அவர் பெயர் விஸ்வநாதனாம். அன்றைக்கு செய்தித்தாள் படித்துதான் தெரிந்துகொண்டேன். எங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்தான். கடந்த ஆறு மாதங்களாய் அவரை நாங்கள் தினமும் பார்க்கிறோம் என்றாலும், நாங்கள் நேரத்துக்கு அலுவலகம் போகவும், திரும்பி வீடு வந்து சேர்வதற்கும், விஸ்வநாதன் என்கிற அந்த 70 வயது கிழவர் ஆற்றும் பங்கு மிகப்பெரியது என்றாலும், இன்றைக்குதான் பெயரை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு வாய்த்தது. காரணம் இந்தச் செய்தித்தாள். அவர் புகைப்படம் வெளியிட்டு அவரைப் பற்றி எழுதியிருந்தார்கள்.
நாங்கள் வசிப்பது, நகரின் புறநகர் பகுதியாக இருந்து நாளாவட்டத்தில் நகரமாகவே ஆகிவிட்ட ஒரு வட்டாரம். நீர் நிரம்பிய ஏரிகளில் மண்ணும் குப்பையும் கொட்டி நிரப்பி, பசுமை விரவிக்கிடந்த கானகப் பகுதியில் நூறு வருடங்களாய் வளர்ந்து கொண்டிருந்த மரங்களை வெட்டிச் சாய்த்து உருவாக்கப்பட்ட ஜீ.கே லே அவுட் என்ற பகுதி.
எங்கள் குடியிருப்பு வளாகம் நாற்பது ஏக்கர்களில் பத்து கட்டிடங்கள், ஒரு கட்டிடத்தில் இருபத்து ஐந்து மாடிகள், ஒரு மாடிக்கு எட்டு மனைகள் என்று அசுர பரிமாணத்தில் உயர்ந்திருக்கிற குடியிருப்பு. இரண்டாயிரம் குடும்பங்கள் வசிக்கும் இடம். நாங்கள் எல்லோரும் தேவைக்கு அதிகமாய் சம்பளம் வாங்குவதாலும், அதற்கு மேலும் தேவைக்கதிகமாய் வங்கிகள் கடன் தருவதாலும் கோடி ரூபாய் வீடும் அதற்க்கொப்பான அந்தஸ்துடன் ஒன்றோ அல்லது இரண்டோ வாகனங்கள் வைத்திருப்பவர்கள். இது போன்று எங்களைச் சுற்றி ஐந்து கிலோ மீட்டர் சுற்றில் நிறைய ராட்சஸ வளாகங்கள் இருக்கின்றன.
அந்தப் பிரதேசத்தில், அவரவர் கடன்வாங்கும் சக்திக் கேற்ப, சின்னதும் பெரியதுமாய் கிட்டத்தட்ட பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் வாகனங்கள் இருக்கலாம் என்பதை உங்கள் அலைபேசியில் இருக்கும் கணிப்புப்பொறியில் கணித்தால் உங்களுக்குப் புலப்படும். இந்த இருபதாயிரம் வாகன உரிமையாளர்களுக்கும் ‘கை நீட்டி கடன் வாங்கின’ கடமைக்காக காலையில் எட்டு மணிக்கு அலுவலகம் போகவேண்டும். ஏழு மணிக்குத் திரும்ப வரவேண்டும்.
பிரதான சாலைக்குப் போகும் வழியில் நாலு திசையிலிருந்தும் வந்து சந்திக்கும் இடத்தில், சித்தி விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், ஒரு நாற்சந்தி இருக்கிறது. திசைக்கொன்றாக வந்து சேரும் நான்கு பாட்டைகள் சந்திக்கும் அந்த இடத்தில் ஒவ்வொரு திசையிலிருந்தும் வாகனங்கள், ஆப்கானிஸ்தானையோ, ஈராக்கையோ படையெடுத்துப்போகும் அமெரிக்கப் படைகள் போல ஊர்வலம் கிளம்பி இந்த நாற்சந்தி வழியாக பிரதான சாலையை அடைந்து அங்கு வந்து சங்கமிக்கும் ஏனைய கார்களுடன் இணைந்து போகவேண்டும்.
இவ்வளவு வீடுகள் கட்ட அனுமதி தந்தால் அதனுடனே இவ்வளவு வாகனங்களும் ஜனத்தொகையில் அதிகரிக்கும் என்பதை கணக்கிடமுடியாத கால்குலேட்டர்கள் கண்டுபிடிக்காத காலத்தில் நிறுவப்பட்ட சர்க்கார்/ மாநகராட்சி அலுவலர்கள், சஞ்சய் காந்தி காலந்து மாருதி கார்கள் இரண்டு எதிரும் புதிருமாய் போக மட்டுமே வாகாய் சாலைகளை போட்டிருந்தார்கள்.
இந்தியர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஒரே ஒரு வழிதான் வம்சாவழியாய் போதிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு இடம் கொடுக்காமல் நீ முந்திவிடு என்பதுதான் அது. இந்த வாழ்வியல் உண்மையால் உந்தப்பட்டு மாட்டு வண்டியிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் வரை எல்லா தட்டு மக்களும் தாங்கள் முதலில் போனால் போதும் என்ற உத்வேகத்தில் ஒரே சமயத்தில் முன்னேறி அந்த நாற்சந்தியில் யாருமே நகராதபடிக்குப் போக்குவரத்தையே ஸ்தம்பிக்கச் செய்து விடுவார்கள். நெரிசலை உருவாக்கினவர்கள், எல்லோரும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவதுபோல தம்தம் வாகன ஹாரன்களை அடித்து அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள். இரண்டாவதாய், ஒரு வாகனக்காரர் தன்னை விடுத்து மற்ற வாகனக்காரர்களையெல்லாம் “ பொறம்போக்கு நாயிங்களா” என்று திட்டுவார். திட்டப்பட்டவன் பதிலுக்கு திட்டினவனையும் இன்னபிற நாய்களையும் வைவான். ஒருவரை ஒருவர் பார்த்து குரைப்பார்களே ஒழிய ஒரு பொறம்போக்கு நாய் கூட தன் காரை விட்டு இறங்கி வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முனையாது. அதனால், தினமும் காலை எட்டரை மணிக்கு, கார் ஹாரன்களின் சேர்ந்திசையும் ‘பொறம்போக்கு நாயிங்களா’ என்ற கோஷமும் எழுப்பப்பட்டு சித்திவிநாயகருக்கு விசேஷ அர்ச்சனை நடக்கும். இதே போல் அலுவலகத்திலிருந்து திரும்பி வரும் நாய்களால் மாலை ஏழு – ஏழரை மணிக்கும் நிகழும். விநாயகரும் தனக்குக் கிடைக்கிற ஆறுகாலப் பூஜையோடு சேர்த்து இவைகளையும் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டார்.
இந்தச் சூழலில்தான் ஒரு நாள் தூய வெள்ளை சட்டை, வேட்டி, நெற்றியை நிறைத்த விபூதிப்பட்டை குங்குமப்பொட்டு சகிதம், பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சித்திவிநாயகர் தேர்ந்தெடுத்து அனுப்பிய ஆகிருதி போல பிரசன்னமானார் விஸ்வநாதன். அவர் அவதரித்த அன்று அவரை யாரும் ஒரு பொருட்டாய் மதிக்கவில்லை. ஆனால் நாளாக நாளாக விஸ்வநாதன் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார். நாற்சந்தியில் நின்று கொண்டு, முறை போட்டு ஒரு சாராரை நிறுத்திவிட்டு இன்னொருவரை அனுப்புவதும், எந்தப்பக்கம் அதிகம் போக்குவரத்து இருக்கிறதோ அதற்கேற்றார்போல் இடைவெளி விடுவதுமாய் இலகுவாய், உற்சாகமாய் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார். முதல் நாள் இதைப் பார்த்த நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போய் “ யார்ரா இந்தக் கிழவன்” என்று அவரை எங்களுக்குள் பாராட்டினோம். அன்றைக்கே அதை மறந்தும்போனோம்.
அடுத்த நாள் ஆச்சரியம் தொடர்ந்தது. சந்திப்பில் வாகனங்கள் எளிதாக முன்னேற அன்றைக்கும் அவர் பணியில் இருந்தார். காலையிலும் மாலையிலும்.
முதல் வாரத்தின் இறுதியில் எங்களுக்கு அந்த ஆச்சரியம் பழகிப்போய்விட்டது. விஸ்வநாதன் நாளொரு மேனியாய் கொஞ்சம் கொஞ்சம் அவர் வேலைக்குத் தேவையான உபகரணங்கள் சேகரித்துக்கொண்டார். முதலில் வந்தது விசில், அப்புறமாய் வெய்யில் வருத்தாததற்கு வெள்ளை தொப்பி, வேட்டி போய் குழல் சராய் என்று கெத்தான தோற்றத்தில் இருப்பார். காலை ஏழரைக்கும் இரவு ஆறரைக்கும் சரியாக ஆஜர் ஆகிவிடுவார். இரண்டு மணிநேரம் அங்கு நின்று குழந்தைத்தனமான உற்சாகமும் சலித்துக்கொள்ளாத இயல்புமாய் அந்தச் சந்திப்பில் அவர் இயங்குவதைப் பார்ப்பதே ஒரு அனுபவம். புற்றீசல் மோட்டார் சைக்கிள்களையும், அரை இஞ்சு இடத்திலும் பாம்பாய் நெளிந்து வந்து ஆக்ரமித்துக்கொள்ளும் ஆட்டோக்களையும் விசில் அடித்தே அடக்கி விடுவார். எல்லையை மீறும் வாகனங்களை ஒரு விடைப்பான கையசைவில் நிறுத்துவார். அவருடைய ஆக்ரோஷமும் உறுதியும் அவர் கையசைக்கும் விதத்திலேயே வெளிப்பட்டு விடும். அத்துமீறுபவர்களை கூச வைக்கிறமாதிரி முறைப்பு ஒன்றும் பிரயோகிப்பார்.
செய்தித்தாளில் புகைப்படம் போட்டு வந்த பேட்டியில் அவர் பற்றிய விவரங்கள் தெரியவந்தன. அவருக்கு ஆஸ்த்மா பிரச்சனை இருப்பதைப் பொருட்படுத்தாமல் அந்த வெய்யிலிலும், தூசியிலும் புகையிலும் நின்றுகொண்டு இயங்குவதை விசேஷமாய் குறிப்பிட்டிருந்தது செய்திப் பத்திரிகை.
ஒரு தனியார் நிறுவனத்தில் சிறிய பதவியில் காலங்காலமாய் உழன்று ஓய்வு பெற்று மகனோடு கூட இருப்பவர். அந்தப் பிரதேசத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் குடிவந்திருக்கிறார்கள். அந்த சந்திப்புக்கு அருகாமையில் வசிப்பவர். பெரிய படிப்போ, உயரிய பதவியோ, சமூக அவலங்களைக் களைய விழையும் ஒரு புத்திஜீவியின் தொலைநோக்குப் பார்வையோ இல்லாத ஒரு சாதாரணர்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வேலை அவருக்கு மிகுந்த திருப்தியளித்திருக்கவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாய் அதில் உத்வேகமும் ஈடுபாடும் அதிகரித்தன. காக்கி நிற கால்சராய்,வெள்ளை நிற சட்டை, இடுப்பில் நிற்காத கால்சராயின் மேல் இடுப்புப்பட்டை என்று விநோதமான சீருடை உருவாக்கிக்கொண்டார். விமான நிலையத்தில் விமானங்களை ஓடுகளத்தில் நிறுத்த பயன்படும், பச்சை சிவப்பு என்று நிறம்மாறும் குழல் விளக்குகளை கையில் வைத்துக்கொண்டு இரவில் போக்குவரத்தை சீர்படுத்துவார். சாலைப் பராமரிப்பு செய்பவர்கள் அணிந்துகொள்ளும் ஒளியை சிதறடிக்கும் பட்டைகள் பொருத்திய விசேஷ சட்டை போட்டுக்கொள்வார்.
“ திரும்பறத்துக்கு முன்னால இண்டிகேட்டர் போடுங்க” “ லேன் கிராஸ் பண்ணாதீங்க’‘ “ தேவையில்லாம ஓவர் டேக் பண்ணாதீங்க” என்று எல்லை மீறும் வாகனங்களுக்கு அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்தார். நாற்சந்தியில் நின்று சீர்படுத்துவது போக அவர் எங்கே போனாலும் அங்கே போக்குவரத்தை சரிசெய்ய ஆரம்பித்தார். தெருக்களில் காய்கறி மளிகை சாமான் வாங்கும் இடத்தில், தெருவோர உணவு விடுதியில் சாப்பிட்டுக்கொண்டு, கொஞ்சம் போல நடந்து பிரதான சாலையில் என்று அவர் எல்லை கொஞ்சம் கொஞ்சம் விரிவடைந்தது.
ஒரு நாள் காலை ஆறு மணிக்கு விமானம் பிடிக்க நான் வாடகை வண்டியில் போகும்போது அவர் தன் பணிகளனில் தண்ணீர் தெளித்து துடைப்பத்தால் பெருக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஒரு நாள் இரவு எட்டரை மணிக்கு சாலையில் இன்னும் நின்றுகொண்டிருந்த அவரிடம் ஒரு வயதான அம்மாள் மன்றாடுவதைப் பார்த்தேன். நேரமாகிக் கொண்டிருப்பதால் வீட்டுக்கு வந்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவது போல இருந்தது.
அவரின் அதீத ஆர்வம் ஒரு நாள் அவரை இக்கட்டில் கொண்டு விட்டது.
அந்த வாகன ஓட்டி அந்தப் பிரதேசத்துக்கும், விஸ்வநாதனின் சாம்ராஜ்யத்துக்கும் புதியவன். காட்டுத்தனமாய் ஓட்டிக்கொண்டு வந்து, அவர் எச்சரிப்பதை பொருட்படுத்தாமல் வழியை அடைத்துக் கொண்டு சீராக போய்க்கொண்டிருந்த வாகன ஓட்டத்தை நிறுத்திவிட்டான். பெரிய படோபமான வாகனம். வாகனங்களின் வர்ணாஸ்ரம தர்மத்தைப் பற்றி கவலைப்படாத இவர் வெகுண்டு போய் கோபித்து கையை நீட்டி நீட்டி பேசி அவனை நிந்தித்துவிட்டார். அவன் கீழே இறங்கினான். கூடவே மூன்று பருமனான ஆட்கள் இருந்தார்கள். எந்த கட்டுப்பாட்டுக்கும் மசியாத கட்சி ஆட்களோ, எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட பணக்காரனின் அடியாட்களோ. அவர் வயசை பொருட்படுத்தாமல் ஒருவன் சட்டையை பிடிக்க, இவர் அடங்காமல் அவனை எதிர்க்க இன்னொருவன் அவரை மூர்க்கமாய் தள்ளிவிட்டான். கீழே விழுந்து சாலையில் இருந்த சிறிய கல்லில் தலை இடித்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது இவருக்கு. அருகில் இருந்த கடைக்காரர்கள் ஓடி வந்து இடைமறித்து, வாக்குவாதம் முற்றி இன்னும் சிலபேர் வந்து கூடி சண்டையும் சமரசமுமாய் கழிந்த அந்த இரவு கழிந்த மறுநாள் காலை தலையில் கட்டோடு விஸ்வநாதன் ஆஜர் ஆகியிருந்தார்.
“வேற ஜோலி இல்லியா இந்த ஆளுக்கு”
“இந்த கார்பன் மோனாக்ஸைட் புகையில இப்பிடி நாள் பூர நின்னா. நுரையீரல்ல வியாதி வந்து சாவப்போறான்”
“பாராட்டப்பட வேண்டியவருங்க. சுதந்திரதின விழால நம்ம காலனில பணம் வசூல் பண்ணி இவருக்கு ஏதாவது பரிசுப் பொருள் வாங்கித்தரணுங்க”
“ சத்தியமா மறைகழண்ட கேசு. இல்லன்னா லூசாட்டம் இப்பிடி வெய்யில்லயும், மழையிலும் நின்னுகிட்டு இந்த பொழப்பத்த வேலை பாக்கமாட்டான்”
விதவிதமாய் வியந்தன கார்கள்.
பாராட்டுதலுக்கு உரியவரோ, பைத்தியமோ, பரோபகாரியோ நாளாக நாளாக விஸ்வநாதனால் கிடைத்த அந்த வசதிக்கு நாங்கள் பெரிதும் பழக்கப்பட்டுவிட்டோம். என்றைக்காவது வராமல் போய்விட்டால் நாற்சந்தியில் ஏற்படும் நெரிசல் காரணமாய் நாங்கள் அவரை நினைவு கூர்ந்தோம்.
சித்திவிநாயகர் போல, கோயிலுக்கு எதிர்ப்புறம் குவியலாகவும் மாலையாகவும் தண்ணீர் தெளித்து மணம் கமழ விற்கும் பூக்காரன் போல, அந்த வளைவை ஒட்டி இருந்த தானியங்கி காசுவழங்கும் கருவி போல விஸ்வநாதனும் எங்கள் கண்களை உறுத்தாமல் எங்களுக்குள் எந்த பாதிப்பையும் எழுப்பாமல் அந்தத் தெருவின் இன்னொரு அங்கமாய் மரத்துப்போய்விட்டார். அவரைக் கடக்கும்போது “ என்ன சார் டிபன் சாப்டீங்களா? ” என்றோ “ இவ்வள நேரமாவுதே.. பனியில நிக்காம வீட்டுக்குப் போங்க ” என்றோ சொல்ல நினைத்து அவசரமாய் நகரும் போக்குவரத்தின் ஒட்டத்தில் சொல்ல முடிவதில்லை. தூரப்பார்வை பார்த்தபடி நின்று இயந்திரம் போல அவர் இயங்கும் விதத்தில் யாரிடமும் எந்த பாராட்டோ, பரிவோ எதிர்பார்ப்பது போலவும் தோன்றவில்லை. ஏதாவது சொல்லப்போய், எல்லோரும் சந்தேகித்தபடி ‘மறை கழண்ட ஆசாமியாய்’ இருந்து கண்டபடி திட்டிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் வேறு.
எந்த ஒன்றின் முக்கியத்துவமும் அது இல்லாத போதுதான் நம் புத்திக்கு எட்டுகிறது. சக்கரச் சுழற்சியாய் இயங்கும் ஒரு கடிகாரத்தின் அவசியத்தை நாம் உணர்வது அந்தக் கடிகாரம் நின்று போகும்போதுதான். அப்படித்தான் நின்று போனது விஸ்வநாதன் என்கிற கடிகாரமும்.
திடீரென்று விஸ்வநாதன் காணாமல் போனார். ஒரு நாள் அவர் வராமல் போக்குவரத்துக் குழப்பத்தில் சிக்கி “இன்னிக்கு உடம்பு சரியில்ல போல ” என்று அடுத்த நாள் எதிர்பார்த்து, அடுத்த நாளும் வராமல், அந்த வாரம் முழுக்க வராமல், இரண்டு வாரமாய் ஒரு மாதமாய் நீடித்து விஸ்வநாதன் அந்த நாற்சந்திக்கு வராமலேயே போனார்.
காரில் உட்கார்ந்த படி கண்ணாடி இறக்கி ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டோம். உடல் நலமில்லை என்றார்கள் சிலர். ஆஸ்துமா தொல்லை காரணமாய் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார் என்றார்கள். அவர் குடும்பத்தினர் அவரை அங்கே நிற்க அனுமதிப்பதில்லை என்றார்கள் சிலர். அவர் மகனுக்கு மாற்றலாகி வேறு இடத்துக்குப் போயிருக்கலாம் என்று சிலர். இறந்துபோயிருக்கலாம் என்றார்கள் சிலர்.
நாற்சந்தி நாற ஆரம்பித்தது. வாகன அரவம், ஹாரன்களின் பிளிறல், வாகனங்களின் போட்டி, தூஷணை என்று மறுபடி சகஜ நிலைக்கு திரும்பியது. ஆரம்பத்திலிருந்தே பழகியிருந்தால் தெரியாது. இடையில் விஸ்வநாதன் எங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டு ஒழுங்கைக் கொணர்ந்து எங்களுக்கு ஒரு பெரிய சௌகர்யத்தை உருவாக்கித்தந்துவிட்டு திடீரென்று அதை விலக்கிக்கொண்டதால் நாங்கள் மிகுந்த எரிச்சலடைந்திருந்தோம்.
அந்தப் பிரச்னையை தீர்ப்பது குறித்து எங்களுக்குள் ஒரு அமைப்பு ஒன்றை உருவாக்கினோம். முகப்புத்தகத்தில் ஒரு பக்கம் உருவாக்கி அந்தப் பிரதேச மக்களை அதில் இணைத்து காரசாரமாய் விவாதித்தோம். ‘ இது அரசாங்கத்தின் வேலை. வரிப்பணம் வசூலிக்கும் அரசு ஒரு பணியாளை நியமித்து இதைச் செய்யவேண்டும். இந்த கடினமான வேலையை நம் யாராலும் செய்ய முடியாது’ என்று வாதாடினோம். நாற்சந்தியில் ஒரு போலீஸ்காரரை நிறுவ வேண்டிய அவசியம் குறித்து காவல்துறைக்கு கடிதம் எழுதினோம். அதன் பிரதியை பரிவார தேவதை செய்தித்தாள்களுக்கு அனுப்பினோம். பெரிய ஊர்திகள் அந்தக் குறுகலான வளைவில் திரும்ப முடியாமல் திணறுவதால் தெருவில் அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கடைகளை இடிக்கச்சொல்லி மாநகராட்சிக்கு முறையீடு செய்தோம். நாலுவழிச்சாலையில் ஒன்றை ஒரு வழிப் பாதையாக்கி எதிர்ப்புறம் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என்றும் அங்கு ஒரு போக்குவரத்து விளக்கு ஒன்றை நிறுவ வேண்டியும் அதிகாரிகளுக்கு மகஜர் அனுப்பினோம்.
நாட்கள் நகர்ந்தன, வாரங்கள் விரைந்தன, மாதங்கள் கடந்துவிட்டன. நாங்கள் காத்திருக்கிறோம். புத்திஜீவிகளான, வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களான எங்களை வழிநடத்த ஒரு கிறுக்கனோ, மறைகழண்டவனோ, ஒரு வேலையத்த கிழவனோ விஸ்வநாதன் போல எவனோ ஒருவன் வருவான், வந்து எங்கள் பிரச்னையை தீர்ப்பான் என்று நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
நவம்பர், 2013