நியூசிலாந்திலிருந்து கிளம்பும் போது வர்ஷினிக்கு அப்படி ஒரு யோசனை இருக்கவேயில்லை. அவள் பெங்களூரில் உள்ள தனது அபார்ட்மென்டிற்கு தான் போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். விமான டிக்கெட் கூட பெங்களூருக்கே போட்டிருந்தாள். ஆனால் பயணம் கிளம்பும் முதல் நாள் டிக்கெட்டை சென்னைக்கு மாற்றினாள்.
அப்பா அம்மாவோடு சில நாட்கள் இருக்கலாம் என நினைத்து சென்னைக்கு பயணம் செய்தாள். ஆனால் சென்னைக்கு வந்த இரண்டாம் நாள் அங்கே இருக்க பிடிக்கவில்லை. அப்பாவிடம் பெங்களூர் போவதாகச் சொல்லிவிட்டு இரவுப்பேருந்து பிடித்து திருநெல்வேலிக்குச் சென்றாள். அங்கிருந்து பதினைந்து நிமிஷ தூரத்தில் இருந்தது அவளது பூர்வீக ஊர்.
சுற்றிலும் பச்சைக்கம்பளம் போல வயல்கள் நிரம்பிய சிறிய கிராமம். நூறு வீடுகளுக்குக் குறைவாக தானிருந்தது. இன்னமும் பேருந்து வசதி வரவில்லை. பக்கத்து ஊரில் இறங்கி வயல் வழியாக நடந்து தான் போய் வர வேண்டும். வர்ஷினி பள்ளி நாட்களில் அங்கே வந்திருக்கிறாள். அதன் பிறகு சொந்த ஊருக்குப் போனதேயில்லை.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் பெங்களூருக்கு வேலைக்கு போய்விட்டாள். ஐந்தாண்டுகள் அங்கே வேலை. அந்த சம்பாத்தியத்தில் அங்கே தனக்கென ஒரு பிளாட்டை வாங்கியிருந்தாள். பெங்களூரில் அலுவலகத்திற்கு போய் வருவது தூரம். ஆகவே பெரும்பான்மை நேரம் அவள் அலுவலகம் விட்டு அறைக்கு திரும்ப இரவாகிவிடும். விடுமுறை நாள் உறங்குவதற்கே போதாது. ஒன்றிரண்டு மழை நாட்களை தவிர வேறு நல்ல நினைவுகளில்லை.
பெங்களூரிலிருந்து கம்பெனி சார்பில் அமெரிக்காவில் மூன்று ஆண்டுகள். பின்பு ஒன்றரை வருஷம் லண்டனில். ஓர் ஆண்டு கென்யா. பின்பு அங்கிருந்து நியூசிலாந்து என அவள் வாழ்க்கை சொந்த மனிதர்களை விட்டு வெகுதூரம் விலகிப் போனது.
அமெரிக்காவில் இருந்த நாட்களில் ஏற்பட்ட காதல். அதை தொடர்ந்த திருமணம். அந்த திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள். பிரிவு. விவாகரத்து என அவள் வாழ்க்கை ஜெயிண்ட் வீல் போல உயரத்திற்கு போய் வேகமாக கீழே இறங்கிவிட்டது. எல்லாவற்றையும் பார்த்தாகி விட்டது போன்ற அலுப்பு அவளுக்கு முப்பதைந்து வயதிற்குள் ஏற்பட்டுவிட்டது. பணம் மட்டுமே அவளது கவனம். அதை சம்பாதிப்பதற்காக ஓடிக் கொண்டேயிருந்தாள்.
ஆனால் இந்த விடுமுறையில் ஊருக்குப் போய்வரலாம் என நினைத்தபோது அவளுக்கு எங்கே போவது என்ற கேள்வி தான் முதலில் எழுந்தது. அப்பா அம்மாவை சந்தித்தால் பழைய கதைகளை கிளறிக் கொண்டிருப்பார்கள். மறுமணம் பற்றிய பேச்சு உருவாகும். திரும்பவும் ஒரு திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை. தேவையுமில்லை என நினைத்தாள்.
வேலை வேலை என மூழ்கிப்போனதால் உலகம் மிகவும் சுருங்கிப் போயிருந்தது. மண்டைக்குள் எப்போதும் அலுவலகக் குழப்பங்கள். சாப்பாட்டில் விருப்பமில்லை. வெளியே நடக்கும் வேடிக்கைகள் எதிலும் ஈடுபாடில்லை. டிவியில் சினிமா பாட்டு போட்டால் கூட அவளால் ரசித்து கேட்க முடியவில்லை. சில நாட்கள் பாதி உறக்கத்தில் எழுந்து அலுவலக வேலையை கவனிக்க ஆரம்பித்துவிடுவாள். கார் ஓட்டும் போது கூட அவள் சாலையோர மரங்களில் பூத்திருக்கும் மலர்களை ரசிப்பதில்லை. கசங்கிய காகிதம் போல அவள் வாழ்க்கை மாறியிருந்தது.
தாத்தா வீடு பழைய காலத்து அமைப்பில் பெரிய தூண்களுடன் இருந்தது. நாலைந்து அறைகள். ஹாலில் பெரிய ஊஞ்சல். வீட்டை சுற்றிலும் எட்டு அடி உயரத்தில் கோட்டைச் சுவர்கள். வீட்டின் பின்பக்கம் கிணறு. அதை ஒட்டிய குளியல் அறை. வெந்நீர் அடுப்பு. நாலைந்து தென்னை மரங்கள்.இரண்டு வாழைமரங்கள். ஒரு கொய்யா மரம். துணி துவைக்கும் அகலமான கல். நெல் அவிப்பதற்காக பெரிய வெண்கல அண்டா. ஒரு காலத்தில் பசுமாடு கட்டப்பட்டிருந்த சிறிய மாட்டுத்தொழுவம். கோட்டைச்சுவரை ஒட்டி தானே முளைத்திருக்கும் விதவிதமான பூச்செடிகள். தாழப்பறக்கும் தட்டான்கள்.
தாத்தா கண்ணுசாமிக்கு எண்பத்து மூன்று வயதாகியிருந்தது. ஆனால் திடமாக இருந்தார். எப்போதும் நெற்றி நிறைய திருநீறு பூசி, துவைத்த வேஷ்டி கட்டியிருப்பார். மேல் சட்டை அணிவதில்லை. ஒரு கதர்த் துண்டினை போர்த்திக் கொண்டிருப்பார். அவரைத் தேடி யாரும் வருவதில்லை. அவரும் வெளியே போவதுமில்லை. அதிகபட்சம் கிணற்றடி வரை செல்வார். தானே தண்ணீர் இறைத்துக் குளிப்பது வழக்கம்.
தாத்தாவிற்கு தேவையான சாப்பாடு செய்து தருவதற்காக லட்சுமியம்மாள் என்ற பெண்மணி வேலைக்கு இருந்தார். லட்சுமியம்மாளின் வீடு தெற்குதெருவில் இருந்தது. ஐம்பது வயதைக் கடந்த பெண். கணவன் இல்லாதவர். நான்கு பிள்ளைகளை தனியே வளர்ந்து படிக்க வைத்து வேலைக்கு அனுப்பியிருக்கிறார்.
லட்சுமியம்மாள். காலை எட்டு மணிக்கு வந்து அவருக்குத் தேவையான டிபன் செய்து தந்துவிட்டு தாத்தாவின் உடைகளை துவைத்துப் போடுவார். பின்பு மதியச்சமையல் செய்துவைத்துவிட்டு போய்விடுவார். தாத்தா இரவில் பழங்களை மட்டுமே சாப்பிடுவது வழக்கம். பகலில் ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே தேவாரம் படித்துக் கொண்டிருப்பார். அந்தப் புத்தகம் எப்போதும் அவரது மார்பில் கிடக்கும். அவ்வளவு பெரிய வீட்டில் இரண்டே டியூப் லைட்டுகள் இருந்தன. மற்றவை குண்டு பல்புகள். ரேடியோ, டிவி என எதுவும் கிடையாது. முன்பு அவருக்கு தபால்கள் அடிக்கடி வருவதுண்டு. இப்போது தபால்களும் கிடையாது.
தாத்தா வீட்டின் படியேறிய போது அவளுக்கு ஏழு வயதின் நினைவுகள் பீறிட்டன. இதே படிக்கட்டில் நின்று அவள் கோடைமழையை வேடிக்கை பார்த்திருக்கிறாள். கூண்டுவண்டியில் பயணம் செய்திருக்கிறாள். அப்போது வீடு நிறைய ஆட்கள். இப்போது ஒருவருமில்லை.
கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தபோது சாய்வு நாற்காலியிலிருந்து லேசாக கண்ணை விழித்தபடியே தாத்தா யார் எனப் பார்த்தார்.
அருகில் சென்ற வர்ஷினி தாத்தா என வாஞ்சையாக அழைத்தாள். அவரது முகத்தில் லேசான புன்னகை படர்ந்தது. சைகையால் அப்படி உட்கார் என்பது போல முக்காலியைக் காட்டினார்.
அவள் முக்காலியில் அமர்ந்தபடியே'' இப்போ நியூசிலாந்தில் இருக்கேன். ஒன்றரை மாசம் லீவு. அதான் கிளம்பி வந்துட்டேன்'' என்றாள். தாத்தா தலையசைத்தபடியே அவளை ஏறிட்டுப் பார்த்தபடியே இருந்தார்.
அவள் சுவரில் இருந்த பழைய கால புகைப்படங்களைப் பார்த்தபடியே சொன்னாள்.
‘‘எதுவும் மாறவேயில்லை. வீடு அப்படியே இருக்கு''
தாத்தா மெல்லிய குரலில் கேட்டார்.
‘‘நீ சாப்பிட்டயா''
ஜங்ஷனில் சாப்பிட்டதாகப் பொய் சொன்னாள். தாத்தா தனது கையிலிருந்த புத்தகத்தை கீழே வைத்துவிட்டு எழுந்து கொண்டார். மேல்துண்டு நழுவியது. குனிந்து எடுக்கும் போது தாத்தாவின் மார்பு எலும்புகள் துருத்திக் கொண்டு தெரிவதைக் கண்டாள். தாத்தா மிகவும் மெலிந்து போயிருந்தார். கைநரம்புகள் புடைத்திருந்தன. விரல் நகங்கள் வெளிறியிருந்தன.
தாத்தா துண்டினை எடுத்து மேலே போட்டுக் கொண்டபடியே சொன்னார்.
‘‘அந்த ரூம் பூட்டியிருக்கும். சாவி எடுத்துக்கோ''
சரியெனத் தலையாட்டிவிட்டு ஆணியில் மாட்டப்பட்டிருந்த சாவிக் கொத்தை எடுத்து தெற்கு பார்த்திருந்த ஒரு அறையின் கதவைத் திறந்தாள். அந்த அறையில் ஒரு மரக்கட்டில் இருந்தது. அதில் படுக்கையோ, தலையணையோ எதுவுமில்லை. அலமாரியில் நிறைய கரப்பான்பூச்சிகள் ஓடின.
சிறிய கயிற்றுக்கொடியில் ஒரு சிவப்பு கதர்த்துண்டு தொங்கிக் கொண்டிருந்தது.
தாத்தா தனது சாய்வுநாற்காலியில் சாய்ந்து கொண்டபடியே சொன்னார் ‘‘லட்சுமியம்மா வந்தவுடன் சுத்தம் பண்ணி தரச் சொல்றேன்''
அவ்வளவு தான் அவர்களுக்குள் நடந்த உரையாடல். அதன்பிறகு தாத்தா அவளிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. வர்ஷினி இருந்த அறையில் மின்சார விசிறியில்லை. ஆகவே ஜன்னலைத் திறந்துவிட்டாள். அகலமான ஜன்னல். இரும்புக் கம்பிகள் மழையில் நனைந்து துருவேறியிருந்தன. கோட்டைச்சுவர் கண்ணில்பட்டது. எதற்காக இவ்வளவு உயரமான சுவர் என்பது போல அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பேருந்தில் வந்த களைப்பு படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அவளாகவே இன்னொரு அறைக்குள் போய் தலையணை போர்வை இருக்கிறதா எனத் தேடினாள். எதையும் காணவில்லை. தனது பெட்டியில் இருந்து மாற்று உடைகளை எடுத்து அணிந்து கொண்டு பின்கட்டிற்கு நடந்தாள்.
மிகப்பெரிய சமையலறை. பத்துப்பேர் உட்கார்ந்து சாப்பிடும் அளவு பெரியது. சிறுவயதில் அங்கே மதிய நேரம் தாயம் ஆடுவார்கள். தண்ணீர்ப்பானைகள் வைக்கும் மேடை. ஒரு ஸ்டவ் அடுப்பு. ஒரு கேஸ் அடுப்பு. பத்துப் பதினைந்து பாத்திரங்கள். சில்வர் தட்டு டம்ளர்கள். சமையல் அறையில் இருந்த பெரிய அலமாரி பூட்டப்பட்டிருந்தது. மூடப்பட்டிருந்த பின்வாசற்கதவைத் திறந்து வர்ஷினி நடந்தாள்.
கிணற்றடி சுத்தமாக இருந்தது. குனிந்து பார்த்த போது கிணற்றில் தண்ணீர் ஆழத்திலிருந்தது. துணி துவைக்கும் கல்லை விரலால் தொட்டுப் பார்த்தாள். குளிர்ச்சி மாறவேயில்லை. வாழை மரத்தின் இலைகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டு அங்கேயே உட்கார்ந்து கொள்ளலாம் போலிருந்தது.
அவள் கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் இறைத்தாள். குளிர்ச்சியான தண்ணீர். முகத்தில் தண்ணீர் பட்டவுடன் சிரிப்பு வந்தது. கைநிறைய அள்ளி கழுத்தை சுற்றிலும் துடைத்துக் கொண்டாள். ஒரு அணில் தென்னைமரத்திலிருந்து இறங்கி அவளைப் பார்த்தபடியே ஒடியது‘
லட்சுமியம்மாள். வருவதற்காக வர்ஷினி காத்திருக்க துவங்கினாள்.
லேப்டாப். செல்போன். கடிகாரம், கேமிரா என எதையும் வர்ஷினி தன்னோடு கொண்டுவரவில்லை. சென்னையிலே எல்லாவற்றையும் விட்டு வந்திருந்தாள். நாலைந்து உடைகள் கொண்ட சிறிய பெட்டி. பணம் வைத்துள்ள சிறிய ஹேண்ட்பேக், மாத்திரைகள். தலைவலி தைலம், நாப்கின்களும் அதிலிருந்தன. படிக்க புத்தகம் கூட எடுத்து வரவில்லை. குறிப்பாக எப்போதும் காதில் மாட்டிக் கொள்ளும் ப்ளுடூத் இயர்போன் கூட எடுத்து வரவில்லை. வெறுமனே வந்திருந்தாள். சின்ன வயதில் அப்படித் தானே தாத்தா ஊருக்கு வருவது வழக்கம். அந்த எண்ணமே கிளம்பும் போது மேலோங்கியிருந்தது நியூசிலாந்தில் அவள் தங்கியிருந்த அறை மூன்றாவது மாடியில் இருந்தது. சில நாட்கள், தான் எதற்காக இப்படி ஒரு நாட்டில் ஒரு தெரிந்த மனிதர் கூட இல்லாத இடத்தில் வசிக்கிறோம் என்று தோன்றும். தன்னுடைய ஊர் என்று எதைச் சொல்லிக் கொள்வது. அப்பா வேலை காரணமாக ஏதேதோ ஊர்களில் இடமாறுதல் செய்து கொண்டேயிருந்தார். அவளும் அண்ணன் தம்பிகளும் ஆளுக்கு ஒரு ஊரில் பிறந்தார்கள். அம்மாவின் தந்தையான கண்ணுசாமி தாத்தா வீடும் ஊரும் தான் அவளுக்கு பிரியமான இடம். கோடை விடுமுறைக்கு அங்கே தான் வருவது வழக்கம். அதுவும் வளர்ந்த பிறகு துண்டிக்கபட்டு போனது.
ஏன் பெரிய உலகை நோக்கி இவ்வளவு அவசர அவசரமாக ஓடினோம். சிறிய உலகில் தான் அன்றைய மனிதர்கள் வாழ்ந்தார்கள். அந்த சந்தோஷம் தனக்கு ஏன் கிடைக்கவில்லை என்று யோசித்த படியே இருப்பாள். காரணம் தெரியாத துக்கம் மனதை அழுத்தும். இதற்கு பதில் கிடையாது என அவளே சமாதானம் சொல்லிக் கொள்வாள். சில நாட்கள் இந்த மனச்சோர்வு அதிகமாகும் போது எங்காவது பயணம் கிளம்பிப் போவாள். புதிய காற்று. புதிய வானம். புதிய மனிதர்கள் மனதை மாற்றிவிடுவார்கள்.
லட்சுமியம்மாள் மரஅலமாரியில் இருந்து போர்வை தலையணை கொண்டு வந்திருந்தாள். இன்னொரு அறையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த மெத்தையையும் கொண்டு வந்து போட்டாள். அறையை சுத்தம் செய்து குடிநீருக்காக சிறிய கூஜாவை கொண்டுவந்து வைத்துவிட்டு அவள் படிப்பதற்காக ஒரு மரநாற்காலி ஒன்றையும் அறைக்குள் கொண்டு வந்து போட்டிருந்தாள்.
‘‘மரநாற்காலியை கிணற்றடியில் போடுங்க. அங்கே தான் உட்காரப்பிடிக்கிறது'' என்றாள் வர்ஷினி ‘‘அங்கே புழு பூச்சி வரும்மா'' என தயங்கினாள் லட்சுமியம்மாள்.
‘‘கிணற்றை ஒட்டிப் போடுங்க. நான் பாத்துகிடுறேன்'' என்றாள் வர்ஷினி ‘‘வெயில் படுற மாதிரி போடவா. இளம் வெயில்ல உட்கார்ந்தா சுகமா இருக்கும்,''என்றாள் லட்சுமி அம்மாள்.
‘‘உங்க இஷ்டம்'' எனச்சொல்லி சிரித்தாள் வர்ஷினி.
‘‘நீங்க வரப்போறது முன்னாடியே தெரிஞ்சா. டிபன் செய்து வச்சிருப்பேன்'' என்றாள்.
‘‘பரவாயில்லை. மதியம் சாப்பிட்டுகிடுறேன். தாத்தா சாப்பிட்டாரா''
‘‘அவருக்கு தினம் மூணு இட்லி தான். காபி டீ எதுவும் குடிக்க மாட்டார். உங்களுக்கு வேணும்னா டீ போட்டுத் தர்றேன்''
‘‘எனக்கு வேணாம். எனக்கும் தாத்தாவுக்கு குடுக்கிற இட்லியோட நாலு சேர்த்து குடு''
‘‘அது எப்படி பசியாறும்? ரெண்டு தோசை கூட தர்றேன்''
‘‘அவ்வளவு சாப்பிட முடியாது''
‘‘எள்ளுப்பொடி வச்சி தோசை சாப்பிட்டா நல்லாயிருக்கும்,'' என்றாள் லட்சுமியம்மாள்.
‘‘இருக்கிறது போதும்'' என்றாள் வர்ஷினி.
‘‘வராத விருந்தாளி வந்து இருக்கீங்க. அய்யா வீட்ல தனியாவே தானே இருக்காரு.. யாரும் விருந்தாளி வர்றதேயில்லை''
‘‘அதான் நான் வந்துட்டேன்''
‘‘உங்களுக்கு கத்திரிக்காய் பிடிக்குமா. சாம்பார்ல போடலாமா''
‘‘உங்க இஷ்டம். நீங்க எதை சமைச்சி தந்தாலும் சாப்பிடுவேன்''
‘‘அய்யாவும் இப்படி தான். எதுவும் வேணும்னு கேட்கவே மாட்டார்'' என்றபடியே லட்சுமியம்மாள். சமையல் அறைக்குள் ஒரு பூனை போவதை கவனித்தவள் போல சொன்னாள்.
‘‘இந்த பூனையை விரட்டக்கூடாதுனு அய்யா சொல்லியிருக்கார். அது பாட்டுக்கு வீட்டுக்குள்ளே சுத்திகிட்டு இருக்கும்'' எனச் சொல்லி சிரித்தாள்.
வர்ஷினி கட்டிலில் படுத்துக் கொண்டபடியே சொன்னாள்.
‘‘நான் தூங்கி எழுந்து சாப்பிட்டுகிடுறேன் ''
‘‘இருந்து பரிமாறிட்டு போறன் ''என்றாள் லட்சுமியம்மாள்.
‘‘நானே போட்டு சாப்பிட்டுகிடுவேன்'' என்றபடியே கண்களை மூடிக் கொண்டாள். அவளுக்கு அம்மாவின் நினைவு வந்தது. தானே போட்டு சாப்பிட அம்மா விடமாட்டாள். எந்த இரவாக இருந்தாலும் எழுந்து வந்து அவளே பரிமாறுவாள்.
‘‘தனியே போட்டுகிட்டா சாப்பாடு இறங்காது'' என்று சொல்லுவாள் அம்மா. அனுபவம் நிறைய விஷயங்களை பழக்கமாக்கிவிடுகிறது.
வீட்டிற்கு வந்த இரண்டு நாட்களில் ஒரு வார்த்தை கூட தாத்தா அவளிடம் எதையும் பேசவில்லை. அவளது வாழ்க்கை பற்றி கேட்டுக் கொள்ளவில்லை. லட்சுமியம்மாளும் அப்படித்தான். அவள் தன் கடந்தகாலம் தன்னை விட்டு கரைந்து போய்விட்டது போல உணர ஆரம்பித்தாள் காலை நேரம் எழுந்து கிணற்றடியில் போட்டிருந்த நாற்காலியில் வர்ஷினி உட்கார்ந்து கொள்வாள். காலைவெயில் உடலில் படுவது அத்தனை சுகமாகயிருந்தது. நத்தை ஊர்ந்து போவது போல மெதுவாக வெயில் அவள் உடலில் ஊர்ந்து போனது. தலையில் இருந்து கால்நகம் வரை வெயில் இறங்கியது. மெல்ல தானும் ஒரு வாழை மரம் போலாகிவிட்டதாக உணர்ந்தாள். வாழை தனது அகலமான இலைகளை அசைப்பதைப் போல கைகளை அசைத்தாள். வெயில் வாழை இழையினுள் இறங்கி மெல்ல அதன் நரம்புகளை மீட்டுகிறது. இலையின் நுனி வெட்கப்படுவது போல அசைகிறது. காற்றால் தங்களை எதுவும் செய்ய முடியாது என்று சொல்வது போல ஒரு ஜோடி எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன.
திடீரென வாழைமரம் முன்பு பார்த்திராத அதிசயம் போலிருந்தது. எத்தனை அழகு. எவ்வளவு பச்சை. அதிலும் வாழை மரத்திலிருந்து தொங்கும் பூ. அதன் கருஞ்சிவப்பு வண்ணம். கிழிந்து காற்றில் ஆடும் இலைகளின் நடனம். அவள்தானே ஒரு வாழை போலாகிவிட்டதாக உணர்ந்தாள்.
கிணற்றடி ஒரு மாயவெளிபோலிருந்தது. இந்த கிணற்றடியில் தான் பாட்டி அமர்ந்திருப்பாள்.. பாத்திரம் துலக்கியிருப்பாள். துணி துவைத்திருப்பாள்.
பாட்டியின் பெயர் விசாலம். பன்னிரெண்டு வயதில் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது. எட்டு பிள்ளைகள். அதில் ஐந்து, குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டன. நான்கில் இரண்டாவது அவளது அம்மா. பாட்டி எப்படியிருப்பாள்? அவளது புகைப்படம் கூட அந்த வீட்டில் கிடையாது. ஆனால் அந்த கிணற்றடி, பாட்டியின் நினைவை ஆழமாக கிளறியது. பாட்டி முப்பது வயதிற்குள் இறந்துவிட்டாள். இந்த வீட்டினை தவிர வேறு எந்த ஊருக்கும் அவள் சென்றதேயில்லை. உலகம் என்பது இந்த வீடு மட்டுமே. புகை அடுப்பின் முன் நின்றபடியே அவள் வாழ்க்கை கழிந்து போனது. அப்பாவை திருமணம் செய்து கொண்டதால் அம்மாவின் வாழ்க்கை சென்னை, கோவை, சேலம், திருச்சி என நாலைந்து நகரங்களை கண்டிருக்கிறது. ஆனால் தன் வாழ்க்கை அப்படியில்லை. எத்தனை நாடுகள். எவ்வளவு ஊர்கள். பெரிய உலகில் வாழுவதால் மட்டும் ஒருவர் சந்தோஷமாக இருந்துவிட முடியாது.
பாட்டியை பற்றி நினைத்தபடியே அவள் வெயிலிற்கு தன்னை ஒப்புக்கொடுத்திருந்தாள். வெயில் அவளை சுத்தம் செய்தது. இத்தனை ஆண்டுகாலமாக ஒடியோடி அவள் சலித்துப் போயிருந்தாள். அந்தச் சலிப்பை வெயில் பஞ்சால் துடைத்து சுத்தம் செய்தது போல மாற்றியது. துடைத்து வைத்த கண்ணாடி போலாகிவிட்டதாக உணர்ந்தாள்.
வெயில் இத்தனை உயிர்ப்பு தரக்கூடியது என்பதை இங்கு வந்த பிறகே உணர்ந்தாள். கிணற்றடியை விட்டு எழுந்து கொள்ள மனமேயில்லை. தானே கிணற்றில் தண்ணீர் இறைத்துக் குளித்தாள்.
தொடைகளில் தண்ணீர் வழிந்தோடும் போது தானே ஒரு வாழைமரம் போல உணர்ந்தாள். பூனை அவள் குளிக்கும் போது தள்ளி நின்று பார்த்தபடியே இருந்தது. ஈரத்தலையைக் கோதியபடியே பெயர் தெரியாத பூக்களை பறித்து வந்தாள். சிரிப்பு. தன்னை அறியாத சிரிப்பு முட்டிக் கொண்டேயிருந்தது.
ஒரு தட்டில் மூடிவைத்திருந்த இட்லிகளை சாப்பிட்டாள். புதிதாக இன்றைக்கு தான் முதன்முதலில் இட்லி சாப்பிடுவது போல ருசியாக இருந்தது.
செல்போன் அழைப்பு இல்லை. லேப்டாப் இல்லை. அலுவலகத் தொந்தரவு எதுவுமில்லை. தென்னை மரத்தில் ஒடியாடும் அணில் போல தானும் விருப்பமான விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருக்கலாம் என்றிருந்தது.
காற்று, மிதமான காற்று, வேகமான காற்று, பகல் காற்று, மாலைக்காற்று, இரவுக்காற்று, பின்னிரவுக் காற்று என காற்றின் குளிர்ச்சி இத்தனை இதம் தரும் என்பதை இங்கு வந்த பிறகே உணர்ந்து கொண்டாள். பகலும் இரவும் காற்றடித்துக் கொண்டேயிருந்தது. இரவில் ஆற்றின் நீரோட்டம் போன்ற சீரான காற்று. கூந்தலை காற்று கோதிவிடுவது சந்தோஷமாக இருந்தது. பிடறியில் காற்றின் விரல்கள் தொடும்போது அவள் சிரித்துக் கொண்டாள்.
காலை வெயில் ஏறிய பிறகு கொய்யாமரத்திற்கு ஒரு குயில் வருகிறது. அந்தக் குயில் விட்டுவிட்டுப் பாடுகிறது. எத்தனை இனிமையான குரல். பகலின் தனிமையை குயிலின் குரல் போக்கிவிடுகிறது. அந்தக் குயில் சில நேரம் நிதானமாக, உலகிற்கு எதையோ சொல்ல முயற்சிப்பது போல குரல் தருகிறது.
குயிலின் ஓசை நின்றபிறகு ஏற்படும் நிசப்தம் அலாதியானது. பாத்திரங்கள் கீழே விழுந்துவிட்ட பிறகு உருவாகும் நிசப்தமான உருளல் நினைவிற்கு வந்து போனது. குயிலோசை என்பது ஒரு மலர். அரூபமான மலர். அதன் வாசனை தான் இனிய பாடலாக மாறியிருக்கிறது.
குயிலுக்குப் பிறகு மதிய நேரம் ஒரு ஜோடி காகங்கள் கோட்டை சுவர் மீது வந்து அமரும். அந்த காகங்கள் அசைவற்ற ஒவியம் போல அமர்ந்திருக்கும். சில சமயம் கைகளை வீசிப் பார்ப்பாள். காகம் அசையவே அசையாது. பயமற்றுப் போன காகங்கள். தானும் அப்படித் தானே ஆகிவிட்டேன். எந்த பயமும் தன்னிடமில்லை. தன் உடல் மீது கொண்டிருந்த கவனம் கூட மறைந்து போய்விட்டது. கொடியில் உலரும் புடவைப் போல தன் உடல் எடையற்று ஆகிவிட்டதாக உணர்ந்தாள்.
இதுவெல்லாம் சாத்தியம் தானா என்று கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் எளிதாக நடந்தேறியது.
தாத்தாவை கடந்து போகையில் லேசாக திரும்பிப் பார்த்து சிரிப்பார். சில நாட்கள் அவள் வீட்டில் உதிர்ந்த மல்லிகைப்பூக்களைக் கட்டினாள். பூஜை செய்தாள். சில நாட்கள் லட்சுமியம்மாளுக்கு பதிலாக அவளே சமைத்தாள். வீட்டினை சுத்தம் செய்தாள். தனி ஆளாக தாயம் ஆடினாள். பகல் முழுவதும் தூங்கினாள். இரவில் நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்தாள்.
தண்ணீருக்குள் வசிக்கும் மீன்கள் பூமியோடு தனக்குத் தொடர்பும் வேண்டாம் என வாழுவது போல தன் வாழ்க்கையும் மாறிவிட்டதாக உணர்ந்தாள். சட்டென அவளுக்கு வயது கரைந்து போய்விட்டது போலவும் பதின் வயதின் துடிப்பு மறுபடி மனதில் பீறிடுவதாகவும் உணர்ந்தாள். அது போன்ற நேரத்தில் அவள் மெல்லிய குரலில் தனக்கு பிடித்தமான பாடலைப் பாடுவாள். அதை தாத்தா கேட்கக்கூடும். யாரும் கேட்காவிட்டாலும் பிடித்தமான பாடலை தனியே பாடுவது சந்தோஷமாகவே இருந்தது.
ஒவ்வொரு நாளும் அவள் வெயிலில் அமர்ந்தாள். அலையின் முன்னால் விளையாடும் சிறுமியை போலவே உணர்ந்தாள். பத்து நாட்களில் அவளுக்கு உடலும் மனதும் மாறியிருந்தது. யாரும் அவளை பெயர் சொல்லி அழைக்கவில்லை. அடுத்தவருக்காக ஒரு வேலையையும் செய்யவில்லை. ஒரு பைசா பணத்தை வெளியே எடுக்கவில்லை. ஷாப்பிங் போகவில்லை. எந்த மாத்திரை மருந்து எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வளவு எளிமையானது தானா வாழ்க்கை. ஏன் இதை சிக்கலாக்கிக் கொண்டோம் எனத் தோணியது.
பகல் மிக நீண்டதாக இருந்தது. பாதரசம் போன்று மினுங்கும் வெயில். பகலில் சற்று பிரகாசம் அதிகம். காலடி சப்தமே கேட்காத வீதி. சைக்கிள் கூட கடந்துபோவதில்லை. மரத்தின் இலையசைவு கேட்கும் துல்லியம். ஜன்னலுக்கு வெளியே ஒரு மஞ்சள் நிற வண்ணத்துபூச்சி பறந்து கொண்டிருந்தது. எங்கே போவது என வழி தெரியாத குழந்தையைப் போலிருந்தது அதன் பறத்தல். சுவரின் நிழல் நீண்டுகொண்டிருந்தது. இத்தனை நீண்ட பகலாக இருந்த போதும் அலுக்கவில்லை.
என்ன செய்வது எனத்தெரியாத ஒரு பகலின் போது தாத்தாவிடம் அவளாகவே கேட்டாள்.
‘‘நான் வேணும்னாலும் தேவாரம் வாசிக்கட்டுமா''
தாத்தா மறுப்பு சொல்லாமல் தன் மடியில் வைத்திருந்த புத்தகத்தை அவளிடம் நீட்டினார்.
அவள் மெல்லிய குரலில் தேவாரம் படிக்கத் துவங்கினாள்.
‘‘தோடுடைய செவியன்விடை
யேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்
தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே. ''
தாத்தாவின் கண்களில் கண்ணீர் கசிவது தெரிந்தது. அவள் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருந்தாள். அவர் கைவிரல்கள் அசைந்தபடியே இருந்தன. வாசித்து முடித்தபோது நாவில் தித்திப்பு படருவது போல உணர்ந்தாள். புத்தகத்தை தாத்தா கையில் கொடுத்தபோது அவர் அவளது கைகளைப் பற்றிக் கொண்டபடியே சொன்னார்
‘‘உங்க அம்மா நல்லா பாடுவா''
அம்மா பூஜை செய்யும் போது பாடுவதைக் கேட்டிருக்கிறாள். தன்குரலில் அம்மாவின் சாயல் வெளிப்படுகிறதா என யோசித்தாள். தாத்தாவின் சாய்வுநாற்காலி அருகிலே உட்கார்ந்து கொண்டாள். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் மிக நெருக்கமாக உணர்ந்தாள்.
லட்சுமியம்மாளின் வீட்டிற்குப் போய் அவளைப் பார்க்க வேண்டும் என்று ஒரு நாள் காலையில் தோன்றியது. அவளிடம் சொன்னால் வரவேண்டாம் என்று தடுத்துவிடுவாள். ஆகவே சொல்லிக் கொள்ளாமல் அவள் வீட்டினை விசாரித்துப் போன போது லட்சுமியம்மாள் மாவு இடித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் வியப்பும் மகிழ்ச்சியுமாக ‘‘வாங்கம்மா'' என்றாள் ‘‘எப்பவும் வேலைதானா?'' எனக்கேட்டாள் வர்ஷினி
‘‘செய்து முடியலை. அவ்வளவு வேலை கிடைக்கு. காபி போடவா?'' எனக்கேட்டாள் லட்சுமியம்மாள்.
‘‘ஒரு நாளைக்கு பத்து காபி குடிச்சிட்டு இருந்தவ. இங்கே வந்து காபி குடிக்கிறதை விட்டுட்டேன். மோர் இருந்தா குடுங்க'' என்றாள் வர்ஷினி.
‘‘எங்க வீடு ரொம்ப சின்னது. தலை இடிக்கும்'' என வெட்கத்துடன் சொன்னாள் லட்சுமியம்மாள்.
அவள் வீட்டின் அருகிலும் ஒரு வாழைமரமிருந்தது. அதை கவனித்தபடியே கேட்டாள்.
‘‘வாழைப்பூக்குள்ளே ஒரு கள்ளன் இருக்கிறானு சொல்வாங்களே''
‘‘அது ஒரு கதைம்மா. கள்ளன்னா நிஜ கள்ளன் இல்லை ''என்றபடியே அவள் இடித்த மாவை அலுமினிய பாத்திரம் ஒன்றில் அள்ளிக் கொண்டாள்.
‘‘உங்க பிள்ளைகள் நாலு பேரும் வெளியூர்ல தான் இருக்காங்களா?'' எனக்கேட்டாள் வர்ஷினி.
‘‘ரெண்டு மக மெட்ராஸ்ல இருக்காங்க. கடைசிப்பையன் மதுரையில இருக்கான். ஒருத்தன் துபாய்ல'' என்று சொல்லி சிரித்தாள்.
‘‘பிள்ளைகள் வருவாங்களா?'' எனக்கேட்டதும் அவள் முகம் மாறியது.
‘‘வருஷத்துக்கு ஒரு தடவை வர்றதே அபூர்வம். பெரிய ஆளா ஆகிட்டாங்க. வேலை இருக்கும். இந்த ஊர்ல என்ன இருக்கு''.
‘‘நீங்க இங்கே தானே இருக்கீங்க'' என்றாள் வர்ஷினி.
‘‘இந்த கிழவியை யாரு நினைக்கா'' என்றபடியே லட்சுமியம்மாள். தன்னை மீறி வழிந்த கண்ணீரை சேலையால் துடைத்துக் கொண்டாள். கொத்துமல்லி இலைகளை கிள்ளிப் போட்டு மோர் கொண்டுவந்து தந்தாள் லட்சுமியம்மாள். அவளை அழைத்துக் கொண்டு இருவரும் ஏரிக்கரை வரை நடந்தார்கள். ஊரை சுற்றிலும் வயல்கள். நிறைய மரங்கள் கொண்ட ஏரிக்கரை. கரையை ஒட்டிய சிறிய கோவில். இயந்திரத்தின் ஒசையே கேட்காத ஊர். இன்னமும் காலை நான்கு மணிக்கு எழுந்துவிடுகிறார்கள். இரவு ஏழு மணிக்குள் ஊர் அடங்கிவிடுகிறது.
‘‘ஊர்ல யார் வீட்ல டிவி இருக்கு?'' எனக்கேட்டாள் வர்ஷினி
‘‘அது நிறைய வீட்ல இருக்குமா. ஆனா.. சப்தம் வெளியே கேட்காது. சினிமா போட்டா பார்ப்பாங்க. நியூஸ் கேப்பாங்க. டீச்சர் வீட்ல தான் எப்பவும் டிவி ஒடிக்கிட்டு இருக்கும். ''
வரும்வழியில் வயலில் கொக்குகள் தரையிறங்குவதை இருவரும் நின்று பார்த்தபடியே இருந்தார்கள். வானின் தூதுவர்கள் போல கொக்குகள் பூமியில் தரையிறங்கிக் கொண்டிருந்தன.
தாத்தாவிடம் அவளாகவே பேச்சு கொடுத்தாள். பத்து வார்த்தை பேசினால் தாத்தா ஒரு வார்த்தை பதில் தருவார்.
‘‘ஏன் தாத்தா பாட்டியோடு ஒரு போட்டோ கூட எடுத்துகிடலை?''
‘‘எடுத்து?''எனக்கேட்டார் தாத்தா
‘‘வீட்ல மாட்டி வச்சிருக்கலாம்லே''
‘‘வீட்ல பொம்பளை படத்தை மாட்டக்கூடாது''
‘‘சரஸ்வதி படம் மாட்டியிருக்குல்லே''
‘‘அது சாமி''.
‘‘சாமின்னாலும் பொண்ணு தானே''
தாத்தா பதில் சொல்லவில்லை.
‘‘தனியா இருக்கிறது கஷ்டமா இல்லையா தாத்தா''
‘‘தனியா எங்கே இருக்கேன்?'' என்று கேட்டார் தாத்தா.
‘‘ஆமாம் தானே. தனியே எங்கேயிருக்கிறார். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு ஆள் தனியே வசிப்பது போல தெரிகிறது. ஆனால் அவர் தனியாக இல்லை. பூனை, அணில். குயில். லட்சுமியம்மாள். வெயில் காற்று எல்லாமும் சேர்ந்து ஒன்றாகி அல்லவா இருக்கிறது. தாத்தா யாரும் பிரவேசிக்க முடியாத தண்ணீர் மாளிகை ஒன்றினுள் வசிப்பது போல அல்லவா வாழ்கிறார்''
தாத்தாவிடம் அவள் ஏதேதோ கேட்டாள். நிறைய நேரம் அவர் மௌனமாகவே இருந்தார். பதில் சொல்லியிருந்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை.
அவள் அறைக்குள் ஒரு சிவப்பு நிற ஓடு கொண்ட பூச்சி வந்திருந்தது. கட்டிலின் மீது நின்றிருந்த அந்த பூச்சியை பார்த்தபடியே இருந்தாள். அதை விரட்ட வேண்டும் என்று தோன்றவேயில்லை. சிவப்பு நிற ஓடு மினுமினுத்தது. அந்த பூச்சி தியானிப்பது போல அமர்ந்திருந்தது. பின்பு அது சட்டென பறந்து ஜன்னலை விட்டு வெளியேறிது. அவளும் பூச்சியின் பின்னாலே பறந்து போவது போலவே உணர்ந்தாள் பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு சதா பேச்சு வேண்டும். சத்தம் வேண்டும். சலசலப்பு வேண்டும். வாழ்க்கை என்பது முடிவற்ற பேச்சுக்கச்சேரி தான். ஆனால் இங்கே பேச்சிற்கே அவசியமில்லை. தேவையான போது குறைவாகப் பேசினால் போதும். சைகை, தலையசைப்பு, சிறு சிரிப்பு, ஒன்றிரண்டு வார்த்தைகள் இவ்வளவு போதுமானதாகயிருந்தது. அதுவும் கூட இரவில் தேவைப்படவில்லை. அவள் வசித்த பெரிய நகரங்களில் மிதமிஞ்சிய விளக்குகள். இரவெல்லாம் ஒளிரும் விளக்குகள். வெளிச்சம் அதிகமாக அதிகமாக தனிமை அதிகமாகிவிடுகிறது. இருட்டு தான் தனிமையின் துணை. அதுவும் குறைவான வெளிச்சத்தில் ஏற்படும் நெருக்கம் அலாதியானது. பகலின் வெளிச்சத்தை ஒரு போதும் இரவால் வெல்ல முடியாது.
ஏழு மணிக்கு இரவு உணவை முடித்துக் கொண்டு வர்ஷினி தன் அறைக்குப் போய்விடுவாள். கட்டிலில் படுத்தபடியே வெளியே கேட்கும் பூச்சிகளின் சங்கீதத்தை ரசித்துக் கொண்டிருப்பாள். சில நேரம் பூனை சப்தமிடும். ஆற்றின் கரையில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வே ஏற்படும். இரவின் அகன்ற கைகள் அவளைத் தழுவிக் கொள்ளும். தன்னை மறந்து உறங்குவாள். விடிகாலை வெளிச்சம் வரும்போது விழிப்பே வராது. கண்விழித்தபோது மனது அத்தனை சாந்தமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.
பதினாறாம் நாள் பகலில் திடீரென யாருக்காவது போன் செய்ய வேண்டும் என்பது போன்ற விருப்பம் உண்டானது. யாரோடும் பேசாமலே இருந்துவிட்டால் அவர்கள் என்ன நினைப்பார்கள்? கற்பனையாக எதையாவது நினைத்து பயப்படுவார்கள் தானே? செய்துமுடிக்கப் படாத வேலைகள் என்னவாகியிருக்கும்? தான் கட்ட வேண்டிய மாத தவணைகள் சரியாக செலுத்தப்பட்டிருக்குமா? பெங்களூர் வீட்டினை ஒரு ஆளுக்கு வாடகைக்கு விட்டால் கூடுதல் வாடகை கிடைக்குமே என்பது போல எண்ணங்கள் குமிழ்விடத் துவங்கின. திடீரென அலுவலகம் போகவேண்டும் என்ற ஆசை உண்டானது. பரபரப்பு இல்லாமல் என்ன வாழ்க்கை.
அன்றிரவு அவளுக்கு நல்ல தூக்கமில்லை. திடீரென தான் தொடர்பில்லாத ஏதோ ஓர் உலகிற்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போல உணர்ந்தாள். ஒரு வேளை தான் விசாலம் பாட்டியாகிவிட்டோமோ என்று கூட தோன்றியது.
லட்சுமியம்மாள் தரும் சாப்பாட்டில் ஏதோ குறை இருப்பது போல உணர்ந்தாள். நாக்கு திடீரென காபிசினோ காபிக்கு ஏங்கியது. காரை ஓட்டி எத்தனை நாளாகிவிட்டது என்று நினைத்துக் கொண்டாள். ஏடிஎம் வரிசையில் நிற்பது போல கனவு கண்டாள். தண்ணீரிலிருந்து வெளியே வந்த ஆமை போல தன்னை உணர ஆரம்பித்தாள்.
இதமான காற்றும் வெயிலும் குளிர்ச்சியும் கூட அவள் மனக்குழப்பங்களை தீர்க்க முடியவில்லை.
கிளம்பி வந்தது போலவே திடீரென மறுநாள் காலை அவள் சென்னைக்குப் புறப்பட்டாள். லட்சுமியம்மாளிடம் சொல்லிக் கொள்ளவில்லை. தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது தாத்தாவிடம் ஊருக்குப் போவதாகச் சொன்னாள். தாத்தா தலையசைத்துக் கொண்டார். வேறு ஒரு வார்த்தை பேசவில்லை.
வீதியில் இறங்கி நடக்கத் துவங்கிய போது திடீரென எங்கிருந்தோ குயிலின் ஓசையைக் கேட்டாள்.
எதையோ நினைவுபடுத்துவது போலிருந்தது அக்குரல். அதைக் கேட்க கூடாது. அது தன்னை தடுத்து நிறுத்திவிடும் என்பது போல வேகவேகமாக அவள் வீதியில் நடந்து செல்ல ஆரம்பித்தாள்.
நவம்பர், 2020.