பெய்தோய்ந்த மழை

பெய்தோய்ந்த மழை
Published on

கார்த்திகை மாதம் வானில் கருமுகிலோட்டம். ஏறுபொழுது மறைந்து மறைந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.  ஊரின் தென்புறமான வளவு. இடிந்த மண்சுவர் வீடு. வாசல் பூவரச மரத்தடி நிழலில் இவன் கால் நீட்டி உட்கார்ந்திருந்தான். சிக்குண்ட ‘எடால்’ கயிற்றின் சுருக்குகளை பிரித்துக் கொண்டு சீமைக்கருவேல முட்களிடையே வீட்டை நோக்கி வந்த ஒற்றைத் தடத்தை அடிக்கொருதரம் பார்த்தப்படியும் இருந்தான். தடம் வெறிச்சென்றே இருந்தது. இன்றாவது கரைவெளியிலிருந்தது யாராவது வரக்கூடும். ’எடால்’ ஏந்தி வைக்க கூட்டிப் போவார்கள். ஏனோ மூன்று தினங்களாக எவருமே வரவில்லை. இவன் வெறுமனே வீட்டில் உட்கார்ந்திருந்தான்.

பின் வளவில் ஒரே சப்தமாக கிடந்தது. நாய்களின் குரைப்பொலி கேட்டது. ஆட்கள் பன்றியைத் துரத்திக்கொண்டிருந்தனர். பன்றி வியாபாரியின் குரலும் கேட்டது. கடந்த ஆடி மாதத்திற்கு முன்புவரை இவனிடமும் பதின்மூன்று பன்றிகள் இருந்தன. கோடை அறுப்புக் காலத்தில் அவள் கதிர்க்கட்டை சுமந்துகொண்டு ஈர வரப்பில் நடந்தபோது கால் வழுக்கி விழுந்துவிட்டாள். வலது முழங்காலுக்கு கீழே எலும்பு முறிந்துவிட்டது. போடிபாளையம் கூட்டிப்போய் வைத்தியம் பார்த்தான். ஏனோ மாவுக்கட்டு போட்டும் வீக்கம் வற்றவேயில்லை. எலும்பும் கூடவில்லை. அதன்பின்பு தாராபுரம் கூட்டிவந்து எத்திராஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தான். பதிமூன்று பன்றிகளும் விற்றாகிவிட்டது. இன்னும் அவளால் சுயமாக எழுந்து நடக்கமுடியவில்லை.

நாட்கள் போய்க்கொண்டே இருந்தன. பன்றி கொட்டத்து மூங்கில் திரம்புகளில் கறையான்கள் ஏறிவிட்டன. ஊறத்தாழியில் மழை நீர் சேகரமாகி நாற்றம் எடுத்துக்கொண்டிருந்தது. பின் வளவில் ஆட்கள் பன்றியை பிடித்துவிட்டார்கள். பன்றி உச்சஸ்தாயில் குரல் எழுப்பிக் கத்துவது கேட்டது. வீட்டுக்குள் இருந்து அவள் கூப்பிட்டாள். இவன் எடால் கயிற்றை ஒதுக்கி வைத்துவிட்டு எழுந்தான். கூரைப் பனையோலைக்குள் ஏதோ சரசரவென ஊர்ந்தது. அது பல்லியாகவோ பாப்புராணியாகவோ இருக்ககூடும் என நினைத்தபடி குனிந்து வீட்டுக்குள் போனான். மரநாற்காலியில் அவள் எழுந்து உட்கார்ந்திருந்தாள். முழங்காலுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டே பூரணியும் இவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“புள்ள நாளைக்கு ஊருக்கு போகுதாமா.. எனக்கு ஒத்தாசையா மூணு மாசமா இங்க வந்து கஷ்டப்பட்டுச்சு... போகும்போது வெறுங்கையோடவா தாட்டிவுடறது... ஒரு சீலை எடுத்து குடுத்தாறலாமுன்னு நெனைக்கறேன்...” இவனுக்கு பூரணி மாமியார் வீடு கிளம்புவது அதிர்ச்சியாக இருந்தது..

“அதுக்குள்ள எதுக்கு போகணும்... உனக்குதான் இன்னும் செரியாகலையே...”

“வயசுபுள்ளய அதிகநாளு அக்காவூட்ல தங்கவெக்கறது நல்லதில்லை... நாளைக்கு ஏதாச்சும் பழிச் சொல்லு வந்துருச்சுன்னா...? “

இவன் மேற்கொண்டு அவளோடு எதுவும் பேசவில்லை. தாழ்வான நடையை குனிந்தவாறே கடந்து வாசலுக்கு வந்தான். செழித்த பூவரச இலைகளினூடே குயில் அமர்ந்து கூவிற்று. கூரை பனையோலை உச்சியில் கொம்பேறி மூக்கன் விரைவாக போயிற்று. இவன் பாம்பை அடிக்க முயலவில்லை. எடால் கயிற்றை சுருட்டி எடுத்துக்கொண்டு ஊருக்குள் செல்லும் ஒற்றைத் தடத்தில் நடக்க துவங்கினான்.

பூரணி சமஞ்சதிலிருந்தே இவனுக்கு அவள் மீது ஒரு கண். கல்யாணம் ஆகி ஏழு வருடம் ஓடி விட்டபின் குழந்தையில்லை என்கிற காரணத்தை வைத்துகொண்டு பெண்கேட்க சாடைமாடையாக முயன்றான். மாமியார்காரி ‘வெரசு’. நேராக கேட்கவிலலை. சரக்கு அடித்த ராத்திரி மாமானாரை வீதியில் இழுத்துப்போட்டு அடிப்பதுபோல தன்னையும் அடித்துவிடுவாள் என்கிற பயத்தினாலேயே அந்த எண்ணத்தை தவிர்த்தும் வந்தான். அதேபோல் வீட்டில் அவளும் ‘கடுசு’தான். எப்போதும் அவளைக்கண்டால் ஒரு சிறுபயம் இருந்துகொண்டே இருந்தது.

பூரணி இங்கு வந்த இந்த மூன்று மாதத்தில் இவன் பூரணி தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தான். பூரணியோ அக்காவை விட்டு ஒரு கணமும் பிரியாமலே இருந்தாள். ஆற்றுக்கு துணி துவைக்க,விறகு ஒடிக்க என இவன் பூரணியை தனியாக கூப்பிட்டுபார்த்தான். பூரணி சிரித்துக்கொண்டாளே தவிர இவன் கூட வரவில்லை. இந்த முறை எப்படியாவது நல்ல சேலை எடுத்துக்கொடுத்து பூரணியின் பிரியத்தை சம்பாதிக்க வேண்டும் என் நினைத்தான்.

இன்று ஏதாவது ஒரு நெல்வயலை பிடித்து அறுநூறு எடாலாவது ஏந்தி வைக்க வேண்டும். முந்நூறு எலிகளாவது விழ வேண்டும். பூரணிக்கு பிடித்தமான நூற்சேலையை எடுத்துக் கொடுத்துவிடவேண்டும். இவன் மனதுக்குள் கணக்கு போட்டபடியே நடந்தான். வெயில் கூடியிருந்தது. மதுக்கம்பாளையம் குடியானவர் வீதியில் நுழைந்தான். சப்தமிட்டான்.

“ எடாலு... எடாலு... எடாலு...சாமியோவ்...”

யாருமே வந்து கூப்பிடவில்லை. நாய்கள் கூட குரைக்கவில்லை. சோர்வாக ஊர்த்தலைவாசல் வந்து  சேர்ந்தான். ஆலமரத்தடி தேனீர்கடை மரப்பெஞ்சில் கரைவெளி பருவகாரர்கள் சிலர் அமர்ந்து தேனீர் குடித்துக்கொண்டிருந்தனர். இவன் தோளில் எடாலை சார்த்திக்கொண்டு மரபெஞ்சை ஒட்டி தரையில் குத்தவைத்து அமர்ந்தான். பகல்நடையாக செல்வநாயகி பேருந்து வந்து ஆலமரத்தடி முன் திரும்பி நின்றது. கொண்டவன் நஞ்சை பருவகாரர் இவனைக் கேட்டார்.

“ மொய்யானம் படுகையிலே எடாலு போடனுமுன்னு சொன்னாங்கப்பா.. நீ போகலையா...?”

“ இப்ப போறேஞ்சாமி... அப்படியே ஒரு கொறப்பீடி குடுத்தீங்கனா... ராஜாங்கத்து புகழப் பாடிக்கிட்டு ஓடிடுவேன்...”

“எடால்காரனுக்கு இல்லாத பீடியா... ஒரு முழுப்பீடியே குடுப்பா...”

யாரோ பீடியை நீட்டினார். இவன் எழுந்து வாங்கிக்கொண்டு ஆலமர மறைவில் போய் பற்ற வைத்தான். புகை விட்டபடியே நடந்தான். கரைவெளியில் கண்ணுக்கெட்டிய வரை நெல்வயல்கள். தாள்கள் பழுப்பு நிறங்கொண்டு சூட்டைப் பரப்பின. புடை தள்ளிய கதிரின் மேலாக ஊசித்தட்டான்கள் பறந்தன. வரப்பில் மடிகூட்டி வல்லாரை ரக்கிரி பறித்துக்கொண்டிருந்த கிழவி இவனை ஏறிட்டுப் பார்த்தாள். இவன் வெறுங்காலை தொட்டாச்சிணுங்கி முட்கள் குத்தின. சூதானமாக நடந்தான். வயல்நிலம் வெடிப்புண்டு கிடந்தது. இது தான் கறம்பை எலிகள் உட்புகுந்து பயிரை கொறித்து நாசம் செய்யும் தருணம். மெய்யானப்படுகை ஆற்றை ஒட்டி சரிவில் இருந்தது. வயல் குடியானவரை காணவில்லை. பருவகாரர் மட்டும் இரு எருமைகளை வரப்பில் பிடித்து மேய்த்துக்கொண்டிருந்தார். இவன் அருகில் போய் கும்பிட்டான்.

“ சாமீ...”

“ வாப்பா...உன்னத்தா தேடிக்கிட்டு இருந்தே...”

பருவகாரர் வாய்க்காலுக்குள் எருமைகளை இறக்கி விட்டுவிட்டு வந்தார். இவனை வயலின் மேற்குபுற வரப்பிற்கு கூட்டிப்போனார். வரப்பைத் தாண்டினால் ஆற்றின் கரையடி. நாணல்களும்,தாழைகளும் மண்டிக்கிடந்தன. எலிவங்குகளும் நிறைந்திருந்தன. எலிகளின் சிறுகால் தடங்களும் போயின.

இவன் உள்ளே இறங்கி வங்குகளின் மேல் கால்களை வைத்து அமுத்தினான். மண் அமிழ்ந்து பொரிந்தது. திரும்பவும் வரப்புக்கு வந்து நெற் பயிற்களை நோட்டமிட்டான். எலிகள் கொறித்த பயிர்கள் சரிந்து விழுந்திருந்தன. உச்சி பொழுது வெயில் கண்ணைக் கூச இவன் நிமிர்ந்து பருவகாரரைப் பார்த்தான்.

“இப்பவே எடாலை அடிச்சிறேன்... சாமீ...உத்தரவு கொடுக்கணும்...”

“ அறுவடையப்ப தவசம் வாங்கிக்கறையா...இல்ல பணமா?”

“இப்ப எல்லாம் பணந்தாம் சாமீ...”

“அப்ப எலிக்கு ரெண்டு ரூவா வாங்கிக்க...”

“ சாமி அக்கம்பக்கத்துல மூனுக்கு மேல வாங்கறேன்”

அதற்குள் எருமைகள் வரப்பு ஏறி வயலில் இறங்கிவிட்டது. பருவகாரர் சப்தமிட்டபடி ஓடிவிட்டார். கொக்குகள் வட்டமிட்டு தூரத்து வயலில் இறங்கின. இவன் முதலில் மேற்கு வரப்பிலேயே ‘எடாலை’ ஏந்த ஆரம்பித்தான். கவட்டையின் மத்தியில் கண்ணியின் சுருக்கு இருக்குமாறு சரிப்படுத்தினான். கவட்டையை வரப்பில் வரிசையாக ஊன்றினான். எலிகள் தாவி தப்ப வழியில்லாத அளவுக்கு கவட்டையை நெருக்கமாக்கினான். வயலைச்சுற்றி நாலாத்திசை வரப்புகளிலும் இவன் ‘எடால்’ ஏந்தி முடிக்கும்போது பொழுது மேற்கே சாய்ந்துவிட்டது. கீழ்திசைக்காற்று நெற்பயிர்களை நெளிய வைத்து போயிற்று. ஊரின் சீமையோடு கூரைமுகடுகளைப் பார்த்துக்கொண்டே வரப்பில் நடந்தான். கொக்குகள் பறந்து இடம் மாறின. குடியானவப் பெண்ணொருத்தி புல் அறுத்துக்கொண்டிருந்தாள். இவன் நேராக வீட்டுக்கு செல்லவில்லை. சீராம்வலசு சாய்பு வீட்டுக்கு சென்றான். துணி மூட்டை பச்சை வண்ணத் திண்ணையிலேயே இருந்தது. வியாபாரத்திற்கு போய்விட்டு சாய்பு அப்போதுதான் திரும்பியிருந்தார். இவன் குரலிட்டான்.

“ பாய்... பாய்...”

பாயம்மா திரைச்சேலையை விலக்கி எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே போனாள். ஈரமுகத்தை துடைத்தபடியே திண்ணைக்கு சாய்பு வந்தார்.

“ கொழுந்தியாளுக்கு சீலை எடுக்கனும் ”

சாய்பு மௌனமாகவே இவனை நோக்கினார்.

“கத்தரி பூ நெறம்... முந்நூறு ரூபா பெறுமானம்...”

சாய்பு ஆளற்ற வீதியை ஒருமுறை பார்த்துவிட்டு பேசினார்.

“உம் பொண்டாட்டிக்கு ரவிக்கை எடுத்த காசே...இன்னும் குடுக்கலை... வருசத்துக்கு மேலாவுது...”

“இதோட சேந்து வெடியால குடுத்துடுவேன் சீலையக் காட்டுங்க பாய்...”

“காசு இல்லாம ஏவாரம் இல்ல நான் என்ன கேனப்பயல்ன்னு நெனச்சியா?”

“பாய்... நாம எல்லாம் அப்படியா...பழகியிருக்கோம்...”

சாய்பு வீட்டுக்குள் போய்விட்டார். இவன் தயங்கியபடியே மேலும் சிறிது நேரம் திண்ணையை பிடித்துக்கொண்டு நின்றான். பெருத்த அவமானமாகப் போயிற்று. அவள் ரவிக்கைக்கு பணம் கொடுக்காதது கூட இப்போதுதான் ஞாபகமே வந்தது. பனை நிழல் படிந்த மண்பாதையில் நடந்தான். ஊர்வெளி மீது மஞ்சள் வெயில் சாய்வாக விழுந்து கொண்டிருந்தது. மறுபடியும் மதுக்கம்பாளையம் வந்து வாடகை மிதி வண்டி எடுத்துக்கொண்டான்.

மண்பாதை வந்ததும் ஏறி மிதித்தான். பூரணி பின்னால் உட்கார்ந்திருந்தாள். சக்கரம் வேகம் பிடித்தது. சீராம் வலசு போய் சாய்பு வீட்டின்முன்பு மிதிவண்டியை நிறுத்தினான். பூரணி இறங்கியதும் அவளுக்கு பிடித்த கத்தரி பூ வண்ணச் சேலையை எடுத்துக்கொண்டாள். இவன் பணத்தாள்களை எண்ணிக் கொடுத்ததும் மிதி வண்டிப் பயணம் தொடர்ந்தது.

இவன் அமராவதி ஆற்றைக் கடந்து குறுக்கு வழியாக மிதி வண்டியை ஓட்டினான். பூரணி வலது கையால் இவன் தோளைப்பற்றி உட்கார்ந்திருந்தான். இருமருங்கிலும் கரும்புத் தோட்டங்கள். ஆள் அரவமேயில்லை. எங்கோ செம்போத்தின் குரல். வெயில் ஏறிவிட்டது. இவன் மிதி வண்டியை நிறுத்தி இறங்கினான். பூரணி கையை பிடித்துக்கொண்டு கரும்பு தோட்டத்துக்குள்ளே போனான். காற்றுக்கு தோகைகள் உராய்ந்து சப்தம் எழுப்பின. ஈரநிலம் குளுமை படிந்துபோய் கிடந்தது. இவன் பூரணியை இழுத்து அணைத்துக்கொண்டான். முகத்தை நிமிர்த்தி இதழ்களை கவ்வ எத்தனித்தான்..

இவனுக்கு நினைவுகள் கலைந்ததும் சந்தோசமாகவே இருந்தது. மண்பாதையில் பனைநிழல் மறைந்துவிட்டது. மாடுகள் எதிர்பட்டு வந்தன. விலகி மிதிவண்டியை ஓட்டினான். முன்பனிக்கால அந்தி,குளிர்கொண்டுவிட்டது. சீக்கிரமே பொழுதும் இறங்கிவிட்டது. இவன் மிதி வண்டியில் வீடு வருவதைக்கண்டதும் வாசலில் நின்ற பூரணி கேட்டாள்.

”எதுக்கு மச்சான்... சைக்கிளு... மருக்காவும் பன்னி கறி விக்க போறீங்களா...?”

“வெளையாடாதே பூரணி... நாளைக்கு நான் உன்ன...ஊருக்கு நடந்தா கூட்டிட்டு போகமுடியும்..?”

பூரணி எதுவும் பேசவில்லை. சிரித்தாள். இரவு இவனுக்கு அயிரை மீன் கருவாட்டுக் குழம்பை சூடு பண்ணிக்கொடுத்தாள். இவன் சாப்பிட்டு முடித்ததும் வாசலுக்கு வந்து வானத்தைப் பார்த்தான். ஆயிரக்கணக்கான விண்மீன்கள் ஜொலித்து எங்குமே மின்னல் இல்லை. தேய்பிறை நிலா உச்சியில் இருந்தது. வீட்டுக்குள் வந்து படுத்ததும் உறங்கிவிட்டான். பனையோலைக் கூரை மீது ஏதோ சடசடப்பு கேட்டு கண்விழித்தான். மழை கனத்துப் பெய்து கொண்டிருப்பதை உணர்ந்தான். எப்படி திடீரென மழை இறங்கிற்று என்பது புதிராகவே இருந்தது. கதவை தாழ்நீக்கி வாசற்படிக்கு வந்து நின்று வெளியே பார்த்தான். காற்றின் சுழற்சியில் அடர்ந்த துளிகள் சிதறி தெறித்துக்கொண்டிருந்தன. பெருகிய மழை நீரோடு எருமைத்தேள் ஒன்று கொடுக்குயர்த்தி போய்க் கொண்டிருந்தது. வாடகை மிதிவண்டி ஈரம் சொட்டச்சொட்ட பூவரச மரத்தடியில் விழுந்து கிடந்தது. நேரம் என்னவாக இருக்கும் என தெரியவில்லை. இவன் வீட்டுக்குள் வந்து பாயில் அமர்ந்தபடி ‘எடாலை’ப்பற்றி நினைத்தான். எலிகள் விழுந்திருக்குமாவென்று யோசித்தான். மின்னல் வெட்டி இடி இடித்தது. உறக்கமே வரவில்லை... நிரல் கெட்டுவிட்டது....

இருள் பிரியுமுன் எழுந்தான். கரைவெளிக்கு ஓடினான். வயல்கள் வெள்ளக்காடாய் கிடந்தது. வண்டல்மண் வரப்புக்கள் வழுக்க ஆரம்பித்தது. நாலாதிக்கும் தவளைகள் கத்தின. நெற்பயிர்கள் ஆங்காங்கே தண்ணீரில் மிதந்து போய்க் கொண்டிருந்தன. இவன் ‘எடால்’ ஒன்றையே குறிவைத்து ஓடினான். கிழக்கு வெளுத்துவிட்டது. மெல்ல வெளிச்சம் பரவிற்று. மொய்யானம் படுகை போய்ச்சேர்ந்தான். மேற்கு வரப்பில் உடைப்பு எடுத்திருந்தது. தண்ணீர் வழிந்து நாணக்குள் விழும் ஒலி கேட்டது. எடால் கவட்டையெல்லாம் பிடுங்கிக் கொண்டுவிட்டன. கண்ணிச் சுருக்குகள் வெறுமனே இறுகி நீரில் மிதந்தன. எலிகள் விழுந்ததற்கான அடையாளமே இல்லை. இவனுக்கு கோபம் வந்தது. மேலே அன்னார்ந்தான். வானம் வெளிறி மழை பெய்ததற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது.

இவன் குனிந்து எடால் கயிற்றைச் சுருட்டினான். கவட்டைகள் எல்லாம் நீரில் ஊறிப்போயிருந்தன. தூக்கி தோளில் போட்டான். சுமை அதிகமாகிவிட்டது. கால்களைச் சேறு அப்பிக்கொண்டது. வரப்புகளில் நண்டுகள் வளை தோண்டிவிட்டன. நெற்கற்றைகளிடையே நீர் தெளிந்துவிட்டது.

சின்னாம்பல் கொடிகள் தண்டுடன் மிதந்தன. அசதி அதிகமாயிற்று. வீடு வந்து சேர்ந்தபோது பொழுது கிளம்பிவிட்டது. வாசற்படியில் மாமியாரின் செருப்பு கழற்றியிருப்பதைக் கண்டான். நடைக்கு வெளியே அடுப்புப் புகை கசிந்து வந்து கொண்டிருந்தது. பூரணி தலைக்கு குளித்து கனகாம்பரப்பூ சூடியிருந்தாள். மூக்குத்தி மின்ன சிரித்தாள்.

“அம்மாவும் நானும், செல்வநாயகி பஸ்ஸுக்கே போறோம். நான் கலியாணம் மூச்சு பொண்ணு மாப்பிள்ளை விருந்துக்கு வரும்போதாவது ஒரு சீலை எடுத்துக் குடுக்க மறந்தறாதீங்க மச்சான்...”

பூரணி மீண்டும் சிரித்துவிட்டு வீட்டுக்குள் போய்விட்டாள். இவன் எரிச்சலுடன் எடாலை பூவரசமரத்தடியில் வீசி எறிந்தான். நிராசை கவிழ வாடகை மிதி வண்டியை எடுத்துக்கொண்டு உருட்டினான். வாடகை கொடுக்க சுத்தமாக காசு இல்லை என நினைத்ததும் சட்டென நின்றான். ஒற்றைத் தடத்தில் மழை வெயில் சுள்ளென இறங்கியது..

ஜூலை, 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com