பசித்த மிருகம்

பசித்த மிருகம்
Published on

அந்த மிருக்காட்சி சாலையை ஆரம்பித்தவர் இ.எம், பிராங்களின். மாகாண கவர்னராக இருந்த காலத்தில் தனது வளர்ப்பு பிராணிகளாக இருந்த புலி, கரடி, முதலை மற்றும் நெருப்புக்கோழி உள்ளிட்ட 32 விலங்குகளைக் கொண்டு நகரின் வடகோடியில் இருந்த கிளார்மென் தோட்டத்தில் துவக்கினார்.

எதற்காக ஒரு நகருக்கு மிருகக் காட்சிசாலை தேவை என யாருக்கும் புரியவில்லை, பிராங்களினின் மருமகன் கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய பொறுப்பில் இருந்த காரணத்தால் வணிகத்திற்காக கப்பல்கள் செல்லும் நாடுகளில் இருந்து விதவிதமான வனவிலங்குகள் அந்த மிருகக்காட்சிசாலைக்காக  கொண்டுவரப்பட்டன.

அப்படி தான் நீர்யானை ஒன்றும் பனிக்கரடி ஒன்றும் பரிசாக தரப்பட்டு கப்பலில் கொண்டுவரப்பட்டன, அதை மக்கள் ஒரு மாத காலம் வியப்போடு வேடிக்கை பார்த்தார்கள். சிலரது கனவுகளிலும் நீர்யானை வந்து போனது.

மிருகக்காட்சிசாலையில் இருந்த விலங்குகளுக்கு சரியாக காலை ஏழு மணிக்கு உணவு அளிக்கும் பழக்கத்தை பிராங்களின் தான் உருவாக்கினார். விலங்குகளுக்கு இரண்டு வேளை உணவு அளிக்கப்பட வேண்டும். அன்றாடம் காலை உணவை அவரே கொடுத்து துவங்கி வைப்பார். மூன்று பணியாளர்கள் உதவி செய்வதற்காக நியமிக்கபட்டிருந்தார்கள் என்றாலும் முனுசாமி தான் இதன் பொறுப்பாளராக இருந்தார்.

அவரது வேலை மிருகங்களுக்கு தேவையான இறைச்சி, எலும்புகள் வாங்கி வருவது, தின்று முடித்துப் போட்ட எலும்புகளை சுத்தம் செய்வது, குடிநீர் தொட்டியை நிரப்பி வைப்பது, பழங்கள் காய்கறிகளை வெட்டி கலவையாக்குவது இவையே.

தினமும் நூற்றுக்கணக்கான கிலோ மாட்டு இறைச்சியும் பன்றி இறைச்சியும் மீன்களும், முயல்களும், எலிகளும். காய்கறிகளும், தானியங்களும் பழங்களும் மிருகங்களுக்கான உணவாக வாங்கப்பட்டன.

முனுசாமி வாரம் ஒருமுறை சிங்கத்திற்கான குதிரைமாமிசம் வாங்குவதற்காக ஹஸ்தம்பூர் வரை போய்வருவார்.

தென்னாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் இந்த மிருகங்களுக்கு வாரம் ஒருநாள் மட்டுமே உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நாட்களின் பசி தாங்கமுடியாமல் மிருகங்கள் ஒலமிடுவதை முனுசாமி கேட்டிருக்கிறார், மனிதர்களைப் போலவே மிருகங்களும் பசி தாங்கத் தெரியாதவை. மிருகங்கள் சாப்பிடும் போது பதற்றமாகவேயிருக்கின்றன. அடிக்கடி உணவு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தோடு தலையை திருப்பிப் பார்த்துக் கொள்கின்றன. இன்னொரு விலங்கு எவ்வளவு சாப்பிடுகிறது என எந்த விலங்கும் நின்று கவனிப்பதில்லை, பொறாமை கொள்வதில்லை. பஞ்சகாலத்தில் மிருகங்களிடையே சில விசித்திரமான பழக்கங்கள் உருவாக ஆரம்பித்தன. குறிப்பாக இணை சேர்வதில் நாட்டமற்று போயின. உறங்க மறுத்தன. அதை விட தன்னை இன்னொரு மிருகம் தாக்கப்போவதை போல கற்பனையாக நினைத்துக் கொண்டு திடுக்கிட்டு பாய்ந்தன. ஒரு கரடி உடலில் படும் வெயிலை உதறுவது போல நாள் முழுவதும் உடம்பை குலுக்கிக் கொண்டேயிருந்தது. 

எந்த மிருகம் எப்போது தன்னை அடித்துக் கொன்று தின்றுவிடுமோ என்ற அச்சத்திலே தான் முனுசாமி உணவளிப்பார், ஆனால் அவர் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை.

பிராங்களின் இங்கிலாந்திற்கு செல்லும் போது தனது வருவாயில் ஒரு பகுதியில் மிருகங்களின் உணவு தேவைக்காக ஒதுக்கி உயில் எழுதி வைத்துவிட்டு போனார். அந்த பணத்திலிருந்து தான் மிருகங்களின் உணவுத்தேவை சமாளிக்கப்பட்டு வந்தது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒரு முறை வெள்ளையர்களை எதிர்க்கும் விதமாக அந்த மிருக்காட்சி சாலையின் கூண்டுகளை யாரோ திறந்துவிட்டார்கள். ஆனாலும் ஒரு மிருகம் கூட வெளியேறிப் போகவோ, மனிதர்களைத் தாக்கவோ முயலவில்லை, பழக்கம் ஒரு கொடிய வியாதி. மிருகக்காட்சி சாலையில் இருந்த விலங்குகள் உணவுக்காக தேடியலையும் மனமற்றவை, அவை வேளைக்கு போதுமான உணவு, குடிநீர், ஒய்வு என பழகிப்போயிருந்தன.

சுதந்திரம் பெற்ற பிறகு  அந்த மிருக்காட்சி சாலையை கைவிடப்போவதாகவும், அதிலிருந்த விலங்குகளை வனத்தில் கொண்டு போய்விடுவது எனவும் மாநில சர்க்கார் அறிவித்தது. ஆனால் அப்படி மிருகங்களை கைவிடுவதை தன்னால் ஏற்கமுடியாது என ஏ.வி.ஜி. அப்பாராவ் தானே மிருகங்களின் பராமரிப்பு செலவை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அப்பாராவ் மிகப்பெரிய வணிகராகவும், நகரின் முக்கிய புள்ளியாகவும் இருந்த காரணத்தால் அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்கள்.

அப்பாராவ் கூடுதலாக ஒரு நிபந்தனை விதித்தார், மிருக்காட்சி சாலைக்கு வைக்கபட்டிருந்த பிராங்களின் பெயரை மாற்றி தனது மகளான வித்யாதரணி பெயரை வைக்க வேண்டும் என்றார். மிருக்காட்சி சாலைக்கு எதற்காக ஒரு பெண்ணின் பெயர் வைக்கப்பட வேண்டும் என யாரும் கேட்டுக் கொள்ளவில்லை. அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுமாயின் தானே மிருக்காட்சி சாலையின் நுழைவாயிலில் ஒரு ஆர்ச் அமைத்து தருவதோடு பார்வையாளர்களுக்காக நிழல்குடைகளும் அமைத்து தருவதாக சொன்னார். கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதன்பிறகே மிருகங்களின் உருவம் பொறித்த அலங்கார ஆர்ச் ஒன்று அமைக்கப்பட்டது, அதன் உச்சியில் வித்யாதரணி மிருகக்காட்சி சாலை என ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதப்பட்டது.

அந்த வித்யாதரணி எப்படி இருப்பாள் என்று யாரும் கண்டதேயில்லை. அப்பாராவ் இறக்கும் வரை தினமும் மிருக்காட்சி சாலைக்கு வருவார்.  எல்லா மிருகங்களுக்கும் அவர் ஒரு செல்லப்பெயர் வைத்திருந்தார். அவரது பிறந்த நாளில் அனைத்து மிருகங்களுக்கும் விஷேச உடை அணிவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவு  போட்டார்.

இதற்காக கனகராஜன் என்ற டெய்லர் நியமிக்கபட்டான், அவன் மிருகங்களுக்கு வண்ண உடைகள் தைத்து தருகிற வேலையை செய்யும் அதிசய மனிதனாக செயல்பட்டான். சில நேரம் இந்த உலகில் சிங்கத்திற்கு டிரஸ் தைக்கும் ஒரே கலைஞன் தான் மட்டுமே என கனகராஜனுக்குத் தோன்றும்.

இந்த உடைகளை எப்படி மிருகங்களுக்கு அணிவிப்பார்கள், அதை மாட்டிக் கொண்டு அவை எப்படி நடந்து கொள்ளும் என அவனாக கற்பனை செய்து கொண்டிருப்பான், இதை எப்படி சாத்தியப்படுத்தினார்கள் என ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனால் அப்பாராவின் பிறந்தநாளில் மிருகங்கள் வண்ணஉடை உடுத்தியிருந்தன, அந்த புகைப்படம் மதராஸ் மெயிலில் கூட வெளியாகி இருந்தது.

ஒரு முறை அந்த மிருகக்காட்சி சாலையை பார்வையிட இங்கிலாந்து இளவரசர் வந்திருந்தார். அதற்காக சிறப்பு பேண்ட் வாசிப்பு நடைபெற்றது. அவர் திறந்த ஜீப் ஒன்றில் மிருக்காட்சி சாலையை சுற்றி பார்த்தார். அப்போது ஒரு கருங்குரங்கு அவர் மீது காய்ந்த வாழைப்பழத் தோல் ஒன்றை வீசி எறிந்துவிட்டது. ஆகவே அவர் பாதியில் திரும்பி போய்விட்டார் என்றார்கள். அந்த குரங்கை நாடு கடத்திவிட்டார்கள். கைது செய்யப்பட்ட மனிதர்களை போலவே அக்குரங்கும் பெயர் அறியாத ஏதோவொரு தீவிற்கு கொண்டு போகப்பட்டது.

இன்னொரு முறை ஒரு மழைக்காலத்தில் மிருகங்கள் யாவும் ஏழு நாட்களுக்கு பகலிரவாக கத்திக் கொண்டேயிருந்தன. வைத்தியர் வந்து பார்த்து மருந்து கொடுத்த போது அவை ஏன் கத்துகின்றன என அறிந்து கொள்ளவே முடியவில்லை. மழை நாளின் இரவுகளில் தான் நகரவாசிகள் மிருகக்காட்சிசாலையின் இருப்பை முழுமையாக உணர்ந்தார்கள். திடீரென ஒரு இரவு மிருகங்கள் கத்துவதை நிறுத்திக் கொண்டு விட்டன. எதற்காக சப்தமிட்டன, ஏன் நிறுத்திக் கொண்டன என்பது இன்றுவரை புதிராகவே இருக்கிறது.

நகரின் வடபகுதியில் இருந்து தென்பகுதிக்கு மிருக்காட்சி சாலை மாற்றப்பட்டபிறகு மாநில அரசு பராமரிப்பு செலவு அதிகமாகிக் கொண்டே போகிறது என நுழைவு கட்டணமாக ஐம்பது ரூபாயை நிர்ணயம் செய்தது. இதனால் பார்வையாளர்கள் வருவது குறைந்து போனது, சில நாட்கள் ஒருவர் கூட வராமலும் போனார்கள்.

மிருகக் காட்சி சாலையின் பணியாளர்கள் சிலர் மிருகங்களுக்காக வாங்கப்படும் இறைச்சியை திருடிக் கொண்டு கள்ளத்தனமாக விற்க துவங்கினார்கள். ஒருமுறை புலிக்குட்டி ஒன்று திருடிக் கொண்டு போகப்பட்டு வெளிநாட்டு வியாபாரியிடம்  விற்கப்பட்டு பிடிப்பட்டது. இன்னொரு முறை மிருகக் காட்சி சாலையின் உள்ளே பகலில் ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டாள். போலீஸ் விசாரணையில் இதை பார்த்த ஒரே சாட்சியாக கொரில்லா குரங்கை பதிவு செய்திருந்தார்கள். அந்த குரங்கின் புகைப்படம் எல்லா நாளிதழ்களிலும்  வெளியாகியிருந்தது.

1984ல் ஒருநாள் மிருக்காட்சி சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த காலி மரப்பெட்டிகள் தீப்பிடித்துவிடவே நிமிச நேரத்திற்குள் தீ கொளுந்துவிட்டு எரிய துவங்கியது. அந்த தீவிபத்தில் ஒரு மிருகம் கூட காயமடையவில்லை. பணியாளர்கள் மூவர் மட்டுமே காயம்பட்டார்கள், இரும்புக்கூண்டுகளில் கரும்புகையும் தூசியும் படிந்து போனது.

அதன்பிறகு தீவிபத்து குறித்த முழுமையான விசாரணை நடைபெற்றது. அரசு சிறப்பு நிதி ஒதுக்கி மிருகக்காட்சியை புதுப்பிக்க துவங்கியது. அப்போது தான் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் பதினாறு ஊழியர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள். அலுவலகத்திற்காக இரண்டு ஜீப்புகளும் அதிநவீன கேமிராக்களும் உப கரணங்களும் வாங்கப்பட்டன.

இரண்டு வாட்ச் டவர்களும் அமைக்கப்பட்டன.  மிருகக்காட்சி சாலையில் வழி முழுவதும் ஆள் உயர தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு அதில் இயற்கைக் காட்சிகள் ஒவியங்களாக வரையப்பட்டன. இரவில் திருடர்கள் நுழைந்துவிடாமல் மின்வேலி ஒன்றும் அமைக்கபட்டது.

சிறுத்தை, பென்குவின், சிங்கம், கரடி, நீர் யானை, காண்டாமிருகம்,  என மிருகக்காட்சி சாலை யிலிருந்த ஒட்டு மொத்த  விலங்குகளும் சேர்ந்து தினம் ஒன்றுக்கு 500 முதல் 900 கிலோ உணவு தேவைப்பட்டது, வாரம் ஒருமுறை குதிரை மாமிசம் இத்துடன் விட்டமின் மாத்திரைகள், முயல், பழங்கள், பச்சைப்புல், காய்கறிகள்.  தானியங்கள், வெங்காயம், மீன்கள் எலிகள், கோழிக்குஞ்சுகளும் உணவாக அளிக்கப்பட்டன. பதினாறு விதமான மெனு விலங்குகளுக்காக உருவாக்கப்பட்டது. இதை தயாரிப்பதும் மிருகங்களுக்கு விநியோகம் செய்வதும் பெரிய வேலைச்சுமையாக இருந்தது. அதில் குதிரை மாமிசம் கிடைக்காமல் போவதால் டெண்டர் கொடுத்து வெளியில் இருந்துகொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த சூழலில் ஒரு நாள் மிருகக் காட்சி சாலையின் சிறப்பு அதிகாரியை காண்பதற்காக ஒருவன் வந்து காத்துக் கொண்டிருந்தான். வழக்கமாக ஏதாவது பத்திரிகை நிருபர்கள் தான் அவரிடம் மிருக்காட்சி சாலை குறித்து தெரிந்து கொள்ளவோ, புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டோ காத்துகிடப்பார்கள். ஆனால் இந்த மனிதன் அப்படியானவன் போல தெரியவில்லை, கறுப்பு பேண்டும், கசங்கிப் போன நீலநிற சட்டை அணிந்தவனாகயிருந்தான். முப்பது வயதிருக்கும், ஆறடி உயரத்தை விட அதிகமாகவே இருப்பான் போலிருந்தது. காலில் ரப்பர் செருப்புகள் அணிந்திருந்தான்.

சிறப்பு அதிகாரியை எதற்காக பார்க்க வேண்டும் என அலுவலக ப்யூன் கேட்டதற்கு ஒரு உதவி கேட்க வேண்டும் என அவன் மெதுவான குரலில் சொன்னான். சிறப்பு அதிகாரியை பார்ப்பதற்கு மதியம் வரை அங்கேயே  காத்திருக்க வேண்டி இருந்தது. உணவு இடைவேளையில் அவனை அழைத்த அதிகாரி எதற்காக அவன் காலையில் இருந்து காத்துகிடக்கிறான் என கடுகடுப்பான குரலில் கேட்டார்.

எனக்கு ஒரு வேலை வேண்டும் என்றான் அந்த மனிதன்.

வேலையா, இங்கேயா, என்பது போல குழப்பத்துடன் அவனை ஏறிட்டு பார்த்துவிட்டு வேலை ஒண்ணும் கிடையாது. இது என்ன எம்ப்ளாய்மெண்ட் ஆபீசா என கையை விரித்தார் சிறப்பு அதிகாரி.

என்னை வேலைக்கு வைத்துக் கொண்டால் மிருக்காட்சி சாலைக்கு மிகவும் உதவிகரமாக இருப்பேன் என்றான் அந்த மனிதன்.

இங்கே இருப்பவர்களுக்கே வேலையில்லை. போய் வேறு எங்காவது வேலை தேடு என அவனை துரத்தி அனுப்பி வைத்தார்.

அவன் அமைதியாக வெளியேறிப் போனான்.

அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு மிருகங்களுக்காக உணவு தயாரித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த மனிதன் திரும்ப வந்து நின்றிருந்தான். அவனை கண்ட உயரதிகாரி உன்னை யார் உள்ளே விட்டது, வேலையில்லை என நேற்றே சொன்னேனே என சப்தம் போட்டார்.

என்னை ஏதாவது மிருகம் உள்ள கூண்டிற்கு அழைத்துப் போய் காட்டுங்கள், கூடவே சாப்பாடு கொண்டு வாருங்கள்,  என்றான் அந்த மனிதன்.

எதற்கு எனக்கேட்டார் சிறப்பு அதிகாரி.

என் மீது அப்போது தான் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் எனச் சொன்னான். அவனை ஒரு கரடி கூண்டின் அருகே கூட்டிப் போனார்கள், கரடி பசியோடு காத்துக் கொண்டிருந்தது, இரும்பு வாளியில் கொண்டுவரப்பட்ட மீன்களை கண்ட கரடி பசியோடு அருகில் வந்தது, அந்த மனிதன் கரடியை வெறித்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு தனது கைகளை நீட்டி கரடியை லேசாக தொட்டான். அந்த கரடி அவனை ஏறிட்டுப் பார்த்தது. அவன் கரடியை தடவி விட்டான். கரடி தலையை அசைத்தபடியே  சாப்பாட்டை விலக்கிவிட்டு தனது இடத்தில் போய் படுத்துக் கொண்டது. இனி அந்த கரடிக்கு பசிக்காது, அதன் பசி தீர்ந்துவிட்டது என்றான் அந்த மனிதன்.

எப்படி எனப்புரியாமல் கேட்டார் சிறப்பு அதிகாரி.

நான் எந்த மிருகத்தை தொட்டாலும் அதன் பசி தீர்ந்து போய்விடும்,  அதனால் தான் உங்களிடம் வேலை கேட்கிறேன் என்றான்.

நிஜமாகவா என கேட்டார் அதிகாரி.

நாளை காலை வரை இக்கரடிக்கு பசிக்கவே பசிக்காது என்றான் அந்த மனிதன்.

எப்படி எனக்கேட்டார் சிறப்பு அதிகாரி.

அது எனக்கும் தெரியவில்லை, எப்படியோ ஒரு மாய சக்தி எனக்கு கைகூடியிருக்கிறது என்றான் அந்த மனிதன்.

அவனை பரிசோதனை செய்வதற்காக ஒவ்வொரு மிருகமாக கூட்டிக் கொண்டு போனார்கள். அவன் கையால் தொட்ட மறுநிமிசம் சிறுத்தை, காண்டாமிருகம், நீர்யானை, குரங்கு, வரிக்குதிரை என அத்தனை மிருகங்களும் பசியடங்கி படுத்துக் கொண்டன. வாளி வாளியாக கொண்டு வந்த உணவு அப்படியே இருந்தது, சிறப்பு அதிகாரியால் நம்பவேமுடியவில்லை.

விரலால் தொட்டு பசியை போக்கிவிட முடியுமா, எப்படி இது சாத்தியம்.

இரவு வரை அவனை தனது அலுவலகத்திலே இருக்கச் செய்தார். அவன் சொன்னது போலவே எந்த மிருகத்திற்கும் பசிக்கவேயில்லை. உற்சாகமாக அவை உலவிக் கொண்டிருந்தன.

அவன் ஒரு அபூர்வமான மனிதன் என உணர்ந்த அதிகாரி உள்ளுக்குள் சிரித்தபடியே மிருகக்காட்சிசாலைக்கு உணவு அளிக்க வருஷம் ஒன்றரை கோடி செலவு ஆவது இனி மிச்சம். அத்தோடு உணவு தயாரிக்க வேண்டிய வேலையில்லை. பணியாளர்கள் தேவையில்லை என முடிவு செய்தபடியே அவனிடம் உனக்கு வேலை தருகிறேன், எவ்வளவு சம்பளம் தேவை எனக்கேட்டார்.

அவன் தனக்கு ஒருநாளைக்கு அறுபத்தைந்து ரூபாய் சம்பளம் தந்தால் போதும் என்றான்.

சிறப்பு அதிகாரி அதற்கு ஒத்துக் கொண்டார், அந்த மனிதன் நாளை முதல் வேலையை ஏற்றுக் கொள்வதாக கூறியபடியே தினமும் மாலையில் தனக்கான சம்பள பணத்தை கையில் தந்துவிட வேண்டும், காரணம் தனக்கு வயிறு பசிக்கும், அதை வைத்துக் கொண்டு தான் உணவு சாப்பிட வேண்டும் என்றான்.

உனது மாயத்தை கொண்டு உன் பசியை போக்கிக் கொள்ள முடியாதா என  அதிகாரி கேட்டார்.

மனிதர்கள் விஷயத்தில் எந்த மாயமும் பலிப்பதில்லை என்றான் அந்த மனிதன்.

உன் பெயர் என்னவென்று கேட்டார் சிறப்பு அதிகாரி. லோகு என்றான்.

மறுநாள் முதல் லோகு காலை ஆறரை மணிக்கு மிருக காட்சி சாலைக்குள் வரத்துவங்கினான். ஒவ்வொரு மிருகமாக தேடிப்போய் தனது கைகளால் வருடிக் கொடுப்பான், அவன் விரல்பட்டதும் அந்த மிருகங்கள் வயிறு நிறைய சாப்பிட்டது போன்ற சந்தோஷத்தில் கண்கள் ஒளிர துள்ளியோடும். சில சமயம் அவன் பசியடங்கிய மிருகங்களை வெறித்து பார்த்தபடியே உட்கார்ந்திருப்பான். அவற்றோடு பேசுவான். பசியில்லாமல் போனதால் மிருகங்களிடம் விளையாட்டு தனம் மேலோங்கியது, அவை உற்சாகமாக சுற்றியலைந்தன.

அவன் வேலைக்கு சேர்ந்தபிறகு வண்டி வண்டியாக மாமிசம் வாங்கி வர வேண்டிய வேலையில்லை. உணவு தயாரிக்கவோ, எலும்புகளை சுத்தம்செய்யவோ தேவையில்லாமல் போனது. பணியாளர்கள் அத்தனை பேரும் சுகமாக ஒய்வெடுத்தார்கள். சிலர் நாள் முழுவதும் சீட்டு விளையாடினார்கள். லோகு நாள் முழுவதும் மிருக காட்சி சாலைக்குள் சுற்றிக் கொண்டேயிருந்தான். மிருகங்களை தவிர அங்கிருந்த மனிதர்களுடன் அவர் பழகவேயில்லை.

ஒருநாள் மாலை ரத்னம் என்ற வயதான பணியாளர் எப்படி அவனுக்கு இந்த மாயசக்தி கிடைத்தது எனக்கேட்டார்.

இது ஒன்றும் மாயசக்தியில்லை, தினமும் எனது நாயை தடவிக் கொடுத்துக் கொண்டேயிருந்தேன், ஒரு நாள் எனது தொடுதலே போதும் என அந்நாய் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டது, அப்போது தான் பசியை வெல்லும் வழியை கண்டுபிடித்தேன் என்றான் லோகு.

இந்த மந்திரத்தை எனக்கு கற்றுக் கொடுத்துவிட்டால் நானும்  பொண்டாட்டி பிள்ளைகளும் நிம்மதியாக இருப்போம், வேலைக்குப் போய் அவதிப்பட வேண்டியது கிடையாதே என்றார் ரத்னம்.

மனிதர்களின் பசி வேறுவிதமானது, அதை எவராலும் வெல்லமுடியாது என்றான் லோகு.

பசியில் என்ன வேறுபாடு எனக்கேட்டார் ரத்னம்.

மனிதனுக்கு பசி வயிற்றில் இல்லை, மனதில் இருக்கிறது. மனிதர்கள் பசிக்காக கிடைத்த எதையும் சாப்பிடுகிறவர்கள் இல்லை, ஆசையே பசியாக மாறுகிறது. எவ்வளவு சிறந்த உணவை சாப்பிட்டாலும் மனிதனுக்கு பசி அடங்கிப் போவதேயில்லை, சாப்பாட்டை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறான். மனிதர்கள் உயிர் வாழ்வதற்காக சாப்பிடுகிறவர்களில்லை.

உண்மை தான். ஆனால் என்னை போன்ற ஏழை எளியவர்கள் பசியால் அவதிப்படுகிறோம். இந்த பசி மட்டும் இல்லாமலிருந்தால் வாழ்க்கையில் நிம்மதியாக இருப்போம். இதற்கு ஒரு வழி கண்டுபிடித்து சொல், புண்ணியமாக இருக்கும் என்றார் ரத்னம்.

செத்தவனுக்கு கூட படையல் வைப்பவன் மனிதன், வேறு எந்த உயிரினமும் இப்படி நடந்து கொள்ளாது எனச் சொல்லி சிரித்தான் லோகு.

விலங்குகளாவது பசியில்லாமல் இருக்கிறதே என ரத்னம் ஆறுதல் கொண்டார். இப்படியொரு அதிசய மனிதன் தங்கள் மிருக காட்சியில் இருக்கிறான் என்ற தகவலை கூட வெளியுலகம் தெரிந்துவிடாமல் ரகசியமாக வைத்து பாதுகாத்து வந்தார் சிறப்பு அதிகாரி. மற்ற பணியாளர்களும் இந்த தகவலை வெளியே யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆகவே அவன் ஒருவன் உதவியால் அந்த மிருக்காட்சி சாலை சீராக நடந்து வந்தது.

ஆறுமாத காலம் லோகு மிருக காட்சி சாலைக்கு ஒரு பைசா செலவு இன்றி மிருகங்களின் பசியை போக்கி வந்தான், ஒவ்வொரு நாளும் மாலையிலும் சம்பளத்தை வாங்கி கொண்டு போகையில் லோகுவின் கண்களில் பதற்றமும் படபடப்பும் இருப்பதை அதிகாரி கண்டார். லோகுவை அவரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

பின்னொரு நாள் லோகு எப்போதும் போல ஒவ்வொரு மிருகமாக தன் கைகளை வைத்து தடவி பசியை போக்கிக் கொண்டே நடந்த போய் கொண்டிருந்தான், சிறுத்தையின் கூண்டிற்குள் சென்ற போது அது அமைதியாக படுத்துக்கிடந்தது. அருகில் சென்று அதன் தலையை தடவிக் கொடுத்தான். சிறுத்தையின் மூச்சுக்காற்று அவன் கைகளில் பட்டது. அந்த உஷ்ணம் சிலிர்ப்பூட்டியது.

அவன் சிறுத்தையின் உடலை மெதுவாக தடவி விட்டான். நாணல் கற்றைகளை உரசுவது போலிருந்தது. நாய்க்குட்டியை போல சிறுத்தை அவன் மீது நெகிழ்வாக உரசியது. அவன் திரும்பவும் அதன் தலையை விரலால் தடவி விட்டு எழுந்து வாசலை நோக்கி நடந்தான்.

சிறுத்தை அவனையே பார்த்துக் கொண்டிருந்தது, லோகு சிறுத்தையை பார்த்து மெலிதாக சிரித்தபடியே வெளியேற நடந்தான். சிறுத்தை சட்டென பாய்ந்து அவன் பின்தலையில் அடித்து வீழ்த்தியது.

அடுத்த நிமிஷம் அதன் கோரைப்பற்கள் அவனை கவ்வி இழுத்துக் கொண்டு போவதை கண்ட ரத்னம் பயத்தில் அலறினார்.

சிறுத்தை லோகுவை கவ்வி இழுத்துக் கொண்டு ஒடியது, சிறப்பு அதிகாரியும் மற்ற பணியாளர்களும் துப்பாக்கியோடு தேடி வந்த போது சிறுத்தை லோகுவின் வயிற்றை கிழித்து தின்றதோடு அவன் முகத்தை பிய்த்து போட்டிருந்தது. குறிப்பாக அவனது கைகளை அது துண்டித்து எறிந்திருந்தது.

எத்தனையோ நாட்கள் அடக்கி வைக்கப்பட்ட பசியை தணித்துக் கொண்டது போலிருந்தது அக்காட்சி.

ஏன் இப்படி ஆனது என புரியாத குழப்பத்துடன் லோகுவின் உடலை மீட்டுக் கொண்டிருந்தார் சிறப்பு அதிகாரி.

பணியாளர்களில் ஒருவன் சொன்னான்:

அவன் பாட்சா இன்னைக்கு பலிக்கலை, எத்தனை நாளைக்கு மிருகத்தோட வாயை கட்டி போட முடியும், அதான் அடிச்சி சாப்பிட்டிருச்சி...

அதை கேட்ட மற்றவன் சொன்னான்:

இனிமே ஜாலியா உட்கார்ந்து சீட்டு விளையாடிக்கிட்டு இருக்கமுடியாது, சிங்கத்துக்கு இறைச்சி வாங்கி போடணும், அதுக்கு குண்டிகழுவிவிட்டு ஆகணும்.

சிறப்பு அதிகாரிக்கு லோகுவின் சாவு எரிச்சலாக வந்தது,

சே, நாளை முதல் திரும்ப இந்த விலங்குகளின் பசியை போக்க அலைய வேண்டும். குதிரை இறைச்சி வாங்க ஆள் போக வேண்டும். எலியும் முயலும் பிடித்துக் கொண்டுவர வேண்டும். வேளைக்கு உணவு கொடுக்க வேண்டும். எலும்புகளை அள்ளி போட வேண்டும், என்ன பிழைப்பு இது.

நல்லவேளை லோகு வேலைக்கு இருந்த விஷயம் வெளியுலகில் யாருக்கும் தெரியாது, நடந்த விஷயத்தை அப்படியே மறைத்துவிடலாம். மற்றவிலங்குகளும் சிறுத்தையை போல வெறி கொண்டு நடந்து கொள்வதற்குள் அதற்கான உணவை ஏற்பாடு செய்துவிட வேண்டும் என உத்தரவுகளை பிறப்பிக்க துவங்கினார்.

தொலைவில் மிருகங்கள் பசியில் சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தன.

ஜூன், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com