முகமற்றவள்

முகமற்றவள்
Published on

வீதியில் நுழைந்த போது சின்னதொரு பதட்டம் இயல்பாகவே மாலதியின் உடல் முழுக்க ஓடியது. வண்டியின் வேகத்தைக் குறைத் தவளுக்கு வீட்டிற்குத் திரும்பும் கடைசி திருப்பத்தில் இரண்டு மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடந்ததைப் பார்த்ததும் பதட்டம் முன்னைவிடவும் அதிகமானது. இங்கு குடிவந்த பிறகான இந்த சில நாட்களில் இவளின் தோற்றத்திலேயே சாதியை அவர்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். வெஜ் ஒன்லி பலகை இல்லாத மூன்று நான்கு வீடுகளில் ஒன்றில் தான் இவள் தன் குடும்பத்துடன் குடிவந்திருந்தாள். மாலதிக்கு விவாகரத்து ஆகி சில மாதங்கள் தான் ஆகின்றன. ஒரு மாறுதலுக்காக வேண்டியே  அம்மா அப்பாவுடன் இங்கு வந்திருந்தாள். அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒருபோதும் அவளுக்கு விருப்பம் இருந்திருக்கவில்லை, அதனாலேயே தனி வீடாகப் பார்த்து இங்கு வந்தார்கள். இங்கும் அவர்களோடு பேச ஒருவருமில்லை. அந்தத் தனிமை தெரியாதபடி முன் வாசலுக்கு அவ்வப்போது வரும் நாய்களும் பின் வாசலுக்கு வரும் பூனையும் அவர்களோடு தனித்துவமான மொழியில் பேசிக்கொண்டிருந்தன. 

பெங்களூரில் வேலை செய்யும் தம்பி எப்போதாவது ஒருமுறைதான் வீட்டிற்கு வருவான். இவள் திருவான்மியூரில் ஒரு பன்னாட்டு வங்கியில் வேலை செய்கிறாள். எந்த இரைச்சலுமில்லாத தனிமையும் அமைதியும் கலந்த இந்த வீடு சில நாட்களிலேயே  இவளுக்குப் பிடித்துப் போனது. குடிவந்த முதல் சில நாட்கள் யாரும் இவர்களைக் கவனித்ததாய்த் தெரியவில்லை. யாரும் சாதாரணமாகப் பார்த்து சிரிப்பது கூட இல்லை. இவள் எல்லோருக்கும் தன் சிரிப்பைத் தரத் தயாராய் இருந்தும் அதைப் பரிமாறிக் கொள்ள ஒருவருக்கும் விருப்பமில்லை. ஒரு வெள்ளிக்கிழமை மாலை அந்த வீதியில் இருந்த முருகன் கோவிலுக்கு அவளும் அம்மாவும் போனார்கள். மாலதிக்கு கடவுளின் மீதெல்லாம் நம்பிக்கையில்லை. அம்மாவுக்காகப் போனாள். கோவிலில்  எல்லோரும் ஒரு மாதிரியாய் அவர்களைப் பார்த்தனர். சகிக்கவியலாததொரு அருவருப்பு அவர்களின் பார்வையில். அந்தப் பார்வைக்கான அர்த்தங்களைப் புரிந்து கொள்ள மாலதிக்கும் அவள் அம்மாவுக்கும் நீண்ட நேரம் பிடிக்கவில்லை. இத்தனை நாட்களும் மௌனமாக அந்த தெருக்காரர்கள் யார் என்ன சாதியென்பதைத் தெரிந்து கொள்வதில் செலவழித்திருக்கிறார்கள் என்பது விளங்கியது. சாமி கும்பிடாமலேயே வெளியேற நினைத்தவர்கள் வாசலுக்கு வரும் போது எதிர்ப்பட்ட ஒரு பெண் இவர்களின் உடை தன் மீது பட்டுவிடக் கூடாதென்கிற கவனத்தில் சிரமத்தோடு விலகி ஒதுங்கி நின்று கொண்டாள். அவர்கள் வேகமாக வெளியேறிவிட்டனர்.

அத்தனை நாட்களும் அவளின் மீது விழுந்திருந்த ஆண்களின் பார்வை மாறத் துவங்கியது. அவள் எடுத்து வைத்து விளையாட உரிமையுள்ள ஒரு பொருளென அவர்கள் நினைத்திருக்கக் கூடும். மாலதி வீட்டிலிருந்து வெளியேறி தன் டூவீலரில் அந்த வீதியைத் தாண்டிச் செல்லும் வரையிலும் தன் முதுகுக்குப் பின்னால் யாரோ சிலரின் கண்கள் தொடர்ந்து வந்தபடியே இருப்பது போல் இருக்கும். திரும்பிப் பார்க்க முடியாத அச்சத்துடன் வேகமாக கடந்து செல்லுவாள். சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து திரும்பி வருகையில் அவள் வண்டியை வேகமாக முந்தியபடி ஒரு டூவீலரில் இரண்டு இளைஞர்கள் கடந்து போயினர். பதட்டத்தில் தெருவுக்குள் இருக்கும் ஸ்பீட் ப்ரேக்கர் மறந்து போக அவள் தடுமாறி வண்டியோடு சாக்கடைக்குள் விழுந்தாள். கார்த்திகை மாதத்தில் விளக்கேற்ற வேண்டிய நிறைய பெண்கள் வாசலில் அகல் விளக்குகளுடன் இருந்தனர். ஒருவரும் அவளுக்கு உதவ வந்திருக்கவில்லை. தண்ணீர் கேன் போடுவதற்காக வந்த சிறுவன் வண்டியை நிறுத்தி விட்டு வந்து இவள் எழுந்து கொள்ள உதவினான். எழுந்து நிற்கமுடியாதபடி கால் சுளுக்கி இருந்தது. அவனே வண்டியையும் தூக்கி நிறுத்திக் கொடுத்தான். சிரமப்பட்டு சிரித்தபடி “தாங்க்ஸ் தம்பி.” என்றவள் மெதுவாக வண்டியை உருட்டியபடியே வீட்டை நோக்கி நடந்தாள்.

“என்னாடா சந்தனக் கலர் ட்ரெஸ்ஸு சாக்கட கலரா ஆகிருச்சு...” அவள் கடைசித் திருப்பத்தை நெருங்கும் போது அங்கு நின்றிருந்த இளைஞர்கள் சத்தமாக இவளைப் பார்த்து சிரித்தனர். எந்தச் சத்தத்தையும் காதில் வாங்கிக் கொண்டதாய்க் காட்டிக் கொள்ளாமல் பல்லைக் கடித்தபடி வீட்டை நோக்கி நடந்தாள். “தெருவுக்குள்ள போகும் போது எல்லாத்தையும் மூடிட்டு பாதையைப் பாத்து வண்டிய ஓட்டனும், எவண்டா கெடைப்பான்னு கண்ணு அலஞ்சா உடம்பு புண்ணாகாம என்ன செய்யும்?” தன்னை நோக்கி வந்து விழுகிற வார்த்தைகளில் இருந்து தன் மீதான அவர்களின் அருவருப்பைப் பார்த்தவளுக்குக் அது தன் மீதானது மட்டுமே இல்லை என்பதும் புரியாமலில்லை. நின்று கோவமாய்ப் பதில் சொல்லலாம், அல்லது காதும் காதும் திரும்புகிற மாதிரி நாலு அறை விடலாம். ஆனால் அது அடுத்தடுத்து கொண்டு வரும் நெருக்கடிகளை நினைக்கும் போது எதுவும் செய்ய முடியாத இயலாமையே மிஞ்சியது. இப்போது தன்னுடலில் ஒட்டிக் கிடக்கும் சாக்கடை நாற்றம் கொஞ்சமும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. யோசித்துப் பார்க்கையில் இவ்வளவுக்கும் காரணம் அவள்  அந்தக் கோவிலுக்குள் போனதுதான்.

அதன் பிறகு வசைகள் எப்பொழுதும் அவளைச் சுற்றி அலைந்து கொண்டே இருக்கத் துவங்கின, நகரங்களில் யாரும் சாதி பார்ப்பதில்லை என்னும் அவளின் நீண்ட கால நம்பிக்கைகள் எல்லாம் பொய்யாகி எப்பொழுதும் சில கண்கள் அவளைக் கண்கானிப்பதைப் புரிந்து கொண்டாள். அந்தக் கண்கள் அவள் காலையில் பால் வாங்குவதற்காக செல்லும் போதோ பின் வாசலில் துவைத்த துணிகளைக் காயப்போடும் போதோ சில நொடிகள் அவளுடலை அருவருப்பானதொரு சதைப்பிண்டமாக்கி ஒதுக்குவதை உணர்ந்து மயிர்க்கால்கள் ரௌத்ரத்தில் கொதிக்கும். பின்னிரவில் அவள் வீட்டில் மட்டும் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுவதும் அடுத்த நாள் அவளின் அப்பா எலெக்ட்ரீசியனைத் தேடிப் போவதும் வாரத்தில் இரண்டு நாட்கள் நடக்கும் வழக்கமானது. மாலதியின் அம்மாவுக்கு இதற்கு முன்பிருந்த இடமே தேவலாம் என்றாகிவிட்டது. “போதும்டியம்மா இந்தத் தெரு. பேசாம மூட்டையக் கட்டிட்டு வேற வீடு பாப்போம்.” மாலதிக்கு இந்த வீட்டிலிருந்து அலுவலகம் போய் வர எளிதாக இருந்ததால் இப்போதைக்கு இந்த வீட்டை மாற்ற மனதில்லை. அதனால் பொறுமையாக இருந்தாள். ஆனால் நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அலைச்சல் ஒரு பொருட்டில்லையென  அப்பாவிடம் வேறு வீடு பார்க்கச் சொன்னாள்.

வார இறுதி நாட்களில் தம்பியும் வந்து போகத் துவங்கினான், பெங்களூரில் இருந்து வந்து போக சிரமம் இருந்தாலும் மாலதிக்காக வந்து போனான். எல்லா ஊரிலும் யாரோ சிலர் எப்பொழுதும் விலக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். பெங்களூரில் அவனிருக்கும் பகுதியில் தமிழ் பேசினால் வித்தியாசமாய் பார்க்கிறார்கள், அங்கு மொழி பிரச்னை சரி. இங்கு என்ன வந்தது? அவன் வீட்டிற்கு வரும் இரண்டு நாட்களும் அந்தத் தெருவாசிகளின் அருவருப்பான பார்வைகளை அவனும் எதிர்கொள்ளத் தவறுவதில்லை. “இந்த வீடே வேணாம்க்கா... ஒவ்வொருத்தனையும் பாத்தா கொலைவெறி வருது... சீக்கிரமா ஷிஃப்ட் ஆகற வழியப் பாரு...” ஊருக்குப் போகும் போது எரிச்சலோடு சொல்லிவிட்டுப் போனான்.

தம்பி ஊருக்குப் போன அடுத்த நாள் இரவு மீண்டும் அதே இளைஞர்கள். அவர்களைப் பார்த்து பயந்து போவது தன் மீது தானே காறி உமிழ்ந்து கொள்வது போன்ற உணர்வைத் தந்ததால் என்ன ஆனாலும் இயல்பாக இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள். “என்னடா இன்னைக்கு பாடிகார்ட  காணோம்... ரெண்டு நாள் டியூட்டி முடிஞ்சு கௌம்பிட்டானா?” முதலில் ஒருவன் கேட்க பக்கத் தில் இருந்தவன் “அவன் போனா என்ன அடுத்த வாரம் இன்னொருத்தன், ஆம்பளைக்கா பஞ்சம்?” அவன் வார்த்தைகள் செவிகளின் வழியாய் ஊடுருவி உடலைத் துளைத்தது. வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினாள். அவள் முறைப்பதைப் பார்த்த ஒருவன் “என்ன மொறைக்கிற, மூஞ்சில ஆசிட் அட்ச்சிருவேன்... பேசாம ஓடிடு....” அவன் சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். அந்த இளைஞர்கள் நான்கு பேரின் பார்வையும் முன்னைவிடவும் கேவலமானதாய் இருந்தது. ஒருவன் அவள் மாரிலிருந்து கண்களை விலக்குவதாக இல்லை. யோசிக்காமல் இரண்டு பேரை அறைந்தவள் எதுவும் பேசாமல் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் போய்விட்டாள்.

அரை மணி நேரம் கூட போயிருக்காது, தெருவிலிருந்த பாதிக்கும் மேலான ஆட்கள் மாலதியின் வீட்டிற்கு முன்னால் திரண்டு விட்டார்கள். எல்லோருமே படித்தவர்கள் என்று சொல்லும் படியானத் தோற்றம் தான், ஆனால் அவர்களின் வார்த்தைகள் ஆகக் கேவலமானவையாய் இருந்தன. முக்கியமாகப் பெண்கள். “அதென்னது ரோட்ல ஆம்பளைய கை நீட்றது? கேக்கறதுக்கு ஆள் இல்லைன்னு நெனச்சேளா? உங்க ஹவுஸ் ஓனர் கிட்ட பேசியாச்சு... நீங்க இன்னும் ஒன் வீக் ல வீட்ட காலி பண்ணிடுங்கோ. இல்லைன்னா பிரச்சனை வேற மாதிரி ஆகிடும்.” கிழட்டுப் பூனையின் குரலில் சில பெண்கள் கத்திக் கொண்டிருக்க மாலதியின் அப்பா முழுதாக என்ன நடந்தது என்பது தெரியாமலேயே தன் மகளுக்காக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் குரல் தேய்ந்து பலவீனமாகி இருந்தது. அப்பாவுக்காக வருத்தப்பட்டாள்.

என்ன ஆனாலும் இந்த வீட்டைக் காலி செய்து போகும் வரை அமைதி காக்க வேண்டுமென நினைத்துக் கொண்டவள் அந்த வீதியைக் கடந்து செல்லும் சில நிமிடங்கள் தினமும் தன்னை எந்த சுரணையுமற்றவளாய் வைத்துக் கொண்டாள். அவளைத் தொடர்ந்து வரும் வார்த்தைகளையும் பார்வைகளையும் பொருட்படுத்தாமல் கடந்து செல்ல சிரமத்துடன் பழகிக் கொண்டாள். இவளிடம் அறை வாங்கிய இரண்டு பேரும் அவள் போகும் போதும் வரும் போதும் வெவ்வேறு பொருட்களை வீசி எறிந்தனர். பல சமயங்களில் சாதுர்யமாக வண்டியை ஓட்டி அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்லுவாள், சில சமயம் மேலே எது விழுந்தாலும் பொருட்படுத்தாமல் போய்விடுவாள். எந்த நிமிடத்திலும் தன் மீது ஆசிட் வீசப்படலாமென்கிற அச்சத்தில் வீட்டிலிருந்து வெளியே வரும்போதே ஹெல்மெட்டுடன் வந்தாள். ஹெல்மெட்டிற்குள் தலையைப் புகுத்திக் கொள்ளும் அந்த பாதுகாப்பு தன்னைத் தற்காலிகமாய் காக்கும் என்னும் நம்பிக்கை இருந்தது. வெளியில் எங்கும் அதிகம் போகாததால் வீட்டிற்குப் பின்னாலிருக்கும் தொட்டிச் செடிகள் ஆறுதலாய் இருந்தன. எந்தச் செடிகளையுமே தொட்டியில் வளர்ப்பதில் அவளுக்கு விருப்பமில்லை. ஊரில் வீட்டிற்குப் பின்னால் ஏராளமான செடிகள் இருக்கும். சின்னதொரு தோட்டம் போல் பார்க்கும் போதெல்லாம் மனதெங்கும் உற்சாகம் பிறக்கும். இங்கே இந்தத் தொட்டிச்செடி தன்னைப் போலவே பரிதாபத்திற்குரிய ஜீவனாய் அவளுக்குப் பட்டது.

மடிப்பாக்கத்தில் அப்பா வேறு வீடு பார்த்திருந்தார். “வீடு நல்லா இருக்கும்மா, உனக்கும்  அங்க இருந்து ஆஃபிஸ் போகப் பக்கம் தான?” மாலதி அமைதியாய் அவரைப் பார்த்தாள். அந்த வீட்ட சுத்தியும் நெறைய வெஜ் ஒன்லி போர்டு எதுவும் இல்லையேப்பா?” அவள் குரலில் அச்சம். அவர் ஆறுதலாக அவளின் தலையை தடவிக் கொடுத்துவிட்டு சிரித்தார். “பயப்படாதம்மா இனி எல்லாம் சரியாப் போகும்.” அவளுக்கும் நம்பிக்கையாய் இருந்தது. எல்லோரும் ஒரே மாதிரியாய் இருந்துவிடப் போவதில்லை. அந்த வார இறுதி நெருங்குவதற்கு முன்பாகவே அம்மா எல்லாப் பொருட்களையும் மூட்டை கட்டத் துவங்கிவிட்டாள்.

பேக்கர்ஸ் - மூவர்ஸ் மொத்தமாக பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்ப எட்டு மணிக்கும் மேலாகிவிட்டது. எதிர் வீட்டு மாடியிலிருந்தும் பக்கத்து ஃபிளாட் ஜன்னல்களிலிருந்தும் சிலர் இவர்கள் வீடு காலி செய்வதை ரகசியமாய் எட்டிப் பார்த்தனர். வழக்கமாக இவள் வைக்கும் சோற்றைத் திண்ண வரும் பூனை வெறும் பிஸ்கட் மட்டும் வைத்திருந்ததைப் பார்த்து நீண்ட நேரமாய்க் கத்தியது. அவள் பின்வாசல் கதவை சாத்த வரும் பொழுது சுவரிலிருந்து இறங்கி வந்து அவள் கால்களைச் சுற்றிக் கொண்டது. பூனையைத் தூக்கிக் கொண்டவள் கதவை சாத்திவிட்டு வந்து அதனை தன் டூவீலரில் உட்கார வைத்தாள். பழக்கமானவர்களிடம் காட்டும் ப்ரியத்தைப் போல் அது அந்த வண்டியை விட்டு எங்கும் நகரவில்லை. இந்தப் பூனைக்கு அவள் ஜாதியைப் பற்றிக் கவலையில்லை. அவள் அன்பும் நேசமும் எத்தனை நிஜமோ அத்தனை நிஜம் இந்தப் பூனை அவள் மீது கொண்டிருக்கும் நேசமும். அம்மாவையும் அப்பாவையும் வாடகைக் காரில் அனுப்பி வைத்தவள் கடைசியாக வீட்டைப் பூட்டிவிட்டு பூனையோடு கிளம்பினாள்.

தெரு முனையில் பேச்சு சத்தம் எதுவும் இல்லாத இளக்காரமான சிரிப்பு மட்டும் எதிரொலித்துக் கொண்டிருக்க காதில் வாங்கிக் கொள்ளாமல் போனாள். மொபைல் ஒலிக்க, வண்டியை நிறுத்திவிட்டு எடுத்துப் பார்த்தாள். அப்பா. “பின்னால இருந்த செடிய எடுக்க மறந்துட்டோம்மா... வண்டில வெச்சுக் கொண்டு வந்துடு.” “சரிப்பா...’ இணைப்பைத் துண்டித்துவிட்டு வண்டியைத் திருப்பினாள். பூனை வண்டியில் நிற்க முடியாமல் உருண்டது. லாவகமாய் கால்களில் பிணைத்துக் கொண்டாள். “மூஞ்சி கெட்ட கேட்டுக்குப் பூன வேறயா?” யாரோ ஒருவன் சொன்னதை அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பின் வாசலிலிருந்த தொட்டிச் செடியைக் கவனமாக எடுத்துக் கொண்டவள் தெரு முழுக்க ஸ்பீட் ப்ரேக்கர் இருப்பதால் மெதுவாகவே வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தாள். தாங்கள் என்ன பேசினாலும் சகித்துக் கொண்டு செல்லும் அவளைப் பார்க்க அந்த இளைஞர்களுக்கு அவளோடு இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாமென ஆசை வந்தது. ஆனால் வெறுமனே வார்த்தைகள் போதாது. இத்தோடு இனி அவள் இங்கு திரும்பி வரப் போறதில்லை. ஆகையால் அவளுடலை சீண்டிப்பார்த்தாலென்ன என யோசித்தவர்கள் அவள் வண்டியை மறித்து நிறுத்தினர். அச்சமோ தயக்கமோ இல்லாமல் அவர்களைப் பார்த்தாள்.

“வழி விடுங்க... நான் போகனும்...” ஒருவன் அவளின் இடையில் கை வைத்தான். “போ... யார் வேணாம்னு சொன்னா?” கையை எடுக்காமல் பதில் சொன்னவனின் முகத்தில் காறித் துப்பினாள். அவன் பதிலுக்கு ஒரு அறைவிட்டான். தடுமாறி விழப்போனவள் வண்டியோடு சமாளித்து நின்று கொண்டாள். பூனை அங்கு நடக்கும் களேபரங்கள் புரியாமல் அச்சத்தோடு தாவி ஓடியது. தொட்டிச் செடி கீழே விழப் போவது போல் சாய்ந்து கிடக்க வண்டியை நிறுத்திவிட்டு அதனை எடுத்து ஒழுங்காக வைத்தாள். கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. அவள் இயலாமையைப் பார்த்து சுற்றி இருந்த எல்லோரும் சிரித்தனர். தொட்டிச் செடியை பாதுகாப்பாக வைத்தவள் செடி புதைக்கப்பட்ட மண்ணிற்குள் தேடிப்பிடித்து சின்னதொரு கண்ணாடி சீசாவை எடுத்தாள். மின் விளக்குகள் இல்லாத அந்த இருளில் அவள் கையிலிருக்கும் சீசாவை அந்த இளைஞர்கள் கவனித்திருக்கவில்லை.

சீசாவை மூடியிருந்த கார்க்கை நீக்கியவள் தன்னை அறைந்தவனின் முகத்திலும் அவனுக்குப் பக்கத்திலிருந்தவர்களின் முகத்திலுமாய் சீசாவிலிருந்த திராவகத்தை வீசினாள். ஒரு நொடி என்ன நடந்தது என்புது புரியாத அதிர்ச்சியில் அவர்கள் அலறக் கூட மறந்து போயினர். சீசாவை அவர்களின் மீது எறிந்துவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக சீறிப்பாய்ந்தவள் அந்தத் தெருவைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அந்த இளைஞர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த தெருக்காரர்களுக்கு மாயமாய் மறைந்து போன மாலதி அத்தனை நாட்களும் இல்லாததொரு அச்சத்திற்குரிய மாயமான பிம்பமாய் மாறிப் போனாள்.

மார்ச், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com