பெ சண்ட் பீச்சில் இருந்து, சாஸ்திரி நகர் வழியாக வலதுபுறம் திரும்பும் சிக்னலில், பச்சை விளக்கு ஒளிர்ந்தபிறகு, எனக்கு முன் இருந்த பைக் திரும்ப, அதைத் தொடர்ந்து நானும் என் வண்டியைத் திருப்பினேன். அப்போதுதான் அத்தனை சத்தமாக இந்தக் குரல் கேட்டது.
''ப்போடா த்தாய்ளி....''
அனிச்சையாகத் திரும்பிப்பார்த்தேன். சிக்னலின் வலதுபுறச் சாலையில், சிகப்பை மதிக்காமல்
சென்றுகொண்டிருந்தது ஒரு பைக். பெட்ரோல் டாங்கில் ஒரு குழந்தை. பில்லியனில் அமர்ந்திருந்த அவன் மனைவியின் மடியில் ஒரு குழந்தை. இவற்றை மீறி அவன் திரும்பி சிவந்த கண்களுடன் அந்தப் 'ப்போடா'வைச் சொல்லியிருந்தான். அவன் சொன்னது என்னையா என்று யோசிக்கவில்லை. ஆனால் அந்தப் 'ப்போடா' என்னை ரொம்பவும் தொந்தரவு செய்ய, என் வண்டியை சடாரென்று திருப்பி அவனைத் துரத்தினேன். அவன் மனைவி கலவர முகத்துடன், கணவனின் தோளைப் பற்றினாள். அவன் பைக்கை முன்னைவிட அதிகம் விரட்டினான். இரண்டு மூன்று திருப்பங்களுக்குப் பிறகு அவனைப் பின் தொடர முடியாமல் விட்டுவிட்டேன். ஆனால் வண்டி எண் மனதில் இருந்தது. TN 12 U 0417.
சென்னையின் டிராஃபிக்கில் இந்த மாதிரியான
வசவுகள் மிக சாதாரணம் என்றாலும் என்னால் அந்தப் 'ப்போடா'வைத் தாங்கமுடியவில்லை. எனக்கு வசவுகூட பெரிதாகப் பாதிக்காது. என் அப்பா, பெரியப்பா ஆரம்பித்து என்னைப் பெயர் சொல்லி அழைத்துத்தான் பழக்கம். 'டா'வை என் சிறுவயதிலேயே நான் கேட்டதில்லை. அதனால் என்னால் அந்த வார்த்தையைத் தாங்கமுடிவதில்லை.
அவனைத் துரத்திக் கொண்டிருந்த கணத்தில் யோசித் தால் எதற்காக அந்தப் ப்போடா என்பதை யோசித்துக் கண்டுகொண்டேன்.
சிக்னல் சிவப்பு ஆனபிறகும் அவன், அந்த நான்குமுனைச் சந்திப்பில் வலதுபுறம் திரும்ப வந்துகொண்டிருக்கிறான். எனக்கு பச்சை விளக்கு எரிந்ததும் நான் என் வண்டியை எடுத்திருக்கிறேன். என் வண்டி, பிக் அப் ஆவதற்குள் அடுத்தடுத்த வண்டிகள் வர ஆரம்பிக்க 'சீக்கிரம் போய்த் தொலைடா' என்கிற ரேஞ்சில் திட்டியிருக்கிறான். ஆனால், 'ரெட் சிக்னலுக்குப் பிறகும் திரும்ப நினைத்தது அவன் தப்புதானே? என்னை எப்படித் திட்டலாம்?' என்ற கேள்வி என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது. இந்தக் கேள்வியோடு நானும் அவனைத் துரத்தினேன். ஆனாலும் சிக்கவில்லை. கணவனின் தோள்களைப் பற்றியபடியே இரண்டொரு முறை என்னை கலவரத்துடன் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்த அவன் மனைவி முகம் மனதில் அசலாகப் பதிந்திருந்தது.
நான் தோற்றுப்போனவனின் மனநிலையில் இருந்தேன். நடுரோட்டில் நின்றுகொண்டு நான் இப்படி உணர்வது இது இரண்டாம் முறை. அன்றொருநாள் எனக்கு முன் சென்றவன் ப்ரேக் அடிக்க, அவனைத் தொடர்ந்த நானும் ப்ரேக் அடிக்க, என்னை ஒட்டிவந்த ஒரு ஆட்டோக்காரன், ஒரு வசவை என்னை நோக்கி வீசிச்சென்றான். அந்த வார்த்தையைவிட, குற்றமற்ற என் மீது அது வீசப்பட்டதென்பதே என்னை மேலும் அதிர்ச்சிக்கும், கோபத்துக்கும் உட்படுத்தியது. அதில் அதிர்ந்துபோய் நின்று கொண்டிருந்த என்னை, தொடர்ந்து வந்த வாகன ஓட்டிகளும் பார்வையாலும், பேச்சா லும் அர்ச்சித்துக் கொண்டே நகர்ந்தனர். எங்கும் நகரமுடியாத சூழலில், நடுரோட்டில் அவமானப்பட்டு நிற்பதென்பது பெரும் துயரம். அதுவும் இன்னொருவர் குற்றத்திற்காக. இன்றும் அப்படித்தான் நின்று கொண்டிருக்கிறேன்.
''ஹலோ ப்ரோ.. கொஞ்சம் ஓரமா நிக்கலாம்ல?'' ஒருகுரல் ஆறுதலாய் ஒலித்தது. இதுவும்
சென்னையின் வரங்களில் ஒன்று. வசவாய் மட்டுமே அழைப்பதில்லை. திடீரென்று உங்களை எவரோ விளிக்கும் 'ப்ரோ' உங்களை இன்னும் இளமையாக்கும். நான் ஓரமாய் வண்டியைச் செலுத்தி, நின்று கொண்டேன். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
அன்றைக்கு முழுவதும் அலுவகத்தில் எனக்கு பல்வேறு சிக்கல்கள். மீட்டிங் ஒன்றிற்கு ஐந்து நிமிடம் லேட்டாகப் போய் உட்கார்ந்தபோது என் மேலதிகாரி நக்கலாக ''நாங்கள்லாம் சும்மா உட்கார்ந்திருக்கோம்ல'&வில் ஆரம்பித்து ஒரு ப்ராஜக்ட்டில் பெரிய பிழை ஒன்றிற்காக கிடைத்த மெமோ வரை அன்றைய நாளின் எதிர்மறை எல்லாவற்றுக்கும் காரணம் காலையில் அவன்
சொன்ன ''ப்போடா'தான் என்று எனக்குள் அழுத்தமான எண்ணம் உட்கார்ந்துகொண்டது.
***
எங்கள் அப்பார்ட்மெண்ட் செகரெட்டரி வீரராகவன் ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா. கவுன்சிலர் காண்டாக்ட் முதல் ட்ரம்ப் செகரட்டரி மெய்ல் ஐடி வரை தெரிந்து வைத்திருப்பார்.
''TN 12ஆ? இது பூந்தமல்லி ரெஜிஸ்ட்ரேஷன். ஏன் என்ன ஆச்சு? உன் வண்டிய எதும் இடிச்சுட்டுப் போய்ட்டானா?''
''இல்ல சார். வேற ஒரு விஷயம். அங்க யாரையாச்சும் தெரியுமா?''
''என்னன்னு சொல்லேன்.'' & என்றார். அவர் விடமாட்டார். சுவாரஸ்யமான காரணம் எதுவும் தேடிப்பிடிக்க வேண்டும். 'என்னைப் பார்த்து 'ப்போட்டா'ன்னுட்டு போய்ட்டான் சார். நைட் ஃபுல்லா டிஸ்டர்பா இருந்துச்சு. யார்னு பார்த்து ஒரு திட்டாவது திட்டணும்' என்று
சொன்னால், 'போய் வேலையப் பாருடா' என்று
சொல்லிவிடுவார்.
ஒரு மனோதத்துவ நூலில் படித்திருக்கிறேன். ஒருநாளில், நமக்கு வரும் எதிர்மறை செயல்களை, பதினோரு நேர்மறை செயல்களால்தான் நீக்குமாம். உதாரணத்துக்கு, காலையில் நீங்கள் உங்கள் ஆபீஸ் நண்பனுக்கு குட்மார்னிங் சொல்கிறீர்கள். அவன் ஏதோ ஒரு கடுப்பில், உங்களைப் பார்த்து முறைத்துவிட்டுப் போகிறான் என்றால் அது ஒரு எதிர்மறை செயல். அன்றைய தினம் அது உங்கள் மனதைவிட்டு அகலாது. அதன்பிறகு 11 நேர்மறை செயல்கள் நிகழ்ந்தால்தான், அந்த ஒரு செயலை மனம் மறக்கும். உங்கள் அலுவலகத் தோழி உங்களைப் பார்த்து சிரிப்பது, உங்கள் உடை நன்றாக இருக்கிறதென்று யாரோ சொல்லிவிட்டுச் செல்வது, ஒரு பாராட்டு மெயில் என்று ஒவ்வொன்றாய்
சேர்ந்துதான் அந்த நண்பனின் முறைப்பை
மறக்கடிக்கச் செய்யும்.
நேற்று அவன் செய்த செயல், என் இப்போதைய மனநிலைக்கு இரண்டு நாட்கள் என்னைத் துரத்தும். அவன் செயலை அவனைக் கொண்டேதான் பழிதீர்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இதையெல்லாம் இவரிடம் சொல்ல முடியாது.
''என் ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு ரெண்டு வருஷம் முந்தி ஏப்ரல் 12ம்தேதி பையன் பொறந்துருக்கான். 12.4.17. இந்த வண்டியை வழில பார்த்திருக்கான். செகனெண்டா கேட்கலாம்னு ஐடியா''
சட்டென்று தோன்றிய இந்தப் பொய்க்காக மனசுக் குள் என்னை நானே பாராட்டிக்கொண்டு, அவரிடம் சொன்னேன்.
''அம்பத்தூர் ஆர்.டி.ஓ. ஆபீஸ்ல குமரன்னு ஒருத்தன் இருக்கான். நம்ம மாப்ளயோட ஃப்ரெண்ட்தான். அவனைப் பிடிச்சா, அட்ரஸ் கறந்துடலாம். ஈசிதான்'' என்றார்.
நம்பர் வாங்கிக்கொண்டேன்.
**
ஆபீஸில் நார்மலாகத்தான் இருக்க முயன்றேன். ஆனாலும் அந்தப் 'ப்போடா' என் மூளையை விட்டு அகல மறுத்தது. காலையில் கேட்ட ஒரு பாடலை மறக்க நினைத்தாலும், மனது ஹம்மிங் செய்துகொண்டே இருக்குமே.. அப்படி. அவ்வப்போது 'எவனோ ஒருத்தன் ப்போடா என்றதற்கு அவனைத் துரத்திப் பிடித்து என்ன செய்யப் போகிறோம்' என்று தோன்றியது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்றும் எண்ணம் வந்துபோனது. அது என்னமோ அப்படித்தான். 'உங்க வண்டில லைட் எரியுது' என்று சைகை காண்பித்த ஒருவரை, யு & டர்ன் எடுத்து, துரத்திப் பிடித்து ''2017 ஏப்ரலுக்கப்பறம் எல்லா வண்டிலயும் அப்படித்தான் சார். புது ரூல்ஸ். ஆஃப் ஸ்விட்ச்சே கிடையாது'' என்று சொல்லிவிட்டு வந்தேன். என் வண்டி பில்லியனில் இருந்த நண்பன், ''லூசாடா நீ?'' என்று கேட்டான்.
''இல்ல மச்சி. நமக்காகத்தானே சொல்றார். இப்ப அவருக்கு இந்த விஷயம் தெரிஞ்சுடுச்சு. இனிமே சொல்ல மாட்டார். ஒரு பதில் மரியாதை'' என்றேன்.
நான் அப்படித்தான். எனக்கு அந்த பைக் ஆசாமியைக் கண்டுபிடித்துத் திட்ட வேண்டும். அட்லீஸ்ட், அன்றைய தவறு என்னுடையது அல்ல என்று சொல்ல வேண்டும்.
அம்பத்தூர் ஆர்.டி.ஓ ஆஃபீஸ் குமரனின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். வரவில்லை. மாலை நானே அழைத்தேன்.
''ஸ்ஸ்ஸ்ஸ்... மறந்துட்டேன். எடுத்து வெச்சிருப்பான். வாங்கிட்டு உங்களுக்கு வாட்ஸ் அப் பண்றேன்.''
பத்து நிமிடத்தில் அவனிடமிருந்து வாட்ஸ் அப் வந்தது.
''கோபி, 24, க்ரவுன் அபார்ட்மெண்ட்ஸ், சடையப்பர் வீதி, வளசரவாக்கம்''
நாளை சனிக்கிழமை. எனக்கு விடுமுறைதான். 'வர்றேண்டா மவனே' என்று நினைத்துக்கொண்டேன்.
**
''கோபியோ? அயாள் இவிட இல்லா. கல்யாணம் கழிஞ்சு போயி..'' என்றார் அந்த வீட்டின் ஓனர். நம்பர் கிடைக்குமா என்றேன். கொடுத்தார். வாங்கியதும் வெளியே வந்து அழைத்தேன்.
எடுத்தால் என்ன சொல்வது? இதைச் சொன்னால், நேரில் சந்திக்க ஒத்துக்கொள்ள மாட்டான். வேறு என்ன சொல்லி, சந்திப்பை நிகழ்த்துவது?
நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, ஃபோன் எதிர்முனையில் எடுக்கப்பட்டது.
''கோபி?''
''எஸ்''
வண்டி நம்பரைச் சொல்லிக் கேட்டேன். ''ஹோண்டா யூனிகார்ன் உங்களுதுதானே?''
''இல்லையே...'' என்றவன் ஒரு நொடி நிறுத்தி ''யூனிகார்னா? ஆமா எதுக்கு கேட்கறீங்க?''
அப்படியென்றால் இவன்தான் அல்லது இவனுக்கு ஏதோ தொடர்பிருக்கிறது.
''இல்ல சார். பார்க்கிங் பண்ணிட்டு 500 ரூபாய் குடுத்துட்டு, ஏதோ டென்ஷன்ல சில்லறை வாங்காமப் போய்ட்டாரு. அதான்.. நீங்கன்னா கடைசியா எங்க பார்க் பண்ணினீங்கனு கரெக்டா சொல்லுங்க.. வந்து தர்றேன்''
அவன் மறுத்தான். ''இல்ல சார். நான் இல்ல. என் பழைய ஆபீஸ் ஃப்ரெண்ட். கதிர். அவன்கிட்ட ப்ரூஃப் இல்லைனு என் பேர்ல வண்டி எடுத்தான். ரெண்டு வருஷத்துக்கு மேலாச்சு. இப்ப நானும் ஆபீஸ் மாறிட்டேன். காண்டாக்டே இல்லையே''
''அவர் எங்க வொர்க் பண்றார்னு
சொல்லுங்க சார். போய்க் குடுத்துடறேன்''
''பார்த்தா அவன் நம்பர் வாங்கி எனக்குத் தருவீங்களா?''
''கண்டிப்பா சார். ஏன் உங்ககிட்ட இல்லையா?''
''நம்பர் மாத்திட்டான். நன்றி கெட்டவன். வண்டி டியூ ஒழுங்கா கட்றதில்ல போல. ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா பேங்க்ல இருந்து எனக்குதான் கால் வரும். காண்டாக்ட் நம்பர் இல்லைன்னாலும் கேட்கமாட்டாங்க. கூப்டுத் திட்டணும் அவனை'' என்றான்.
'நீயும் திட்டத்தான் கேட்கறியா?' என்று நினைத்துக்கொண்டே சரி என்றேன்.
''ஸ்பென்சர்ஸ்ல ரெண்டாவது ஃப்ளோர்ல ஒரு இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி இருக்கு. மொத்தமே ஏழெட்டு பேர்தான் இருப்பாங்க. அங்கதான் வேலை செய்யறான்,'' என்று சொல்லி அதன் பெயரையும்
சொன்னான்.
வளசரவாக்கம் டூ ஸ்பென்சர் என்பது கொஞ்சம் தூரம்தான். இன்றைக்கு இருப்பானா என்றும் தெரியாது. ஆனால் இன்றைக்கு நான் ஃப்ரீயாக இருக்கிறேன். அவனைத் தேடிப்போவது என்று முடிவெடுத்துவிட்டேன்.
**
கோபி சொன்னதுபோலவே, கதிரின் அலுவலகத்தை கண்டடைவது அத்தனை சிரமமானதாக இருக்கவில்லை. ''கதிரைப் பார்க்கணும்'' என்று சொன்னபோது ஏதோ எழுதிக்கொண்டிருந்த ஒரு இளைஞன், நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.
''நீங்க?''
''அவர் ஃப்ரெண்ட். ஊர்ல இருந்து வந்திருக்கேன்''
''தூத்துக்குடியா?''
கதிர் தூத்துக்குடியா? சரி.
''ஆமா சார். ஆஃபீஸ் இங்க இருக்குனு தெரியும். அதான்..''
அவன் திரும்பி, தடுப்புக்கு அப்புறம் சின்ன அறை போல இருந்த அமைப்பை நோக்கி, ''தினேஷ் சார்.. கதிரைத் தேடி யாரோ வந்திருக்காங்க'' என்றான்.
அடுத்தநொடி, அந்தப் பக்கத்திலிருந்து ஒருத்தர் அவசர கதியில் ஓடிவந்தார். இன்னொருவர், என்னைத் தாண்டிப் போய் கதவுக்கருகே நின்றார். ஐந்தாறு பேரின் கண்களும் என்னையே பார்த்தன.
''நீங்க யாரு?''
நான் யாரென்றே இந்தக் கதையில் இதுவரை
சொல்லவில்லை. இப்போதுமட்டும் ஏன்
சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நானாக ஒரு பெயரைச் சொன்னேன்.
''கதிர் ஃப்ரெண்ட்சார். தூத்துக்குடில இருந்து வரேன்''
அரைமணிநேரம் அவர்களின் பல கேள்விகளுக்கு பதில் சொன்னபின், அந்த தினேஷ் என்பவர் பேசினார்.
''நீங்க தப்பா நெனைச்சுக்காதீங்க. 10 நாளாச்சு அவன் ஆஃபீஸ் வந்து. ஒரு பார்ட்டியோட இன்ஷ்யூரன்ஸ் பணம் 15000 ரூவா வசூல் பண்ணி வெச்சிருக்கான். வீட்டுக்குப் போனா பிடிக்க முடியறதில்லை. ரெண்டுநாள் முன்னாடி போய்ப் பிடிச்சு கேட்டா, 'செலவு பண்ணிட்டேன். ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டேன். அடுத்தவாரம் பணம் ரெடியாய்டும்.. வர்றேன்'&ங்கறான். இது, இதோட ரெண்டாவது வாட்டி. பிரச்னை பண்ணினா அவன்கிட்ட பணம் வாங்கறது கஷ்டம்னு சும்மா விட்டிருக்கோம். இங்க சம்பளமும் கம்மி. பழகிட்டோம்றதால நாங்க சும்மா இருக்கோம். ஆள், ஆறேழு மாசமாவே சரியில்லை. சீக்கிரம் வேலைய விட்டுத் தூக்கிருவாங்க''
''சரி சார். நான் பார்த்தா அட்வைஸ் பண்றேன். வீட்டு அட்ரஸ் கிடைக்குமா?''
லயோலா கல்லூரிக்குப் பின்னால் உள்ள, வைகுந்தராஜபுரம் தெருவில் இருப்பதாகச் சொல்லி அட்ரஸ் கொடுத்தார்கள்.
**
பத்து வீடுகளாவது உள்ளே இருக்கும் என்று தோன்றியது அந்தக் காம்பவுண்டைப் பார்த்தபோது. என் வண்டியை நிறுத்த இடம் தேடியபோதுதான், அதை கவனித்தேன்.
அந்த யூனிகார்ன் வண்டி, பல்வேறு வண்டிகளுக்கு நடுவே அங்கே நின்றுகொண்டிருந்தது. என்ன செய்யப்போகிறேன் நான்? அவனை வெளியே அழைத்து, 'முந்தாநாள் நீ திட்டினது என்னைத்தான்' என்று சொல்லப்போகிறேனா? சொல்லிவிட்டு என்ன எதிர்பார்க்கிறேன்? அவன் 'சாரி' சொல்லுவான் என்றா? இனி யாரையும் அவன் இப்படித் திட்டும் முன், 'ஒரு கேரக்டர் என்னை வீட்டுக்கு வந்து திட்டிட்டுப் போச்சு' என்று நினைக்க வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பா?
தெரியவில்லை. ஆனால் அவனைப் பார்த்து பேசியே ஆகவேண்டும் என்று அழுத்தமாகப் பட்டது. வண்டியை ஒருவாறு பார்க் செய்தேன். அந்தக் காம்பவுண்டின் மெயின் கேட்டைத் தொட்டபோது, முன்னாலேயே அமர்ந்திருந்த ஒரு அம்மா நிமிர்ந்தார்.
'என்ன?' என்றது அவர் பார்வை.
''கதிர் எந்த வீடும்மா?''
''நீ யாரு?'' என்றார் அவர்
சட்டென்று. நான் பதில் சொல்லும் இடைவெளியில் கொஞ்சம் தள்ளி நின்றிருந்த இரு பெண்களும் அந்த அம்மாவின் பக்கம் நின்று கொண்டார்கள்.
''அவர் ஃப்ரெண்டுங்க. பார்க்கணும்''
''சண்டை போடத்தானே வந்திருக்க? ஒனக்கேதும் காசு தரணுமா?''
''இல்லம்மா.. காசெல்லாம் இல்லை.'' என்றேன். ஆனால்
சண்டைபோடத்தான் வந்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டேன்.
அந்த அம்மாளுடன் நின்று கொண்டிருந்த பெண்மணியின் காலைச்
சுரண்டிக் கொண்டிருந்தது ஒரு குழந்தை. அவள் அதை எடுத்து, தன் இடுப்பில் வைத்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்துச் சொன்னாள்.
''ந்தே.. இந்தம்மாதான் ஹவுஸ் ஓனரு. வாடகை பத்து, பதினைஞ்சுலதான் தர்றாரு. டெய்லியும் யாராச்சும் வந்து கடன் திருப்பி தர்லனு சண்டை போட்டுட்டுப் போறாங்க. பெரண்டுன்றீங்க... அவருக்கு பெரண்டெல்லாம் வந்து நாங்க பாக்கவேல்லியே''
இப்போது ஹவுஸ் ஓனர் எனப்படும் அம்மா தொடர்ந்தார். ''ஏதோ ஊர்விட்டு ஊர் பஞ்சம் பொழைக்க வர்றாங்கன்னு பரிதாபம் பார்த்துத்தான் கம்மி அட்வான்ஸ்ல வாடகைக்கு விடறோம். மாசா மாசம் இப்படி பண்ணிட்டிருந்தா என்ன பண்றது? அவன் பொண்டாட்டி பாவம். கைக்குழந்தையை வெச்சுட்டு இவன்கிட்ட சீப்படுது. இதுல டெய்லி குடிவேற இப்பல்லாம். கடன, ஒடன வசூல் பண்ணணும்னா இப்ப நடக்காது.. சொல்ட்டேன்.. ஆமா. தேதி இருவதைத் தாண்டிருச்சு. இன்னும் வாடகை வந்தபாடில்ல. அந்த மவராசிக்காக பார்க்கவேண்டியதாருக்கு. சட்டுனு வெளில வீட பார்க்கச் சொன்னா, அவ என்ன பண்ணுவான்னு இருக்கு. அவ ஏதோ பக்கத்து ஃபேன்ஸி ஸ்டோர்க்கு வேலைக்குப் போய்ட்டு குடும்பத்தை சமாளிச்சுட்டிருக்கா''
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. செல்லும் இடமெல்லாம் அவனைப் பற்றிய குற்றப்பத்திரிகை வாசிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி ஒருவனிடம் நான் என்ன எதிர்பார்க்க முடியும்? கனிவையா? சக மனிதன் மீதான அன்பையா? கருணையான வார்த்தைகளையா? இவர்களும் இங்கேதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களை எது மாற்றும்? அல்லது மாறவேண்டியது நான்தானா?
அந்தக் காம்பவுண்டில், சில காலிக்குடங்கள் வைக்கப்பட்டிருந்தன. சிவப்பும், மஞ்சளும், பச்சையுமாய் இருந்த அவற்றைச் சுற்றி சில குழந்தைகள் ஓடிக்கொண்டிருந்தன. ஒருவன் குடத்தைத் தாண்டிக் குதித்துக் கொண்டிருந்தான்.
''அந்தக் கடைசி வீடுதான் கதிருது'' என்றார் அந்த அம்மா.
நான் நான்கைந்து அடி எடுத்துவைத்துவிட்டுத் திரும்பினேன். ''வண்டிய லாக் பண்ல'' என்று
சொல்லிவிட்டு வெளியே நடந்தேன். வண்டியை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போதே, கதிரின் மனைவி கையில் ஒரு கேரிபேகில் காய்கறிகளுடன் நடந்துவந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். அன்று மனதில் பதிந்த அதே முகம். அவள் பார்க்ககூடாதென்று கருதி, முகத்தைத் தாழ்த்தும் முன், அவள் என்னைப் பார்த்துவிட்டாள்.
சாதாரணமாக இருந்த முகம், சட்டென்று மிரட்சியானது தெரிந்தது. அவளுக்கும் என் முகம் நினைவில் இருந்திருக்கக்கூடும். அந்த மிரட்சி என்னை என்னவோ செய்தது.
நான் கிளம்பி வந்துவிட்டேன்.
டிசம்பர், 2019.