ஓர் ஆலமரம்.
அள்ளி முடியாத கூந்தல் போன்று அதன் விழுதுகள்.
ஒரு கிராமம் அமரும் அளவிற்கு விரிந்த நிழல்.
மற்ற நேரங்களில் பொழுது போக்கும் இடமாக காட்சி தரும் ஆலமரம், பஞ்சாயத்து என்று வந்து விட்டால் மட்டும் நீதிமன்றமாக அவதாரம் எடுத்து விடும்.
அந்த நீதிமன்ற அவதாரத்தில் தண்டிக்கப்படுவர்கள் பெரும்பாலும் தண்டனைக்குரியவர்கள் அல்ல. அதுபோல் தண்டனை வழங்குபவர்களும் பெரும்பாலும் தண்டனை வழங்கத் தகுந்தவர்கள் அல்ல.
யாருக்கெல்லாம் நிழல் வாய்க்கவில்லையோ அவர்களைத் தவிர்த்து ஏறத்தாழ நூறு பேர் இருக்கக்கூடும்.
அப்போது ஒரு காரின் சத்தம்.
பெரும்பாலும் இரு சக்கர வாகனம் மட்டுமே வைத்திருப்பவர்களிடம் இருந்து கூட காரின் சத்தத்திற்கு துளியும் மரியாதை இல்லை.
கூட்டத்தின் கவனம் புறணி பேசுவதில் மட்டுமே இருந்தது.
காரிலிருந்து எழுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் இறங்குகிறார்.
மடிப்புகள் மறையாத எட்டு முழம் வேட்டி, முழுக்கை சட்டை. தோளில் துண்டும் வேட்டியில் கரையும் இருந்திருக்கலாம்.
அவர் வருவதை சிறுவர்கள் சிறுமியர்கள் மட்டுமே திரும்பிப் பார்த்தனர்.
அந்தப் பெரியவரின் காரை சிறுவர்கள் சிறுமியர்கள் சூழந்து கொண்டனர். மகிழ்ச்சியோடு காரைத் தழுவினர்.
பதிலுக்கு அந்தப் பெரியவர் மிக அழகானதொரு புன்னகை செய்துவிட்டு கூட்டம் நோக்கி நடந்தார்.
அவருக்கு கூட்டம் வழிவிடவில்லை என்றாலும் கூட, அவராகவே வழியை ஏற்படுத்திக் கொண்டு ஊர்த்தலைவர் முன்னால் வந்து நின்று வணக்கம் வைத்தார்.
ஊர்த்தலைவரின் பதில் வணக்கம், கரம் உடைந்த சிலை போல் இருந்தது.
உட்காரச் சொல்லவில்லை.
இருந்தாலும் அவர் அமர்ந்து கொண்டார், அவருக்கென்று சிறப்புற தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில்.
‘எல்லாரும் மேல உக்காந்திருக்க இந்த தாத்தா மட்டும் ஏமா கீழ உக்காந்திருக்காரு?'
‘அவக நம்மளுக்கு முன்னாலலாம் மேடையில உக்கார மாட்டாக.'
‘உக்காந்தா என்னவாம்?'
‘நீ செத்த பேசாம இரு. பேயிக்கு எதுக்கு கோயிலு?'
கூட்டத்தில் தன் தாயின் கரங்களுக்குள் ஒளிந்து நின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி தன்னுடைய தாயின் வசனத்திற்கு பொருள் தேடத் துவங்கி விட்டாள்.
கெட்ட பொருளாய் இருந்தாலும் எரிக்க உதவும் தானே.
பொதுவாகவே எதற்காகக் கூட்டம் கூடியுள்ளது என்று கூட்டத்திலிருந்து வரும் முணுமுணுப்பில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
‘வேண்டாத வேலையா இவருக்கு'
‘பின்ன வேண்டுனத செய்யாம விட்டோம்னா சும்மா விடுவாரா நம்ம ஐயே. ஒண்ணுக்கு ரெண்டு மடங்கா வசூல் பண்ணிருவாருல'
‘நீ சொல்றதும் சரிதான். வேண்டுனத செய்யாம விட்டதுக்குத்தானே மூத்த மக வழி பேத்தி சக்தி உடம்பெல்லாம் தாமரப் பூத்துக் கெடக்குது'.
‘ஞானமுத்து வேண்டுனது வேண்டுனாப்ல, ஊரு தலையிடாத வகையில வேண்டிக்க வேண்டியதுதான. மகளுக்கு பத்து வருசமா புள்ள இல்ல.அதுக்காக புள்ள பொறந்தா ஐயனுக்கு குதிர தனியா தன்னோட சொந்த காசுல விடுறதுனா வேண்டிக்கிறது?
ம். என்ன பண்றது பேரு வாச்சுறந்தாலும் பேருக்கு கூட வாய்க்காத வகையறா.'
‘சரி சரி; நம்ம மழவேலிராயர் ஐயா என்ன சொல்றாருனு பாப்போம்.'
கூட்டத்தில் முகம் தெரியாமல் இருந்தாலும், குரலை வைத்து இன்னார்தான் பேசுகின்றனர் என்று எளிதாக கண்டு கொள்ளலாம்.
கிராமத்தில் அது ஒரு தனிச்சிறப்பு.
மழவேலிராயர் கருப்பு உடை போடாத நீதிபதி தொனியில் ஞானமுத்துவின் வழக்கிற்கு தீர்ப்பு வழங்க ஆயத்தமானார்.
‘இங்க பாரு ஞானமுத்து, ஊருக்கு ஒதவுற வேண்டுதலா இருந்தாலும் கூட ஒவ்வாத வேண்டுதலு.'
இப்போது நீதிபதி மழவேலிராயர் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.
‘வேண்டுதல நெறவேத்தாம விட்டதுனால என்ன ஆச்சுனு ஊருக்கே தெரியும். இன்னும் காலம் ஆச்சுனா வேண்டுதலும் காலமா போயிரும்னு பயமா இருக்குங்க. பேத்திக்கு இப்பவே பத்து வயசு ஆச்சு. இன்னும் ஒண்ணு ரெண்டு வருசத்துல மேசர் ஆயிருவா. அப்புறம் இன்னும் தள்ளிப் போயிரும்.
ஊருக்கு உபத்திரம் பண்ணல; உதவி பண்ணுங்க.'
ஞானமுத்து கை கட்டி நின்றார்.
அந்த மகிழ்ச்சியில் தன் கரங்களால் தன்னுடைய மீசையின் இரண்டு பக்க நுனிகளையும் நீவி விட்டு தனது வீரத்தை வெளிப்படுத்தினார் மழவேலிராயர்.
நீவி விட்டதில் விறைத்திருந்த மீசையின் நுனியில் இருந்து சில மயிர்கள் உதிர்ந்ததை மீசை மட்டுமே அறியும்.
‘சரி ஞானமுத்து, நேத்து ராத்திரியே ஐயே மேடு ஆளுக சில நிபந்தனைய பேசி வச்சிருக்கோம். அதுக் கெல்லாம் உனக்கு சம்மதம்னா மேற்கொண்டு இதப் பத்தி பேசலாம்.'
மழவேலிராயரின் தோரணை ஞானமுத்துவின் சம்மதத்தை கோரும் படி இல்லை. மாறாக, ஞானமுத்துவுக்கு கட்டளை இட்டபடி இருந்தது.
‘சம்மதம் சொல்ற நிலையில நா இல்ல; சம்மதிச்சுதானே ஆகணும்.'
புரிந்துகொண்ட ஞானமுத்து சம்மதித்தார். ஆனால் கட்டளைக்குப் பணியவில்லை.
‘நீ சொல்லிட்டுப் போயிறுவ. ஐயனோட சாட்ட எங்க மேல பாஞ்சுறக் கூடாதுல ஞானமுத்து.‘
கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த மழவேலிராயர் தன் கரத்தால் தன்னால் முடிந்த மட்டும் அவருடைய தொடையை ஒரு அழுத்து அழுத்தினார் பல்லைக் கடித்துக் கொண்டே.
மழவேலிராயரின் கோபத்தை கூட்டம் புரிந்து கொண்டது. ஞானமுத்துவும் கூட.
ஆதலால், ஞானமுத்து மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. மழவேலிராயர் தொடர்ந்தார்.
‘சரி. சொல்றேன் கேட்டுக்க, குதிரை செஞ்சு விட்டுட்டு நீ ஒதுங்கிக்கணும். எந்தக் காலத்திலயும் யாரு கிட்டயும் நான்தான் குதிர செஞ்சேனு சொல்லக் கூடாது. குதிர கல்வெட்டுல கிராமத்தார் பேருதான் இருக்கும். உம் பேரு வராது. உச்சி அன்னைக்கு நீ பாகை கட்டக் கூடாது. குதிரைக்கு உண்டான செலவ நீ கிராமத்தாருக்கிட்டதான் கொடுக்கணும்.
சிற்பி யாருன்றதையும் குதிரைக்கு உண்டான செலவு என்னற்றதையும் கிராமந்தான் முடிவு செய்யும்.
சிற்பி, குதிர செய்யுறத பக்கத்துல இருந்து பாக்கலாம். ஆனா ஒத்தாச பண்ணக் கூடாது.
இதுக்கெல்லாம் ஒனக்கு சம்மதமா?'
மழவேலிராயருக்கு பார்வை நன்றாகவேத் தெரியும். ஆனாலும் கூட ஞானமுத்துவின் பக்கம் இறுதி வரைக்கும் பார்வை போகவில்லை.
‘கட்டுப்படுறேன்'
ஞானமுத்து குனிந்ததில், கூட்டத்தில் கூடியிருந்த மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அதைக் கைதட்டல் மூலமாக கிராமம் வெளிப்படுத்தாமல் இருந்தாலும், முணுமுணுப்பில் நன்றாகவேத் தெரிந்தது.
‘கூட்டம் கலஞ்சிக்கலாம். இன்னும் ஒரு வாரத்துல சிற்பி நம்ம ஊருக்கு வந்து குதிரைய தச்சு பண்ணுவாக. நம்ம காளி கோயில செஞ்ச சேதுநாதனத்தான் இதுக்கும் கிராமம் அழைக்கப் போகுது. தச்சுதேதி அன்னைக்கி ஐயன் மேடுக்கு ஊரு கூடட்டும்.'
மழவேலிராயரின் கூற்றைக் கேட்டு கூட்டம் கலைந்து சென்றது.
ஆலமரத்தின் அவதாரம் முடிவுக்கு வந்தது.
தண்டனை பெற்ற ஞானமுத்துவுக்கு ஆலமரத்தின் விழுதுகள் இறுதி வரைக்கும் விழுதுகளாய் காட்சி அளிக்கவே இல்லை.
நீதிமன்றமாய் ஆலமரம் இருந்தது. நீதிபதிகளாய் ஊர்ப் பெரியவர்கள் இருந்தார்கள். ஆனால், வழக்கறிஞர்களாய் மட்டும் யாரும் அங்கில்லை.
ஒருவாரம் பின்னர் ஐயன் மேட்டில் கூடியது கூட்டம்.
பஞ்சாயத்தில் கூடிய அளவிற்கு கூட்டம் இல்லை என்றாலும் கூட, தாட்டியத்தை கோலோச்சும் அளவிற்கு கூட்டம் இருந்தது.
‘குதிரை செய்ய உண்டான செலவு அஞ்சு லட்சத்து ஒண்ணு.
நூறு வருசத்துக்கு முன்னாடி சுப்பையா பூசாரி சுண்ணாம்பு வச்சு செஞ்ச ஐயன் குதிரதான் இப்போ செய்யப் போற சிமெண்ட் சாந்து குதிரைக்கு கண்ணாடி. இப்பவும் சொல்றே ஞானமுத்து, ஏழ கடன் ஏழு தலைமுறைனு சொல்லுவாக. இந்தக் கூலிக்கு சம்மதம் இல்லேனா சொல்லிரு. சிற்பி போக்குவரத்துக்கு உண்டான காச கிராமமே ஏத்துக்கிட்டு தந்துரும்.'
பணம் சேராத பதவியின் திமிரும், ஞானமுத்துவிடம் பணம் இருக்கிறதே என்ற பொறாமையும் மழவேலிராயரிடம் இருந்து வெளிப்பட்டது.
அதே அளவு வஞ்சம் ஊரிடமும் இருக்கும் அல்லவா? அதுவும் வெளிப்பட்டது.
‘ஏம்பா... ஏழைக்குத்தானப்பா கடன் ஏழு தலமுற.‘
கூட்டத்தின் ஒருமித்த நையாண்டி குரலில் மழவேலிராயரின் கேள்விக்கான பதில் கிடைத்தது. ஞானமுத்துவின் பதில் அடங்கிப் போனது.
தொகையை ஞானமுத்து, கிராமத்தில் செலுத்த வேண்டும் என்றும், கிராமத்திடம் இருந்து சிற்பிக்கு தொகை அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி பத்திரம் போடப்பட்டது.
தச்சு வேலையை சிற்பி ஆரம்பித்தார்.
அதன் படிநிலைகள் என்னென்ன என்பதை ஆராய கிராமத்தாருக்கு மனமில்லை.
மழவேலிராயருடன் சிலர், ஞானமுத்து மற்றும் சிறுவர்கள் சிறுமியர்கள் மட்டுமே அங்கிருந்தனர்.
சேர்மன் குதிரைக்கான தச்சு வேலையை மரபு படி நவதானியங்கள் கொண்டு சேதுநாதன் செய்து முடித்தார்.
ஆறுமாத கால அவகாசம் கிராமம் சார்பில் சிற்பிக்கு வழங்கப்பட்டு ஆதி கூலியும் கொடுக்கப்பட்டது.
வேலை நடக்கும் விதத்தை அருகிலிருந்து ஞானமுத்து பார்க்கவும் தடையில்லை. பார்க்காமல் விட்டாலும் தண்டனையில்லை.
இழவு வீடு போல் காட்சியளித்தது ஞானமுத்துவின் வீடு.
இழவு என்பது பறிகொடுத்ததன் உணர்ச்சிதானே. ஒரு கிராமமே சேர்ந்து ஞானமுத்துவிடம் இருந்து குதிரையைப் பறித்த தாக்கம் ஞானமுத்துவின் வீட்டில் உலாவியது.
வேலை நடக்கும் விதத்தை பார்க்க கண்களுக்கும், வேலைப்பாடுகள் பற்றி ஊர் பேசும் வர்ணனையை கேட்க செவிகளுக்கும் ஞானமுத்து தடை விதித்திருந்தார்.
ஊரிலிருந்து சொல்லி அனுப்பினால் குதிரை வேலைக்கான பணத்தைக் கொண்டு செல்வார். பணத்தை ஊர்த்தலைவரிடம் ஒப்படைத்து விட்டு அப்படியே வீட்டிற்கு திரும்பி விடுவார்.
ஐயன் மீது பக்தி இல்லாமல் இல்லை. தட்டிக் கேட்க ஐயன் வரவில்லையே என்ற ஆதங்கம்தான்.
இவ்வாறாகக் கடந்தன மூன்று மாதங்கள்.
ஒருநாள் மாலைப் பொழுது.
பூவரசம் காயை அரைத்துப் பொடியாக்கி அதை
சக்தியின் உடம்பெல்லாம் பூசிக் கொண்டு இருந்தார் தாத்தா ஞானமுத்து.
சக்திக்கு பழக்கமாகி விட்டது. ஆதலால் வலியில் கத்தவில்லை.
இருந்தாலும் வேதனை சக்தியின் முகத்தில் தென்பட்டது. அதை ஞானமுத்து கவனித்தார்.
‘என்னடா வலிக்குதா?'
‘ஒன்னோட வேதனைய விட என்னோட வேதனை கம்மிதான் தாத்தா'
ஞானமுத்துவிற்கு பேத்தியின் புத்தியை நினைத்து சிரிப்பதா அல்லது, பேத்தியின் நிலையை நினைத்து அழுவதா என்று தெரியவில்லை.
‘சீக்கிரம் உனக்கு இந்தத் தாமர கருகிப் போகணும். அதுக்குதான் ஐயனுக்கு குதிர. பூ மட்டும் கருகாம போச்சுனா, செஞ்ச குதிரய நானே ஒடச்சுருவேன்.'
தாத்தாவின் தலையின் மீது தன்னுடைய கரங்களை வைத்து ஆறுதலை வெளிப்படுத்தினாள் சக்தி.
‘நீங்க வேண்டுதல நெறவேத்துறீங்க தாத்தா; மாறா நீங்க வேண்டல' ஞானமுத்துவிற்கு நன்றாகப் புரிந்தது. ஆனால் சக்திக்கு இந்தப் புரிதல் எப்படி வந்தது என்றுதான் அவருக்குப் புரியவில்லை.
ஞானமுத்துவின் இரண்டு சொட்டு கண்ணீர், பூவரசம் காய்ப்பொடியில் விழுந்தது.
அன்றைய நாள் நள்ளிரவு.
கரை வைத்த எட்டு முழம் வேட்டி; முழுக்கை சட்டை; தலை மயிரை முழுவதும் மறைத்து கட்டப்பட்டிருக்கும் தலைப்பாகை; நெற்றி முழுவதும் நிறைந்திருக்கும் பசுஞ்சாண திருநீறு; கழுத்தில் ரோசா பூ மாலை.
ஐம்பது வயது இருக்கும்.
வெள்ளைப் புரவியின் மீது ஏறி வந்து கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.
காரிருளில், அந்தப் பெரியவரின் உருட்டு மீசையின் துடிதுடிப்பில் அவசர சேதி ஒன்று அடங்கியிருப்பது நன்றாகத் தெரிந்தது.
ஒரு வீட்டின் வாசலில் வந்து நின்றது புரவி.
‘ஞானமுத்து! ஞானமுத்து!'
புரவிக்காரர் சத்தம் போட்டதற்கும் கதவின் திறப்பு சத்தம் கேட்டதற்கும் மிகச்சரியாக இருந்தது.
ஞானமுத்து வெளியே வந்தார்.
காட்சியைக் கண்டு பிரமித்து நின்றார்.
வானத்தில் செங்குத்தாக விழுந்த கோடுகள் உண்டாக் கிய வெளிச்சத்தின் கீழ் புரவிக்காரர், புரவியின் மீது கம்பீரமாக அமர்ந்திருந்தார்.
அடுத்த சில விநாடிகளில் ஞானமுத்துவின் பிரமிப்பில் சட்டென்று ஒரு மின்னல் வெட்டியது.
கூச்சத்தினால் ஒரு விநாடி மூடிய விழிகளை மீண்டும் திறந்தார் ஞானமுத்து.
காட்சியைக் கண்டு அழுதே விட்டார்.
அவிழ்ந்த தலைப்பாகை; கரை மங்கிய வேட்டி; கிழிந்த முழுக்கை சட்டை; வியர்வையில் நனைந்த நெற்றியால் கரைந்து போன பசுஞ்சாண திருநீறு; கழுத்தில் ரோசாப் பூக்கள் உதிர்ந்த சருகு மாலையோடு அலங்கோலமாய் அந்தப் புரவிக்காரர், புரவியின் மீது அமர்ந்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், அந்தப் புரவிக்காரரின் புரவியின் வாய் முழுவதும் குருதி கொட்டியது. ஆனாலும் கூட புரவிக்காரரின் முகத்தில் துளியும் கோபம் இல்லை.
‘உன்னோட குதிரையை காப்பாத்து ஞானமுத்து' என்று புரவிக்காரர் அழுதும் அழாமலும் ஞானமுத்துவிடம் சொன்னார்.
சட்டென்று வெடித்தக் கண்ணீருடன் புரவியின் முன்பாக நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தார் ஞானமுத்து.
ஞானமுத்து குலுங்கி அழுதது நிலத்தில் பட்டு எதிரொலித்தது.
திடீரென ஓவென்று கத்தி அழுதார் ஞானமுத்து.
அப்போது ‘தாத்தா! தாத்தா!' என்று ஞானமுத்துவை தட்டி எழுப்பினாள் பேத்தி.
வீட்டின் உள்ளே படுக்கையறையின் தரையில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து கிடந்தவர் சடாரென்று எழுந்து உட்கார்ந்தார்.
‘கனவு ஏதும் கண்டீகளா தாத்தா?'
‘இல்லத்தா சத்தி; இல்லவே இல்ல'
கண்ணீரைத் துடைக்காமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே வீட்டின் உச்சியை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டார் ஞானமுத்து.
‘ஐயனாரே!'
அன்றைய நள்ளிரவு கடந்த வேளை.
காரின் வேகம் சற்று அதிகம். ஆகையால், ஒரு மணி நேரத்தில் அடைய வேண்டிய இலக்கை அரை மணி நேரத்தில் அடைந்தது கார்.
ஒரு வீட்டு வாசலின் முன்பாக வந்து நின்றது கார்.
காரிலிருந்து அவசர அவசரமாக இறங்கினார் ஞானமுத்து.
‘சிற்பியாரே; சிற்பியாரே'
ஞானமுத்து அழைத்த வேகத்திற்கு அசராமல் வீட்டின் தலைக் கதவைத் திறந்து வீட்டிற்கு வெளியே வந்து நின்றார் சேதுநாதன்.
‘என்ன ஞானமுத்து?'
‘குதிரையோட வாய் ஒச்சமா இருக்கு'
பெரும் கோபத்தில் மூழ்கினார் சேதுநாதன்.
‘நீங்கப் போயி பாத்தீரா? குதிரைக்கு வாய சாய்ந்தரமாத்தான் வச்சுட்டு வந்தேன். இது ஊருக்குத் தெரியவே வாய்ப்பில்ல. உங்களுக்கு எப்படித் தெரியும்?‘
‘சிற்பியாரே, நேர்ல வந்து பாத்தா ஒங்களுக்கு எல்லாந் தெரியும். செத்த கோவிக்காம வாங்கயா.'
‘புறம்பா இருந்துச்சுனா அப்புறம் பாத்துக்க ஞானமுத்து.'
ஞானமுத்துவை தண்டிக்க ஆர்வம் கொண்ட மனதோடு சேதுநாதன் கிளம்பினார்.
புரவி நிமிர்ந்து வரும் இடம் நோக்கி கார் புறப்பட்டது.
காருக்குள் ஞானமுத்து கண்ட கனவின் பெருங்கதை உரையாடல்.
இரண்டு மணி நேரத்தில் இடத்தை கார் அடைந்தது.
காருக்கு முன்பாகவே புரவியின் இடத்தில் ஞானமுத்துவின் ஆன்மா நின்று கொண்டிருந்தது.
காரிலிருந்து மிகவும் சாவகாசமாக இறங்கி கொட்டகைத் தளத்தை சற்றுப் பிரித்து புரவியைக் கண்டார் சிற்பி.
தன் தொழில் தந்த ஆணவம் அனைத்தையும் மூட்டைக் கட்டி ஞானமுத்துவின் காலில் போட்டு கைகூப்பி விழுந்தார்.
எழுந்தார்.
‘பொழுது விடிஞ்சிருந்தா கூட எம்ம தொழிலுக்கு நரகந்தான் ஞானமுத்து. ஐயன் சொன்னது நெசம். இது உம்மோட குதிரதான். கனவுனு சொன்னீரு. கண்ட கனவு பலிச்சதால உங்க கால்ல விழுகல. எம்ம தொழில காப்பாத்திடீகனு விழுந்தேன்,'
நீர் ததும்பிய விழிகளோடு அவசர அவசரமாக புரவியின் வாயை சரி செய்யும் வேலையில் இறங்கினார் சிற்பி.
சேர்மன் குதிரையைப் பொருத்தவரையில் அதன் அழகும் கலையும் வாய்தான்.
வால்தாங்கி பூதமும் கால்தாங்கி பூதமும் புரவியை தாங்க, புரவியின் மேல் ஐயன் அமர்ந்திருக்கும் அழகெல்லாம் புரவியின் வாய் தருவதே.
சிறிது கோணலானாலும் ஒச்சம்தான்.
அதன்பிறகு ஊரில் மனிதர்கள் செய்யும் அனைத்துக் குற்றத்திற்கும் பொறுப்பேற்க வேண்டியது ஐயன்தான்.
குற்றவாளியாகவும் நீதிபதியாகவும் காலம் முழுவதும் ஊரின் எல்லையிலேயே ஐயன் நிற்க வேண்டியதுதான்.
மூன்று மணி நேரம் கடந்து வாய் சீரானது.
‘இனிமேல் உங்க புரவிக்கு குருதி கொட்டாது. மருத்துவம் பார்த்தாச்சு. இதுக்கு நன்றிக்கடனா கூலியா நீங்க எனக்கு ஏதாவது தரணும்னு நெனச்சா, உங்க கால்ல நான் விழுந்தத ஊருக்கு சொல்லிறாதீக' என்று ஞானமுத்துவை நோக்கி கை கூப்பினார் சிற்பி.
‘குதிர சிரிச்சதே போதும் சிற்பியாரே' என்று கூப்பிய கையை இறக்கி விட்டார் ஞானமுத்து.
‘இன்னும் மூணு மாசத்துல ஐயன் உக்கார உங்களோட குதிர தயாராயிரும். அப்பறம் பாருங்க குதிர சிரிப்ப. மறக்காம சாமி அமர்வு அழைப்பு அனைக்கி பேத்திய கூட்டிட்டு வாங்க'
சிற்பியின் வசனத்திற்கு ஞானமுத்து பதில் எதுவும் தரவில்லை.
அன்றைய கதிரவனின் ஒளி காரிருளை கிழித்தது.
கடந்தது அடுத்த மூன்று மாதம்.
அன்று சாமி அமர்வு அழைப்பு.
ஊரின் பெயரும் மழவேலிராயரின் பெயரும் சிற்பியின் பெயரும் குதிரைக்கு நாங்கள்தான் காரணம் என்றபடி கல்வெட்டில் கம்பீரமாய் இருந்தது.
தங்க ஊசியால் கண்ணாடி பார்த்து ஐயனுக்கு கண் திறந்தார் சேதுநாதன்.
பூத கணங்கள், குதிரை என அனைத்திற்கும் அவ்வாறே கண் திறந்தார்.
அதன்பிறகு வண்ணம் பூசிய புரவிக்கு சாரத்தில் ஏறி நின்று தமிழ் மந்திரங்கள் ஓதி சிற்பியே ஐயனை
அழைத்தார்.
‘எந்தன் ஐயன் வருவார் என்று அமைத்த புரவி.
உச்சியில் கருடன் சுழலவே கொட்டும் அருவி.
பேதங்கள் பார்த்து சேர்த்த பாவங்கள் அறவும்
ஒழிந்திட யார் குதிரையென்று அறிவிப்போம்.
வண்ணம் பூசிய புரவியின் மேல் ஆணையிட்டு
வர்ணம் பாக்க மாட்டோமென்று உறுதியேற்போம்!'
இந்தத் தமிழ் மந்திரங்கள் விண்ணைத்தான் அடைய முடிந்தது. மண்ணை அடைய இயலவில்லை.
மழவேலிராயர் கம்பீரமாக பட்டம் கட்டி நின்றார்.
குதிரைக்கு பட்டம்; ஐயனுக்கு பட்டம்; சிற்பிக்கு பட்டம்; பூத கணங்களுக்கு பட்டம்.
சற்றுநேரத்தில் வான் உச்சிக்கு கருடன் வந்து சேர்ந்தது. ஐயன் உச்சியை ஆதாரமாய் வைத்து வட்டமடித்தது.
‘ஆகா. ஐயன் வந்தமர்ந்தார்,'
கிராமத்தாரின் ஒருமித்த சத்தத்தில் சிற்பியின் தொழில் தப்பித்துக் கொண்டது.
‘திருவிளையாடல் புராணத்தில் வரும் 'பரிகளை நரிகளாக்கிய படலம்' இன்றிரவு நாடகத்தில் அரங்கேற்றம்' என்று மழவேலிராயர் உணர்ச்சிப் பெருக்கோடு அங்கு கூடியிருந்த மக்களுக்கு அறிவிப்பு செய்தார்.
சற்று தூரத்தில், நாடகம் நடைபெறவிருக்கும் கலை அரங்கத்தில் கரங்களில் ஐயனுக்கு சாற்ற ஆள் உயர மாலையோடு தன் பேத்திக்கு 'பரிகளை நரிகளாக்கிய படலம் கதை'யைச் சொல்லியபடி ஞானமுத்து அமர்ந்திருந்தார்.
கிராமத்திற்கும் ஞானமுத்துவிற்கும் எப்படியென்று தெரியாது. ஆனால், ஞானமுத்துவின் பேத்தி சக்திக்கு மாத்திரம் ஐயன் பரியின் மீது அல்ல, நரியின் மீது அமர்ந்திருப்பது போன்றுதான் தோன்றியது.
திருமுருகன் காளிலிங்கம் (சு9) மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த முதுகலை பொறியியல் பட்டதாரி. முழுநேர எழுத்தாளர். புறநானூற்று வீரன், தமிழர் மறை பு, தமிழர் மறை சு, மூலவர், மாவேந்தன் ஆகிய ஐந்து படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஜனவரி, 2023.