சத்திரங்களிலும், அலை-வு-பட்டு, எதிரிலிருந்த சுவரோரமாக சாய்த்து வைக்கப்-பட்டிருந்த கேழ்வரகு மூட்டையில் நிலைகுத்தி நின்றது. ஓரிரு கணங்கள் அதை உறுத்துப் பார்த்தாள், சட்-டென்று அவளுக்குள் ஒரு யோசனை மின்னலாய் ஓடியது. பரபரப்-புடன் எழுந்து அந்த ஆரியமூட்டையை அவிழ்த்துக் கீழே கொட்டினாள். குவியலாய்ச் சிதறி அம்பாரமாய்க் குமிந்து நின்றது கேழ்வரகுப்பண்டம். அருகிலிருந்த ஆரியக்-கல்லின் முன் கால்களை அகட்டி வைத்து அமர்ந்தாள். எதிரில் மைதானத்தில் சைக்கிளோட்டம் சரேலென்று வந்து போய்க் கொண்டிருந்தது.
ராகி அம்பாரத்தில் கைநிறைய அள்ளி ஆரியக்கல்லின் அரை--குழியில் போட்டாள். அதன்பிறகு ஆரியக்கல் சுற்ற ஆரம்பித்தது. விசையுடன் சிதறியது ஆரியமாவு.
அவன் அந்த ஓசையை உணர்ந்தான், தன் வண்டியோட்டத்
தின் ஓசையுடன் இணைந்து இன்னொரு வண்டி ஓடிக் கொண்டிருக்-கும் ஒலியோசை. உடம்பெங்கும் கூடியிருந்த வலி நொடியில் மாயமாய் மறைந்து போயிற்று. காகிதத்தில் எழுதிக் கொடுத்த அந்த வாக்கு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. எல்லையற்ற வேகத்தில் ஓடிக்களிக்கிறது சைக்கிள்.
மைதானத்தில் சைக்கிள் சுற்றும் வேகத்திற்கும் இங்கு ஆரியக்-கல் அரைபடும் விசைக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறாள் அவள். தனது பார்வையில் பட்டுப்போகும் சைக்-கி-ளோட்டத்தின் பிறைவட்டம், தன் இணையை அடையாளம் கண்டு கொண்ட பூரிப்பின் அதி-வேகத்தில் வளர்பிறையாக மாறுகிறது.
அவனுக்கு நேர் எதிரே தூரத்தில் ஆவேசத்-துடன் சுழன்று வரும் ஆரியக்கல்லின் சுழற்சி-யில் உருக் கொள்ளும் ஒலியோசையை ஆழ்ந்து
சுவாசித்தான். ஆழம் காணமுடியா தூரத்திலிருந்து அவனை இயக்குவது வெறும் ஒலியோசை மட்டுமல்ல, அதனூடான வளையோசையும்தான் என்பதை அவன் உணர்ந்தபோது, தான் ஒரு வேகமாகவே மாறிப் போனான்.
இரு வேறு நிலைகளுக்குமான தாத்பர்யம் மிக-நேர்த்தியாக ஒருங்கு கூடுகிறது. அவளுக்கு நேர் எதிரே கண்ணில் படும் சைக்கிளின் அரை-வட்ட ஓட்டத்தின் வேகத்தைக் கணித்து, கையை வெடுக் வெடுக் என மாற்றிப் போடும் மனவிலகலினூடாக ஆரியக்கல்லைச் சுற்றும் அழகில், நேர்கொண்ட வேகத்தில் பாய்ந்து வரும் சைக்கிளின் பாதை-யிலிருந்து விலகி, வழி கொடுக்கும் தரிசனத்தை நிகழ்த்திப் பார்க்-கிறாள். இரண்டையும் இணைக்கவல்ல பெரும் புதிரை-யும் வாழ்வின் அர்த்தத்தையும் மாற்றிப் போட்டு அந்த ஆட்டத்தை வேறுவிதமாய் ஆடிப்பார்க்கிறாள் அருக்காணி.
வேகவேகமாய்ப் புலர்ந்தெழுந்தது பொழுது.
சைக்கிளோட்டம் காலையில் வெற்றிகரமாய் முடிந்த போது, கிராமத்தலைவர் மாலையிட்டு அவனை வாழ்த்தினார். ஊரே உற்சாக முகமாய் இருந்தது. தன்னை அந்த நிலைக்கு உயர்த்திய முகம் காட்டாத அந்த உருவம் யார் என்று தன்னைச் சூழ்ந்திருக்கும் மக்கள் திரளில் தேடித்தேடிப் பார்த்-தான். தென்படவில்லை. மைதானத்தின் மையத்தில் விரித்திருந்த கல்லாத் துணியில் சில்லறைக்காசுகளும் நோட்டுகளும் குமிந்திருந்தன. அவனது அத்தனை வருட சைக்கிளோட்டத்தில் அன்றைக்குக் கிடைத்த பொருளும் புகழும் அவனைத் திக்கு முக்காடச் செய்தன. மக்கள் திரள் மெல்ல மெல்லக் களைந்ததும், கல்லாத்துணியை எடுத்து வந்து கோயில் வாசலில் விரித்து வைத்து சாமி கும்பிட்டான். சில்லறைக்காசுகளை விடவும் நோட்டுக்கள் அதிகளவில் சேர்ந்திருந்தன. பணத்தைச் சீராக எடுத்து ஒழுங்கு செய்த போதுதான், அந்தக் காகிதம் அவனை நோக்கிப் படபடத்தது. அவனது அடிமனசில் ஆர்ப்பரித்தெழுந்தது வேகம்.
அடுத்த பாய்ச்சலில் மாரிமுத்துவுடன் அந்த ஊரைவிட்டு ஓடிக் கொண்டிருந்தாள் அருக்காணி.
மின்னற் பொழுதே தூரம் தேவதேவனுக்குக் கவிதை என்றால் அருக்காணிக்கு வாழ்க்கை.
நவம்பர், 2012.