பன்றிக்கு நன்றி சொல்லி!

பன்றிக்கு நன்றி சொல்லி!
மனோகர்
Published on

‘சாப்.... டீ சாப்பிடுறீங்களா?'' கேட்ட மங்கள் பிரசாத்துக்கு முப்பது வயது இருக்கலாம். வயது தெரியவில்லை. குளிருக்கு கிழிந்த அழுக்கான ஸ்வெட்டர் அணிந்திருந்தான். பேண்டில் பல இடங்களில் கிழிசல். ஊசி நூல்கொண்டு தைத்ததன் தடம் தெரிந்தது. காலில் நைந்து போயிருந்த செருப்பு.

தலையசைத்தார் அந்த அதிகாரி. கறுத்த நிறத்தில் முரட்டு மீசையுடன் இருந்தார். உயர் அதிகாரியாக இருக்கக்கூடும். அந்தக் குளிரான நேரத்தில் ஏன் இந்தப் பின் தங்கிய, தொலைதூர கிராமத்துக்கு இவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவே இல்லை. இவர்கள் என்றால்... ஆம். அந்த அதிகாரி தனியாக வந்திருக்கவில்லை. கூட மேலும் சிலர் வந்திருந்தார்கள். எல்லோரும் அரசு காவலர்கள். அந்த அதிகாரி மட்டும் அந்த நாட்டுக்காரர் மாதிரி தெரியவில்லை. வித்தியாசமாக இருந்தார். தங்கள் பக்கத்து நாடான இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று மங்கள்பிரசாத் ஊகித்திருந்தான். மிகவும் உயர்நிலை அதிகாரியாக இருக்கலாம் என்பது மற்றவர்கள் அவருக்குக் காட்டிய மரியாதையில் தெரிந்தது.

டீயைக் கொடுத்தான், மங்கள் பிரசாத். அதிகாரி வெண்ணிற புன்னகையுடன் வாங்கிக் கொண்டு ஒரு மிடறு அருந்தினார். அவனைப் பார்த்தார்.

‘‘எந்த ஊர்க்காரன் நீ?''

‘‘பக்கத்தில் இருக்கும் கிராமம் சாப்''

‘‘என்ன வேலை செய்கிறாய்? யார் உன்னை இங்கே அழைத்து வந்தது?''

‘‘என்ன வேலை என்றாலும் செய்வேன்... நாலைந்துபேருக்கு சமைக்கவேண்டும் என போலீஸ்காரர் ஒருவர் அனுப்பி வைத்தார்... இவ்வளவு பெரிய அதிகாரிக்கு சமைக்கவேண்டும் எனத்தெரியாது''

‘‘போய் சமையலைப் பார்.. என்ன

சமைக்கப் போகிறாய் இரவுக்கு?''

‘‘கோழியும் ரொட்டியும்... அதுதான் இங்கே முடியும்...''

‘‘இதற்கு முன்பு என்ன வேலை

பார்த்துக்கொண்டிருந்தாய்...?''

‘‘படிப்பு ஏறவில்லை... இந்தியாவுக்குள் போய் ஹூப்ளியில்  ஓட்டலில் வேலை பார்த்தேன். பிறகு அங்கேயே கொஞ்சநாள் காவலாளியாக இருந்தேன்... ஊருக்கு வந்தபோது இங்கே கல்யாணம் ஆகி தங்கிவிட்டேன்''

‘‘எத்தனை குழந்தைகள்? என்ன செய்கிறார்கள்?''

‘‘மூன்று. எல்லாமே பெண்கள்... ஒரு நாளைக்கு இரண்டு வேளை அவர்களுக்கு உணவு கொடுப்பதே பெரும்பாடாக இருக்கிறது.. இந்தப் பக்கத்தில் வேலையே இல்லை.. வறுமை படுத்துகிறது... இந்தியாவுக்குள் போய் வேலை செய்து சம்பாதித்து அனுப்பலாம் என்றால், மனைவி விடமறுக்கிறாள்...''

அதிகாரி பெருமூச்சு விட்டார்.

‘‘இந்தியாவுக்குள்தான் உங்கள் நாட்டுக்காரர்கள் பெரும்பாலோர் இருக்கிறீர்கள்... உங்கள் நாட்டுக்காகவே நாங்களும் பட்ஜெட் போடுகிறோம்.. உனக்குத் தெரியுமா?''

‘‘என்ன போடுகிறீர்கள்?''

‘‘இந்திய நாடாளுமன்றத்தில் வருடந்தோறும் கணக்கு வழக்கு செலவின அறிக்கையை நிதி அமைச்சர் படிக்கும்போது, உங்கள் நாட்டுக்காகவும் குறிப்பிட்ட அளவுக்குப் பணம் ஒதுக்குகிறார்!''

‘‘ஓ... தெரியாதே ஸாப்''

‘‘அப்படி இருந்தும் இங்கே வறுமையே போகவில்லை... என்ன செய்து என்ன பிரயோசனம்?''

அதிகாரி பேச்சை நிறுத்திவிட்டு, மீசையை நீவத்தொடங்கினார். மங்கள் பிரசாத் அந்த குடிசையை விட்டு வெளியே வந்து திறந்த வெளியில் சமையலுக்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தான். இருள்பரவ ஆரம்பித்து நல்ல குளிர் ஆடைகளை ஊடுருவியது.

குடிசைக்குள்ளும் குளிராக இருந்தது. அணிந்திருந்த கருப்பு நிற லெதர் ஜாக்கெட்டின் ஜிப்பை மேலும் ஒரு முறை இறுக்கமாக மூடிக்கொண்டார் அதிகாரி. கைக்கு உறைகளைக் கொண்டு வந்திருக்கலாம். மறந்துவிட்டார். அவரது காரில் இருக்கிறது. ஆனால் கார் மலைச்சரிவில் மறைவான இடமொன்றில் நிறுத்தி இருக்கிறார்கள். அதிகாரியுடன் வந்திருக்கும் எல்லோரிடமும் ஆயுதம் இருக்கிறது. தற்காப்புக்காக வைத்திருக்கிறார்கள். அவர் கண்ணசைத்தால் உடனே ஆயுதங்களை கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்துவார்கள். இது ஒரு ரகசிய ஆபரேஷன். இந்திய காவல்துறையின் மானத்தைக் காப்பாற்றுவதற்கான பொறுப்பை இந்த அதிகாரியே முன்வந்து எடுத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் இந்த அண்டை நாட்டின் எல்லையில் மூங்கில் அடர்ந்த ஒரு கிராமத்தில் ஒரே ஒரு நாற்காலியும் மேசையும் மட்டுமே போடப்பட்டிருந்த குடிசையில் உட்கார்ந்திருக்கிறார். தலைநகரின் சுகமான கதகதப்பான அலுவலகத்தை விட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்.

மங்கள் பிரசாத் சூடாக உணவுகளை கோப்பையில் ஏந்திக்கொண்டு உள்ளே வந்தான். அதிகாரி மற்றவர்களையும் அழைக்கச் சொன்னார். தயக்கத்தோடு உள்ளே வந்தவர்கள், தரையில் அமர்ந்துகொண்டனர். அதிகாரி தன் பையைத் திறந்து, அழகான மதுக்குடுவை ஒன்றை எடுத்தார். எல்லோருக்கும் பளபளப்பான திரவத்தை கண்ணாடிக் குவளைகளில் ஊற்றித் தரச் சொன்னார்.

மங்கள் பிரசாத் கொடுக்க, எல்லோரும் பவ்யமாக வாங்கிக்கொண்டார்கள்.

அதிகாரிக்கு முன்பாக இருந்த சிறிய மேசையில் பீங்கான் தட்டில் ரொட்டிகள் இரண்டை அடுக்கி கோழிக் குழம்பை ஊற்றினான், பிரசாத். கடுகெண்ணெய் மணத்து, ஆவி பறந்தது குழம்பில். காகிதம் சுற்றிய ஒரு வெண்ணைய்க் கட்டியை அவர் தட்டில் வைத்தான்.

‘‘நீ குடிப்பதுண்டா?'' என்றார், அதிகாரி.

‘‘உண்டு ஸாப்... எப்போதாவது... எங்கள் கிராமத்தில் காய்ச்சிய சாராயம் கிடைக்கும். இந்த பாட்டில் சாராயங்கள் எனக்கு ஒத்துவராது''

‘‘இன்னும் எத்தனை நாள் வேலை முடிய ஆகும் என்று தெரியவில்லை... ஒரு வாரம் கூட ஆகலாம். அதுவரை உன் சமையல்தான்... எனவே உன் வித்தையெல்லாம் காட்டு''

‘‘நிச்சயம் சாப்...வேலை வெற்றிகரமாக முடிந்துபோகும்போது என் சமையலைப் பாராட்டிவிட்டுத்தான் நீங்கள் போவீர்கள்''

பிற காவலர்கள் பணிவுடன் சிரித்தனர். அவர்களின் அலுமினிய ப்ளேட்களில் ரொட்டிகளைப் பரிமாறினான், பிரசாத்.

‘‘கோழி நன்றாக உள்ளது, இல்லையா?'' என அதிகாரி பிற காவலர்களிடம் கேட்டார். அவர்கள் ஆமோதித்து தலை அசைத்தனர். அதிகாரிகளிடம் அதிகம் பேசுவது மரியாதைக் குறைவாகக் கருதப்படும்.

அவர்கள் ஓசையின்றி சாப்பிட்டனர். சாப்பாடு முடிந்ததும், அதிகாரி மெல்ல கேட்டார்.

‘‘ஜும்லா எங்கு இருக்கிறான்..? என்ன தகவல்?''

‘‘கடைசியாக அவனை இந்த கிராமத்தில்தான் பார்த்திருக்கிறார்கள். அவன் பல்லியைப் போல ஏதோ ஒரு வீட்டில் பதுங்கிவிட்டான். ஒருவாரம் முன்பு அவனைப் பார்த்திருக்கிறார்கள். அதன் பின்னர் வெளியே பார்க்கவில்லை. இக்கிராமத்தை விட்டும் வெளியேறவில்லை. நாம் காத்திருந்துதான் பிடிக்கவேண்டும். கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டாலும் காடுகள் வழியாக சீனப்பக்கம் போய்விடுவான். அவனுக்கு காட்டு வாழ்க்கை மிக எளிது. அவனைப் பிடிக்கவே முடியாது,'' வயதான காவலர் ஒருவர் சொன்னார்.

‘‘நாம் காத்திருப்போம்'' அதிகாரி தலையசைக்க, எல்லோரும் வெளியேறினார்கள்.

அதிகாரி அங்கிருந்த கட்டிலில் படுத்துக்கொண்டார். போலீஸ் அதிகாரியாக இருந்தும் இந்த சிறு அண்டை நாட்டில் வேறு அலுவலாக இந்திய அரசால் நியமிக்கப்பட்டவர். குற்றவாளிகளைப் பிடிப்பது இவர் வேலை அல்ல. ஆனால் இந்த வேலையை இவர்தான் செய்தாகவேண்டும். நிலைமை அப்படி. அதுவும் சட்டத்துக்குப் புறம்பாகத் தான் செய்தாகவேண்டும். நட்புக்காக இதற்கு அவர் ஒப்புக்கொண்டார். அதைவிட உடலில் ஓடும் போலீஸ் ரத்தமும் முக்கியக் காரணம். அவர் இங்கே தேடி வந்திருப்பது இந்திய மாநிலங்களில் ஒன்றைச் சேர்ந்த குற்றவாளி ஒருவனை. அவன் அம்மாநிலத்தில் இயங்கும் மாபியா குழுத்தலைவன்.

சில நாட்களுக்கு முன்பாக இவரது அலுவலகத்துக்கு இந்தியாவில் இருந்து அம்மாநில காவல்துறை தலைவரே போன் செய்துவிட்டார். இவருக்கு அவருடன் முன்பின் அறிமுகம் இல்லை. ஆனால் விஷயம் அவ்வளவு முக்கியமானது. அவசரமானது.

அந்த மாநிலத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைக்காக பல கிராமங்களில் போலீஸுக்கு தகவல் சொல்ல ஆள்வைத்திருப்பார்கள். மவோயிஸ்ட்கள் பற்றியும் மாபியாக்கள் பற்றியும் ரெகுலராக அவர்கள் தகவல் அனுப்புவார்கள். அதை வைத்து போலீஸார் குற்றவாளிகளைப் பிடித்து சட்டம் ஒழுங்கை தங்கள் வழியில் நிலைநாட்டிக்கொண்டிருந்தார்கள்.

அந்த தகவல்களில் ஜும்லாவால் வழி நடத்தப்படும் மாபியா குழு பற்றியும் நம்பிக்கையான ஒன்று கிடைத்தது. காவல்துறை களமிறங்கி அந்த குழுவில் சிலரைப் பிடித்துவிட்டது. உள்மாவட்டம் ஒன்றில் ஒரு கிராமத்தில் இருந்த இன்பார்மர்தான் தகவல் கொடுத்தான். அவனை ஜும்லாவின் ஆட்கள் எப்படியோ கண்டுபிடித்துத் தூக்கிவிட்டார்கள். குடும்பமாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றார்கள். அத்தோடு விட்டிருக்கலாம். அவனது ஒரே மகள்.

சிறுமி. அவளைத் துடிக்கத் துடிக்க கும்பலாக சிதைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அந்த மாநிலத்தின் மனசாட்சியை அசைத்துவிட்டது.

‘‘சட்ட சபையில் எங்கள் போலீஸ் மந்திரி கண்ணீர்விட்டார். எங்கள் மாநில காவல்துறைக்கே இது எவ்வளவு பெரிய சவால் தெரியுமா?'' அம்மாநில காவல்துறை தலைவர் சங்கடத்துடனே பேசினார். இந்த பாதகச் செயலைச் செய்துவிட்டு, ஜும்லா போலீஸ் கையில் சிக்காமல் வேறு எங்காவது போய்த் தொலைந்திருக்கலாம். இந்த அதிகாரி பணிபுரியும் அண்டை நாட்டுக்கு வந்துவிட்டான். இந்தியாவில் தப்பு செய்யவேண்டியது. எல்லை தாண்டி இங்கே வந்துவிடவேண்டியது. இதுதான் கிரிமினல்களின் வழக்கம். இங்கே வந்தால் சிரமமின்றி இருக்கலாம். என்றைக்காவது ஊரைப் பார்க்கும் ஆவலில் வந்தால் அங்கே பிடித்துக் கொள்வார்கள். ஆனால் ஜும்லா விவகாரம் வேறு. அவன் திரும்பிவருவான் என்று காத்திருக்க அம்மாநில போலீஸ் தயாராக இல்லை. அவர்கள் உடனே பழிவாங்கத் துடித்தார்கள்.

ஒரு மாநிலத்தின் காவல்துறைத் தலைவரே தனிப்பட்ட முறையில் வேண்டுதல் விடுத்து கேட்கும்போது உடம்பில் காவல்துறை ரத்தம் ஓடும் அதிகாரி தட்டமுடியுமா?

உடனே இவர் இங்கே இருக்கும் தன் தொழில்முறை நண்பர்கள், தகவல் கொடுப்பவர்கள் எல்லோரையும் தொடர்புகொண்டார். எதுவும் அதிகாரபூர்வமாக செய்யமுடியாது. எல்லாம் நட்பின் அடிப்படையில்தான். இரவுகளில் ஓடும் மதுவின் பின்னணியில்தான்.

ஜும்லா எங்கே இருக்கிறான் என்பது மூன்று நாட்களில் தெரிந்துவிட்டது. இந்த எல்லையோர கிராமத்தில் என்று ஆட்கள் மூலம் இந்நாட்டு காவல்துறை மோப்பம் பிடித்து தகவல் அளித்தது. இந்நாட்டு காவல்துறை மூத்த அதிகாரி இவருடன் சிறுபடையை சீருடை இல்லாமல் அனுப்பி இருக்கிறார்.  ஆனால் அந்த கிராமத்திலிருந்து அவன் வெளியே வருவதாகத் தெரியவில்லை. அதிகாரி இந்த குடிசையில் மூன்று நாட்களாகக் காத்திருக்கிறார், ஓசை காட்டாமல், யார் கவனத்தையும் கவராமல் இவர்கள் பதுங்கி இருக்கிறார்கள். இரவுகளில் பாட்டில்கள் காலியாகிக் கொண்டிருந்ததைத் தவிர எந்த சலனமும் இல்லை. அதிகாரியின் பதற்றம் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதிகமாக சிகரெட்டுகளைப் பிடித்துக்கொண்டிருந்தார்.

நான்காம் நாள் மதியம் மங்கள் பிரசாத் மனைவி செய்தி அனுப்பி இருந்தாள். வீட்டில் கோதுமை காலியாகிவிட்டது. சின்னவளுக்குக் காய்ச்சல்.

இங்கே சமையல் வேலையில் கோழியும் ரொட்டியுமாக கொழிப்பதில் அவனுக்கு வருத்தம்தான். சீக்கிரம் இவர்கள் வந்தவேலை முடிந்தால் கூலி கிடைக்கும். அதைக் கொண்டுபோகலாம். ஒருவேளை நீண்டுகொண்டே போனால் கொஞ்சம் காசு கேட்டு வாங்கி மனைவிக்கு அனுப்பி வைக்கலாம் என நினைத்துக்கொண்டான்.

அன்று மாலையில் மங்கள் பிரசாத் டீ கொண்டு வந்திருந்தபோது அதிகாரி உச்சகட்ட சோர்வில் இருந்தார். அவருக்குப் புத்துணர்ச்சி தேவைப்பட்டது.

‘‘இரவு சாப்பாடு என்ன?''

‘‘கோழி வறுக்கிறேன் ஸாப்''

‘‘ நாலு நாளாய் கோழி மட்டும்தானா... இங்கே வேறெதுவும் கிடைக்காதா?''

‘‘கிடைக்கும். ஸாப்.. நீங்க சாப்பிடுவீங்களான்னு தெரியாதே..''

‘‘நான் எல்லாவற்றையும் சாப்பிடுவேன்.. மாடு... பன்றி.. முயல். கிராமப்புற ஸ்டைலில் எதாவது சாப்பிட ஆசை. இங்கே பன்றி கிடைக்குமா?''

‘‘கிடைக்கும். காட்டுப்பன்றி.. அதை பெதல் என்று சொல்வோம். உங்கள் ஊரில் பண்ணைகளில் வளர்க்கும் பன்றிதான் சாப்பிட்டு இருப்பீர்கள். அதில் தோல், அதன் கீழ் கனமான கொழுப்பு, பிறகு தசை என்று இருக்கும்..''

‘‘ஆமாம். அதன் கொழுப்புக்காகவே நான் ருசித்து சாப்பிடுவதுண்டு... எண்ணெயே ஊற்றாமல் சமைக்கலாம். சூடு ஏறியதும் கொழுப்பு உருகி ஓடும்,''

‘‘பெதல் கறி வித்தியாசமாக இருக்கும். அதன் தோலும் கொழுப்பும் ஒன்றாக இருக்கும். கொழுப்பு என்று தனிப் பகுதி இருக்காது. பிறகு தசை வரும். கொழுப்பு இல்லை என்று நினைக்கவேண்டாம். கறியை சூடு பண்ணினால் உள்ளே இருந்து கொழுப்பு ஆறாக ஓடும். அதன் சுவையே தனி!'' மங்கள் பிரசாத்தின் முகத்தில் சுவையான இறைச்சியைப் பற்றிய பேசும்போது உருவாகும் பொதுவான மகிழ்ச்சி தோன்றியிருந்தது. ‘‘ஏன் பெதல் சுவையாய் இருக்கிறது தெரியுமா? இந்த காட்டுப்பன்றி கிழங்குகளைத்தான் தோண்டி உண்ணும். ஐந்தடி ஆழம் வரை தோண்டிவிடும் அதன் மூக்குப் பகுதி அவ்வளவு வலிமையானது. இங்கே பலரும் வீட்டருகே கிழங்குகள் தான் போட்டிருப்பார்கள். இவை வந்து தோண்டித் தின்றுவிடும் என்பதால் இவற்றை வேட்டையாடுவதை பெருமைக்குரிய விஷயமாகவே வைத்திருக்கிறார்கள். நீண்ட கோரைப்பற்கள் தந்தம்போல் வாய்க்கு வெளியே நீண்டிருக்கும். இவற்றை வேட்டை ஆடுவதும் சாமான்ய வேலை அல்ல. தனியே மாட்டினால் ஆளைச்சாய்த்துவிடும்..சாப்...''

‘‘பிறகு எப்படி வேட்டை ஆடுவது?''

‘‘எங்கள் நாட்டில் காவல்துறைக்கும் ராணுவத்துக்கும் மட்டும் எப்போதும் இவற்றை விவசாயிகள் நலனுக்காக வேட்டை ஆட அனுமதி உண்டு. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் அனுமதி கொடுத்தால்...''

‘‘இவன் சொல்வது உண்மைதானா? பெதல் வேட்டைக்குப் போகலாமா?'' என்று அதிகாரி முதிய காவலர் ஒருவரைக் கேட்டார்.

‘‘உண்மைதான் ஸாப்... நீங்கள் சாப்பிட விரும்பினால் உடனே கிளம்பி வேட்டை ஆடிவிடுவோம்'' என்றார் அவர்.

 ‘‘ ஆனால் ஒரு பிரச்னை ஸாப்...'' என்றான் மங்கள் பிரசாத்.

‘‘என்ன?''

 ‘‘நாம் சுட்டது தெரிந்தால் சுற்றுப்புறத்தில் இருக்கும் எல்லோ மக்களும் உரிமையோடு வந்துவிடுவார்கள். பங்கு கேட்பார்கள். பெதல்கறி எங்கள் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். அது கிடைத்தால் அன்று மதுவோடு ஊரே களை கட்டிவிடும்.''

 ‘‘ம்.. அப்படியா? அவ்வளவு ஆசையா?''

‘‘ஆமாம் சாப்.... பெதலின் தொடையை தீயில் வாட்டி லேசாக மசாலா தடவி சமைத்துத் தருகிறேன்... நீங்கள் சாப்பிட்டே இருக்கமாட்டீர்கள்.. அப்படி ஒரு ருசி இருக்கும்''

‘‘நீ சொல்லும்போதே எச்சில் ஊறுகிறதே...''

‘‘ஆமாம் சாப்... இங்கே பெதல் வேட்டையைத் தடை செய்துவிட்டார்கள். ரொம்ப நாளாக எங்கள் ஆட்கள் பன்றி சாப்பிடாமல் காய்ந்து கிடக்கிறார்கள். நீங்கள் அனுமதி கொடுத்தால் நான் உங்கள் ஆட்களுடன் போய்ச் சுட்டு எடுத்துவருகிறேன்.. ''

‘‘பன்றி என்றால் ஊரே கூடிவிடும் என்றுதானே சொன்னாய்...''

‘‘ஆமாம் ஸாப்.. இவனுங்க பன்றிப் பிரியர்கள்! கொண்டாட்டத்தை அந்த இடத்திலேயே தொடங்கிவிடுவார்கள்.. யாரும் வீட்டில் இருக்கமாட்டார்கள்''

அதிகாரி நிமிர்ந்து உட்கார்ந்தார். அவருக்குள் ஒரு நம்பிக்கை வந்துவிட்டது.

‘‘நீ சொன்னதுபோல் நடந்தால் எங்களுக்கு நல்லதுதான். நாங்கள் எதற்கு வந்திருக்கிறோம் என்று உனக்குத்தெரியுமல்லவா?''

‘‘ஆமாம் ஸாப். காவலர்கள் சொன்னார்கள். அந்த திருட்டுப்பயல் செய்த காரியத்துக்கு அவனை நானே நசுக்கிவிடுவேன்...''

‘‘பன்றிக்கறிக்கு ஆசைப்பட்டு ஊரே திரண்டு வரும்போது அவனும் வருவானா?''

‘‘வருவான். நிச்சயம் வருவான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பவனால் பன்றிக்கறியின் அழைப்பை மீறமுடியாது. இவனும் கூடவே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது... வாய்ப்பென்ன வாய்ப்பு? அவன் நிச்சயம் வருவான்''

அதிகாரியின் முகத்தில் மீசையைத்தாண்டி பெரிய புன்னகை மலர்ந்தது.

 ‘‘இதுமட்டும் நடக்கட்டும் பிரசாத்... இந்த யோசனையால் உன் வாழ்க்கையே மாறிவிடும். உன் மூன்று மகள்களின் எதிர்காலமே வளமாகிவிடும்...'' என்றார், கனிவாக.

அன்று இரவு அவரும் வேட்டைக்குப் போனார். அதிகாரி வேட்டைப் பிரியர் அல்ல. ஆனால் மனித இனத்தில் ஒரு கொடூரமான விலங்கை அழிப்பதற்காக சில பன்றிகளை கொன்றுதான் ஆகவேண்டும் என்று தனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டார். அவை அப்பாவிகள்தான். அவற்றுக்குக் குட்டிகள் இருக்கும். அவை அம்மாவிடம் பால்குடிக்க குட்டிகள் எங்காவது புதரில் காத்திருக்கலாம். இருளில் எந்தப் பன்றி என்று பார்த்தா சுடமுடியும்? இரண்டு பன்றிகள் அன்று உயிர் நீத்தன. கறுத்து கொழுத்த பன்றிகள். ஒவ்வொன்றும் எழுபதுகிலோ இருக்கும். உடலில் இருந்து கழுத்தும் தலையும் நீண்டு இருந்தன. அவற்றைத் தூக்கிவந்து, நெருப்பில் கட்டித் தொங்கவிட்டு வாட்டி, உடலின் மேலிருந்த மயிர்களைப் பொசுக்கி, பிறகு கூறுபோட்டார்கள். காலையில் கிராமத்தின் அங்காடிப் பகுதியில் அவை கறியாய்த் தொங்கின. அதிகாரி போட்ட தூண்டிலுக்கு அந்த சின்ன கிராமமே திரண்டு வந்துவிட்டது. அந்தக் கூட்டத்தின் நடுவில் ஜும்லாவும் இருந்தான். ஓசைப்படாமல் தூக்கிவிட்டார்கள். அப்படியே எல்லைக்குக் கொண்டுபோய் இந்தியப் பகுதியில் காத்திருந்த இந்தியக் குழுவிடம் ஒப்படைத்து விட்டார்கள்.

செல்லும் வழியில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு தேநீர் அருந்திய இடைவெளியில் ஜும்லாவின் முகத்தை அதிகாரி பார்த்தார். அந்த சிறுமி என்ன பாவம் செய்தாள் எனக் கேட்கத் தோன்றியது. ஆனால் கேட்கவில்லை.

சில நாட்கள் கழித்து தொலைக்காட்சியில் ஒரு மாபியா தலைவன் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக செய்தி வந்தபோது, ஒரு நிமிடம் ஜன்னல் வழியாக சாலையை அதிகாரி வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

 இதற்கு மறுநாளே இந்தியாவில் இருந்து அந்த மாநிலத்தின் காவல்துறை தலைவரே நேரடியாக இங்கு வந்துவிட்டார்.

 ‘‘ரொம்ப நன்றி..'' என்றார். உண்மையில் ஓர் அதிகாரி சொல்லும் வார்த்தைகள் இதயத்தில் இருந்து வருகின்றனவா... உதட்டில் இருந்து வருகின்றனவா என்பதை இன்னொரு அதிகாரியால் உணர்ந்துகொள்ள முடியும். அவர் நிஜமாகவே நெகிழ்ச்சியுடன் இருப்பதை அதிகாரி கண்டுகொண்டார்.

அவர் ‘‘நான் உங்களுக்கு இதற்கு கைம்மாறாக என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டார். அவர் தடித்த கண்ணாடிக்குள் இருந்த கண்களில் என்னவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது போல் தோன்றியது.

‘‘இங்கே நமக்கு உதவி செய்த இந்நாட்டு போலீஸ்காரர்களுக்கு சம்பளமெல்லாம் ரொம்ப கம்மி..'' என்றார் அதிகாரி.

காவல்துறைத் தலைவர் புரிந்துகொண்டார். ‘‘பன்றியெல்லாம் கஷ்டப்பட்டு சுட்டிருக்கிறார்கள்'' கபகபவென சிரித்தார்.

 ‘‘அப்புறம் மங்கள் பிரசாத் என்றொரு சமையல்காரன் இருக்கிறான்..! அவன் சமைக்கும் பன்றிக்கறியை நீங்கள் ஒரு நாள் சாப்பிடவேண்டும்!''

ஜூன், 2021 அந்திமழை இதழ்

logo
Andhimazhai
www.andhimazhai.com