ஓவியம்
ஓவியம்ஜீவா

மூத்த எழுத்தாளனும் முற்றத்து ஓணானும்

Published on

முன்னாள் நிதியமைச்சர் சிரிப்பு போலவும் இந்நாள் நிதியமைச்சர் சிரிப்பு போலவும் உள்வாங்கிய பூரிப்புடன் இருந்தது கும்பமுனி. பன்னாட்டு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களின் அனுக்கிரகம் இருந்தால் அந்தகன் கூட அருட்பார்வை பார்ப்பான்.

காலையாகாரமாக சம்பாக் குருணைக் கஞ்சியும் நாரத்தை இலைத் துகையலும் கழும மாந்தியவுடன் பொடித்த வியர்வை ஆற்ற, சற்றே சாய்வான ஆரல் நாற்காலியில் இரு கால்களையும் மேலே தூக்கி வைத்துக் கொண்டு, முற்றத்து வேலியில் பூத்திருந்த செம்பருத்திப் பூவில் பறந்து பறந்து தேனுறிஞ்சும் தேன் சிட்டுகளைப் பார்த்து மெய்மறந்திருந்தார் கும்பமுனி. எவன் குடியையும் இதுவரை கெடுக்காத, ஆனால் காலங்காலமாக கால்மாறும் குற்றம் சுமந்து வாழும் இனத்தின் பிரதிநிதியான ஓணான் ஒன்று காலையுணவு தேடித் திரிந்து கொண்டிருந்தது. ஆழ்ந்த கவனத்தில் குவிந்திருந்த கும்பமுனியின் முகம், சிந்தனை யோட்டத்தின் திசை மாற்றம் காரணமாக மத்திய நிதியமைச்சர் புன்னகைகளின் கோலம் காட்டியது.

தற்செயலாக முற்றத்துப் படிப்புரைக்கு வந்து, அனிச்சையாகக் கும்பமுனியைத் திரும்பிப் பார்த்த தவசிப்பிள்ளை ஈரக்குலையில் தீப்பாய்ந்ததைப் போலப் பதைத்தார். ‘பாவி முடிவான், இந்தச் சிரிப்பு கெட்டப்பய சிரிப்புல்லா, குடிகெடுக்கும் சிரிப்புல்லா’ என்று எரிச்சலுற்றார். வாய்விட்டுக் கேட்கவும் செய்தார்.

“என்ன எழவு இறுமாப்புச் சிரிப்பு இது? டெல்லிக் கோட்டையை பிடிச்சதைப் போல?” என்றார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை திகைப்புத் தணியாமல். கும்பமுனி, தவசிப்பிள்ளையின் எரிச்சலைக் கணக்கில் கொள்ளாதவர் போலச் சொன்னார்.

“நேத்து நாகரு கோயிலுக்குப் போனம்லா, டாக்டரைப் பாக்க... அப்பம் ஒரு பெரிய ஃபிளக்ஸ் பேனர் பாத்தேன்”

“அதுக்கு என்னதுக்கு இப்பம் இறும்பூது எய்துகேரு?”

 “சொல்லுகதைக் கேளும்...இருபதடிக்குப் பதினஞ்சடி இருக்கும் பாத்துக்கிடும்..”

“என்ன எழுதீருந்து?”

“எழுதினதப் படிச்சா, வருங்கால தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்ணு!”

“அதுல ஆச்சரியப்படதுக்கு என்ன இருக்கு? இருபது முப்பது வருங்கால முதலமைச்சருகோ அலையானுவ நாட்டுல..”

”இது அவுனுக இல்ல”

“பின்ன?”

“நம்ம பழைய மாவட்டச் செயலாளரு, சந்தை மேட்டுக் காளியா மகளுக்கு வாழ்த்து பேனர்”

உண்மையில் அவர் பெயர் சாதிப் பின்னொட்டு சேர்ந்தது தான். சாதி மறுப்புகாகத் தன் பெயரைச் சந்தை மேட்டுக் காளியா என்று சுருக்கிக்கொண்டார். ஒரிஜினல் தொழில் சந்தை மேட்டில் தேங்காய், காய்கறி மூடைகள் இறக்குவது. சரக்கு ஏற்றி இறக்கும் தொழிலில் போட்டி, சண்டை, அடிதடி, குத்து, வெட்டு என வீரச் செயல் பல புரிந்து மாவட்டச் செயலாளர் பதவி வெட்டிப் பிடித்தார். மாளவியா என்று பெயர் இருக்கக்கூடும் எனில் காளியா என்று பெயர் இருக்கக் கூடாதா என்ன? தமிழ் அடையாளத்துடன் இல்லை என்று தகப்பனார் பெயரையே மாற்றும் காலம் இது.

தவசிப்பிள்ளை கண்ணு பிள்ளைக்கு மண்டைக் குடைச்சலாக இருந்தது. “அது எப்பிடிவே பாட்டா? காளியா மகளுக்கு எழுவது வயசு இருக்குமே!”

“இருக்கட்டுமே வே! சினிமாவுல போயி குத்துப்பாட்டுக்கா ஆடப் போறா? முதலமைச்சர் ஆவதுக்கு எழுவது வயசு காணாதா? அவனவன் 117 வயசிலே அடுத்த பிரதம மந்திரி நாம் தான்னு நம்பிக்கிட்டுக்கெடக்கான்”

“அது கெடக்கட்டும் பாட்டா... காளியா மகளுக்கு முதலமைச்சர் ஆகதுக்கு என்ன தகுதி இருக்கு?”

ஓவியம்
ஓவியம்ஜீவா

“ ஹா ஹா ஹா... தமிழ் நாட்டுக்கு மொதலமைச்சர் ஆகதுக்கு என்ன தகுதி வேணும் வே? நீரு ஒரு பழம்பஞ்சாங்கம். முன்னால புரட்சித் தலைவர் இருக்கப்பட்ட காலத்திலே, அவுருக்குப் பிடிக்கும்னு நம்ம காளியா நல்ல காய்வுள்ள கருநெத்திலிக் கருவாடும் மொரக் கருவாடும் வாங்கி, தலை ஆஞ்சு மெட்ராசுக்குப் போகச்சிலே எல்லாம் கொண்டு போயிக் குடுப்பாராம்லா?”

 “அதுக்கு?” என்று வெடுக்கென்று கேட்டார் தவசியா.

தவசிப்பிள்ளை என்பது சமையற்காரர்களைக் குறிக்கும் தொழிற்பெயர், அதையும் சாதிப் பெயராகக் கொள்ளும் சாத்தியம் இருப்பதால், அவரை இனிமேல் கொண்டு தவசியா என்றழைத்தால் என்ன என்னும் யோசனையும் வந்தது. கும்பமுனி, தவசிப்பிள்ளையைப் பார்த்து, இந்திய நிதியமைச்சர்களுக்கே வாய்க்கப்பெற்ற மந்தகாசம் ஒன்றை உதிர்த்துவிட்டுச் சொன்னார்.

 “தமிழ்நாட்டுலே மொதலமைச்சர் ஆகதுக்கு அது போரும் வே.. நமக்குண்ணு ஒரு வரலாறு இருக்குல்லா?”

 “ அதுக்கு காளியா மகளுக்கு மக்கள் ஓட்டுப் போடாண்டமா?”

 “எல்லாம் போடுவாம்யா! மொத்தம் மூணே முக்கால் கோடி ஓட்டு.. அதுல ஒரு கோடிப் பேரு ஓட்டுப் போடப் போமாட்டான். ரெண்டரைக்கோடிப் பேரு ஓட்டுப்போடுவான். அதுல ஒரு கோடிப் பேருக்குப் பணம் குடுத்தாப் போகும்.. ஓட்டுக்கு ஆயிரம் ரூவா வையும்.. ஆயிரம் கோடி ரூவா.. அது இல்லாமலா அரசியல் நடத்துகான்..”

“ அப்பம் குவாட்டர், கோழி பிரியாணி..?”

“சரி! அதையும் சேத்துக்கிடும்..”

“காளியா மகள்ட்ட அவ்வளவு பணம் இருக்கா?”

“ஆரு கண்டா? எந்தப் புத்துல என்ன பாம்போ?”

“அப்பம் அதுக்கா சிரிச்சேரு?”

“அதுக்கில்லே! பிளக்ஸ் படம் நெனச்சு சிரிச்சேன்!”

“படத்துலே என்னா? காளியா மக பாக்க நல்லால்லியா?”

“வே! எழுவது வயசுக்காரியைப் பாத்து அப்பிடி எல்லாம் கேக்கப் பிடாது. கேட்டேரா?”

“பின்னே என்ன அடியந்திரத்துக்குத்தான் சிரிச்சேரு? நூறு ரூவா நோட்டையும் செல்லாம ஆக்குனா என்ன ஆகும்னு நெனச்சா?”

கும்பமுனி சற்று நிதானித்தார். மறுபடியும் முதல் வரிகளில் சொன்ன மாய மனோகர மயக்கும் புன்னகை.

வேலியில் நின்ற தங்க அரளிச் செடிமீது காகம் ஒன்று. எங்கோ திருடிய தேங்காய் முறியைக் காலால் பற்றிக் கொத்திக் கொண்டிருந்தது. திருட்டு என்ற சொல்மீது சிந்தை பெயர்ந்தது கும்பமுனிக்கு. காகத்துக்குத் தெரியுமா தான் திருடுகிறோம் என்று. அது தனது உணவைத் தானே எடுத்துக் கொள்கிறது. நாட்டில் நூறு கோடி, ஐந்நூறு கோடி, ஆயிரம் கோடி சுரண்டி, லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து திருடுவதை சம்பாத்தியம் என்கிறார்கள். கொள்ளை எனும் சொல்லுக்கு மாற்றுச் சொல் சம்பாத்தியம் போலும்!

சட்டென்று சிந்தனை அறுபட்டு, தவசிப்பிள்ளை முகத்தை வேவு பார்த்தார் கும்பமுனி. அவருடைய மூலக்கேள்வியை அகழ்ந்து எடுத்தார். நாகர்கோயிலில் தான் பார்த்த பிளக்ஸ் பேனர்களின் முகத்தை வரிசைப்படுத்த ஆரம்பித்தார்.

“மொதல்ல இருந்த படம் காளியா மகள். அவுளுக்குப் பொறத்த சின்னம்மா, அவுளுக்குப் பொறத்த அம்மா, அவுளுக்கும் பொறத்த எம்.ஜி.யார், அவுனுக்கும் பொறத்த அண்ணாத்துரை, அவுருக்குப் பொறத்த  ஈ.வே.ரா, அவுருக்கும் பொறத்த மகாத்மா காந்தி, அவுருக்கும் பொறத்த காரல் மார்க்ஸ்..”

முதல் சந்தேகம் கேட்டார் தவசிப்பிள்ளை.

“ஒருத்தருக்குப் பொறத்த ஒருத்தர் நிண்ணா மறைக்காதா?”

“அப்பிடி இல்லவே! படம் எல்லாம் வெத்தலை அடுக்கினமாரி அடுக்கமாட்டா..சீட்டு வெளையாடச்சிலே, சீட்டைக் கையிலே பிரிச்சுப் பிடிப்பாள்ளா அப்பிடி..ஒருத்தர் படத்துக்குப் பக்கவாட்லே இன்னொருத்தர் படம் வாற மாதிரி..மனசிலாச்சா?”

“ ஓ! அப்பிடியா? அதுல உமக்கு என்ன சிரிப்பு?”

 “எனக்கு அப்படியொரு பிளக்ஸ் வைச்சா யாரெல்லாம் இருப்பா? அதை யோசிச்சேன். சிரிப்பு வந்தது!”

 “அது நீரு செத்த பொறவுல்லா பிளக்ஸ் வைப்பா..

வச்சாலும் உமக்குப் பொறத்த நாமுல்லா நிப்பேன்! வேற எந்த பட பண்டார சேனை உம்ம பொறத்த நிக்கப் போகு?”

கும்பமுனி இளக்காரமான சிரிப்பொன்றைச் சிந்தினார். ஆறு அரசியல் கொலை செய்துவிட்டு, ஐயத்துக்கு இடமில்லாமல் குற்றம் நிரூபிக்கப் படாததாலும், சந்தேகத்தின் சலுகையை அளித்ததாலும் விடுதலை பெற்று வெளியே நடக்கும் தலைவரின் முகத்து இளக்காரம் அது. சிரிக்கச் சற்று நேரம் எடுத்துக் கொண்டு, தவசிப் பிள்ளையிடம் சொன்னார்.

“நீரு எனக்குப் பொறத்தயா? நல்ல சீரு!”

“ஏன் நிக்கப்பிடாதா? எத்தனை வருசமா உமக்கு கட்டஞ்சாயா போட்டுத் தந்திருக்கேன்? கஞ்சி வச்சுக் காணத் தொவையலு அரச்சிருக்கேன். நீரு எழுதப்பட்ட ஊசக்கதை எல்லாம் வாசிக்கக் கேட்டிருப்பேன்! இந்த இடிஞ்ச வீட்டையாவது எம்பேருக்கு எழுதி வச்சிருக்கேரா? எழுத்தாளன்னா மொதல்ல நண்ணி வேணும் பாட்டா! சரி! சவத்தைத் தள்ளும்..உம்ம பொறத்த யாராரு நிப்பா? அதைச் சொல்லும்!”

கும்பமுனி, பாரதப்பிரதமர் பதவி ஏற்றவுடன், பிரபல சினிமா நடிகனைச் சென்று சந்திக்காமல், மூத்த தமிழ் எழுத்தாளனாகிய தன்னை வந்து சந்தித்ததைப் போன்ற பரவசத்தில் இருந்தார். ஃபிளெக்ஸ் பேனரில் தனது கற்பனையின் முகங்களை விவரிக்கலானார்.

“மொதல்ல எம் மொகம்..எனக்குப் பொறத்த நகுலன் மொகம்..அவுருக்குப் பொறத்த புதுமைப்பித்தன்..பொறவு பாரதி...அதுக்கும் பொறத்த கம்பன்..அவுருக்கும் பொறத்த திருவள்ளுவரு...அவுருக்கும் பொறத்த தொல்காப்பியர்..”

 “ ஹா ஹா ஹா ஹா” என்று பொட்டிச் சிரித்தார் தவசிப்பிள்ளை.

“என்னத்துக்குவே இப்பம் குதிரையாட்டம் கனைக்கேரு?”

”தொல்காப்பியருக்க ஃபோட்டா வச்சிருக்கேரா பாட்டா?”

“ ஓ! காரியமாட்டுத்தான் யோசிக்கேரு வே! எவனையும் விட்டு வரையச்

 சொல்லலாம்... எவன் பாத்தான் வே கம்பனையும் வள்ளுவனையும்? வரஞ்சு வச்சிருக்கானுகள்ளா? இப்பம் அதுமாதிரி தொல்காப்பியரு வரஞ்சிரலாம்! எவன் கேக்கதுக்கு இருக்கு?”

தவசிப்பிள்ளை ஒரு குசும்புச் சிரிப்புடன் கேட்டார்.

“நான் ஒண்ணு சொன்னா கோவப்படாம கேப்பேரா?”

“கோவப்பட்டா மாத்திரம் கேக்காம இருந்திருவேரா?”

“பேசாம தொல்காப்பியருக்கு எடத்திலே எம் படத்தை வையும்!”

“வே..வே..கூறுகெட்ட கோட்டிக்காரம் மாதிரி பேசப்பிடாது கேட்டாரா?”

“ஏன் கெடந்து பொடங்கி அடிச்சிக்கிட்டு வாறேரு? உம்ம படத்துக்குப் பொறவு பாரதியாரு படம் இருக்கலாம்ணா, திருவள்ளுவருக்குப் பொறத்த நான் இருக்கப்பிடாதா?”

 “அதுக்கு தமிழ்மொழிக்கு நீரு என்னவே செய்தீரு?”

“ இது என்ன செத்த கேள்வி பாட்டா? காளியாவுக்கு மக மட்டும் இமயமலையக் கண்டு பிடிச்சாளா? தமிழ்நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தாளா? இப்பிடி ஓர வஞ்சனையாப் பேசப்பிடாது பாட்டா..

நாலுமட்டம் நெத்திலிக்கருவாடு, மொரக்காடு செமந்திட்டுப் போனவருக்க வாரிசு அவள்ணா, நாம் ஒமக்கு எத்தனை லச்சம் கட்டஞ்சாயா போட்டுத் தந்திருக்கேன்? எலி பெரிசானா பெருச்சாளிதான் கேட்டேரா?”

ஆசுவாசமாகச் சற்று மூச்சு விட்டு ஆற்றிக்கொண்டார் கண்ணுபிள்ளை. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் வஞ்சினம் உரைத்தல் என்று உண்டு.‘புலவர் பாடாது ஒழிக என் நிலவரை’ என்றது போல,  ‘பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆம் ஆகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்’ என்று கண்ணகி உரைத்தலைப்போல, கோழைக்குப் பாலூட்டிய மார்பை அறுத்து எறிவேன் என்றதைப்போல தவசிப்பிள்ளை வஞ்சினம் உரைத்தார்.

நெற்றி நரம்பு தெறிக்க, கழுத்து நரம்பு விம்ம, கண்களில் ஊழித்தீ கனல, தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை அறை கூவினார்;

“உம்ம பேரு கும்பமுனிண்ணா எம் பேரு இனி வறக்காப்பியரு..என்னா சரியா? என்னாலயும் நாலு நஞ்ச கத, பீத்தக் கட்டுரை எழுத முடியுமாண்ணு பாக்கேன்?”

சீற்றத்துடன் முற்றத்துப் படிப்புரையில் இருந்து வீட்டினுள் பாய்ந்தார். உள்ளே அடுக்களையில் இருந்து உரக்கக் கேட்டது அவர் குரல்.

“என்ன? கட்டஞ்சாயா எடுக்கட்டா?”

பசுமாட்டின் மூத்திரம் குடித்துவிட்டு இளிக்கும் காளைமாட்டைப் போல, கும்பமுனி முற்றத்து ஓணானைப் பார்த்துச் சிரித்தார்.     

மார்ச், 2017.    

logo
Andhimazhai
www.andhimazhai.com