யுக தர்மம்

ஓவியம்
ஓவியம்மணிவர்மா
Published on

காவல் சோதனை முடிந்து வந்து தன் ட்ராலி பேக்கை எடுத்தவன் பெண்களுக்கான வரிசையில் இருந்து சோதனை முடிந்து, வரப் போகும் கறுப்பு பர்தா அணிந்த பெண்ணுக்காக காத்திருந்தான்.

பெண்களுக்கான வரிசையைக் காட்டி அவள் கைப்பையை வைக்க வேண்டிய பெல்டையும் காட்டி எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் கூலாக நுழைந்து வா என்று அந்தப் பெண்ணிடம் சொல்லி அனுப்பியபோதே கவனித்தான்.  இரண்டு மூன்று பெண்கள் அவளைப் போன்றே கறுப்பு பர்தாவில் இருந்தனர். ஒரு பெண் அப்போது வெளியே வந்து கொண்டிருந்தாள். அவனை நோக்கி வருபவள் போல வந்தவள், பின் வேறு திசையில் நடந்து போனாள்.  

கடந்து போன பெண் மாட்டியிருந்த பேக் பச்சைக் கலரில் இருந்தது. இது அவளில்லை என்ற முடிவுக்கு வந்தான் அவன். அவள் வைத்திருந்த பேக் நல்ல சிவப்பு கலரில் இருந்தது. இந்தப் பயணத்துக்காகவே சமீபத்தில் வாங்கியிருக்க வேண்டும். அத்தனை புதிதாக இருந்தது.

அவள் பெயரைக் கூடக் கேட்டுக் கொள்ளவில்லை. கேட்டுக் கொண்டிருந்தாலும் ஒன்றும் பயன் இருந்திருக்காது. அந்தப் பெயரைச் சொல்லி எந்தக் கறுப்பு பர்தா அணிந்த  பெண்ணை அழைப்பது? தவிரவும் உருவ அமைப்பில் மூன்று பெண்களுமே சற்றேறக் குறைய ஒரே அளவில் இருந்தனர்.

எல்லோருமே தங்கள் கணவரிடம் போய்ச்சேர இப்படித் தனியாக பயணம் மேற்கொள்கிறார்களோ? ஆனால், மற்றவர்களுக்கு, அவன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெண்ணைப் போல, இது முதல் விமானப் பயணம் இல்லை போலிருக்கிறது. அவர்கள் அத்தனை பதட்டத்தோடு இருப்பதுபோல் தெரியவில்லை. தங்கள் முகங்களை மூடிக் கொண்டிருந்தாலும் அவர்களின் நடவடிக்கைகளில் எந்தவித பதட்டமும் தெரியவில்லை. ஒருவேளை மூடப்பட்டிருக்கும் முகத்திற்குள் இருக்குமோ?

ஆனால், அவனிடம் ஒப்படைக்கப்பட்ட பெண் கடந்த அரைமணி நேரத்திற்குள் கேட்ட கேள்விகளில் அவளது பதட்டம் நன்றாகத் தெரிந்தது. அந்தப் பெண்ணை விட அவளை வழியனுப்ப வந்தவர்களிடம்  அதை விடவும் அதிகப் பதட்டம் இருந்தது.

சென்னை விமான நிலைய வாயிலில் உள்ளே போக இருந்தவனை நோக்கி வந்த பெரியவர் ஒருவர், ‘தம்பி..நீங்க எந்த பிளைட்? சார்ஜாவா?’ என்றார். இதற்கு முன்பே நிறைய பேரிடம் கேட்டிருப்பார் போலிருக்கிறது. இவன் ‘ஆமாம்’ என்றதும் அவர் முகத்தில் தெரிந்த ஒரு பெரிய நிம்மதியே அதை வெளிக்காட்டியது.

‘ என் பொண்ணு சார்ஜாதான் வரா. முதல் தடவையா ஏரோப்ளேன்ல வரா. உள்ளே எங்கெங்க போனும் எப்படின்னு அவளுக்குத் தெரியாது, நீங்க கொஞ்சம் அவளைக் கொண்டு போய் அந்தப் பக்கம் விட்டுர்றீங்களா?’ என்றார்.

‘அதுக்கென்னங்க...சரி’ என்றான் இவன், கொஞ்சம் தள்ளி தன் அம்மாவோடு நின்றிருந்த கறுப்பு பர்தாவில் இருந்த பெண்ணைப் பார்த்தபடி.

‘இதோ, ஒரு நிமிஷம் தம்பி’ என்று தன் பெண்ணை நோக்கிப் போனவர், ஐந்து நிமிஷங்கள் கழித்து அந்தப் பெண்ணின் பெட்டிகள் அடங்கிய வண்டியைத் தள்ளியபடி அவனை நோக்கி வந்தார்.

‘பத்திரமாப் போயிட்டு வாம்மா, போய்ச் சேர்ந்தவுடனே போன் பண்ணு’ என்றவரின் கண்கள் கலங்கி இருந்தன.

‘நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க..உங்கப் பொண்ணை பத்திரமாக சார்ஜாவில கொண்டு போய் சேர்த்திடறேன்’ என்றவனுக்குத் தான் கொஞ்சம் அதிகமாகப் பேசுகிறோமோ என்று தோன்றியது.

அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘வாங்க’ என்றபடியே தன் வண்டியைத் தள்ளியபடி நடந்தான். கொஞ்சம் சிரமப்பட்டு வண்டியைத் தள்ளியபடி பின் தொடர்ந்தாள் அவள்.  முகம் மட்டும் திரும்பித் திரும்பி அவள் அப்பா அம்மாவையே பார்த்தபடி இருந்தது.

‘டிக்கட்டும் பாஸ்போர்ட்டும் எடுத்து கைல வச்சுக்கங்க.. என்ட்ரன்ஸ்ல கேப்பாங்க’ என்றான் அவன். தோளில் மாட்டியிருந்த பேக்கில் இருந்து ஒரு சின்ன பிளாஸ்டிக் கவரை வெளியே எடுத்தாள் அவள். நிறைய பேப்பர்கள் அதில் இருந்தன. அவன் அந்தக் கவரில் இருந்து பாஸ்போர்டும் டிக்கட்டும் எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

உள்ளே சென்றார்கள்.

ஸ்க்ரீனிங் செய்வதற்காக பெட்டிகளை தூக்கி கன்வேயர் பெல்டில் வைப்பதற்கு, மறுபக்கம் வந்து பெட்டிகளை எடுத்து மறுபடியும் தள்ளு வண்டியில் வைப்பதற்கு என்று அவளுக்கும் சேர்த்து அவனே செய்ய வேண்டி இருந்தது.

போர்டிங் பாஸ் வாங்க, வரிசையில் நின்றபோதுதான் வாயைத் திறந்து முதல் கேள்வியைக் கேட்டாள்:

‘ஏரோப்ளேன்ல இந்தப் பெட்டிகளை எங்கே வைப்பாங்க”

பெட்டிகளை இப்போது இங்கே கொடுத்து விட்டு, நாம் அந்தப் பக்கம் போய் இறங்கும்போது எடுத்துக் கொள்ளலாம் என்று விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தவனைப் பார்த்து,

‘உங்களை இதுக்கு முன்னே எங்கேயோ பார்த்திருக்கேன்’ என்றாள் அவள்.

‘எங்கே?’என்றான் அவன்.

‘இருங்க. யோசிச்சுச் சொல்றேன்‘ என்றவள் ஒரு இரண்டு நிமிடம் கழித்து, ‘ஆங், நீங்க நடிகர் விக்னேஷ் மாதிரி இருக்கீங்க?’

‘ விக்னேஷா? அது யாரு?’

‘பாரதிராஜா படம் ஒன்னுல வருவாரே...சட்னு பேர் ஞாபகம் வரல...ஆத்தங்கரை மரமே’னு ஒரு பாட்டு கூட வருமே’ அவன் அந்தப் படத்தைப் பார்த்திருந்தான். ஆனால் அந்தப் பெண் சொன்னது சற்றே புதிதாக இருந்தது. இதுவரை அவன் நண்பர்கள் வட்டத்தில் யாரும் இது போல் சொன்னதில்லை. ஒருமுறை நெருங்கிய நண்பன் ஒருவன் அவனைப் பார்த்து ‘நீ ஒரு நடிகனோட சாயல்ல இருக்க..’என்றான்.

‘யாரு கமலா? கார்த்திக்கா?‘ என்றவனைப் பார்த்து நக்கலாக ‘பாண்டியராஜன்...  அவனுக்குத்தான் இதே மாதிரி திருட்டு முழி’ என்றான்.     

விமானம் ஏறும்போதும் இறங்கும்போதும் எந்த நிலையில் இருக்கும்? உள்ளிருக்கும் நமக்கு எப்படி இருக்கும்? அடிவயிறு கலக்குமா? என்று அடுத் தடுத்து கேள்விகளை கேட்டவளுக்கு பதில்களை சொல்லியபடியே இருந்தபோது  வரிசை முன் நகர்ந்து, அவர்கள் முறை வந்தது. அங்கேயும் அவனே இரண்டு பேரின் பெட்டிகளை தூக்கி வைத்து, அடுத்தடுத்த சீட் என்று கேட்டு வாங்கி போர்டிங் பாஸ்களைப் பெற்றுக் கொண்டு வந்தான். 

அந்தப் போர்டிங் பாஸில் இருந்த பெயரையாவது பார்த்திருக்கலாம். பார்க்கவில்லை. தன்னிடம் வந்து பேசக் கூடிய அந்தப் பெண்ணுக்காக காத்திருந்தான். இரண்டாவதாய் வந்த பெண்ணும் அவனைக் கடந்து போனாள்.

அவனுக்குக் கொஞ்சம் அவசரமாக பாத்ரூம் போக வேண்டியிருந்தது. ஆனால், அவன் போய் வருவதற்குள், அந்தப் பெண் வந்து பார்த்துவிட்டு, ஆளைக் காணாமல் குழம்பிப் போகக்கூடும். முதல் முறையாக விமானப் பயணம் மேற்கொள்ளும் பெண்.

அடுத்ததாக வெளிவந்த பெண் நேராக இவனை நோக்கி வந்தவள், ‘என்ன இவ்ளோ செக் பண்றாங்க’ என்றாள்.

‘அது ஒண்ணுமில்லை. வெடிகுண்டு இருக்கான்னு செக் பண்ணி இருப்பாங்க’

‘அதெல்லாமா கொண்டு வருவாங்க?..’ என்றவளுக்கு பதில் சொல்லாமல், கொஞ்சம் தள்ளியிருந்த நாற்காலியைக் காட்டி, ‘இங்கேயே இருங்க. இப்போ வந்திர்றேன்‘ என்றான். ‘நானும் டாய்லெட் போயிட்டு வரேன்’ என்றவளிடம் ‘ஓகே.. இங்கேயே வந்து வெயிட் பண்ணுங்க..என்றபடி டாய்லெட்டை நோக்கிப் போனான்.

திரும்பி வந்து பார்த்தபோது அவன் சொன்ன இடத்தில் அமர்ந்திருந்தாள் அவள்.

‘நம்ம கேட்டு திறக்க நேரம் இருக்கு..நான் காபி சாப்பிடப் போறேன்..உங்களுக்கு காபி டீ ஏதாவது வேணுமா...என்றவனிடம் ‘டீ’ என்றபடி, கைப்பையில் ‘காசு‘ என்றபடி கையை நுழைத்தாள்.

‘பரவால்ல இருக்கட்டும் .. ’ என்றபடி அருகிலிருந்த காபி ஷாப்பில் அவனுக்குக் காபியும் அவளுக்கு டீயும் வாங்கி வந்தான். 

அவளிடம் டீயைக் கொடுத்துவிட்டு, காபியோடு பக்கத்து இருக்கையில் அமர்ந்து காபியை அருந்திக் கொண்டிருந்தவனிடம், ‘நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க’ என்றாள் டீயை ருசித்தபடியே.

‘ஒரு டீ வாங்கிக் குடுத்து நல்லவனா ஆயிடலாம் போல இருக்கே’

‘அய்யோ..நான் இதைச் சொல்லல...இவ்ளோ அக்கறை யோட இதெல்லாம் செய்றீங்களே..அதைச் சொன்னேன்’

‘வாக்கு குடுத்திட்டேனே, உங்க அப்பா கிட்ட..பத்திரமா கொண்டு போய் சேர்க்கிறேன்னு’ 

‘உங்க வீட்ல கூட்டிட்டு வரலியா’

‘வீட்லனா’

‘உங்க மனைவியை‘

‘இன்னும் கொஞ்சம் டைம் ஆகும்’

‘ஏன்..’

‘முதல்ல அவ எங்கிருக்கான்னு தேடிப் பிடிக்கணும்..அப்புறம் கல்யாணம் கட்டனும்..’

குடித்துக் கொண்டிருந்த டீ, தலையில் புரைக்கேறும் அளவுக்கு ஒரு சிரிப்பு வெளிப்பட்டது அவளிடம் இருந்து, தலையில் தட்டிக் கொண்டபடியே..

‘எங்க வீட்டுக்காரர் கூட உங்களை மாதிரியே ரொம்பத் தமாசாப் பேசுவாரு’ என்றாள்.

அப்போது ஒலிபெருக்கியில் அவர்கள் செல்ல வேண்டிய விமானத்திற்கான கேட் எண் அறிவிக்கப்பட்டு பயணிகள் உடனே செல்லுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டார்கள். ‘நம்ம பிளைட் தான்..போலாம்’ என்றபடி எழுந்து நடந்தான்.

ஜன்னலோர சீட்டில் அவளை உட்காரச் சொல்லிவிட்டு, பக்கத்து சீட்டில் அமர்ந்தான். சீட் பெல்ட் போடச் சொல்லி அறிவிப்பு செய்தார்கள். தன் சீட் பெல்ட்டைப் போட்டபடி அவளைப் பார்த்தான். அவனைப் பார்த்தபடியே சின்னதாய் இருந்த சீட் பெல்ட் பட்டையை இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவன் தன் சீட் பெல்டை கழட்டி அதை எப்படி தளர்வடையைச் செய்வது என்று செய்து காட்டினான். அப்படியும் அவளால் சீட் பெல்டின் பட்டையை இழுக்க முடியவில்லை.

‘நீங்களே போட்டு விட்ருங்களேன்’ என்றாள்.  அவன் சீட் பெல்டை போட்டு விட்டு, கொண்டு வந்திருந்த புத்தகத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான்.

விமானம் புறப்பட ஆயத்தமான சமயம், பாதுகாப்பு குறித்து அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகாமையில் ஒரு பெண் விளக்கிக் கொண்டிருந்தாள். 

‘என்ன செய்றாங்க’ என்றாள் அவள் அவன் பக்கம் திரும்பி.

‘மேல போயிட்டிருக்கும்போது ஏதாவது பிரச்சினைன்னா என்ன பண்றது எப்படி குதிக்கிறதுனு சொல்றாங்க.. நல்லா கவனிங்க..’ என்றான் அவன்.

‘ஐயோ.. ஏன் பயமுறுத்தறீங்க..’

இன்னும் எத்தனை ஐயோ அவளிடம் இருந்து வெளிப்படப் போகிறது என்று தெரியவில்லை.

‘ஒண்ணும் ஆவாது..பயப்படாதீங்க..சொல்ல வேண்டியது அவங்க கடமை..’ என்றான் அவன்.

விமானம் மெல்ல பின்னோக்கி சென்று திரும்பி மெதுவாகப் போய் பின் வேகமெடுக்க ஆரம்பித்தது.

சட்டென்று மேல் நோக்கி சாய்ந்தபடி பறக்க ஆரம்பித்த சமயத்தில் இடது கையால் அவன் வலது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள் அவள். விமானம் மேலே போய் சம நிலைக்கு வரும் வரை இறுகியிருந்த அந்தப் பிடி, விளக்குகள் திரும்பப் போடப்பட்ட பின் விடப்பட்டது.

‘கொஞ்சம் அதிகமாத்தான் பயப்படறீங்க’ என்றான் அவன்.

‘உங்களுக்கு பயமாவே இல்லையா?..’

‘அமீரகத்துல வேலைக்கு சேர்ந்த முதல் மூணு மாசம், ஊரை விட்டு வந்தது, புது இடம் இப்படி ரொம்ப கஷ்டமா இருக்கும். மூணு மாசத்துக்கு அப்புறம் சரியாயிடுமான்னா, இல்லை.., அப்படியே பழகிப்போயிடும். அந்த மாதிரி தான், இந்த பயமும், போகப் போக பழகிடும்’

இரண்டு பெண்கள் வண்டியைத் தள்ளியபடி பானங்கள் கொடுத்துப் போனார்கள். அவர்கள் இடத்தை நெருங்கிய அவள் ‘சார் ட்ரிங்க்ஸ்‘ என்றாள். மற்ற நேரங்கள் என்றால், இந்நேரம் ‘பீர்’ என்றிருப்பான். ஆனால் இப்போது ‘ஆரஞ்சு ஜூஸ்’ என்றான்.  அவள் ஆப்பிள் ஜூஸ் என்று கேட்டு வாங்கினாள்.

சிறிது நேரம் கழித்து கொடுக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு விட்டு, புத்தகத்தைக் கொஞ்ச நேரம் படித்துக் கொண்டிருந்தவன், அப்படியே உறங்கிப் போனான்.

கனவில் போல ஏதோ ஒரு கை சுரண்டியதில் கண் விழித் தான். ‘இறங்கப்போவுதாம்’ என்றாள் அவள். நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை தேய்த்துக் கொண்டான் அவன்.

விமானம் மெதுவாக கீழே இறங்க ஆரம்பித்தது. இந்த முறை அவன் வலது கைமேல் எந்த விதமான கிடுக்கிப்பிடியும் போடப்படவில்லை. தரையிறங்கிய விமானம் ஒரு நிலைக்கு வரும்வரை அமைதியாக இருந்த பயணிகள், விமானக் கதவுகள்  திறக்கப்பட்ட உடனே விரைந்து வெளியேறினர்.

அவன் அவளை நேராக விசா பெற்றுக் கொள்ளும் இடத்திற்கு கூட்டிச் சென்றான். அவளிடம் இருந்த விசா ஜெராக்ஸ்ஐ காண்பித்து விசாவின் ஒரிஜினலை வாங்கி அவளிடம் கொடுத்து, போகவேண்டிய இடத்தைக் காண்பித்து அனுப்பி வைத்தான்.

அவள் திரும்பி வருவதற்குள், இமிக்ரேசன் கவுண்டரில் இருந்த கூட்டம் கணிசமாக குறைந்திருந்தது. அவரவர் பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தப்பட்டு, கொஞ்சம் தள்ளியிருந்த பெல்டில் போய்க்கொண்டிருந்த பெட்டிகளை எடுக்கப் போனார்கள். 

அவளது பெட்டிகளை ஒரு ட்ராலியில் வைத்து அவள் வசம் ஒப்படைத்தவன், ‘அவ்வளவுதாங்க.. இனி வெளியே போக வேண்டியதுதான், கிரீன் வழியாப் போனா நேரா எக்சிட் கேட் தான். நீங்க முன்னால போங்க..’ என்றான்.

எக்சிட் கேட்டை நோக்கிப் போனவள், திறந்த தானியங்கிக் கதவிற்கு அந்தப் பக்கத்தில் காத்திருந்த கூட்டத்தில் அவள் கணவனைப் பார்த்துவிட்டாள் போலிருக்கிறது. கையை உயர்த்தியபடியே போய்க்கொண்டிருந்தவளின் நடையில் ஒரு வேகம் கூடியிருந்தது. 

ட்ராலி வண்டியை அவளிடம் இருந்து வாங்கி தள்ளிக்கொண்டு பார்க்கிங் ஏரியா நோக்கி நடந்து போன கணவனோடு, போய்க் கொண்டிருந்தாள் அவள்.

டிசம்பர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com