மேக நிழல்

ஓவியம்
ஓவியம்ஜீவா
Published on

அந்தக் கல்யாணத்தை யாராவது வந்து நிறுத்திட மாட்டாங்களா'' என்று GsoU கொண்டிருந்த போதே கெட்டி மேளம் மாங்கல்ய தாரணத்துக்கு முழங்கியது. மங்கல்யத்தை பிடித்திருந்த ராமானுஜத்தின் கை நடுங்கி கிடுகிடுத்தது. அட்சதை கண்ணில் பட்டு ஒரு கண்ணில் நீர் வழியத் தொடங்கியது. தாலி சங்கிலியை மாட்ட தெரியாமல் ராமானுஜம் வேகமாக இழுத்த போது காதில் மாட்டல் அழுத்தி உரசி வலித்தது. ‘‘எல்லோரும் சாப்பிட போங்க'' என்று யாரோ உரக்கச் சொல்வது காதில் விழுந்தது.

காருண்யாவுக்கும் பசித்தது. ஆனால் வரிசையாக வாழ்த்து சொல்ல ஆசீர்வாதம் செய்ய வந்த வண்ணமிருந்தனர். கொஞ்ச நேரம் கழிந்து மணமேடையிலிருந்து சிறுநீர் கழிக்கவென்று மணமகளறைக்கு வந்தவள் கண்ணாடியில் பார்த்தாள். அட்சதை விழுந்து தலையலங்காரத்துக்குள் பொதித்து வைத்திருந்த சிறு சிறு மூக்குத்தி போன்ற கவரிங் நகையை ஒழுங்கற்றதாக ஒதுக்கி இருந்தது. இப்படி சின்னா பின்னப் படுத்துவதற்கு எதற்கு அதிகாலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். முகூர்த்தப் புடவை முப்பதாயிரத்துக்கு மேல இருக்குமா, இவ்வளவு கனமா இருக்கு என்று புடவை கட்டிவிடும் போது துர்கா கேட்டாள். கனமாகத் தான் இருந்தது. கழுத்து நிறைய நகைகளும் கனத்த மாலைகளும் பாரம் தாங்க முடியாமல் கழுத்து நோவெடுத்தது. இதையா எல்லோரும் கொண்டாட்டம் என்கிறார்கள்.  நேற்றைக்கும் இன்றைக்கும் என்ன வித்தியாசம். கழுத்தில் தாலியும் கருகமணியும் வெள்ளைக்கல் வைத்த அலங்கார நகையோடு பொருந்தாமல் உறுத்திக் கொண்டிருந்தது. கையில் எடுத்து இழுத்து பிடித்தபடி கண்ணாடியில் பார்த்தாள். இதை இப்படியே கழற்றி எறிந்துவிடலாம் என்று வெறி வந்தது. கழற்றி விட்டால் எறிந்து விட்டால் எல்லாம் பழையபடி ஆகுமா? 

நிச்சயதார்த்தத்தில் ராமானுஜத்தை முதன் முதலில் பார்த்த போதே முகம் சுண்டி சுளித்தாள் காருண்யா. ‘‘நல்ல மாப்பிள்ளை, நிறையச் சம்பளம்,

சொத்தும் நிறைய, பார்க்க லட்சணமா இருக்கார்'' என்று நிச்சயதார்தம் முடிந்து அவர்கள் எல்லாம் கிளம்பியதும் அம்மா சொன்ன போது கையருகிலிருந்த கண்ணாடி டம்ளரை தட்டி விட மட்டுமே முடிந்தது. தொலைப்பேசி தொலைதூர அழைப்புக்கு விடுக்கும் இரட்டை ஒலியின் வித்தியாசமான ஓசை ஒலிக்கத் தொடங்கும் போது மட்டும் மும்முரமாய் வேலை ஏதேனும் செய்வாள் அல்லது பாத்ரூம் போய் விடுவாள். எப்போதாவது அவள் வரும்வரை தொலைபேசியில் காத்திருக்கும் ராமானுஜத்தோடு பேச அவளுக்கு எதுவும் இருக்காது. 

‘‘நான் உன்னை மாதிரி காதல் கல்யாணமெல்லாம் பண்ண மாட்டேன். எனக்கு ரங்கநாச்சியார் போல தினம் தினம் பட்டு புடவையும் நகையும் போட்டு கொலு இருக்கணும். வைரமும் பட்டுமா ஜொலிக்கணும். எங்க போனாலும் காரும் ஏர் பிளேனும், பெரிய சாம்ராஜ்த்துல மஹா ராணி போல வாழணும்.'' இரண்டு வருடத்துக்கு முன்னரே திருமணமாகி போய்விட்ட பள்ளித் தோழி வினிதாவிடம் சொன்ன போது, ‘‘அதெல்லாம் வெளிநாட்டு மாப்பிள்ளையால தான் முடியும்.  இங்கே ஏதோ அஞ்சாயிரம் பத்தாயிரம் தான் சம்பளம் வாங்குவாங்க. அதுல வாடகை, மளிகை, பால், குழந்தைக்கு படவுர் டப்பா. தாவு தீந்துரும் ஸ்ப்பா. தமிழ்நாட்டுல இருந்தா சுத்தம். போக வர சொந்தம், கல்யாணம், பெரிய காரியம், செய்முறை இதுக்கே பாதிக்கும் மேல செலவாயிடும், பின்ன எங்க பவர் பல்ப் பளீர் வாழ்க்கை வாழ...'' என்றது நினைவுக்கு வந்தது. பரோடாவில் வாழ்க்கை பளீரென்று மலருமா இருண்டு இருக்குமா? திருமண நாள் நெருங்கி வர அந்த எண்ணம் பாரமாய் அழுத்தத் தொடங்கியது.

பரோடாவில் அத்தையும் மாமாவும் கொஞ்சம் அருகில் வேறு வசதியான வீட்டில் இருந்தார்கள். காருண்யாவும் ராமானுஜமும் அலுவலக குவார்டர்ஸில் தனிக்குடித்தனம் வைத்து விட எல்லா ஏற்பாடுமாகியிருந்தது. குவார்ஸ்டஸ் வனப்பகுதியில் நடுநடுவே பொதிந்த குடில்கள் போல் அமைந்திருந்தது. சுற்றிலும் பெரிய பெரிய பசுமரங்கள். வீட்டை சுற்றித் தோட்டம். அணில் விளையாடும் முற்றம். அது கொறிக்க கொய்யா. கிளி கொஞ்சும் மாமரம். முதன்முதலாக வந்து அந்த வீட்டில் இறங்கிய தினம் மாலை மயங்கி இருந்தது. அவள் கண்கள் காதுகளைத் தாண்டி விரிந்தன. இதழில் சிறுநகை பூத்திருக்க வேண்டும். அதை கவனித்த ராமானுஜம் ‘‘அப்பாடா... பாக்கு மரம் பூ பூத்தது போல இருக்கு. நீ சிரிச்சா எவ்வளவு அழகா இருக்க தெரியுமா?'' என்றான். மௌனித்திருந்தவளிடம்,‘‘இந்த இடம் பிடிச்சி இருக்கா'' என்றான். ‘‘இடம் மட்டும் பிடிச்சா போதுமா'' வெடுங்கென்று சொன்னாள்.

கொடியில் முந்தைய நாள் சாயங்காலம் கோவிலுக்கு போய்விட்டு வந்து அவிழ்த்துப் போட்டிருந்த புடவை சோகமாய் அசைந்து கொண்டிருந்தது. அருகில் சுவரில் மாட்டியிருந்த ராமானுஜத்தின் சட்டை ஃபேன் காற்றில் படபடத்து புடவையை தொட்டுத் தொட்டு பார்த்துக் கொண்டிருந்தது.

சட்டையின் நிழல் நீண்டு அவளருகே ஆடியது. 

சட்டென எழுந்து மின்விசிறியை அணைத்தாள். விடுவிடுவென புடவையை உருவி எறிந்தாள். அது செய்வதறியாது படுக்கையில் விழுந்தது சரிந்தது. பெருமூச்செரிந்தாள். சுருக்கங்களை நீவி மடித்து பீரோவில் வைக்கத் திறந்தாள். சந்தனமும், அந்தர் மணமும் கலந்து வாசனைக் கொஞ்ச தூரம் பரவியது. பீரோவை மூடிவிட்டுத்  திரும்பினாள்.

எத்தனை முறை மடித்து வைத்தாலும் அடங்காது கிடந்த போர்வையைச் சரி செய்ய எடுத் தாள். புழுங்கின எருக்கநார் நாற்றமடித்தது. அம்மா வீட்டில் சந்துரு போர்த்தி பின்னர் மடித்து வைத்த ரோஜாப்பூ வாசமடிக்கும் போர்வை நினைவுக்கு வந்தது. போர்வையை விட்டெறிந்து விட்டு தோட்டத்துக்கு

நீர் வார்க்கப் போனாள். அக்கா வீட்டிலிருந்து அடர்நீல செம்பருத்திப் பதியனை கடந்த முறை சென்ற போது எடுத்து வந்திருந்தாள்.  அதில் மலர்ந்த முதல் பூவை ரசித்தபோது, அதன் அருகில் நடை பழகிக் கொண்டிருந்த செம்மார்பு குக்குருவன் குருவியின் டிவிக் டிவிக் டிவிக் சத்தம் கவனத்தை ஈர்த்தது. குருவியைப் பார்த்து கொஞ்சிப்பேசிக் கொண்டிருந்தாள். மெல்லிய விசிலோசையை ஏற்படுத்திய வண்ணம் நீர் வார்த்துக் கொண்டிருந்தாள்.

‘‘நான் இல்லைன்னா ரொம்ப சந்தோசமா இருக்க போல...''

திடுக்கிட்டவள் பிரக்ஞை நிலத்துக்கு திரும்பியது. பதில் சொல்லாமல் தோட்டத்தில் செடி கொடிகளுக்கு நீர்வார்க்கத் தொடங்கினாள். அவள் அருகே வந்தவன் வேகமாக தண்ணீர் வார்க்கும் வாளியை பிடித்திருந்த கரங்களை உலுக்கினான். வாளியின் வாய்ப்பாகத்திலிருந்த, தண்ணீரை ஷவர் போல ஊற்றச் செய்யும் முகப்பு கழன்று தனியாக தள்ளிப் போய் பதறி விழுந்தது. தண்ணீர் ஆபாசமாய் ஊதுகுழல் வடிவிலிருந்த குழாயிலிருந்து வேகமாய் வெளியேறத் தொடங்கியது. தண்ணீரின் பாரம் தாங்காமல் செம்பருத்தி இலை வேகமா ஆடியது. அவசரமாய் தண்ணீர் வாளியைக் கீழே வைத்தாள். செம்பருத்தி இலைகளிலிருந்து சொட்சொட் என்று நீர்த்துளிகள் தரையில் விழ ஆரம்பித்தன. அந்த இலைகள் அழுவது போலிருந்தது.

ஓவியம்
ஓவியம்ஜீவா

அம்மா வீட்டிற்கு வந்திருந்தாள் காருண்யா. எதையோ எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தவள் கையில் அந்த டிஜிட்டல் சயன்ஸ் புத்தகம் கிடைத்தது. அதன் அட்டை பாலிகவரில் உள்ளட்டை தெரியும் வண்ணம் போடப்பட்டிருந்தது. அந்த கவரும் புத்தகமும் புத்தம் புதிது போல சந்துரு சிரிப்பது போலிருந்தது. சந்துரு சிரிக்கும் போது ரோஜாப்பூ மலர்வது போல இருக்கும். அவனுக்கு எப்போதுமே சிரித்த முகம். இரண்டு வருடத்திற்கு மேலாகி விட்டதே சந்துரு இப்போது எங்கே இருக்கக் கூடும் என்று

நினைத்தாள். சாயங்காலம் அம்மாவோடு வனபட்சியம்மன் கோவிலுக்கு போய் வர வேண்டுமென்று நினைத்தாள்.

 இரண்டு வருடத்திற்கு முன்பு இதே வனபட்சி அம்மன் ஆலயத்தில் தானே சந்துரு என்னைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றான். ஆனால் அப்போது அந்த எண்ணமே இல்லை என்று யோசித்துக் கொண்டிருந்தவளை ‘‘கல்யாணத்துக்கு முன்ன சலசலன்னு பேசிட்டே இருப்பியே. இப்போ எல்லாம் ஏன்டி இப்படி உம்முன்னே இருக்கே,'' என்று உலுக்கினாள் அம்மா. அவளிடம் என்ன சொல்வது? ராமானுஜத்தோடு பேசுவதைக் குறைக்க வேண்டுமென்று தனக்கு பேச வரும் என்பதைக் கூட மறந்து போனேன் என்று சொல்வதா? ‘‘எது கேட்டாலும் இப்படி ஊமக் கோட்டானாட்டம் இருந்தா, எதாவது பிரச்சனையா?,'' பழைய காருண்யா திருமணமான தினமே காணாமல் போனாள் என்று அம்மாவுக்கு எப்படி புரிய வைக்க முடியும்? ‘‘நீங்க பார்த்த மாப்பிள்ளை தானே நல்லா தானே பார்த்துப்பார்.'' அவள் பதிலில் அம்மாவின் முகத்தில் படர்ந்த நிம்மதியை கவனித்த காருண்யாவிற்கு மேலும் பேச எதுவுமில்லை.

வனபட்சி அம்மன் கோவில் சோலையில், கோவிலின் பெயருக்கு ஏற்ப பலவித பறவைகள், கிசுகிசுவென பேசிக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் மக்களை மயக்கிக் கொண்டிருந்தன. புங்க மரத்தில் கருநீலமும் வெள்ளையும் கலந்த மொட்டுகள் வசீகரமாய் மலர்ந்திருந்தன, மடல் விரிந்த சில மலர்கள் கருநீல சிப்பிகள் போல காட்சியளித்தன. 

 சாம்பிராணி மணமும், ரோஜா, சம்பங்கி, மல்லிகை கலந்து ஒரு சுகந்த நறுமணம் மணந்து, மனதை மிதக்கும் பாலம் போலாக்கிக் கொண்டிருந்தது. கோவிலில் கோபுரம் நளிமான நடனக்காரியின் இடை போல மெலிந்து அக்கோவிலின்  பேரழகை, மாலையில் மயங்கும் சிவந்த வெயிலோடு கசிய விட்டுக் கொண்டிருந்தது. வெட்கத்தில் சிவந்த பெண்ணின் கன்னத்து அழகு போல் மிளர்ந்து கொண்டிருந்தது கோபுரத்தில் மேலிருந்து சில சிலைவடிவங்கள்.

வனத்துக்குள் பொதிந்து அமைதியாய் அமர்ந்திருந்தது கோவில்.

சந்துரு கல்யாணம் செய்துக்கலாமான்னு கேட்ட போது ‘‘அம்மா ஸ்டேடஸ் பார்ப்பாங்க'' என்று அவள் மறுத்தாள். ஆனால் காரணம் அம்மா மட்டுமா? ‘‘காவ்யா மாப்பிள 20 ஆயிரத்து சொச்சம் சம்பாதிக்கிறானாம்'' என்ற நினைப்பு, மலை மேல் விழும் மேகநிழலாய் மறைத்தது எதனை? அப்போது தெளிவாய் இருந்தேன். இப்போது காருண்யா மாப்பிள்ளை தான் 30 ஆயிரத்துக்கும் மேல தானே சம்பாதிக்கிறார். பின்னர் என்ன? ஒருவேளை சந்துருவை கல்யாணம் செய்திருந்தால் சந்தோஷமாக இருந்திருப்பேனோ? வனபட்சியம்மன் வஞ்சனையில்லாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். திருநீற்று அலங்காரத்தில் வரையப்பட்டிருந்த கண்கள் அவளை அகலவிழித்துப் பார்த்தது. அதன் காருண்யம் அவளை அமைதிப்படுத்தியது.

வீட்டிற்கு முன்னே பூத்திருந்த தூங்கு மூஞ்சி மரம் வாஞ்சையாக குளிர்ச்சியைப் பரப்பிக் கொண்டிருந்தது. பெரிய குடை போல அகன்று விரிந்திருந்த அதன் கிளைகளில் ஆங்காங்கே மலர்கள் சிறிய சாமரம் போல் விரிந்து தன் அழகினைக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தன. அந்தப் பூவாய் பூத்திருந்தால் வாழ்க்கை அர்த்தப்பட்டிருக்கும் என்று நினைத்தாள் அவள்.  காலையும் மாலையும் பேக்டரி சங்கு தவறாமல் ஒலித்தது. கோடைக்கு கதர் ஆடைகளையும் வெளியில் எடுப்பதும், கூதல் காலத்தில் அதை உள்ளே பத்திரப்படுத்தி விட்டு கம்பளி ஆடைகளை எடுப்பதும் மாறி மாறி நடந்தது. மாரி காலத்தில் சின்ன சின்ன விரிசல்கள் விழுந்திருந்த வீட்டு முற்றத்துத் தாழ்வாரத்தில் முதல் நாள் பெய்த மழைநீர் இறங்கி சொட்டிக் கொண்டிருந்தது. விரிசலை ஒட்டி ஈரம் பூத்திருந்தது. இது வீட்டைப் பலவீனப்படுத்துமே என்று நினைத்தாள்.

ஒரு நாள் மாலையில் ராமானுஜம் நெட்டிப் பந்து போட்டியில் இறுதி சுற்றுக்கு போகும் போது அவளும் உடன் செல்ல தயாராக வந்தவளை ஆழமாய் பார்த்து ‘‘தங்க செலயாட்டாம் ஜொலிக்கிற...'' என்றான். ஒன்றும் சொல்லாமல் நின்றவளை, ஒரு நொடி வெறித்து பார்த்தவன் ‘‘என்ன பண்றது. ராஜ்தானி வண்டி, பேசஞ்சர் இன்ஜினை மாட்டிட்டாங்க வண்டியை எப்படியாவது ஓட்டி தானே ஆகனும்,'' என்றான்.  விளையாடும் போது எதிரணியில் ஆடியவனின் மனைவி கை தட்டி தன் கணவனை உற்சாகபடுத்திக் கொண்டிருந்தாள். ராமானுஜம் இவளை பார்த்த நொடி காருண்யா தனது புடவை தலைப்பை போர்த்திக் கொண்டு வேறு பக்கம் பார்ப்பது போல பாவனை செய்தாள். அடுத்து வந்த கடைசி பந்தை அடித்த வேகத்தில் ராமானுஜத்தில் பேட் கிழிந்து போனது. ‘‘கியா ஷாட் ஹே பாய். ஃபோடு தியா...'' என்று எல்லோரும் புகழ்ந்தனர்.

ஓவியம்
ஓவியம்ஜீவா

அன்று வீட்டுக் கடிகாரம் அதிகாலை 4.45க்கு நின்று போயிருந்தது.

துவைத்துக் காயப்போட்டிருந்த துணிகளை நீவி மடித்துக் கொண்டிருந்தாள். வாழ்க்கையை இப்படி நீவி சரி செய்ய முடிந்தால்? உணவுக்கு, உடைக்கும் பஞ்சமென்றால் மேலும் சம்பாரிக்க சொல்லி சண்டை போடலாம். ஆனால் உணவும் உடையும் மட்டும் போதுமா? பரோடா வரும் முன்னர் உணவும் உடையும் கிடைக்காமலா இருந்தது?

ராமானுஜம் மிகவும் கோபமாக வந்தான். ‘‘மாமியிடம் என்ன சொன்ன அவ்வளவு திமிரா,'' என்று காருண்யாவை அடிக்க ஓங்கியவன், அதே ஆவேசத்தோடு பால் குக்கரை தூக்கிப் போட்டான். தடாரென சத்தத்தோடு விழுந்த குக்கரிலிருந்து தெறித்த பால் காருண்யாவில் கன்னத்தில் விழுந்து சூட்டில் பழுத்தது. பால் குக்கர் பரிதாபமாக தரையில் இடமும் வலமுமாக உருண்டது. தரையில் பால் கோர முகமொன்றை வரைந்தது. காருண்யாவின் பயந்த கண்களைக் கண்ட அவன் பக்கச்சுவர்களில் ஓங்கிக் குத்தினான்.

‘‘அய்யோ உங்க கை...'' அவசரமாகப் பிடித்து தடவித்தர ஓடியவளை விலக்கித் தள்ளினான். கண்ணாடி வளை உடைந்து குத்தியதில் அவன் கைகளில் ரத்தம் வழிந்தது.

பக்கத்து வீட்டிலிருந்து வந்து அவனை அழைத்துக் கொண்டு போனார்கள். அன்றிரவு ராமானுஜம் வீட்டிற்கு வரவில்லை. அவன் அம்மா வீட்டுக்குச்சென்றிருக்கலாம் என்று நினைத்தாள். அதற்கு நான்கைந்து நாட்களும் கூட அவன் வரவில்லை.

 அம்மாவுக்கு உதவி செய்யலாம் என்று சமையலறைக்குச் சென்றாள். அதுவரை பக்கத்து வீட்டு மாமியோடு பேசி கொண்டிருந்தவள் இவள் வந்ததும் மௌனமானாள். புளியெடுத்து கரைக்கப் போன போது டக்கென்று ஒன்றுமே சொல்லாமல் பிடுங்கிக் கொண்டாள் அம்மா.  சாப்பிட வா என்று கூப்பிடுவதைத் தவிர வேறெதற்கும் பேச இருப்பதில்லை அம்மாவுக்கு. அதுவும் வேண்டா வெறுப்பாகப் பரிமாறினாள். தானே எதையும் எடுத்தால் ‘‘உச்'' கொட்டுவதும், எதையும் மேலே படாமல் செல்வாள். பெரியத்தைக்கு பெரு வியாதி வந்த போது அவர்களை தனியறையில் வைத்து இப்படித் தான் உணவு போட்டோம் என்ற விஷயம் நினைவுக்கு வந்தது. வாசலில் நின்ற போது எதிர் வீட்டம்மா பிச்சைக்காரிக்கு ஒரு அடி உயரத்திலிருந்து சாப்பாட்டை போட்டது. பிச்சைப் பாத்திரத்திலிருந்து அது சிதறி வெளியில் விழுந்ததை பார்த்தாள். கடந்த பொங்கலுக்கு புதிதாக வெள்ளையடித்த பின் அவளுக்கு பிடிக்காத நிறம் கொண்டுவிட்டது இந்த வீடு. இது என் வீடில்லை.

‘‘இன்னிக்கி ரசம் ரொம்ப நல்லா இருக்கே புளி கூட கொஞ்சம் கையையும் சேர்த்து கரைச்சிட்டியோ,'' ராமானுஜம் சொல்வது போலுணர்ந்த அந்த கணம் மிகவும் ஆறுதலாக இருந்தது. அன்றிரவு வெள்ளைப் பலகையில் கொஞ்சம் கொஞ்சமாக பச்சை எழுத்துகளை யாரோ அழிப்பது போலவும், அதைப் புன்னகையோடு அவள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவும் கனவு வந்தது. அதே கனவில் பச்சை எனக்கு பிடித்த நிறம் அதை ஏன் அழிக்கிறாய் என்று கேட்டு கொஞ்சிய கிருஷ்ணனின் புல்லாங்குழல் பசுமை மாறாது இருந்தது. 

வனபட்சியம்மன் கோவிலில் ஏதேச்சையாக காருண்யாவை பார்த்த சந்துரு பழைய சந்துருவாக இல்லை. முன் தலை வழுக்கை விழுந்து வயதானவன் போலிருந்தான். ‘‘ஏன் இப்படி ஆயிட்டேன்னு'' சந்துரு கேட்டது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘‘எனக்கென்ன ரொம்ப நல்லா இருக்கேனே உனக்கு தான் மூளை வளர்ந்து முடி எல்லாத்தையும் விரட்டிடுச்சி போல'' என்றாள். ‘‘நீ பிடிக்கலைன்னு சொன்னதும் முடி எல்லாம் கொட்டிடுச்சி'' என்று சிரித்தான். ‘‘பிடிக்கலன்னு எப்போ சொன்னேன், ஒத்துக்க மாட்டாங்கன்னு தானே சொன்னேன்'' என்று சொன்னதும் மீண்டும் மலர்ந்து சிரித்தான். ‘‘இந்த சிரிப்பு தான், இதை விடாமா பிடிச்சிக்கோ,'' என்றாள்.

அம்மா வீட்டில் எதைச் செய்தாலும் குறை சொல்லிக் கொண்டிருந்தாள். வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு நீராட்டி சாம்பிராணி போட்டுக் கொண்டிருந்தவளை ‘‘அதென்ன வெள்ளிக்கிழமை தவறாம தலைக்குளியல். பேசாம சனிக்கிழமை நீராடினா பிடிச்ச சனியனாவது தொலையட்டும்.'' யாரையும் திட்ட வேண்டுமென்றால் அம்மாவுக்கு எப்படி அப்படியொரு நடன அசைவுகள் கைவசப்படுமோ? எதுவும் உறைக்காதவள் போல அமர்ந்திருந்தாள் காருண்யா.

சிறிது கலங்கியபடி இருந்த சமயம் சந்துரு வந்திருந்தான். எல்லோருக்கும் இனிப்பை கொடுத்தான். ‘‘சத்யா உண்டாகி இருக்கா, ஐம்பதாம் நாள் அவளுக்கு எண்ணெய் தேய்ச்சி விட்டு பூ வைச்சு விட காருண்யாவை கூப்பிட சொல்லி அம்மா சொல்லி விட்டாங்க.'' என்றான். ‘‘இதென்ன புது பழக்கம் ஐந்தாம் மாசம் தானே பூச்சூடுவாங்க. சரி என்னவோ பிள்ளையாண்டவ காத்து இவ மேல படட்டும், இவளும் குழந்தை குடும்பமா ஆகட்டும்.'' என தொண்டையில் குரல் கமறியபடி சொன்ன  அம்மா சந்துருவுக்கு காப்பி போட உள்ளே சென்ற போது ‘‘பிடிக்கலைன்னு எங்கே சொன்னேன்னு  நீ சொன்ன அப்பறம் தான்...'' கொஞ்சம் இடைவெளி விட்டு ‘‘நீ சொன்ன நேரம் தான், சத்யா உண்டாகி இருக்கா. அவ உன்னை பார்க்கப் பிரியப்படறா'' என்றான்.

வனபட்சியம்மன் கோவிலுக்கு சத்யாவை வர சொல்லி இருந்தாள் காருண்யா. அவளைப் பார்க்க தேவதை போலிருந்தாள். வந்ததும் காருண்யாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

சத்யாவின் பிரியத்தின் பிடி, காருண்யாவை என்னவோ செய்தது. வானம் மேக மூட்டமாய் இருந்தது. குழந்தை உண்டானவளுக்கு உரிய மினுமினுப்பு தேஜஸாய் அவள் முகத்தில் ஜொலித்தது. கூழாங்கல் போல் மிக மென்மையாக இருந்தாள்.

சந்துருவிடம் ‘‘பூ வாங்கிட்டு வாங்க'' என்று சொல்லி அனுப்பியவள், ‘‘உங்களை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கும் அவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா அவருக்கு என்னை புரிஞ்சிக்க கொஞ்ச நாள் ஆச்சு.'' மௌனமாக இருந்தாள் காருண்யா ‘‘ஆரம்பத்தில இவருக்கு என்னை சுத்தமா பிடிக்காது. இப்போ எல்லாம் சரியாகிடுச்சி. பிடிக்காததை பிடிச்சதா ஆக்கிறது கஷ்டமில்லக்கா...'' சத்யாவின் வார்த்தைகள் தடுமாறியது.

சத்யாவின் கண்களில் நிறைந்த நீர் காருண்யாவுக்கு தன் வீட்டுத் தோட்டத்தின் செம்பருத்தி இலைகளில் தங்கிய நீரை நினைவூட்டியது. சத்யா காருண்யாவுக்கு வாங்கி வரச் சொன்ன மல்லிகையைச் சூட்டும் போது அது வழுக்கி வழுக்கி விழுந்தது. ‘‘அக்கா ஹேர்பின் அழுத்திக் குத்த பயமா இருக்கு. தலையில் குத்திடுமோ, உங்களுக்கு வலிக்குமோன்னு தோணுது''. ‘‘பட்'' என்று கன்னத்தில் அறையும் சத்தம் ஒலித்தது. யாரோ உடைத்த சிதறு தேங்காயிலிருந்து சிதறிய சில்லு ஒன்று காருண்யாவின் கன்னத்தில் மெல்ல உரசிச் செல்ல, சட்டெனக் கண் சிமிட்டி முகத்தைப் பின்னோக்கி நகர்த்தினாள்.

பரோடாவில் முதன்முதலில் வீட்டுக்கு தேநீர் விருந்துக்கு வந்த அவனது தோழர்கள் முழம் மல்லிகைப்பூவை கொடுத்து வைத்து விடச் சொல்லி வற்புறுத்திய போது, ராமானுஜம் பூவை வைக்க கூந்தலின் இழையை எடுத்தான். ‘‘ஸ்'' என்றதும் பதறி போய் பூவை அவளிடமே கொடுத்தது நினைவுக்கு வந்தது. ‘‘பாபிக்கோ பால்சே டர்கைய, டர்போர்க்'' என்றதும். ‘‘டாரா நஹி இஸ்ஸே கெகதே ஜே ப்யார்.'' என்றதும் எல்லோரும் சிரித்ததும் இப்போது போலிருந்தது. 

சூரியனை மறைத்திருந்த மேகம் சட்டென விலகி, பளீர் என்று வெளிச்சம் பரவியது. பறவைகள் திடீரென சத்தம் எழும்பியபடி பறக்கத் தொடங்கின. மாலை மயங்கிக் கொண்டிருந்தது. எல்லாமே நொடி நேரத்தில் ரம்யமாகிப் போனது போலிருந்தது. திரை விலக அம்மனுக்கு ஆரத்தி நடந்தது. அம்மன் முகம் தெளிவாக என்றுமில்லாத வாஞ்சையோடு துலங்கியது. கழுத்தில் செம்பருத்தி மாலையும் தலை கீரிடம் போல் சுற்றி அலங்கரிக்கப்பட்டிருந்த சம்பங்கியும் தவிர வேறெந்த அலங்காரமும் இல்லாமல் ஜொலித்த அம்மன் முகத்தின் கருப்பழகு காருண்யாவிற்கு மிகவும் பிடித்தது போலிருந்தது.

அக்டோபர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com