வெண்நுரை

ஓவியம்
ஓவியம்மனோகர்
Published on

ஐஸ்கிரீமை குழைத்துத் தடவுவது போலிருந்தது அந்த ஷேவிங்கிரீம். அப்பாவின் முகம் முழுவதும் சீராகக் கிரீமைத் தடவினாள் ரோகிணி. அவர் மர ஸ்டூலில் அமர்ந்தபடியே மௌனமாகச் சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். எலுமிச்சை மணம் கொண்ட ஷேவிங் கிரீமது. கன்னத்தில் கிரீமைத் தடவி நுரைக்கவிடும் போது எழும் மணம் ரோகிணிக்கு மிகவும் பிடித்தமானது.

எதற்காகச் ஷேவிங் கிரீமில் எலுமிச்சை வாசனையைச் சேர்த்திருக்கிறார்கள். அந்த மணம் எப்போதும் குழந்தைபருவத்தின் நினைவாகவே இருக்கிறது. ஒருவேளை அது தனக்கு மட்டும் தான் அப்படியிருக்கிறதா இல்லை, எல்லாக் குழந்தைகளுக்கும் எலுமிச்சை மணம் என்பது பால்யத்தின் விருப்ப மணமாகத் தானிருக்குமா.

எலுமிச்சையைக் கிள்ளி முகரும் போது எழும் வாசனை அலாதியானது. நகத்தை முகர்ந்தால் கூட வாசனை அடிக்கும். எலுமிச்சை வண்ணத்தில் அவள் பாவடை வைத்திருந்தாள். அதுவும் பள்ளிவயதின் நினைவு தான். பாவாடை தாவணி பருவத்தைத் தாண்டி வந்துவிட்டபிறகு இப்போதும் மனது அதற்கு ஆசைப்படத்தானே செய்கிறது, வயது சில உடைகளை அணிய விடுவதில்லை என்பது எத்தனை ஏமாற்றம். அதிலும் பெண்கள் எந்த வயதில் என்ன உடையை அணிய வேண்டும் என்பதை அவர்கள் மட்டும் தீர்மானிக்க முடிவதில்லை. புடவைகள் அழகு தான். ஆனால் பாவாடை தாவணியின் வசீகரம் புடவைக்கு இல்லை.

சமையல் செய்வதைப் போல வெகு இயல்பாக அவள் அப்பாவிற்குச் சவரம் செய்துவிட்டாள். சேலை நுனியை கொண்டு காதோரம் ஒட்டிய கிரீமை துடைத்துவிட்டாள். அப்பா இப்போதெல்லாம் கண்ணாடி வைத்துக் கொள்வதில்லை. சவரம் செய்து முடித்தபிறகு அவர் கன்னத்தை லேசாகத் தடவிக் கொள்வார். அவ்வளவு தான் பரிசோதனை. பிறகு குளிக்கச் சென்றுவிடுவார்.

நான்கு வருஷங்களாக ரோகிணி தான் அப்பாவிற்குச் சவரம் செய்துவிடுகிறாள். இது என்ன பழக்கம் எனக் கணவர் சில நாட்கள் கடிந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவளுக்குப் பிடித்திருந்தது. தான் அறிந்தவரை வேறு எந்தப் பெண்ணும் அப்பாவிற்கோ, கணவனிற்கோ சவரம் செய்துவிடுகிறவளில்லை.

சவரம் செய்துவிடுவதன் வழியாகத் தான் அப்பாவோடு நெருக்கமாக இருக்கமுடிகிறது என்பதை அவள் உணர்ந்திருந்தாள். பத்து பனிரெண்டு வயதில் அப்பாவிடமிருந்து விலகி அவள் அம்மாவின் நிழலைப் போலாகியிருந்தாள். ஆனால் அந்த ஒட்டுதல் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சவரம் செய்வதன் வழியே திரும்பச் சாத்தியமாகிவிட்டது.

ஓவியம்
ஓவியம்மனோகர்

அம்மா இறந்து போன பிறகு அப்பா மட்டுமே ஊரிலிருந்தார். அவள் தான் சென்னையில் வந்து இருங்கள் என்று அழைத்துக் கொண்டாள். அவர்கள் வீட்டிற்கு வந்த நாட்களில் அப்பா அதிகாலை நாலரை மணிக்கே எழுந்து சவரம் செய்து குளித்துத் தயாராகிவிடுவார். இன்னும் கொஞ்சம் தூங்கலாமே என அவள் சொல்லும் போது அப்பா வெறுமனே தலையாட்டிக் கொள்வார். அவ்வளவு அவசரமாக ஒரு நாளை எதற்குத் துவங்குகிறார். என்ன செய்யப்போகிறார்.

ஒரு நாள் அப்பாவின் மீசையை அவரைக் கேட்காமலே அவள் நீக்கிய போது அவர் மிகவும் அழகாகத் தெரிந்தார். மீசையில்லாத அப்பாவை அன்று தான் அவள் முதன்முதலாகப் பார்த்தாள். சட்டென அவரது வயதில் பாதிக் குறைந்து போனது போலிருந்தது.

அப்பாவிடம் கண்ணாடியை காட்டி மீசையில்லாமல் உன் முகம் அழகா இருக்குப்பா என்றாள்.

அவர் பதில் சொல்லவில்லை. தன்னைக் கண்ணாடியில் உற்று பார்த்துக் கொள்ளக்கூடயில்லை. அப்பா அப்படித்தான்.

அவள் சவரம் செய்துவிடும் தருணத்தில் அவரது முகத்தில் ஆயிரம் யோசனைகள் கடந்து போய்க் கொண்டிருக்கும். அப்படி என்ன தான் யோசிக்கிறார். எழுபத்திரெண்டு வயதான பிறகு கவலைப்படுவதற்கும் யோசிப்பதற்கும் என்ன இருக்கிறது. வேலையிலிருந்து ஒய்வு பெற்றாகிவிட்டது. அம்மாவும் இறந்துவிட்டாள். அண்ணன்கள் இருவரும் டெல்லி, அமெரிக்கா எனப் போய்விட்டார்கள். அப்பாவிற்கு நண்பர்களும் குறைவு. பின் எதைத் தான் யோசனை செய்து கொண்டிருக்கிறார். அப்பாவிடம் கேட்டால் ஒன்றுமில்லை என்று சொல்வார். ஆனால் அவர் முகத்தில் எப்போதும் கவலையின் ரேகைகள் படிந்திருந்தன.

அவரது கவலையிலிருந்து விடுபடுவதற்காகப் பழைய பாடல்கள் கொண்ட சிடி வாங்கிக் கொடுத்தாள். கோவில்களுக்கு அழைத்துப் போய்வந்தாள். முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வைத்தாள் எதுவும் அவரது கவலையைப் போக்கவில்லை.

நியூஸ் பேப்பர் தான் அவரது உலகம். மதியம் வரை ஆங்கிலப் பேப்பரை வரி விடாமல் படித்துக் கொண்டிருப்பார். மதியம் சாப்பிட்டவுடன் ஒரு மணி நேர தூக்கம். நாலரை மணிக்கு பூங்காவிற்குக் கிளம்பி போய்விடுவார். எட்டு மணிக்கு தான் வீடு திரும்புவார். பூங்காவிலும் அப்பா தனியாகத் தானிருப்பார். வயதானால் ஒட்டுதல் குறைந்து போய்விடுமா. மனித உறவுகளின் தேவையற்று போய்விடுமா. அப்பா சிரிப்பதேயில்லை. எதையும் ரசித்து ருசித்துச் சாப்பிடுவதுமில்லை. அவரது வெளியே பகிர்ந்து கொள்ளாத கவலையைப் போக்குவதற்காகவே ரோகிணி எதையாவது பற்றி அவருடன் பேசிக் கொண்டேயிருப்பாள். அப்பா நாலு வார்த்தைக்கு ஒரு வார்த்தை மட்டுமே பதில் சொல்வார்.

ஏன்பா உனக்கு இங்கே இருக்கப் பிடிக்கலையா என அடிக்கடி அவள் கேட்டுக் கொள்வாள்.

அப்படி எல்லாம் இல்லே என்று மட்டும் பதில் சொல்வார்.

அப்பாவை சந்தோஷப்படுத்துவதற்காக அவளுக்குத் தெரிந்த வழிகள் எல்லாமும் தோற்றுப் போயின. அப்போது தான் ஒரு நாள் அப்பாவிற்குச் சவரம் செய்துவிடுகிறேன் என்றாள். அப்பா மறுக்கவில்லை. அப்படித் தான் அப்பாவிற்கு அவள் சவரம் செய்துவிடுவது துவங்கியது. அவளது சமையற்கட்டு வேலைகள் முடிந்தபிறகு சவரம் செய்து கொள்ளமுடியும் என்பதால் அப்பாவின் காலை உருமாறியது. நாலு மணிக்கு எழுந்து கொள்வதற்குப் பதிலாக ஆறுமணி வரை அவர் படுக்கையில் கிடந்தார்.

பின்பு காபி குடித்துவிட்டு நடைப்பயிற்சிக்கு சென்றுவிடுவார். எட்டு மணிக்கு தான் வீடு திரும்புவார். பிள்ளைகளும் கணவரும் வேலைக்குக் கிளம்பும் வரை நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார். அவர்கள் வெளியேறிப்போனதுடன் காற்றுப் போன பலூன் சுருங்கிகிடப்பதை போல வீடு அமைதியாகிவிடும். அப்பா மெதுவாக எழுந்து பால்கனியில் உள்ள மரஸ்டூலில் போய் உட்கார்ந்து கொள்வார். தனக்குச் சவரம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதன் அடையாளமது.

ரோகிணி அப்பாவின் ஷேவிங் ரேஷர், கிரீம். டெட்டால் பாட்டில் எல்லாவற்றையும் கைப்பை ஒன்றில் போட்டு வைத்திருந்தாள். அந்தப் பை பால்கனியில் உள்ள ஆணி ஒன்றில் தான் தொங்கிக் கொண்டிருக்கும். அரசு ஊழியர் என்பதால் அன்றாடம் முகச்சவரம் செய்து கொள்ளும் பழக்கம் அவருக்கிருந்தது, சிறுவயதில் ரோகிணி அப்பாவிற்காகப் பனாமா பிளேடு வாங்கி வருவதற்காகப் பெட்டிக்கடைக்குப் போய் வந்திருக்கிறாள். ஆனால் ஒருமுறை கூட அவருக்குச் சவரம் செய்துவிட்டது கிடையாது.

அவளது அப்பாவும் கணவரும் சவரம் செய்வதை எவ்வளவோ முறை கண்டிருந்த போதும் முதல்முறையாக ஷேவிங் கிரீமை கையில் எடுத்த போது எதை முதலில் செய்ய வேண்டும் எப்படிச் சவரம் செய்ய ஆரம்பிக்க வேண்டும் எனத் தயக்கமாகவே இருந்தது.

அப்பா கையில் கண்ணாடியை பிடித்தபடியே உட்கார்ந்திருந்தார். முதல்நாள் நிறையக் கிரீமை வீணடித்துவிட்டாள். பயந்து பயந்து சவரம் செய்த காரணத்தால் நாடியின் அடியிலிருந்த ரோமங்கள் அப்படியே இருந்தன. அப்பா எதுவும் சொல்லவில்லை. அவராக டெட்டாலை கையில் தடவி கன்னத்தில் தடவிவிட்டு தேய்த்துக் கொண்டார். அந்த மணம் அவள் நாசியில் ஏறியது. ஆனால் நாலைந்து நாட்களில் அவள் சவரம் செய்யப் பழகிவிட்டிருந்தாள்.

அதன்பின்பு பிரஷ் நுனியில் கிரீமை தடவி நன்றாக நுரைக்கவிடுவாள். அப்பாவின் கன்னம் முழுவதும் நுரைகளை அவள் தடவும் போது பால் கொதித்து நுரை ததும்புவது போலவே தோன்றும். சலனமற்ற அப்பாவின் கண்கள் கண்ணாடியில் உறைந்திருக்கும். அப்பா பயன்படுத்திய பிளேடுகளுக்குப் பதிலாக அவள் ஜில்லட் ரேசரை வாங்கியிருந்தாள். அது போலவே எலுமிச்சை மணம் கொண்ட கிரீமையும் அவளாகத் தான் விரும்பி தேர்வு செய்து வாங்கி வந்தாள்.

கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே சவரம் செய்ய ஆரம்பிப்பாள். சரியாக ஒன்பது நிமிசத்தில் அவள் சவரம் செய்து முடித்துவிடுவாள். ஆரம்ப நாட்களில் அப்பாவிற்கு உதவி செய்கிறோம் என்று மட்டும் தான் அவளுக்குத் தோன்றியது. ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு அப்பாவோடு மிக நெருக்கமாக இருப்பதை உணரத்துவங்கினாள். அது வெறும் சவரமில்லை. ஒரு உடலை கையாளத்துவங்குகிறோம். உடலை கைக்கொள்வது தான் உறவின் உச்சம்.

டெட்டாலை தனது கைகளால் அப்பாவின் கன்னத்தில் தடவும் போது தனது குழந்தையைத் தொடுவதைப் போலவே உணர்ந்தாள். அவர் தனது அப்பாயில்லை. தனது மகன். நந்துவின் கன்னத்தைப் போலவே இருக்கிறது.

சவரம் செய்துவிடத்துவங்கிய பிறகு ஆண்களை அவள் அதிகம் உற்று நோக்க ஆரம்பித்தாள். வழவழப்பான அந்தக் கன்னங்களை என்ன பிளேடு கொண்டு சவரம் செய்திருப்பார்கள் என யோசிப்பாள். டிவியில் சாமிபடங்கள் ஒளிபரப்பாகும் போது கடவுள் கூட எவ்வளவு அழகாகச் சவரம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு யார் இப்படிச் சவரம் செய்துவிடுகிறார்கள். என்ன கிரீமை உபயோகிக்கிறார்கள். ஏன் கடவுள் எவரும் மீசை வைத்துக் கொண்டிருப்பதில்லை எனத் தனக்குத் தானே கேட்டுக் கொள்வாள்.

வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் அவள் அப்பாவிற்குச் சவரம் செய்துவிடுவதை ஏளனத்துடன் பார்ப்பார்கள். சிலர் இது என்னம்மா புதுப்பழக்கம் எனக் கண்டித்திருக்கிறார்கள்.

எங்க அப்பாவுக்கு நான் செய்யாமா யாரு செய்றது. என வாயை அடைத்திருக்கிறாள்.

மழைக்காலத்தின் பின்னிரவு ஒன்றில் அப்பாவிற்கு மூச்சு விடுவது சிரமமானது, சிறுநீரகப்பிரச்சனை என்று மருத்துவர்கள் ஐசியூவில் அனுமதித்தார்கள். ஐந்து நாட்கள் அப்பா அபாயப்பிரிவிலே இருந்தார். அந்த நாட்களில் ரோகிணி மிகவும் அழுதாள். அவளால் அப்படி அப்பாவை நரைத்த தாடியோடு காண சகிக்கவில்லை. ஆறாம் நாள் அவரை வேறு வார்டிற்கு மாற்றிப் போது உடனே அவருக்குச் சவரம் செய்துவிட வேண்டும் எனத் துடிப்பாக இருந்தது.

ஆனால் அப்பா சவரம் செய்ய வேண்டாம் என மறுத்துவிட்டார். பத்தொன்பது நாட்கள் அப்பா மருத்துவமனையில் இருந்தார்.

அவர் வீடு வந்து சேர்ந்த இரண்டாம் நாள் தானே எழுந்துவந்து பால்கனி நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். அடுப்படி வேலையாக இருந்தவள் அதைப் போட்டுவிட்டு உடனே ஒடி வந்தாள். கோரையான அந்த நரைத்தமயிர்களை நீக்கியபிறகே அவள் ஆசுவாசம் அடைந்தாள். அப்பாவின் கன்னத்தைத் தடவிய போது மிகவும் தளர்ந்து போயிருந்தது.

ரொம்ப மெலிஞ்சு போயிட்டப்பா எனச் சொன்னாள்

அவர் ஆமோதிப்பவர் போலத் தலையாட்டிக் கொண்டார். அதன்பின் இரண்டுவாரங்களுக்கு இயல்பாக இருந்தார்.

பின்பு திடீரென ஒரு நாள் தனக்குத் தானே சவரம் செய்து கொள்ளத் துவங்கினார்.

நான் பண்ணிவிடுறேன்பா என அவள் சொன்ன போது உன் வேலையை மட்டும் பாரு எனக் கடிந்து சொல்லிவிட்டார்.

எதற்காகத் திடீரெனத் தன்னைச் சவரம் செய்ய வேண்டாம் எனக்கூறுகிறார் எனப்புரியவில்லை. அப்பாவின் மீது கோபம் கோபமாக வந்தது.

நடுங்கும் கைகளுடன் அப்பா சவரம் செய்வதைப் பார்க்கும் போது ஒடிப்போய் ஷேவிங் ரேசரை பிடுங்கி தானே சவரம் செய்துவிட வேண்டும் என்று தோன்றும். அப்படி ஒருமுறை கட்டாயப்படுத்தியிருக்கிறாள்.

ஆனால் அப்படி அவள் நடந்து கொண்டதற்குப் பழிவாங்கும் விதம் போல அப்பா அதன்பிறகு சவரம் செய்து கொள்வதை நிறுத்திக் கொண்டுவிட்டார். நரைத்த கோரையான தாடியை காண சகிக்கவில்லை. ஆனால் அவர் சவரம் செய்து கொள்ளவேயில்லை. கவலைகள் காரணமாக வேகமாக மயிர்கள் வளர்ந்துவிடும் என்பார்கள். சில வாரங்களில் அப்பாவின் தாடி மார்பில் புரளும் அளவு வளர்ந்துவிட்டது. அதைக்கண்டு ஒரு நாள் ஏன்பா இப்படியிருக்கே என ரோகிணி அழுதாள். அப்பா அந்த அழுகையைச் சட்டை செய்யவேயில்லை.

என்ன கோபம். என்ன பிடிவாதம். அப்பாவின் முகம் தன்னைக் கேலி செய்வது போலவே தோன்றியது.

பின்னொரு நாள் இரவு மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கிளம்புவதற்காக அவள் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது அப்பா மெதுவான குரலில் சொன்னார்.

‘எனக்கு ஷேவ் பண்ணிவிடும்மா’

‘இப்போ எதுக்குப்பா’ எனக்கேட்டாள்

அவர் உறுதியான குரலில் சொன்னார்

‘ஷேவ் பண்ணினா தான் ஆஸ்பிடலுக்கு வருவேன்’

அவரது பிடிவாதம் எரிச்சலூட்டியது. அவரைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு போய்ப் பால்கனியிலிருந்த மரஸ்டூலில் உட்கார வைத்தாள். கத்திரியை கொண்டு அடர்ந்த தாடியை வெட்டி நீக்கினாள். பின்பு கிரீமை நன்றாகக் குழைத்து பூசினாள். அப்பாவிற்கு மூச்சுவாங்கியது. வேகவேகமாகச் சவரம் செய்துவிடத்துவங்கினாள். அவளுக்கே கை நடுங்கியது ஷேவிங் செய்து முடித்தவுடன் அப்பா கண்ணாடி வேண்டும் என்று கேட்டார் அவள் எழுந்து போய்க் கண்ணாடியை கொண்டு வந்து தந்தாள். தன் முகத்தைத் தானே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தார். பிறகு அழுத்தமாகக் கன்னத்தைத் தடவிவிட்டுக் கொண்டார். பிறகு அவளிடம் தேங்ஸ் என்றார். இது என்ன புதுப்பழக்கம். தேங்ஸ். புடலங்காய் தேங்ஸ், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

மருத்துவமனையில் அப்பாவை பரிசோதனை செய்த டாக்டர் உடனே பெட்டில் அனுமதிக்கச் சொல்லிவிட்டார். மறுநாள் காலை ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். அப்பா முகத்தில் முன்பிருந்த கவலைகள் எதுவுமில்லாமல் அலுவலகம் கிளம்பி போகும் புத்துணர்வு தெரிந்தது. சுந்தர் அப்பாவோடு உடனிருப்பதாகச் சொல்லி அவளை வீட்டிற்குப் போகச்சொன்னான் .

அன்றிரவு இரண்டரை மணிக்கு சுந்தரிடமிருந்து போன் வந்தது.

‘உங்கப்பா இறந்து போயிட்டாரு’

அதைக்கேட்ட போது அவளுக்கு அழுகை முட்டியது. விம்மலின் ஊடாகவே அவள் சொன்னாள்

‘எனக்குத் தோணியது’

சுந்தர் வீட்டிற்கு அப்பாவின் உடலை கொண்டுவருதவற்கு முன்பு செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றிச் சொல்லத்துவங்கினான். அப்பாவின் மரணம் அவளுக்குள் கரும்புகை போலச் சுழன்று கொண்டேயிருந்தது.

மருத்துவமனையிலிருந்து அப்பாவின் உடலை கொண்டுவந்திருந்தார்கள். , உறவினர்கள், அறிந்த மனிதர்கள், பக்கத்துவீட்டுகாரர்கள் என வீடு நிறையக் கூட்டம். அழுகை ஒலி. அவள் மட்டும் கண்ணாடி பெட்டிக்குள் வெறும் உடலாக இருந்த அப்பாவை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மரணத்தைச் சந்திக்கப் போவதற்குத் தான் கடைசியாகச் சவரம் செய்து கொண்டாரா ?

அப்படி நினைக்கும் போது அவள் அறியாமல் அழுகை பீறிட்டது. அப்பாவின் இறுதிசடங்குகள் நடந்து முடிந்த மறுநாள் வீட்டிலிருந்த அப்பாவின் உடைகள், செருப்பு, மருந்துப்பொருட்களை அள்ளி ஒரு அட்டைபெட்டியில் போட்டுக் கொண்டிருந்தாள். அன்றாடம் அப்பா சவரம் செய்து கொண்ட கைப்பையை என்ன செய்வது எனத் தெரியாமல் கையில் எடுத்தாள்.

கையில் எலுமிச்சை மணமுள்ள கிரீமை பிதுக்கிய போது அது அப்பாவின் வாசமாக நினைவுகளைக் கிளரச்செய்தது. அந்த கிரீமை நுகர்ந்தாள். அப்பா உயிரோடில்லை என்பதை அது ஆழமாக உணர்த்தியது அவள் கூக்குரலிட்டுச் சப்தமாக அழத்துவங்கினாள்.

சுந்தர் அவளது அழுகை குரல் கேட்டு வந்தவன் ஏதோ யோசனைக்குப் பிறகு அவள் அழட்டும் என உணர்ந்தவன் போல விலகிப் போனான்.

ரோகிணி தன்னை மீறி அழுது கொண்டிருந்தாள். அப்பாவின் கன்னத்தில் வழியும் வெண்நுரை அவள் மனதில் அழியாத காட்சியாக இருந்தது. அதை நினைத்து நினைத்து அழுதபடியே இருந்தாள் ரோகிணி.

அருகில் ஷேவிங் கிரீமின் மூடி உருண்டு கிடந்தது.

ஜூன், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com