சுப்ரு சொன்னதைப் பற்றிதான் இன்றும் பேசிக் கொண்டிருந்தார்கள். கடந்த சில நாட்களாக, இந்தப் பேச்சுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்களை அறியாமல், பயம் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தாலும், ''சீய்... நமக்குலாம் அப்படி நடக்காதுல்லா'' என்ற தீர்மானத்தோடு, பேச்சைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஊரில் இருந்து நான்கு கி.மீ தூரத்தில், பழைய அருணா தியேட்டரைத் தாண்டி, வயக்காட்டுக்குள் இருந்த அந்த மதுபானக் கடையில் கூடியிருந் தார்கள், சுப்ருவும் அவன் நண்பர்களும். சுற்றித் தென்னந்தட்டியால் வேயப் பட்ட மறைப்பு, அழகான சேர், டேபிள்களுடன் தரையில் மணற்குவியலுடன் புதிதாக உருவாக்கப்பட்டிருந்தது, இந்தச் சுத்தமான, புதிய மதுபானக் கடை. முன் பின் மற்றும் நடுப்பக்கங்களில் வைக்கப்பட்டிருந்த டிவிகள், பாடல்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. குடிகாரர்களின் சலம்பலில் வெளிப்படும் பேரிரைச்சலில், பாடல்களை யார் ரசிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அது அதன் போக்கில் கத்திக்கொண்டிருந்தது.
எச்சில்கள் துப்பப்பட்ட, குப்பைகள் குவிந்துக் கிடக்கிற, சிறுநீர் நாற்றமடிக்கும் நகரத்து மதுபானக் கடைகளில் இருந்து இது, ஆரோக்கியமாக இருக்கிறது என்று,
சென்னையில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கே திரும்பிவிட்ட, சுப்ரு சொன்னதில் இருந்து, இந்தக் கடை அவர்களுக்குப் பிடித்துப் போனது.
சுப்ருவும், பரமசிவமும் மில்லிலும் மற்ற நண்பர்களான குருசாமி கேபிள் நிறுவனத்தில் பணம் வசூலிப்பவனாகவும், குட்டி எலெக்ட்ரிஷியனாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். சமீபகாலமாக இவர்கள் மாலை நேரங்களில் இதே இடத்தில் கூடி, குடித்து உலக அரசியலில் இருந்து, பெரும்பாலும் உள்ளூர் தகாத உறவு விவகாரம் வரை பேசி மகிழ்கிறார்கள்.
இதில், குருசாமியும் பரமசிவமும் திருமணமாகிவிட்ட, இளம் பெரிசுகள். சுப்ருவுக்கும் குட்டிக்கும் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான பின் புலம் கொண்ட இவர்கள், நான்கு வருடத்துக்கு முன்பு நடந்த கோயில் கொடையின்போது ஒன்றாகக் கூடி, குடித்ததில் இருந்து, இக்கூட்டணி தொடர்கிறது என்பது, முன் குடி வரலாறு.
அருகில், யாரோ வாயால (வாமிட்) எடுக்கும் சத்தம் கேட்டதும், ''ஏம்ல?'' என்றபடி வேகமாக, நகன்றான் குருசாமி. அது, அவனது மருமகன், ''உங்க கூட சேர்ந்து குடிக்கணும் மாமா'' என்று அடம்பிடித்து வந்தவன்.
டேபிளின் மேல் கக்கி, அதிலேயே முகத்தைச்
சாய்த்தான். கப்பென்று நாற்றம். தலைமுடி அதிகம் கொண்ட அவனை அப்படியே பின்னால் இழுத்த குருசாமி, போதையில் தானும் தடுமாறி விழப் போனான். சுப்ரு, தாங்கிக் கொண்டான்.
''கேவலப்படுத்திட்டாம்ல. இதுக்குதாம் இந்த நாயை, வராண்டாம்னு சொன்னேன்'' என்று தள்ளாடிய
குருசாமி, வாட்டர் பாக்கெட்டை பீய்ச்சி அடித்து, அவன் முகத்தைக் கழுவினான். அவன் மீண்டும் அதே இடத்தில் முகத்தை இழுவி, 'ஸாரி... ஸாரி மாமா'' என்று உளறினான்.
அதற்குள், கடை உதவியாளன் சரவணன், ''ஏம்ணே. நீங்களாம் எவ்வளவு டீசன்டா தெனமும்
குடிச்சுட்டுப் போறீயோ... இது யாரு புதுசா?'' என்று கேட்டான், பிறகு கையில் அடுக்கி வைத்திருந்த சரக்குப் பாட்டில்களை அடுத்தடுத்த டேபிள்களில் வேகமாகக் கொடுத்தபின், சிட்டையில் எழுதியபடி, ஒரு பழைய குடிநீர் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்தான். ''லேசா எந்திச்சுக்கிடுங்க?'' என்று
சொல்லிவிட்டு, டேபிளின் மேல் இரண்டு மூன்று முறை ஊற்றினான். ஓர் அழுக்குத் துணி கொண்டு அங்கி ருந்த சிறுவனைத் துடைக்கச் சொன்னான். ''இப்பம் உக்காருங்க'' என்று புன்னகைத்துவிட்டு, வேகமாகப் போனான்.
தூரத்தில் உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்த போதை அதிகமான ஒருவன், வேகமாக இவர்கள் அருகில் வந்து, புன்னகைத்தான். வழக்கமாகக் குடிக்க வருபவன் என்கிற அறிமுகத்தால் குருசாமியும் பதிலுக்கு, உதடு பிரியாமல் புன்னகை செய்தான். ''இந்தாங்க, வாயால எடுத்தவருக்கு இதைப் பிழிஞ்சு ஊத்துங்க... தெளிஞ்சுரும்'' என்று, சிக்கனுக்குத் துணையாகக் கொடுக்கப்பட்ட எலுமிச்சைத் துண்டொன்றை நீட்டினான்.
இப்படியொரு திடீர் உதவியை எதிர்பார்க்காத
குருசாமி, அதை வாங்கி, தலை யை அங்கும் இங்குமாக ஆட்டிக் கொண்டிருந்த மருமகனின் வாய் பிளந்து, பிழிந்தான். சில பல சொட்டுகள் விழுந்ததும், நக்கிக் கொண்டு ''போதும் மாமா'' என்று உளறியபடிச் சொன்னான்.
அந்தப் போதைக்காரன், உலகமகா உதவி செய்த திருப்தியோடு, ''செத்த நேரத்துல சரியாயிரும்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றான்.
மருமகன், பின்னாலிருந்த ஆளில்லாத டேபிளில் உட்கார்ந்த நிலையில் தலை கவிழ்ந்திருக்க, இவர்கள், தங்கள் கதைகளை ஆரம்பித்தார்கள். ''நம்ம, மூஞ்செலி பய பொண்டாட்டி, அவனை விட்டுட்டுப் போயிட்டாளாம்லா?'' என்றான், குட்டி.
''ஆமா, அந்த பய நாளு பூராவும் போதையிலயே இருந்தாம்னா, எவா வாழ முடியும்? மூதிக்கு
குடிக்கதுக்குத் துட்டு இல்லனா, சைக்கிளுக்கு பஞ்சரு ஒட்டுத, சொலிசன பிதுக்கித் தின்னுருவானாம்லா?'' என்றான் பரமசிவம்.
''ச்சைய்... என்னல சொல்லுத?''
''ஆமாடே. சைக்கிளுகடைகாரருதாம் சொன்னாரு. புதுசா சொலிசனை வாங்கிட்டு வந்திருக்காரு. மொத நாளு, எங்க போச்சு, காணலையேன்னு தேடு தேடுன்னு தேடியிருக்காரு, கடைக்குள்ள. கதவுக்குப் பின்னால நல்லா பிதுங்கி போயி, கிடந்திருக்கு. அதெப்படி புதுசு, இப்படி பிதுங்குச்சுன்னு யோச னையா இருந்திருக்காரு. இவன் வந்த பெறவுதான் இப்படியாயிருக்குன்னு டவுட்டு. ரெண்டு நாளு கழிச்சு, அதே போல கடைக்கு வந்திருக்காம், மூஞ் செலி பய. இவரு வேணும்னே, சொலிசனை அவன் முன்னால போட்டுட்டு பாக்காத மாதிரி நவுண்டிருக்காரு. பய, நல்லா பிதுக்கி, அல்வாவைத் திய்ங்க மாதிரி தின்னுருக்கான். வந்துட்டாரு கடைகாரரு... 'ஏய், பேதில போவாம், இதை இப்படி திங்கயே, செத்து கித்து தொலைஞ்சிட்டா எனக்குலா சிக்கலு ன்னு கண்ட மேனிக்கு ஏசியிருக்காரு... யார்ட்டயும் சொல்லாதீரும்னு வேகமா ஓடியிருக்காம் வீட்டுக்கு... வாரவோ போறவோ எல்லாத்துட்டயும் இந்தக் கூத்தை ஆவலாதியா சொல்லிட்டிருக்காரு
சைக்கிளுகடைகாரரு...''
''போதை அந்தளவுக்காடே ஒரு மனுஷன ஆக்கிருது? ஆச்சரியமாதான் இருக்கு...''
''பிள்ளைலயும் கூட்டிட்டுல்லா போயிட்டாளாம்''
''பின்ன, இவங்கிட்ட விட்டா, அதுவோளுக்கு யாரு கஞ்சி ஊத்துவா? அவா படிச்சிருக்கால்லா, எங்கயாது வேலை பார்த்துப் பொழைச்சுக்கிடுவா''
'குமாரு மேட்டரு தெரியும்லா''
''கடையத்துல வேலை பாத்தாம்லா, அந்த குமாரா?''
''ம்ம்.. அவனும் சரியான குடிலா குடிக்கானாம். ஆறு மணி ஆயிட்டுன்னா, காலு நேரா, கல்யாணிபுரம் கடையிலதாம் நிய்க்குமாம்... ஊர்ல எல்லார்ட் டயும் கடனை வாங்கியாச்சு. பெறவென்ன செய்ய? பால்கறக்கச் செம்பு இருக்குல்லா, அதைக் கொண்டு கொம்பையாட்ட கொடுத்து, ரூவா கேட்டி ருக்காம். அவரு, 'செருப்பால அடிச்சுருவேன், ஓடிப்போயிருன்'னுருக்காரு… செம்புன்னா அந்தக் காலத்து செம்பு பாத்துக்கெ. இப்பலாம் அப்படிச் செம்பு கிடைக்காது. கனமா இருக்கும். நேரா அதைத் தூக்கிட்டு ஆழ்வாரிச்சுக்குப்
போயிட்டாம். ஒவ்வொரு கடையா, இதை வச்சுட்டு ரூவாதாங்கன்னு கேட்டிருக்காம். எல்லா கடைக்காரங்களும் விரட்டி விட்டிருக்காவோ. நம்ம, ஆட்டோ ஓட்டுதாம் பாரு, அவ்வோ தெருகாரம் சுந்தரு, அவெம், சனியம் போயி தொலையட்டும்னு ஒரு கோட்டருக்கு ரூவாய கொடுத்துட்டு,
சொம்பை வாங்கிட்டு வந்து, அவன் அம்மாட்ட கொடுத்திருக்காம்...''
''அப்பன்னா, முத்திதாம் போச்சுல. இப்படியா மூதி, காலைல இருந்து ராத்திரி வரைக்கும் குடிக்கதை பத்தியே நினைச்சுட்டு இருப்பாம்''
''இப்பம் நம்மளும்தான் குடிக்கோம். ஒரு கோட்டருன்னா, அதை என்னைக் காது தாண்டுதமா? எப்பமாது கல்யாண வீடு, சடங்கு வீடு, கோயில் கொடை பார்ட்டின்னா, எக்ஸ்ட்ரா ஒரு கட்டிங்கை போடுதோம். ஞாயித்துக்
கிழமைன்னா, மத்தியானமும் ஒரு கட்டிங். அவ்வளவுதாம். அவம்லாம் என்னமா குடிக்காங்கெ? காலைலயே டீ குடிக்க மாதிரிலா சரக்கை குடிக்காம், கோட்டிக் கார நாயி...''
''சரிதாம். இந்தச் சனியனை நம்மளும் சீக்கிரணும் விட்டுரணும்டே''என்று சொல்லிவிட்டு உதட்டைப் பிதுக்கினான் சுப்ரு.
''அதுலாம் விட்டுரலாம்ல... இந்தா, இப்பம் கூட கையில இருக்கத இப்படியே தூக்கிப் போட்டுட்டு போயிர முடியும். நம்மளும் அவனும் ஒண்ணா?'' என்றான் குருசாமி.
''அப்பம் அந்தச் சரக்கை ஏன்ட்ட கொடுத்துட்டுப் போ...'' என்று சொல்லிவிட்டு சிரித்தான், குட்டி. ''உனக்கு எதுக்கு கொடுக்கணும்?'' என்பது போல பார்த்து விட்டு ஒரே மடக்கில் வேகவேகமாகக் குடித்த குருசாமி, ''இப்பம் கௌம் பட்டுமா?'' என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
மறுநாள் பார் உதவியாளன் சரவணன், இவர்கள் வருவதைத் தூரத்தில் கண்டதுமே கையை ஆட்டிவிட்டு, வழக்கமாக அவர்கள் குடிக்கும் மது போத்தல்களை டேபிளில் வைத்துவிட்டு, ''குட்டிண்ணே உங்க சரக்கு மட்டும் இன் னைக்கு இல்ல. புதுசா ஒண்ணு வந்திருக்கு, இறக்கிருமா? சூப்பரா இருக்குனு சொல்லுதாங்க...'' என்றான்.
''நீ, குடிச்சுப் பாத்தியாடே?''
''நமக்கு அந்தப் பழக்கமே இல்லயே?''
''இதென்னல ஆச்சரியமா இருக்கு? சாராய கடைல வேலைபார்த்துட்டு குடிக்க மாட்டங்காம்…?'' என்ற குட்டி, ''செரி, கொண்டா பாப்போம். நல்லா இல்லன்னா துட்டு தரமாட்டேன்டே'' என்றான், பொய்யாக. வேகமாகப் போன சரவணன் எடுத்து வந்து வைத்தான்.
குருசாமி, ''இன்னைக்கு நீங்கதாம் எனக்குச் செலவழிக்கணும்'' என்றான் சட்டைப்பையைத் தடவிவிட்டு. பரமசிவன், ''பாதி நாளு இப்படியே சொல்லுல மூதி. கிடைக்கத் துட்டைலாம் எங்க கொண்டு போடுதியோ?'' என்றான்.
''சட்டை பையில ரூவா இருந்தா, குடிக்கம்னு எடுத்துக்கிடுதா, எங்கம்மாக்காரி. ஒரு நாளு, வள்ளு வள்ளுன்னு விழுந்தாதான் சரிபடுவா?''
''எல்லாரு வீட்டுலயும் அப்படித்தான். 'குடிக்கவாய்யா போற, போயிட்டு வா ராசா'ன்னு கையில தட்சணை வச்சா அனுப்புவாவோ?''' என்ற சுப்ரு, ''உனக்கு இன்னைக்கு நான் கொடுத்துருதேன், இன்னொரு நாளு எனக்கு, நீ கொடுக்கணும்'' என்றான்.
பாதி போதைக்குப் பிறகு சுப்ரு, ''பின்னால ரெண்டு டேபிளு தள்ளி, குடிச்சிட்டி ருக்காம் பாரு, ரோஸ்கலர் சட்டை…'' என்று சொன்னதுமே, மூன்று பேரும் டக்கென்று திரும்பி, அவனை உற்றுப் பார்த்தார்கள். ''ஏ, ஆக்கங்கெட்ட வனுவளா, ஏம்ல, டக்குனு திரும்புதியோ. என்னன்னு சொல்லுததுக்குள்ளயே அவசரமால?'' என்று சுப்ரு சொன்னதும் இவன் பக்கம் திரும்பினார்கள்.
''சொல்லு, அவனுக்கென்ன, வழியில தூக்கிருமா?''
''ஆமா. கிழிச்சிருவியோ? அவன் தங்கச்சியதான் போன வாரம் பார்த்துட்டு வந்தோம் எனக்கு. பொருத்தம் பாத்துட்டு சொல்லுதம்னு
சொல்லிருக்காவோ'' என்றான் சுப்ரு.
''சூப்பர்ல. கல்யாணத்துக்குப் பிறகு மாப்ளயும் மச்சினனும் ஒண்ணாவே கடைக்கு வந்திரலாம். பிரச்னைன்னா டாஸ்மாக்லயே பேசி தீர்த்திரலாம்'' என்று சொல்லிச் சிரித்தார்கள்.
''மெதுவால. பாத்துறப்போறான்'' என்றான்.
அடுத்த ரவுண்டை முடித்தபின், ''வாத்தியாருக்கும் கீழ வீட்டுக்காரிக்கும் கனெக்ஷனாடே... ஆத்துல பேசிக்கிட்டாவோ?'' என்று ஆரம்பித்தான் குருசாமி.
''இருக்கும். இங்க எதுதாம் நடக்காதுன்னு நெனய்க்க. அவா புருஷன் தினமும் மப்புல, லம்பிட்டுதாம் நிய்க்கான், எப்பம் பாத்தாலும். சோறு பொங்க துட்டுக் கொடுக்கணும்லா. அவா, கூப்ட்ட வேலைக்குப் போயி, பிள்ளைல காப்பாத்துதா. இவன், வேலை பார்க்க துட்டைலாம் குடிச்சே அழிக்காம். ராத்திரியானா போதையில போயி, சோத்தைத் தின்னுட்டு, குறட்டையை விட்டுட்டு மல்லாந்துருதாம். ஆத்தர அவசரத்துக்கு ஏதும் உதவின்னா, வாத்தியார்ட்ட தாம் போயி நிய்க்கா, அவா...'' என்றான் சுப்ரு.
குட்டி, ''ச்சீ... வாத்தியாரு தங்கமான மனுஷன்டே. இந்தக் குடிகார நாயிதாம், சந்தேகப்படுது. இவனுக்கு குடிச்சு குடிச்சு நிய்க்கவே முடியலலா. பெறவு சந்தேகம் வராம என்ன செய்யும்?'' என்றதும், சிரித்தார்கள்.
''காலைல அவா வீட்டுப் பக்கம் போயி பாரேன். இந்தப் பய அவளை என்னா கேள்வி கேக்காம்னு... என்னென்ன கெட்டவார்த்தை உண்டோ எல்லாத் தையும் இறக்கிருதாம். ஒரு நாளு வாத்தியாரு, 'பொண்டாட்டிய ஏம்டே இப்படி ஏசுத? அக்கம் பக்கத்துல வயசு பிள்ளைலு வேற இருக்கு?'ன்னு
சொல் லிருக்காரு. ''உம்ம சோலிய பாத்துட்டுப் போரும். நீரு எதுக்கு இங்க வாரே ருன்னு தெரியும். இவா, சொல்லிதான ஏன்ட்ட
சண்டைக்கு வாரேரு''ன்னு பொண்டாட்டிய போயி அடிச்சிருக்காம்'' என்றான் பரமசிவம்.
''ஒரு நாளு அவளும் ஊரப் பாத்து போயிருவான்னு நெனைய்க்கேன்''
''இதெல்லாம் எங்க போயி முடியப்போவுதோ?''
''குடியால, இதுவரை நாலு டைவர்ஸ் ஆயிபோயிச்சு, ஊர்ல?'' என்ற பரமசிவம், ''லேட்டஸ்டா தெக்கு தெருவுல ஒன்னு'' என்றான்.
''அங்க யாரு?''
''பூ விய்ப்பாம் தெரியுமா?''
''ஆமா, மாராசன். கண்ணுல பூவிழுந்திருக்குமே?''
''அவம்தாம், தெனமும் குடிச்சுட்டு பொண்டாட்டிட்ட ஒரே அட்டூழியமாம்''
''அடிப்பானோ?''
''இருக்கும். ராத்திரியானா லைட்டை அணைக்க விட மாட்டானாம். கோட்டிக் காரப் பயலுக்குத் தூக்கம் வராது போலுக்கு. பொண்டாட்டிக்காரிய தூங்க விட மாட்டானாம்''
''என்ன செய்வாம்?''
''லைட்டை போட்டுட்டுப்
பேசிட்டிருக்கச் சொல்வானாம். தூங்க விட மாட்டானாம். தொண தொணன்னு எதையாது பேசிட்டிருப்பானாம். அவா, பொறுத்து பொறுத்துப் பாத்துட்டு, அவ்வோ அப்பா&அம்மாட்ட
சொல்லியிருக்கா. அவ்வோ ஊர்ல இருந்து வந்து பேசியிருக்காவோ. ரெண்டு மூணு தடவை பஞ்சாயத்து நடந்திருக்கு. ஊர் கூடுச்சுன்னா, 'இனும இப்படி பண்ணமாட்டேன்'னு பட்டுனு கால்ல விழுந்துருவானாம். இப்படியே பண்ணிருக்காம். போன வாரம், நீயுமாச்சு, உம் பிள்ளைலுமாச்சு, இனும ஜென்மத்துக்கும் இந்த வீட்டுல கால் வைக்க மாட்டேன்னு உட்டுட்டுப் போயிட்டாளாம்... பூக்காரன் அம்மா, சமுதாய தலைவர்ட்ட வந்து கண்ணீரு விட்டுட்டு நிய்க்காளாம்... நேத்து வேலை பார்க்க இடத்துல பேசிக்கிட்டாவோ'' என்றான் குட்டி.
''இதைலாம் கேள்விபட்டாலே ஒரு மாதிரியாதாம்ல இருக்கு. இந்தக் குடி சனியனை முதல்ல விட்டுத் தொலைக்கணும்... இன்னைக்கே விட்ருலாம்னு இருக்கேன்...'' என்ற சுப்ரு, எதிரில் காலியாக இருந்த பாட்டிலைத் தூக்கி உடைப்பதைப் போல சைகை காட்டினான்.
''நமக்குலாம் ஒண்ணும் வராதுல, அதெல்லாம் தெனமும் குடிக்கவனு வளுக்குத்தாம் வரும். நாம என்ன அப்படியா குடிக்கோம்?, நமக்கு வேணும் னா வேணும். இல்லனா வேண்டாம், இன்னைக்கே நினைச்சாலும் நிப்பாட்டிரலாம். போன வாரம் நாம்லாம் மூணு நாளு குடிக்காம இருந்திருக்கேன்'' என் றான், குருசாமி, பெருமையாக.
அடுத்த நாள், அதே இடம்.
லேசாக மழை பெய்துகொண்டிருந்ததால் காற்றுக் குளிராக இருந்தது. தனக்குத் தொண்டை சரியில்லை என்று வழக்கமாகக் குடிக்கும் சரக்கை விட்டு விட்டு ரம்முக்கு மாறியிருந்தான் பரமசிவன். பாரில் இன்று கூட்டம் அதிகம். சனிக்கிழமை என்பதால் இப்படி இருக்கும் என நினைத்துக் கொண் டார்கள். இன்னும் சரியாக மீசை வளராத சின்னப் பயல்கள், ஐந்தாறு பேர் கூடி, சியர்ஸ் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் எந்த வித பயமும் கூட இல்லை. கெட்ட வார்த்தையில் சத்தமாகப் பேசிக் கொண்டிருந் தார்கள்.
''இந்த வயசுலயே குடிக்க வந்திருக்கானுவள, இதெல்லாம் உருப்படுமா?'' என் றான் சுப்ரு, அவர்களைப் பார்த்துக்கொண்டு.
''காலம் போற போக்குல ஒண்ணும் செய்ய முடியாது. இதைவிட சின்னப் பயலுவோ பண்ணுத காரியத்தைக் கேட்டன்னா, கெதக்குன்னு இருக்கு…''
சிறிது நேரத்துக்குப் பின் தனது டம்ளரில் இருந்த மதுவைக் குடித்துவிட்டு, ''நெல் அளவை சைலண்ணன் செத்துப் போனதுக்கு குடிதாம் காரணமாமே?'' என்று கேட்டான் பரமசிவம்.
''ஆமா. ஒரு நாளு ரெத்தம் ரெத்தமா வாயால எடுத்திருக்காம். ஆஸ்பத்திரிக்கு போயிருக்காவோ… இனும ஒண்ணும் செய்ய முடியாதுன்னுட்டாராம் டாக்டரு. ரெண்டு கிட்னியும் காலியாம்லா''
''மூதிட்ட, ஒரு பாட்டிலை காமிச்சுட்டா போதும். அம்மணமா ஓடுன்னாலும் ஓடுவாம்.''
''நம்ம குடிக்குத சரக்கும் சரியில்லயாம்லா... நேரா கிட்னியதாம் பாதிக்கும்னு சொல்லுதாவோ?''
''ஆமால. அதுக்குத்தான் நான், ராத்திரி படுக்கப் போவும்போது, நாலு மிளகு, ரெண்டு பூண்டு, மூனு கிராம்பு எல்லாத்தையும் ஒண்ணா கடிச்சுத் தின்னு முழுங்கிருவேன்'' என்று சொன்னான் குட்டி.
''அதைத் தின்னா?''
''குடினால வார பாதிப்பு இருக்காதுன்னு
சொன்னான், எங்க மச்சான்''
&பக்கத்து டேபிளில் குடித்துக்கொண்டிருந்த வயதான ஒருவர், இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டு அருகில் வந்தார். வழக்கமாக இங்கு வருகிற வர்தான்.
''தினமும் காலைல, கொத்தமல்லி இலை இருக்குல்லா, அதை தண்ணில கொஞ்சமா கொதிக்க வச்சு, அந்த தண்ணிய வடிகட்டி குடிச்சா போதும், குடி பாதிப்பு இருக்காது...'' என்று மருத்துவக் குறிப்பு ஒன்றைச் சொல்லிவிட்டு சிரித்தார்.
''அப்படியா?''
''இல்லனா, சிறுநீரகத்தை ஊறப்போட்டு...''
''சிறுநீரகமா?''
''இல்லல்ல, சீரகத்தை ஊறப்போட்டு காலைல அந்த தண்ணிய மட்டும் லேசா சூடு பண்ணி, வெறும் வயித்துல குடிச்சுப் பாருங்க. குடி கெறக்கம் ஓடிபோயிரும்'' என்றார் அண்ணாச்சி.
''நீங்க சித்த மருத்துவரா, அண்ணாச்சி?''
''ச்சே ச்சே... எல்லாம் கேள்விபடுததுதாம்'' என்றவர் சிரித்துக்கொண்டே, நகன்றார்.
''ச்சே இந்த குடி சனியனை இன்னைக்கோட விடணும்ல''
''இங்கரு நமக்குலாம் ஒண்ணும் ஆவாதுடே. நாம என்ன தெனமுமா குடிக்கோம். அதுமட்டுமில்லாம, நமக்கு வேணும்னா, வேணும். இல்லனா வேண் டாம். இந்தா இப்பமே விடணும்னா கூட விட்டுருலாம்'' என்றான் பரமசிவம்.
குடித்து முடித்தார்கள்.
பார் உதவியாளன் சரவணனிடம் இரண்டாயிரம் ரூபாயை நீட்டினான், சுப்ரு., ''அண்ணேன் மிச்ச ரூவாய, நாளைக்கு வரும்போது வாங்கிக்கிடுதேளா?'' என்றான்.
''சரி'' என்றபடி பைக்கை நோக்கி நடந்தார்கள்.
ஜூலை, 2019.